“தீச்சர்… கிளம்பியாச்சா?” கைபேசியின் வழியே உற்சாகமாக கேட்ட ராகவனுக்கு,
“ம்ம்… அவ்வளவு தான், முடிஞ்சுது” என்று பதில் சொல்லியபடியே, கண்ணாடி முன் நின்று தன்னை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டாள் மலர்விழி.
மாம்பழக்கலரில் குங்குமக்கலர் கரையிட்ட சில்க் காட்டன் புடவை, நீண்ட பின்னலில் பாங்காக பொருந்தியிருந்த மல்லிகைச்சரம் என்று, தன் தோற்றம் அவளுக்கு திருப்திகரமாகவே இருந்தது.
“ம்ம்… குட், அப்பிடியே வீட்டை பூட்டிக்கிங்க மேடம். ஸ்கூட்டியில, வீடு இருக்குற தெருவுல இருந்து வெளிய வந்து, மெயின் ரோட்ல ஜாயின் பண்ணி லெப்ட் சைட் திரும்புங்க. அங்கதான் நான் பைக்ல நிக்குறேன். வாங்க பாக்கலாம்” என்றான் ராகவன்.
“ஹூம்… நான் தனியா தான் ஸ்கூட்டியில வரணுமா? உங்க பைக்லயே என்னைக் கூட்டிட்டு போலாம்ல?” சிணுங்கினாள் மலர்விழி.
“போலாமே… நாளைக்கே நாம கல்யாணம் பண்ணுற சூழ்நிலையில் இருந்தா, போலாமே” என்று ராகமிழுத்த ராகவன்,
“இது சென்னை இல்ல மலர்விழி மேடம், செங்குளம். நான் உன்னை பைக்ல கூட்டிட்டு போனா இன்னைக்கு ஊரே பரபரப்புல பத்தி எரியும். அவ்வளவு தான், திரும்ப வந்து இறங்கும் போதே நாம கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை தான் இருக்கும். அப்புறம், என் தங்கச்சி ஜெயந்திக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு தான், நம்ம கல்யாணம்னு எடுத்த முடிவை எல்லாம் மறந்துட வேண்டியது தான்” என்று சிரித்தான்.
“உங்க தங்கச்சிக்கு மட்டுமில்ல, உங்க தம்பி கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தல, எனக்கு ஒண்ணும் அவசரமே… இல்ல” கேலி செய்தபடியே அழைப்பைத் துண்டித்த மலர், கதவைப் பூட்டி, ஸ்கூட்டியை தெருவில் இறக்கி கேட்டையும் பூட்ட ஆரம்பித்தாள்.
இதோ, இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிஎட் படிப்பையும், அவள் ஏற்கனவே படித்த கல்லூரியிலேயே முடித்திருந்த மலர்விழி, கடந்த பத்து நாட்களாக இருப்பது செங்குளத்தில்.
ஆமாம்… ராகவனின் சொந்த ஊரான அதே செங்குளத்தில் தான். மலர்விழியை இங்கே ராகவன் அவசரமாக அழைத்து வந்திருப்பதன் பின்னணியில் பெரிய கதையே உண்டு.
மலர்விழி பிஎட் முடித்து விடுமுறையில் இருந்த நேரம் அது.
தீபக், தீக்ஷிதா இருவருக்குமே கல்லூரிக்கு செல்ல புது உடைகள் வாங்க வேண்டும் என்பதால், ஜவுளி கடைக்கு அம்மாவும் பிள்ளைகளுமாக கிளம்ப திட்டம் போட்டார்கள்.
தங்களோடு மலர்விழியையும் வரும்படி மூவரும் அழைக்க, அவளுக்குமே, அடுத்து பள்ளிக்கு வேலைக்கு செல்ல புடவைகள் தேவைப்படுவதால் எடுத்துவிடலாம் என்று கிளம்பினாள்.
