Advertisement

“இங்கேயே இருங்க, வந்துடுறேன்” சொன்ன செல்வா, காரை நோக்கி ஓடினான். மழையில் முழுவதுமாக நனைந்திருந்த சக்தியின் மனதில் சொட்டு சொட்டாக இறங்கியது செல்வாவின் வார்த்தைகள்.

சில நாட்கள் முன் அவன் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. 

“சில சந்திப்புகள் விபத்து போல நடந்து முடிந்து விடுகிறது. நம் சந்திப்பும் அப்படியொன்று என்றே நான் நினைக்கிறேன்” செல்வாவின் வரிகள் அவளின் மனதில் வலம் வர, அவனிடம் பேசிய பொழுதுகளை இப்போது வேறொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள். அவன் பார்வையில் எங்கேயும் காதலில்லை. பின்னர் ஏன்? என அவள் யோசனையில் மூழ்கி இருக்க, அதைக் கலைத்தான் செல்வா.

“இந்தாங்க சக்தி” என்று அவளின் பையை அவளிடம் நீட்டிய செல்வா, “இங்க ரெஸ்ட் ரூம் இருக்கு. சுத்தமா இருக்கும். பயமும் இல்ல, நம்பிப் போகலாம். நான் வெளில நிக்கறேன். நீங்க ட்ரெஸ் மாத்திட்டு வாங்க” அங்கிருந்த ஓய்வறையை கைக் காட்டி சொல்ல, அமைதியாய் அவனை பார்த்திருந்தாள் சக்தி. அவளது அதிர்ச்சி புரிந்த செல்வா, மென்மையாக அவளது கரத்தை பற்றினான்.

“சக்தி..” என்றான் குரலில் சிறு அழுத்தம் கொடுத்து. மெல்ல அவளை இழுத்து நடக்க வைத்தான். 

“நானே.. நானே போய் மாத்திட்டு வர்றேன்” அவன் முகம் பார்க்காமல் சொன்ன சக்தி, அவனிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். பத்து நிமிடங்கள் கழித்து அவள் உடை மாற்றி வெளியில் வர, செல்வாவும் சென்று உடை மாற்றி வந்தான். காலை உணவு, உணவோடு மட்டுமே கழிந்தது. செல்வா பேச முயற்சிக்க, சக்தி மௌனத்தையே பதிலாக தந்தாள். ஒரு கணம் அவளை கூர்ந்து பார்த்தான் செல்வா. அதன் பின் அவனுமே பேசவில்லை. 

வீராவை அழைத்து, மலரின் உடல் நிலையை விசாரித்து விட்டு வாகனத்திற்கு வந்தான் செல்வா. நடைப் பழகும் பிள்ளையாய் அவனை வால் பிடித்தாள் சக்தி. 

சென்னை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர். சக்தி சிந்தனையில் மூழ்கி இருக்க, அவளை தொல்லை செய்ய விரும்பாமல், இசையை இருவருக்கும் நடுவில் கொணர்ந்தான் செல்வா. 

“ஒரு கடிதம் எழுதினேன், அதில் என் உயிரை அனுப்பினேன். அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன். காதலி என்னை காதலி, பிளீஸ்” நடிகர் விஜய் கெஞ்ச, அவரைத் தொடர்ந்து தன் கொஞ்சும் குரலில் கெஞ்சத் தொடங்கினார் எஸ்பிபி. 

சட்டென திரும்பி செல்வாவை முறைத்தாள் சக்தி. உதடும், மீசையும் துடிக்க, சிரிப்பை மறைத்தான். ஒரு தோள் குலுக்களுடன் அவன் சாலைக்கு பார்வையை திருப்பி விட, சக்தியும் இருக்கையில் சாய்ந்து பின்னால் விரைந்து மறையும் நகரத்தை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். 

ஆனால், மனது அந்த பாடலிலேயே சென்று நின்றது. 

“நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று

நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு”

அதற்கு மேல் தாள முடியாமல், கை நீட்டி பாடலை அணைக்கப் போனாள் அவள். சட்டென அவளின் கையை இறுகப் பிடித்தான் செல்வா. ஒற்றைக் கையில் காரை ஒட்டியபடி, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நான் ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு உங்க விருப்பம் என்னவோ, அதை பதிலா சொல்லுங்க சக்தி. அதை விட்டுட்டு பாட்டு மேல எல்லாம் உங்க கோபத்தை காட்டாதீங்க” என்றான் அவள் கண்களைப் பார்த்து, மீண்டும் அவன் பார்வை சாலைக்கு திரும்பி இருந்தது. அவனிடம் இருந்த தன் கரத்தை வேகமாக உருவ முயன்றாள் சக்தி. 

