புதிய உதயம் -14
அத்தியாயம் -14(1)
ஸ்ரீ மற்றும் ஜெய்யின் உறவு நிலையில் நல்ல முன்னேற்றம். இயல்பான பேச்சுக்கள், சில சமயங்களில் அளவான கிண்டல்கள், கோயில், சினிமா, வெளி சாப்பாடு என ஏதாவது ஒன்றால் சேர்ந்து இருக்கும் வார இறுதி நாட்கள் என நன்றாகவே சென்று கொண்டிருந்தன.
அவ்வப்போது சில சில தர்க்கங்களும் சண்டைகளும் கூட வரத்தான் செய்தன. ஜெய்யிடமிருந்து மன்னிப்பு என்ற வார்த்தை அவ்வளவு எளிதாக வருவேனா என அவனுக்குள்ளேயே நின்றது. சண்டையை பெரிதாக வளர்க்க விரும்பாமல் ஸ்ரீதான் ஒவ்வொரு முறையும் சமாதானக் கொடி பறக்க விட்டாள்.
இந்த விஷயத்தால் ஸ்ரீ மென்மேலும் அவனை ஈர்த்தாள் என்றால் அதே விஷயம் அவளின் மனதில் நெருடலை ஏற்படுத்தி அதை விலக விடாமல் பார்த்துக் கொண்டது.
இரவின் நெருக்கம் மட்டும் மெல்லிய அணைப்பை தாண்டி முன்னேறியிருக்கவில்லை. அவளே தெளிவாக என் படிப்பை தொல்லை செய்யக் கூடாது என சொல்லியிருந்தாள். அவனும் அவசரப் படாமல் காத்திருந்தான்.
முதல் முறை கொடுத்த முத்தமே மூளையை குடைவதாக அவள் சொல்லியிருக்க, “எவ்ளோ நேரம் குடையுது?” எனக் கேட்டான்.
“என்ன கேள்வி இது?”
“பதில் சொல்லு, எதுக்கு கேள்வின்னு புரியும்”
சில நொடிகள் யோசித்து பார்த்தாள். “இருக்கும், ஒரு நாளாவது அதுதான் ரீவைண்ட் ஆகி ரீவைண்ட் ஆகி ஓடிட்டு இருந்துச்சு” என்றாள்.
“இதெல்லாம் ஓவர்!” என வாய் விட்டு சொன்னவன், “விளங்கிடும் முத்தத்துக்கே ஒரு நாள்னா மிச்சத்துக்கு!” என வாய்க்குள் முனகினான்.
“காதுல விழல”
“ம்ம்… வந்து… காலேஜ் லீவுன்னா அதுக்கு முந்தின நாள் ஓகேதானே உனக்கு?” எனக் கேட்டான்.
“எதுக்கு?”
“உன்னை வச்சுகிட்டு…” என அவன் அலுத்துக் கொள்ளும் போதே, “ஹையோ… இதுக்கெல்லாம் நேரம் குறிப்பீங்களா?” என வெட்கத்தோடு தலையில் அடித்துக் கொண்டாள்.
“வேற என்ன பண்றதாம்? இனி சனிக்கிழமை எனக்கான நாள்… இல்லையில்ல எனக்கான நைட்” என உறுதியாக சொன்னவன் அதை மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கவும் செய்தான்.
எங்கேனும் பறவைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற ஓவியங்களை காண நேரிட்டால் கூட முகமும் அகமும் சிவந்து போகும் அளவுக்கு முத்தங்களால் அவளை திணறடித்துக் கொண்டிருந்தான். இன்னொரு நல்லதாக அவனிடம் அவளுக்கான கூச்சங்களும் குறைய ஆரம்பித்திருந்தன.
ஏதோ ஒரு திரைப்படம் பார்க்க சென்று ஆணாதிக்கம் நிறைந்த கதாநாயகனின் பாத்திரப் படைப்பில் எரிச்சலடைந்து விட்டாள். ரசித்து ரசித்து படத்தை பார்த்தவனிடம் குறை சொன்னாள்.
“படம்தானே, என்ஜாய் பண்றதோட நிறுத்திக்கணும்” என்றான் ஜெய்.
“இது மாதிரி படத்துக்கு அழைச்சிட்டு வராதீங்க”
“இது எது மாதிரி படம்னு முன்னாடியே என்ன தெரியும் எனக்கு? நல்லாருக்குனு பொதுவா பேச்சு இருந்தது, சரின்னு அழைச்சிட்டு வந்திட்டேன்”
“சரி விடுங்க”
“இப்படி மூஞ்சு தூக்கி வச்சிட்டா எப்படி விட?”
“உங்களுக்கு படம் ரொம்ப பிடிச்சுதுதானே?”
“அதுக்கு நான் என்ன பண்ண?” என அவன் கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லை.
தனக்கு ஏற்புடையாத எதையும் அவளால் ரசிக்க முடியாது, சகிக்கவும் முடியாது. அவனால் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது என சின்ன கோவம்.