ஒரு பிரபல ஜவுளிக்கடையை முற்றுகை இட்ட அந்த நால்வர் கூட்டணி படுமும்முரமாக ஆடைத்தேர்வில் ஈடுபட்டதில், ஒருவரை விட்டு ஒருவர் கொஞ்சம் நகர்ந்திருந்தார்கள்.
தேன்கலரில் இருந்த ஒரு பெங்கால் காட்டன் புடவையை பார்வையிட்டபடி நின்றிருந்த மலர்விழியை, “மலர்விழி…” என்ற அழைப்பு கலைத்தது.
சட்டென்று திரும்பி பார்த்தாள் மலர். அவள் அருகே நவநாகரீகத்தின் உச்சத்தில் இருந்த பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். அழைத்தது அந்த பெண் தான், தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணை யாரென்று அடையாளம் தான் மலர்விழிக்கு தெரியவில்லை.
“என்னைத் தெரியலையா? நான்…” என்று அந்த பெண் தொடங்க,
“சாதனா…” என்று முணுமுணுத்திருந்தது மலர்விழியின் உதடுகள். சாதனா வேறு யாருமல்ல, சென்னையில் படித்து கொண்டிருந்த மலர்விழியின் தாய்மாமன் மகள் தான். படிப்பை முடித்திருந்தவள், இப்போது சென்னையில் ஏதோ தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
“பரவாயில்லயே… இன்னும் எங்களை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கியே?” என்று நக்கலாக கேட்ட அந்த சாதனா, “இத்தனை வருஷமா எல்லாரோட கண்ணுலயும் மண்ணள்ளி தட்டிட்டு நீ சென்னைல தான் சுத்திக்கிட்டு இருக்கியா? எங்க தங்கியிருக்க?” என்றாள் அதட்டலாக.
உண்மையில், அந்த சாதனாவுக்குமே ஐந்து வருடங்கள் கழித்து பார்த்த மலர்விழியை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதனால் தான் சத்தமாக பெயர் சொல்லி அழைத்தது. அந்த அழைப்புக்கு மலர்விழி திரும்பி பார்க்கவும், அது தங்கள் அத்தை மகள் தான் என்று சாதனா உறுதிபடுத்திக் கொண்டாள்.
சிறுத்தைகள் தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதேயில்லை என்பதை அனுபவப்பூர்வமாக அந்நேரத்தில் உணர்ந்த மலர்விழி, “நான் எங்கயிருந்தா உனக்கென்ன?” என்றபடியே அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.
“ஏய்… நான் பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போய்ட்டே இருக்க” என்று மலர்விழியின் கையைப் பற்றிய சாதனா, அலைபேசியில் தன் அண்ணன் சந்திரனை அழைத்து, “உன் அத்த பெத்த ரத்தினம், இப்போ எங்கையில இருக்கு” என்றாள்.
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்த மலர்விழி, அவள் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டு, அங்கிருந்து நகர முயன்றாள்.
எப்போதுமே தன்னைவிட அறிவிலும், அழகிலும் பலபடிகள் மேலாக இருக்கும் மலர்விழியின் தற்போதைய தோற்றமும், நிமிர்வும் ஒருவித பொறாமையை சாதனாவிற்குள் ஏற்படுத்தியது. இருக்கும் இடம் மறந்து மலர்விழியிடம் தர்க்கம் புரிய ஆயத்தமானாள்.
அந்தநேரம் தன் கவனத்தை மலர்விழி மீது வைத்த ராஜம், “என்னாச்சு மலர்?” என்று வந்து நிற்க, அவர் பிள்ளைகளும் உடன் வந்து நின்றார்கள்.
தனியாக இருப்பாள், ஒருவழி பண்ணிவிடலாம் என்று சாதனா நினைத்தால், ஒரு குடும்பம் போல வந்து நின்றவர்களுக்கு நடுவே எதுவும் செய்ய முடியாமல் சாதனா ஒருகணம் தடுமாற, “இது யாரு மலர்?” என்று தன் அடுத்த கேள்வியைக் கேட்டிருந்தார் ராஜம்.