குறுஞ்சிரிப்புடன், “நாம டீன் ஏஜ் பசங்க கிடையாது சக்தி. நம்ம ரெண்டு பேரும் உலகத்தின் மோசமான முகத்தை பார்த்திட்டு வந்துட்டோம். அழகான பக்கம் பார்க்கும் போதெல்லாம் சந்தேகம் வர்றதில் தப்பில்ல. எனக்கு பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லுங்க. அதுவரை உங்களை நான் எந்த விதத்திலும் தொல்லை பண்ண மாட்டேன். நீங்க என்னை நம்பலாம்” மென்மையாக அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து விடுவித்தான். கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து விட்டாள் சக்தி. 

மீதி தூரத்தை இசையின் துணையுடன் கடந்தான் செல்வா. அவர்கள் சென்னையை அடைந்து, மருத்துவமனைக்குள் நுழையும் போது மதியமாகி இருந்தது. வழி நெடுகிலும் அவ்வப்போது நண்பனை அழைத்து விசாரித்த படி தான் வந்தான் செல்வா. இப்போது நேராக அவர்கள் இருந்த விஐபி தளம் நோக்கி ஓடினான். 

அந்த தளத்தின் நீள, அகலத்தை தன் கால்களால் படபடப்புடன் அளந்து கொண்டிருந்தான் வீரா. உடல் முழுவதும் பதட்டம், கண்ணில் கவலை ரேகைகள், கைகளில் நடுக்கம் என உணர்ச்சி கலவையாய் நின்றிருந்தான். நான்கே எட்டில் நண்பனை அணுகி, அவன் கைப் பிடித்தான் செல்வா. அவன் கையோடு வாங்கி வந்திருந்த பழரசத்தை குடிக்க கொடுத்தான். 

“நேத்து நைட்ல இருந்து வலில துடிச்சுட்டு இருக்கா டா. இன்னும் தலை திரும்பல, கால் திரும்பலன்னு கதை சொல்லிட்டு இருக்கானுங்க. ஆபரேஷன் பண்ணுங்க சொன்னா, என்னை முறைக்கறானுங்க. மலர் வலில கதறுதை என்னால பார்க்க முடியல செல்வா. என் பிள்ளை எனக்கு மேல இருக்கும் போல. அவங்கம்மாவை இப்பவே படுத்த ஆரம்பிச்சுட்டா” வீரா புலம்ப, புன்னகையை அடக்கினான் செல்வா. 

“ஜூஸை குடி டா” என்றான். மறுக்காமல் அதை கையில் வாங்கி அருந்தி முடித்தான் வீரா. அங்கிருந்த மலரின் இரண்டு அண்ணங்களும் வீராவை முறைத்து பார்த்தனர். இத்தனை நேரம் அவர்களை அல்லவா தலையால் தண்ணீர் குடிக்க வைத்திருந்தான் அவன். மலர் மருத்துவமனைக்கு வந்ததில் இருந்து தண்ணீர் கூட தொடவில்லை அவன். இப்போது நண்பனை பார்த்ததும் தான் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான். 

“என் பொண்டாட்டியை பார்க்க என்னையவே விட மாட்டேங்கறானுங்க டா” புலம்பிய வீரா, “நான் போய் மலரை பார்த்திட்டு வர்றேன்” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தான் செல்வா. 

செல்வா, வீரா இருவருக்குமே மருத்துவமனை என்றால் அலர்ஜி. இருபது வயதில் அவர்கள் இருவரும் உயிருக்கு போராடிய இடம் அது. ஒரு கொடூரமான விபத்திற்கு பின், வீரா கோமாவிற்கு சென்று விட, மிக போராடி உயிர் பிழைத்த செல்வா, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மருத்துவமனையில் தான் இருந்தான். அதன் பின்னும் கூட உடல் ஒரு நிலைக்கு வர, உடற்பயிற்சி, பிசியோதெரபி என்று எத்தனையோ செய்ய வேண்டியிருந்தது. அதை இப்போது நினைக்கையிலும் கோபமும், வெறுப்பும், கசப்புமான உணர்வு அவனைத் தாக்க, அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் சரிந்தான் அவன். 

அப்போது தான் சக்தியை கவனித்தான். கண் கலங்க, கைகளை பதட்டமாக பிசைந்தபடி அமர்ந்திருந்தாள். அவளை அப்படி பார்க்கவே அவனுக்கு மனதை பிசைந்தது. 

“சக்தி” என்று அவன் அழைத்தது கூட அவளுக்கு கேட்கவில்லை. செல்வாவின் கரம் மெல்ல நீண்டு அவள் கரத்தை பற்றியது.

