அத்தியாயம் – 1

“நான் சொன்னது நியாபகம் இருக்கா? இல்லை வீட்டிலிருந்து ஆயிரம் மைல் தாண்டிப் போனதும் அதுவும் பல மையில் தூரம் ஓடிப் போயிடுச்சா?” என்று அவர் எதிரே இருந்த கணினித் திரையில் தெரிந்த மகனிடம் கேட்டார் ராஜம்.

“அம்மா, என்னோட பேசும்போதெல்லாம் இதே கேள்வியைக் கேட்கற..நானும் ஒரே பதிலைத் தான் சொல்றேன்..எப்போ ம்மா உனக்கு என் மேலே நம்பிக்கை வரப் போகுது?” என்று அலுத்துக் கொண்டான் வினய்.

“உன்னை அங்கே அனுப்பி வைச்சிட்டு நான் தான் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு அலையறேன்..உங்கப்பாக்கு அந்தக் கவலை இருக்கான்னு தெரியலை..நீ வெளிநாட்டுக்குப் பறந்து போனதிலிருந்து அவரும் இங்கே பறந்திட்டு தான் இருக்கார்..சாதாரணப் பேச்செல்லாம் அவருக்கு மறந்து போயிடுச்சு..

ஒரே கேள்வியைக் கேட்டாலும் ஒவ்வொருமுறையும் என்னை மதிச்சு பதில் சொல்லணும்..உங்கப்பாகிட்டேயிருந்து நான் ஒரு வார்த்தை கூட வாங்க முடியாது..திரும்ப கேட்டா..’உன்கிட்டே என்ன சொல்றது? உனக்கென்ன தெரியும்? படிக்காத தற்குறின்னு’ என்னை மட்டம் தட்ட வேண்டியது..தர்ஷிணியும் இப்போ அவரோட கூட்டு சேர்ந்துகறா..” என்றவரின் புலம்பலை இடைமறித்து,

“படிக்காத தற்குறி தான் இமிக்ரேஷனைக் கடந்து தனியா வெளி நாட்டுக்கு வந்து போனீங்களா?” என்று கேட்டான்.

“நான் எங்கே டா தனியா வந்தேன்? என் அத்தை மகளோட தானே வந்தேன்..அவ அந்தக் காலத்திலேயே அங்கே போயிட்டா..இப்போ அந்த ஊர்க்காரி ஆகிட்டா..அவ தான் என்னைக் கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்தா.” என்று மகனிற்கு பதில் கொடுத்த ராஜத்தின் மனத்தில்,’அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்..நானே அவனைப் பார்க்கப் போகலை..நீ போயிட்டு வந்திட்ட..உன்னைப் போல அதிர்ஷ்டசாலியை நான் பார்த்ததில்லை..

எனக்கு தெரிஞ்சவரை ப்ளஸ் டூ ஃபெயில் ஆகி இவ்வளவு வளமான, நிம்மதியான வாழ்க்கை வாழ்ற ஆள் நீ மட்டும் தான்..வாரம் முழுக்க ஆபிஸ்லே வேலை பார்த்திட்டு லீவு நாள்லே வீட்லேயும் உழைச்சுக் கொட்டினேன்..இந்தக் கிளாஸ் அந்தக் கிளாஸ்ன்னு ஒரு கிளாஸ் விடாம பிள்ளைங்களைக் கூட்டிட்டு அலைஞ்சேன்..நீ ஹாயா வீட்லே குப்புற படுத்து டீவி பார்த்திட்டு இருந்த, இருக்க.’ என்ற கணவனின் ஏளனப் பேச்சு வந்து போனது.

அவன் சொல்வது போல் ஒரு நாள் கூட குப்புற படுத்துக் கொண்டு டீவி பார்த்ததில்லை. ப்ளஸ் டூ ஃபெயில் ஆனதும் வீட்டு வேலைகளை அவளுக்கு பழக்கி விட்டு ஹாயாக டீவி பார்த்துக் கொண்டிருப்பார் அவருடைய அம்மா. பண்ணெண்டாவது ஃபெயிலா? என்று அவளை அதிசயப் பிறவியாக பார்த்த உற்றார், உறவினர்களின் ஏளனப் பார்வையைக் பொறுக்க முடியாமல் மீண்டும் ஒருமுறை பொதுத்தேர்வு எழுத அவள் நினைத்த போது அவளுடைய குடும்பத்தினர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ‘ஒருமுறை பட்ட அவமானமே போதும்.’ என்று அவளது அடுத்த முயற்சிக்கு ஆப்பு வைத்து விட்டார் அவளுடைய அப்பா.