“தெரியல க்கா” அலட்சியமாக உதட்டைச் சுழித்த மலர்விழி அவர்களோடு சேர்ந்து நகர்ந்து விட, இன்னும் வெறியாகிப் போனாள் சாதனா.
சாதனா உடன் வந்திருந்த தோழிப்பெண், ராஜம் பெண்கள் விடுதியில் சிலகாலம் தங்கியிருந்தபடியால், அவளுக்கு ராஜத்தை தெரிந்திருந்தது. அவள் விபரம் சொல்ல, அங்கேதான் மலர்விழி தங்கியிருக்க கூடும் என்று சாதனா கணித்து விட்டாள்.
வினை, விடுதி தேடி வருவதற்கு அது ஏதுவாகிப் போனது.
ஆமாம்… சாதனாவை மலர்விழி சந்தித்திருந்த நான்காவது நாள், சந்திரன் மலர்விழியின் விடுதி நுழைவாயிலுக்கு அருகே வந்து நின்றிருந்தான்.
மலர்விழியும் ஒரு வேலையாக கல்லூரிக்கு செல்வதற்காக கிளம்பி செல்ல, சந்திரனிடம் மாட்டிக் கொண்டாள்.
ஐந்து வருடங்கள் கழித்து சந்திரனை நேருக்கு நேராக சந்தித்த அதிர்ச்சியில் மலர்விழி இருக்க, “நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் கண்டுபிடிச்சிடுவோம்ல” என்று அசிங்கமாக பல்லைக் காட்டினான் சந்திரன்.
‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று சொல்வார்களே. சட்டென்று முடிவெடுத்த மலர்விழி, அவனிடம் எதுவும் பேச முயலாமல், விடுதி வளாகத்திற்குள் நுழைந்து கொள்ள முற்பட்டாள்.
வேகமாக அவள் கையை எட்டிப் பிடித்திருந்த சந்திரன், “எங்க டி ஓடப் பாக்குற? உனக்காகத் தான் இத்தனை வருஷமா காத்திட்டு இருக்கேன். வா, கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று இழுத்தான். பதின்மவயது மலர்விழியையே சுற்றி சுற்றி வந்தவனுக்கு, இப்போது அழகும், வசீகரமும் கூடிநின்ற மலர்விழி போதையேற்றினாள்.
அவன் கையைப் பிடித்திழுத்ததும் கோபம் கொண்ட மலர்விழி, “கையை விடுடா” என்று உறுமியபடி மற்றொரு கையால் அவனை அடிக்க முயன்றாள். அந்த கையை எளிதாக பிடித்து தடுத்தபடியே,
“ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, உன்னை ஈசியா தப்பிக்க விட்ட முட்டாள் இல்ல இந்த சந்திரன். வாடி ன்னா” என்று இழுத்தவனிடம் முரட்டுத்தனம் கூடியிருந்தது.
இது நடந்தது விடுதி வாசலில் என்பதால் அனைத்தும் விடுதி பாதுகாவலரின் கண்களில் விழுந்தது. அவர் புத்திசாலித்தனமாக தீனதயாளனையும் அழைத்துக் கொண்டு விரைவாக மலர்விழி அருகே வந்துவிட்டார்.
இவ்வளவு நேரமும், பெண்ணிடம் தன் வீரத்தைக் காட்டிய அந்த மகாவீரன், அவளுக்கு ஆதரவாக வந்து நின்ற ஆரோக்கியமான இரு ஆண்களைக் காணவும்,
“மலர் என்னோட மொறப்பொண்ணு, எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், யாரும் தலையிடாதீங்க” என்றான் அவர்களை எச்சரிப்பது போல.
“மொறப்பொண்ணா இருக்கலாம். ஆனா, அது உன்னை முறைச்சிட்டுல்ல நிக்குது, விடுடா கையை” என்று, ஓங்கி சந்திரனின் கன்னத்தில் ஒன்று வைத்திருந்தார் தீனதயாளன்.