“ஏன் இன்னும் டெலிவரி ஆகல? நமக்கு சொல்லியே எவ்ளோ நேரமாச்சு? நாமளே பெங்களூர்ல இருந்து வந்துட்டோம். ஆனா, இன்னமும்…” அவள் குரல் உடைய, செல்வாவால் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும். தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது இயல்பு தான். ஆனால், அவளின் கேள்வியும், பார்வையும் வேறொரு செய்தி சொல்ல, அவளையே கூர்ந்து பார்த்தான் செல்வா. 

அவளையும் அறியாமல் அவன் கரத்தை அழுத்தி பிடித்தாள் சக்தி. அவளுக்கு நெருக்கமாக நகர்ந்து அமர்ந்தான் செல்வா.

“தலை இன்னும் திரும்பலையாம் சக்தி. அதான் லேட் ஆகுது” அவன் சொல்ல, “ம்ம், ஆனா, மலருக்கு ரொம்ப வலிக்கும் இல்ல? பாவம்” என்று சொன்னவளின் குரலிலும் வலி இருந்தது. 

அந்நேரம் வீரா கதவை திறந்து வெளியில் வர, மலரின் கதறல் அவர்களின் செவிப்பறையை அறைந்தது. சிவப்பேறிய கண்களுடன் வந்தான் வீரா. எட்டி நண்பனை இழுத்து தனக்கு அருகில் அமர்த்தி கொண்டான் செல்வா. 

“சிசேரியன் பண்ண சொல்றேன். இந்த ராகவன் நாய் வேணாம்னு சொல்றான் டா. உட்கார்ந்து எனக்கு கிளாஸ் எடுக்கறான் அந்த மயக்க டாக்டர். ஹாஸ்பிட்டலை விட்டு வெளில வரட்டும் இருக்கு அவனுக்கு.” 

“ஷ்ஷ்ஷ் வீரா”

“நாயே, உனக்கென்ன? என் மலர் தான் வலியில் துடிக்கறா. உனக்கா வலிக்க போகுது? எனக்கு வலிச்சா கூட பரவாயில்ல. ஆனா, என் மலர், மலரை விட சாப்ட் டா அவ. அவளை இப்படி பார்க்க முடியல டா. எனக்கு உயிரே போகுது.” வீரா புலம்ப, அவன் தோளில் கைப் போட்டு அணைத்தான் செல்வா. மறுபுறம் அவன் கையை உடைத்து விடுவது போல இறுக்கம் கொடுத்து பிடித்தாள் சக்தி.

இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டிருந்த செல்வா, இருவரின் மன நிலையையும் உணர்ந்து கொண்டு ஆதரவாக அமர்ந்திருந்தான். அங்கிருந்து இருவரையும் வற்புறுத்தி, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய் உணவருந்த வைத்தான். 

நேரம் கடந்ததே தவிர குழந்தை வந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து உடைந்தே போனான் வீரா. 

“என்னடா டாக்டர்ஸ் நீங்க எல்லாம்? ஒழுங்கா ஒரு குழந்தையை வெளில எடுக்க தெரியல. தலை வரல. கால் வரலன்னு கதை சொல்லி, பயமுறுத்திட்டு இருக்கீங்க. என் மலருக்கு ஏதாவது ஆச்சு. நாளைக்கு இந்த இடத்தில ஹாஸ்பிட்டலே இருக்காது பார்த்துக்கோங்க” அவன் மிரட்ட, “டேய், வீரா” என்று நண்பனை அடக்கினான் செல்வா. 

“ஹலோ, சார். நாங்க எங்களால முடிஞ்ச…”

“ஆமா, இதையே தான் நைட்ல இருந்து சொல்லிட்டு இருக்கீங்க.” செவிலியை பேச விடாமல் கத்தினான் வீரா. மலரின் குடும்பம் அவனுக்கு அருகில் வர, அவர்களை முந்திக் கொண்டு அவனிடம் வந்தான் மலரின் நண்பன், மருத்துவனான ராகவன். 

“மாம்ஸ், இங்க பாருங்க” ராகவன் தொடங்க, “மெடிக்கல் டெர்ம் மயிரு எதையாவது சொன்னீன்னா கடுப்பாகிடுவேன் டா” என்றான் வீரா. 

“பிளீஸ், பொறுமையா இருங்க மாம்ஸ்.” ராகவன் சொல்ல சொல்ல, மறுப்பாக தலையை அசைத்தான் வீரா.