திரையில் காண்பது வேறு, தன் கொள்கைகள் வேறு என்பதில் தெளிவாக இருப்பவன் அவன்.
தன் எண்ணம் சிறு பிள்ளைத் தனம் என்பது அவளுக்கே தெரிகிறது, ஆனாலும் முகம் தெளியவில்லை.
“அந்த ஹீரோக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுக்கு மேல அவ்ளோ நடந்தும் ‘மன்னிச்சிட்டேன் மறந்திட்டேன் ஐ லவ் யூ’ன்னு சொன்ன அந்த அசட்டு ஹீரோயின் மாதிரி நீ இல்லைனு தெரியும்” என்றான்.
“ஹீரோயின் மட்டும் அசடா, ஹீரோ ரொம்ப அறிவாளி மாதிரி”
“இல்லயா பின்ன, அவ்ளோ அட்டகாசம் பண்ணியும் காதலி கால்ல அவன் போய் விழவே இல்லை, அவதான் வந்து அவன் மேல விழுந்தா. பாவம் அவளும் என்ன பண்ணுவா? அவன்தான் ஹீரோன்னா அவன் கூடதானே சேர்ந்துதாகணும்?” என இளக்காரமாக சொன்னான்.
சற்றே பொறுமையாக இருந்தவளை அவனது இந்த பேச்சு வெகுவாக சீண்டி விட்டது.
பதிலுக்கு பதில் பேசி இருவருக்குள்ளும் சண்டை. வார்த்தைகளால் நிறையவே காயப்படுத்திக் கொண்டனர்.
கை கோர்த்து சென்றவர்கள் உர் என்ற முகத்தோடு உள்ளே நுழைவதை கண்ட பாட்டி, “என்னவா இருக்கும்?” என ஜனாவிடம் கேட்டார்.
“ஹ்ம்ம்… உம்பேரனுக்கு கொடுக்காம அண்ணியே தனியா குச்சி மிட்டாய் சாப்பிட்டாங்கன்னு ஸாருக்கு சர்ருன்னு ஏறியிருக்கும்” என்றான் ஜனா.
“என்னடா?”
“வேறென்ன? கோவம்தான், இவர் துர்வாசர் ஆகியிருப்பார், அண்ணி ஜான்சி ராணியாகிட்டாங்க”
“எப்படா ரெண்டு பேரும் ராமர் சீதா மாதிரி ஒத்துமையா வாழ்வாங்க?”
“நீ வேணா இன்னொரு குச்சி மிட்டாய் வாங்கிக் கொடு, அவர்கிட்ட கொடுத்து சமாதானம் செஞ்சு வைக்கிறேன்” என்ற ஜனாவை கொட்டி வைத்தார் பாட்டி.
ஜெய் தோட்டத்தில் உலா வர, ஸ்ரீ அறைக்குள் அடைந்து கிடந்தாள். இருவரும் சாப்பிட வருவதாக காணோம். மருமகளை சாப்பிட வரச் சொல்லி கைப்பேசி வாயிலாக சொன்னார் துளசி.
தங்கள் சண்டையை நினைத்து மற்றவர்கள் வருந்தக் கூடாது என எண்ணி ஸ்ரீயே அவனிடம் சென்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர். யார் முதலில் பேசுவது என ஈகோ.
“அப்பயி… சண்டைல நிக்கிற ஆட்டுக் கிடாங்க மாதிரி நிக்கிறத பாரு ரெண்டு பேரும்” ஹாலில் இருந்த ஜனா பாட்டியிடம் சொன்னான்.
“அவங்களே முட்டி மோதி வருவாங்க, நீ சாப்பிட்டீல்ல? போ போய் படு” என அதட்டினார் பாட்டி.
“என்ன என்னை விரட்டி விடுறியா? ரைட் விடு, காம்ப்ளான் கலந்து கொடுத்தனுப்பு, சீக்கிரம் நானும் வளர்ந்த பையன் ஆகுறேன்” என சொல்லிக் கொண்டே உறங்க சென்று விட்டான் ஜனா.
ஜெய்யும் ஸ்ரீயும் ஆளுக்கொரு பக்கமாக நடை போட்டுக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.
பாட்டியும் மாமியாரும் உறங்க செல்லாதது நினைத்து அவள்தான் இறங்கி வந்தாள்.
“சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு போய் அடிச்சிக்கிட்டு நிக்கிறோம், நான் உங்களை பேசினதுக்கு ஸாரி, கோவத்தை விட்டுட்டு சாப்பிட வாங்க” என்றாள்.
“தெரிஞ்சா சரி, வா” என்றவன் முன்னே நடக்க, மன்னிப்பு வேண்டாம் கொஞ்சமாவது இணக்கமாக பேசுவான் அவன் என எதிர் பார்த்திருந்தவள் ஏமாற்றத்தோடு அங்கேயே நின்றாள். அவளை திரும்பியும் பாராமல் அவன் மட்டும் சென்று விட்டான்.