ஜவுளிக்கடைக்கு போய்விட்டு வந்த உடன் தன்னைப் பற்றி எல்லாம் ராஜத்திடம் சொல்லியிருந்தாள் மலர்விழி. அவர் அதனை தன் கணவரிடம் பகிர்ந்திருந்தார். எனவே தீனதயாளனுக்கு சந்திரனைப் பற்றி தெரிந்திருக்க, வைத்து வாங்கிவிட்டார்.
அவருடைய ஒற்றை அறையிலேயே கதிகலங்கிப் போன சந்திரனோ, “ஆள்வச்சி அடிக்கிறியா நீ? எங்கப் போயிடுவ? இங்க தானே இருப்ப? கண்டிப்பா, இந்த தடவை உன்னைத் தூக்குறேன் டி.” மலர்விழியிடம் சவால் விட்டபடி அங்கிருந்து நகர்ந்தான்.
சாதனாவை சந்தித்ததைப் பற்றி மலர்விழி சொல்லும் போதே பதட்டமாகிப் போயிருந்த ராகவனோ, இப்போது சந்திரன் நேரிலேயே வந்து பிரச்சனை செய்து விட்டான் என்று தெரியவும், “இனிமே அங்க இருக்க வேண்டாம், இங்க, ஊருக்கு வந்துடு மலர்” என்று விட்டான்.
படிப்பையும் முடித்து விட்ட நிலையில் ராகவன் இருக்கும் ஊருக்கு கிளம்புவதில் மலர்விழிக்கு மறுப்பேதும் இல்லை. என்றாலும் கூட, “கொசுவுக்கு பயந்து கோட்டையை விட்டுட்டு யாராவது போவாங்களா?” என்று பழமொழி சொன்னாள்.
“உங்க கோட்டை, நம்ம ஊரு தான் தீச்சர்” என்று கேலி பேசினாலும், “எங்கிட்ட வந்துடு மலர், என்ன ஆச்சோன்னு டெய்லி என்னால டென்ஷனா உட்கார்ந்திருக்க முடியாது” என்றவன், மடமடவென்று திட்டங்களை தீட்ட ஆரம்பித்தான்.
மலர்விழியோடு அதன் சாதகபாதங்களை அலசி ஆராய்ந்தவன், தனது திட்டத்தை சித்தப்பாவிடம் சொல்ல,
“அடேய்… ஊருக்கு கூட்டிட்டு போறதெல்லாம் சரி தான் டா. ஆனா, கல்யாணத்தை முடிச்சி உங்கூடவே மலரை வச்சிகிட்டா ஓகே. தனியா வீடு பாத்து அந்த பிள்ளையை வைக்கிறேன்னு சொல்லுறியே, அதுவும் நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே, அதுல எனக்கு சம்மதம் இல்ல” என்றார் கறாராக.
ஆமாம்…மலர்விழிக்காக ராகவன் தேர்வு செய்திருக்கும் வீடு, அவர்கள் வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தான் தள்ளியிருந்தது. நெடுங்காலமாக அந்த வீட்டிலுள்ளவர்கள் மும்பையில் தான் இருக்கிறார்கள். அந்த வீட்டை செந்திலை வைத்து வாடகைக்கு பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறான் ராகவன்.
“எனக்கென்னவோ உங்க அப்பா சம்மதிப்பான்னு தோணலை டா” என்று பெருமூச்சு விட்ட சிதம்பரம், “நம்ம குடும்பத்துக்காக பாத்து, மலரை நோகடிச்சிடாத ராகவா” என்றார் மலர்விழி மீது கொண்ட அக்கறையில்.
“இல்ல சித்தப்பா. அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கவிட மாட்டேன்.” உறுதியாக சொன்னான் ராகவன்.
ராகவன், மலர்விழி இருவருக்குமே தங்கள் திருமணத்திற்கு ராகவனின் பெற்றவர்கள் சம்மதம் கிடைப்பது எளிதல்ல என்று தெரிந்துதான் இருந்தது. என்றாலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தவர்கள், இதோ, இந்த வருடம் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கை முடித்திருந்த ஜெயந்தி வாழ்க்கை தங்களால் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அதைக்கொண்டே இந்த முடிவு.