கைக்கு ஒத்தாசையாக, கூப்பிட்ட குரலிற்கு உதவி செய்ய இருபத்தி நாலு மணி நேரமும் அவள் தயாராக இருந்ததால் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவருக்கு ‘ஆமாம்’ போட்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் வீட்டின் அனைத்து வேலைகளும் அவளது தலையில் விழுந்ததால் குடும்ப விழாக்களுக்கு மளிகைச் சாமான் லிஸ்ட் போடுவதிலிருந்து விருந்து முடிந்து பாத்திரங்களைச் சுத்தப்படுத்தி வைப்பதுவரை பக்காவாக பயிற்சி பெற்றிருந்தாள். அதுமட்டுமில்லாமல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த பாட்டிக்கு பல் துலக்கி விடுவது, பெட்பேன் வைப்பது, அவசரத்திற்கு ஐவி செலுத்துவது என்று கிட்டதட்ட வீட்டுச் செவிலி பயிற்சியும் அவளுக்கு கிடைத்திருந்தது.

கல்யாணச் சந்தையில் ப்ளஸ் டூவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தத் திறமைகள் அனைத்தும் அவளது மதிப்பை உயர்த்தி, பிஎஸ்யுவில் கிளார்க்கா வேலை பார்த்து வந்த செந்திலின் மனைவியாக வழி வகுத்துக் கொடுத்தது.

வியாதிக்கார மாமியார், வயதான மாமனார், வாலிபத்தின் விளம்பில் இருந்த மச்சினன், நாத்தனார் என்று அவளுக்காகவே வடிவமைக்கப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்து இருபத்தி எட்டு வருடங்களாகி விட்டது. நாத்தனாரும் மச்சினனும் கல்யாணம், வேலை என்று அந்த வீட்டிலிருந்து வெளியேற, ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகளின் வருகையால் அவளின் குடும்பம் பெருக, இன்று அவர்களும் வாலிப வயதை அடைந்திருக்க, இப்போதும் அதே வியாதிக்கார மாமியார், வயதான மாமனரின் மனம் கோணாமல் அவர்களைப் பராமரித்து வருகிறார் ராஜம்.

“ராஜம், ராஜம்” என்ற மாமியாரின் அழைப்பு அவளது சிந்தனையைக் கலைக்க,”உன் பாட்டிக்கு பால் சூடு செய்து கொடுக்கணும் டா..நாளைக்குப் பேசறேன்.” என்று மகனுடன் அவரது உரையாடலை முடிக்கும் தருவாயில் அறையினுள்ளே நுழைந்த செந்தில்,

“வினய், நான் அனுப்பின அந்த மெஸேஜ்ஜை படிச்சியா? ஏன் பதில் போடலை..அந்தப் பொண்ணோட அப்பா இன்னைக்கு எனக்கு ஃபோன் செய்திருந்தார்..இன்னும் கொஞ்சம் டயம் கொடுங்கண்ணு கேட்டிருக்கேன்..’ஜாதகப் பொருத்தம் இருக்கு..ஃபோட்டோ அனுப்பி வைக்கறேன்னு’ பெண்ணோட ஃபோட்டோவையும் அனுப்பி வைச்சிருக்கார்..நீ என்ன சொல்ற? உனக்கு அனுப்பி வைக்கட்டுமா?” என்றார்.

ஒரு சில நொடிகளுக்கு மௌனமாக இருந்த வினய்,“இப்போ என்னாலே முடியும்னு தோணலை ப்பா.” என்றவுடன்,

“ஆறாவதுலே கான்வெண்ட் போக முடியாதுன்னு சொன்ன…எட்டாவதுலே என்ஜினியரிங் கோச்சிங் போக முடியாதுன்னு சொன்ன..கம்புயுட்டர் என்ஜினியரிங் படிக்க முடியாதுன்னு சொன்ன..மேற்படிப்புக்கு வெளிநாடு போக முடியாதுன்னு சொன்ன..முடியாது..முடியாதுன்னு சொன்ன உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கற எனக்குத் தெரியாதா உன்னாலே என்ன முடியும்னு..இந்தப் பொண்ணு உனக்கு சரியா வருமுன்னு எனக்கு தோணுது..ஏற்பாட்டை ஆரம்பிக்கப் போறேன்.” என்று எப்போதும் போல் அவரது ஆதிக்கத்தை அவன் மீது செலுத்த, அவரது வாதத்தில் இருந்த நியாயத்தை மறுக்க முடியாமல்,”சரிப்பா” என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து சென்றான் வினய்.