ஸ்ரீக்கு அங்கேயே இருக்கதான் வீம்பு பிறந்தது, ஆனாலும் பெரியவர்களை நினைத்து உள்ளே சென்றாள்.
சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்த பின்தான் தன்னிடம் பேச்சை தவிர்க்கறாள் என கண்டு பிடித்தான் ஜெய்.
“அதான் சமாதானம் ஆயாச்சே, இன்னும் என்ன?” எனக் கேட்டான்.
“ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேசிக்கிட்டோம். நீங்களும் என்னை மாதிரியே நார்மலா பேசியிருக்கலாம். எம்மேலதான் தப்புங்கிற மாதிரி நடந்துக்குறீங்க” என்றாள்.
“அடுத்த சண்டையா?”
“நமக்குள்ள வர்ற பிரச்சனைய தூங்குறதுக்கு முன்னாடி சரி பண்ணிக்கணும்னு நினைக்கிறேன், இது சண்டையில்லை” என்றாள்.
சில நொடிகள் அமைதி காத்தவன், “நானும் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன், ஸாரி” என்றான்.
“எவ்ளோ சீக்கிரம் சொல்லிட்டீங்க, நானா இறங்கி வரலைனா ரெண்டு மூணு நாளாவது என்கிட்ட பேசியிருக்க மாட்டீங்கதானே?”
“பிரச்சனையை ரொம்ப நல்லா சரி பண்ற” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“ஈகோ குடவுன்!” என திட்டினாள்.
“ஆமாம் இவங்க அமைதியோ அமைதி, அடக்கமோ அடக்கம், கனிவோ கனிவு. சரியான சண்டைக்காரி!” என திட்டிக் கொண்டே இன்னும் அவளை இறுக்கி அணைத்தான்.
மேலும் பேச்சை வளர்க்க விரும்பாத ஸ்ரீ அவனிடமிருந்து விலகி படுத்துக் கொண்டாள். வழக்கம் போல அவளை அணைத்துக் கொண்டே கண்களை மூடியவனுக்கு உறக்கம் வரவில்லை.
தான் முதலில் இறங்கி வராததற்காக அவனுமே வருந்தினான். ஆனால் அவனால் அவளை போல அந்த கண்ணுக்கு தெரியாத பனிப்படலத்தை தகர்த்து வர முடியவில்லை. அது அவனது பிறப்பியல்பாக இருக்க அவனும் என்ன செய்வான்? லேசான பனிப் படலம் போக போக இறுகி கடினமாகி விட்டால் உறவுநிலைக்கு ஆபத்து என்பதை அவன் உணரவே இல்லை.
கணவன் மனைவி உறவில் பழுது ஏற்படும் போது அதை சரி செய்ய இருவருமே சரி சமமாக முயல வேண்டும், பழுது நீங்குகிறதோ இல்லையோ இடைவெளி உண்டாகாது. ஒரு பக்க முயற்சி விரைவிலேயே அசுவாரஷ்யத்தையும் விரக்தியையும் பரவ செய்து பிரிவினைக்கு வழி வகுத்து விடும்.
அவனது மனம் முழுவதும் அவள் மீதான காதலும் அன்பும் நிறைந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக உறங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீயின் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாக முத்தமிட்டு அவளை நன்றாக அணைத்துக் கொண்டான்.
*****
அன்று வேலை ஜெய்யை வைத்து செய்ய, அவனால் ஸ்ரீயை அழைத்து வர முடியாத நிலை. ஜனாவும் வேறெங்கோ சென்றிருந்தான். மதியமே விஷயத்தை சொன்ன ஜெய், அடுத்து ஆட்டோ பிடித்து வா என சொல்ல வாயெடுக்க அதற்குள் வகுப்புத் தோழன் சியாமளனோடு வருவதாக சொல்லி விட்டாள் ஸ்ரீ.
மறுக்க முடியவில்லை அவனால். ஆனால் அதேதான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒரு சில முறை அப்படித்தான் அந்த சியாமளனோடு வந்திருக்கிறாள். ஜெய்யோடு ஒரு முறை பேசியிருக்கிறான், கண்ணியமான நடத்தையுள்ள நல்ல பையன்தான்.
ஒரு முறை அவர்கள் கல்லூரியிலிருந்து வரும் போது வழியில் இருந்த இடத்தில்தான் வாடிக்கையாளர் ஒருவரோடு இருந்தான் ஜெய். நெருக்கடி இல்லாத இடம் என்பதால் சியாமளன் ஹெல்மெட்டுக்கு சற்று நேரம் விடுதலை அளித்திருந்தான்.
யாரோ, “ஆஹா நல்ல ஜோடியில்ல?” என சொல்வது ஜெய்யின் காதில் தவறாமல் விழுந்தது.
அப்பட்டமான பொறாமை அவனை சூழ்ந்து கொண்டது. சொன்னவனை தேடிச் சென்று அவனது வாயிலேயே குத்து விட்டு, ‘அவ எம் பொண்டாட்டிடா’ என கத்த வேண்டும் போல அப்படியொரு ஆவேசம்.