அந்நேரம் அங்கு வந்த மகப்பேறு மருத்துவர், அங்கிருந்த கூட்டத்தை எரிச்சலுடன் முறைத்து பார்த்தார். என்ன தான் அது விஐபிக்களுக்கான பிரத்தியேக தளம் என்றாலும் கூட, மருத்துவமனைக்கு என்று ஒரு ஒழுங்கு இருக்கிறது அல்லவா? 

“இதென்ன சினிமா ஹாலா? எதுக்கு இத்தனை பேரை என்டர்டேயின் பண்றீங்க?” அவர் செவிலியை பார்த்து கோபத்துடன் கேட்க, “யாராவது ரெண்டு பேர் மட்டும் வெயிட் பண்ணுங்க. மத்தவங்க ரூம் போங்க பிளீஸ்” என்றார் அவர். 

அங்கே காத்திருந்த மலரின் குடும்பம், மொத்தமும் அவர்களுக்காக பதிவு செய்திருந்த அறைக்கு சென்றது. 

மருத்துவர் சிகிச்சை அறைக்குள் நுழைய, அவரோடு உள்ளே போனான் வீரா. 

“அம்மா… வீரா…” என்ற மலரின் குரல் மெலிதாய் வெளியில் கேட்டது. உடல் தூக்கி வாரிப் போட, செல்வாவின் கைப் பிடித்தாள் சக்தி.

“என்ன சக்தி?” செல்வா கேட்க, அவனை நெருங்கி நின்றாலே ஒழிய, ஒன்றுமே பேசவில்லை அவள். அவனோடு இணைந்து விடுவது போல ஒட்டிக் கொண்டு நின்றாள் சக்தி. 

செல்வாவிற்கு குழப்பம் சிலந்தி வலை பின்ன தொடங்கி இருந்தது. அவனைப் போலவே, அவளுக்கும் மருத்துவமனையில் மோசமான அனுபவம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான் அவன்.

“ஹாஸ்பிடல்னா பயமா? ஏதும் பேட் மெமரி இங்க இருக்கா?” ஒற்றைக் கையால் அவள் முகம் நிமிர்த்தி கேட்டான் செல்வா. கண்ணில் நீர் நிறைந்து நிற்க, “ஆம்” என்று தலையசைத்தாள் சக்தி.

“இங்க.. இது போல.. உயிருக்கு போராடி இருக்கேன்” என்றாள். பலமாக அதிர்ந்து அவளைப் பார்த்தான் செல்வா. அவனுக்கு எதுவோ புரிவது போலிருந்தது.

“சந்தோஷ்?” என்றான் கேள்வியாக. அதற்கும் தலையசைப்பையே பதிலாக தந்தாள் சக்தி. 

“சாரி” என்றான் அவளின் தலைக் கோதி. சட்டென உடைந்தாள் சக்தி. எப்போதும் அன்பை தாங்குவது தானே கடினமாக இருக்கிறது. அவன் தோளில் முகம் புதைத்தாள். கண்ணீர் அவன் தோளை நனைக்க, என்ன ஆறுதல் சொல்வதென தெரியாமல், “சக்தி, பிளீஸ். அழாதீங்க” என்றான். 

அரை மணி நேரம் கழிய, விலகி அமர்ந்தாள் சக்தி. செல்வா சென்று அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்தான். சக்தியை அறைக்கு அழைத்து சென்று முகம் கழுவி வர செய்தான். அவள் மறுக்க மறுக்க கட்டாயப்படுத்தி அவளை தேநீரை குடிக்க வைத்தான்.

வீரா வெளியில் வர அவனுக்கும் கொடுத்தான். வீரா கைகளில் நடுக்கம். “எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது? ஒழுங்கா வேற ஹாஸ்பிடல் போய் இருக்கலாம். லட்சம் லட்சமா வாங்குறானுங்க. ஒரு உயிரை சரியான நேரத்துக்கு இந்த உலகத்துக்கு கொண்டு வர முடியல. என்ன டாக்டர்களோ…” வீரா புலம்ப, “வீரா…” என்று அவனை அதட்டி அமைதியாக்கினான் செல்வா. 

“இதை குடி, முதல்ல” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், நண்பனின் உதட்டில் தேநீர் கப்பை வைத்து அழுத்தினான். சூடான பானம் உள்ளிறங்க மேலும் தெம்பு வந்து புலம்பினான் அவன். 

செல்வா கண்களுக்கு, தனக்கு இரு பக்கமும் இரண்டு காயம் பட்ட குழந்தைகள் அமர்ந்திருப்பது போலிருந்தது. இருவரையும் அமைதி படுத்தியே ஓய்ந்து போனான் அவன். 

Advertisement