அதுவரை மனைவி அங்கேயே இருப்பதை உணர்ந்திடாத செந்தில், இணைப்பிலிருந்து மகன் சென்றவுடன் அதை உணர, உடனே,”அம்மாக்கு பால் கொடுக்க போகாம எதுக்கு இங்கேயே நின்னிட்டு இருக்க?” என்று எரிந்து விழ,

மனத்தில் எழுந்த நடுக்கத்தை மறைத்து,”இல்லைங்க..இது கல்யாண விஷயம்..காலத்துக்கும் வர வேண்டியது..அவன் விருப்பத்தையும் கேட்டுக்கணும்.” என்று அவரது எண்ணத்தை வெளியிட,

’வெள்ளைக்காரியைக் கட்டிக்க கூடாதுன்னு’ உன் பையன்கிட்டே உறுதிமொழி வாங்கினேயே அப்போ அவனோட விருப்பத்தைப் பற்றி கவலைப்பட்டேயா? இப்போ புதுசா கவலைப்படற..என்ன விஷயம்?..வினய் யாரையாவது விரும்பறானா?” என்று கேட்க,

“ஐயோ..அப்படியெல்லாம் இல்லை..” என்று ராஜம் மறுக்க,

“இந்தப் பொண்ணு அவனுக்கு எல்லா விதத்திலேயும் பொருந்தி வரும்..அவனைப் போலவே நிறைய படிச்சிருக்கா..வீட்டுக்கு ஒரே பொண்ணு..அம்மா, அப்பா இரண்டு பேரும் பெரிய வேலைலே இருக்காங்க..நிறைய சொத்து பத்து இருக்கு..விஷயம் நமக்கு சாதகமா முடியறவரை வெளியே யாருக்கும் சொல்லாத..” என்று மனைவிக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்த போது,

“ராஜம்” என்று மீண்டும் மாமியார் அழைக்க,

“போ..போய் அம்மாக்கு பால் சூடு செய்து கொடு..உன்னைக் கட்டிட்டு வந்ததே அதுக்கு தான்..அந்த வேலையையாவது சரியாச் செய்.” என்றார்.

‘கட்டிட்டு வந்ததிலிருந்து அதைத் தானே செய்திட்டு இருக்கேன்..இன்னும் எத்தனை காலம் இதையெல்லாம் செய்யணும்னு எழுதியிருக்கோ.’ என்று மனம் சலித்துக் கொள்ள, அதை முகத்தில் காட்டாமல் அங்கேயிருந்து வெளியேறினார் ராஜம்.

“என்ன ராஜம் ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாச்சுமா?” என்று ராஜத்தை விசாரித்தார் அவருடைய சம்மந்தி நளினி.

சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, உதட்டில் ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்ட ராஜம்,”அதெல்லாம் ஒண்ணுமில்லை..அலைச்சல் அதான் கொஞ்சம் சோர்வா இருக்கு.” என்று பதிலளித்தார்.

“உள்ளே போய் படுத்துக்கோங்கண்ணு சொல்ல முடியாது..இன்னமும் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு….குடிக்கறத்துக்கு தண்ணீர் கேன்லே..விருந்து சாப்பாடு கிளப் ஹவுஸ்லே.. பாத்ரும் எதிர் ஃபிளாட்லேன்னு அடிப்படை வசதி இல்லாத இந்த வீட்டுக்கு கிருஹப்பிரவேசம் நடக்குது..அடுத்த மாசம் எல்லா வசதியும் வந்திடும் அப்புறம் வைச்சுக்கலாம்னு சொன்னா என்னோட பேச்சை யார் கேட்கறா?” என்று புலம்பினார் நளினி.

‘உன் மகள் தான் கேட்கவில்லை.’ என்ற அவரது மறைமுக கூற்றினைப் புரிந்து கொண்ட ராஜம் வாயைத் திறக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இந்த ஃபிளாட் அவருடைய மகள் தர்ஷினியின் சுயசம்பாத்தியத்தில் வாங்கியது. வேலைக்கு சேர்வதற்கு முன்பே அதாவது கேம்பஸில் அவள் தேர்வானதுமே எப்போது, எத்தனை, எங்கே ஃபிளாட் வாங்க வேண்டுமென்று அனைத்தையும் திட்டமிட்டு விட்டார் அவருடைய கணவர் செந்தில். ஃபிளாட் கைக்கு கிடைப்பதற்கு முன் மகளுக்குத் திருமணம் முடிந்து விட்டது.

தர்ஷினியின் கணவன் வீட்டினர்க்கு சொந்த வீடு, ஃபிளாட் எதுவுமில்லை. நல்ல படிப்பு, வேலை இருந்ததால் அவனை மகளுக்கு ஏற்ற வரனாகத் தேர்தெடுத்திருந்தார் செந்தில். மாப்பிள்ளை வீட்டினர்க்கு சிலபல மனவருத்தங்கள் இருந்தாலும் கல்யாணத்திற்கு முன்பே சொந்த ஃபிளாட்டுடன் வந்த பெண்ணை வேண்டாமென்று சொல்ல அவர்கள் மடையர்கள் இல்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டர் தர்ஷினி ஆனான் தினேஷ்.

கிட்சன், பாத்ரூமிற்கு தண்ணீர் கனெக்‌ஷன், படுக்கையறை டைலிங் வேலைகள் என்று முக்கியமான வேலைகள் பாக்கி இருந்தாலும் மகளின் வாழ்க்கையை எப்படி அழகாக திட்டமிட்டிருக்கிறார் என்று அவரது பெருமையை மாப்பிள்ளை வீட்டினர்க்குக் காட்டத் தான் செந்திலின் இந்த அவசரக் கிருஹப்பிரவேச ஏற்பாடு.

மகளுக்கு செய்ய வேண்டிய சீரை செய்து விட்டு ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டு ராஜத்தின் மனது முழுதும் மகனைப் பற்றிய எண்ணங்கள் தான். அவன் இன்னமும் வீடு எதுவும் வாங்கவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு அவனால் வாங்க முடியாது. கடன் வாங்கி வேறொரு ஊரில் மனைவியை மேல்படிப்பு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். இரண்டு செலவுகள் செய்து கொண்டிருக்கிறான். திருமணத்திற்கு பிறகு தாய்நாட்டின் பக்கம் அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

“உங்க மகன் கல்யாணத்துக்கும் வரலை இப்போ கிருஹப்பிரவேசத்திற்கு வரலையே.” என்று இழுக்க,

அவரது மனத்தைப் படித்தாற் போல் இருந்தது நளினியிடமிருந்து வந்த அந்தக் கேள்வி.

அதைக் கேட்டபடி அங்கே வந்த செந்தில்,”என் மருமக படிச்சிட்டு இருக்கா..அவளுக்கு லீவ் எடுக்க முடியாது.” என்று பதில் கொடுத்தார்.

“சொந்த தங்கையோட கிருஹப்பிரவேசம்..உங்க மகன் மட்டும் வந்திருக்கலாமே.” என்று நளினி பதில் கொடுக்க, கடுப்பான செந்தில்,

“எல்லாத்துக்கும் வந்து போக அவன் என்ன பக்கத்திலேயா இருக்கான்..பல்லாயிரம் மைலுக்கு அப்பாலே இருக்கான்..யோசிச்சு தான் செய்யணும்..தர்ஷினிக்கு கல்யாணம் கூடி வர்றத்துக்கு முன்னாடி தான் நானும் இவளும் அங்கே போய் ஒரு மாசம் இருந்திட்டு வந்தோம்.” என்று பதில் கொடுத்து விட்டு, மனைவியிடம்,”சாப்பிட்டுக் கிளம்பணும்..இராத்திரி இருக்க முடியாதுன்னு குமரன் சொல்லிட்டான்..மூணு மணி பஸ்ஸுக்கு டிக்கெட் போட்டிட்டேன்..எழுந்து வா.” என்றார்.

நாற்காலியிருந்து எழுந்து கொண்ட ராஜம்,”மாமியார் மாமனாரைப் பார்த்துக்க மச்சினரை வரவழைச்சோம்..இராத்திரி இருக்கறேன் தான் சொன்னார்..ஏதோ அவசர வேலை வந்திடுச்சு போல..சாப்டிட்டு அப்படியே கிளம்பறேங்க.” என்று சம்மந்தியிடம் சொல்லிக் கொண்ட போது மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த உறவினர் ஒருவர் வர,

“எவ்வளவு பெரிய ஃபிளாட் பார்த்தீங்களா? கல்யாணத்துக்கு முன்னேயே என் மருமக வாங்கியிருக்கா..கிருஹப்பிரவேசம் தான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு..அதுவும் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கறேன்..என் பையனும் அவளும் சேர்ந்து மனைலே உட்காரணும்னு இருந்திருக்கு.” என்று அவரது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நளினி. சில நிமிடங்களுக்கு முன்பு அவர் பேசியதும் இப்போது அவர் பேசியதும் வேறாக இருந்தாலும் இதைப் போல் நிறைய பார்த்து விட்டதால், முகத்தில் எதையும் காட்டாமல், புன்னகையோடு அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார் ராஜம்.

சாப்பிடும் போதும் சரி, பேருந்து பயணத்தின் போதும் சரி ‘ஓர் ஆள்கிட்டே சரியா பேசிப் பழகத் தெரியுதா உனக்கு? அந்தச் சம்மந்தியாவது பெரிய படிப்பு, வேலை உனக்கு ஒத்து வராதுன்னு நானே எல்லாத்தையும் ஹேண்டில் செய்யறேன்..இவங்க உன்னை மாதிரி வீட்லே இருக்கறவங்க தானே இவங்ககிட்டே பேசறத்துக்கும் நான் தான் வரணுமா? உன்னை வைச்சுக்கிட்டு நான் படற பாடு..எல்லாம் என் தலையெழுத்து’ என்று கடும் வார்த்தைகளால் ராஜத்தை சல்லடையாக துளைத்து எடுத்து விட்டார் செந்தில். ராஜத்தின் மனது பயங்கரமாக சத்தம் செய்து கொண்டிருந்தாலும் ஒரு வார்த்தை கூட அவருடைய வாயிலிருந்து வெளிவரவில்லை.

‘நான் வாயைத் திறக்கறத்துக்கு முன்னாடியே பேச்சை முடிச்சு வைக்க நீங்க இருக்கும் போது எனக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கப் போகுது..என் சார்பா எல்லா இடத்திலேயும் நீங்களே பேசிட்டு எனக்கு இது வரலை அது வரலைன்னு குறை சொல்ல வேண்டியது..இப்படியே போச்சுன்னா புருஷன், பிள்ளைங்ககிட்டே கேட்டது போறாதுன்னு இனி பேரப் பிள்ளைங்க கிட்டேயும் பேச்சு கேட்பேன் போல.’ என்று ஊமையாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்த லிஸ்ட்டில் மருமகளைச் சேர்க்கவில்லை ராஜம்.  ஏனென்றால் இதுவரை மருமகளோடு சகஜமாக பேசிப் பழகி இருக்கவில்லை. திருமணம் முடிந்து ஒரு வாரம் போல் அவர்கள் வீட்டில் இருந்த போது  பகல் பொழுது முழுவதும் அவளுடைய பெற்றோருடன் விடுதியில் தான் கழித்தாள். அவர்கள் ஊரின் ஹோட்டல் ஒன்றிலே அறை எடுத்து தங்கியிருந்தனர் அவளுடைய பெற்றோர். ‘ஓரே பொண்ணிலே அதான்..இதுக்கு அப்புறம் அவளைப் பார்க்கணும்னா கடல் கடந்து தானே போகணும்.’ என்று செந்தில் தாராளப் பிரபுவாக நடந்து கொண்டது ராஜத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘எனக்கும் அப்படித் தானே..அவளைப் பார்க்கணும் அவளோட பழகணும்னா நானும் கடல் கடந்து தானே போகணும்.’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கிக் கொண்டார். மகனின் மனைவியாக மட்டும் இருந்தால் மட்டும் போதுமா? வீட்டின் மருமகளாக அவர் செய்து கொண்டிருப்பதை அவள் செய்யப் போவதில்லை என்றாலும் என்னென்ன என்று தெரிந்து கொள்ளவாவது வேண்டாமா?’ என்று மனம் பொங்க, அதற்கு வடிகால் தான் கிடைக்கவில்லை.