Advertisement

ஜோசியர் அவரை பார்த்தபடி “அம்மா உங்களுக்கு நான் ரொம்ப நாளா ஜாதகம் பார்க்கிறேன்., உங்க குடும்பத்திற்கு கெடுதலானது எதுவும் சொல்ல போறது கிடையாது., ஆனா நீங்க சொல்ற இந்த பொண்ணுங்க., உங்க அளவுக்கு வசதியான பொண்ணுங்க வீட்டு ஜாதகம் சொல்றீங்க.,  அப்படி இருக்கும் போது தம்பியோட ஜாதகப்படி இப்படிப்பட்ட பொண்ணுங்க அமையாது.,

தம்பிய பொறுத்தவரைக்கும் அவருக்கு சாதாரண குடும்பத்தில் இருந்துதான் பொண்ணு வரணும் ன்னு விதி இருக்கு., உங்களை விட வசதி குறைவான வீட்டுக்கு தான் அவர் மருமகனா போகணும்னு விதி இருக்கு.,  அது ஒன்னும் குத்தம் இல்லையேம்மா..,  எல்லாரும் நல்ல குடும்பத்தில் உள்ள பொண்ணு வேணும்னு தான் நினைப்பாங்க.., பணம் மட்டும் இருந்தால் போதுமா.., நல்ல குடும்பம் நல்ல குணமும் அமையும் போது எந்த குடும்பமா இருந்தா என்னன்னு பொண்ணு எடுத்துக்க வேண்டியது தானே”., என்று சொன்னார்.

சொர்ணமோ”அது எப்படி எங்க தகுதியை விட்டு நாங்க இறங்கிப் போய் பொண்ணு பார்க்க முடியும்”.,  என்று கேள்வி கேட்டார்.

ஜோசியரோ “சரி அப்படி என்றால் தம்பியின் விதிப்படி நடக்கட்டும்”., என்று சொல்லி விட்டு கொண்டு வந்தவற்றை எடுத்து வைக்க தொடங்கியிருந்தார்.

தயாளன் தான் மனது கேட்காமல் “ஜோசியரே அவனுக்கு எப்படிப்பட்ட ராசியில் பொண்ணு அமையும் இன்னொரு தடவை சொல்லுங்க., எந்த மாதிரி பொண்ணு பார்த்தா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்., அத சொல்லுங்க”., என்று சொன்னார்.

அவர் அவனுடைய ராசி நட்சத்திர பொருத்தங்களை வைத்து “இந்த ராசியில்., இந்த நட்சத்திரத்தில் உள்ள பெண் அமைந்தால் அவனுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்றும்.,  அந்த பெண்ணின் ஜாதகம் அமோகமாக தம்பி ஜாதகத்திற்கு சாதகமாக இருக்க வேண்டும்., இப்படிப்பட்ட லக்கணத்தில் இப்படிப்பட்ட ராசியில் பிறந்த பெண்ணாக இருந்தால் பிரசாத்தின் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்”.,  என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்., “நான் பொதுவாக உங்கள் குடும்பத்திற்கு சொன்ன பலன் கண்டிப்பாக மூன்று வருடத்திற்கு இருக்கும்., சிறுசிறு குழப்பங்களும் குடும்பத்திற்குள் சின்னசின்ன பிரச்சினைகளும் உருவாக தான் செய்யும்.,  அதைப் பொறுத்து போனால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்”., என்று சொன்னார்.

அனைவரும் “சரி அதற்கு ஏதும் பரிகாரம் உண்டா., என்று கேட்டனர்.

“பரிகாரம் என்று பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை., நீங்கள் எப்போதும் வணங்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள்., அத்தோடு குலதெய்வ வழிபாட்டை பார்த்துக்கொள்ளுங்கள்”., என்று சொன்னவர் “ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது தான் இன்றைய சூழ்நிலையில் சிறந்த பரிகாரமாக அமையும்., தெய்வத்தின் துணையோடு தான் அனைத்தையும் வெற்றிக்காண முடியும்., அதனால் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., வேறு எதுவும் தேவையில்லை”.,என்று சொன்னதோடு

பிரசாத்தின் ஜாதகத்திற்கு பொருந்தும் படியாக ஏதும் வந்தால் சொல்வதாகச் சொல்லிவிட்டு அவனுடைய ஜாதக-குறிப்பை மட்டும் ஒரு பேப்பரில் வரைந்து எடுத்துக்கொண்டு ராசி நட்சத்திரங்களை எழுதி எடுத்துக்கொண்டு கிளம்பினார்.,

தட்சனையாக அவர் பெரும் தொகை கொடுக்க அதில் இருந்து பாதியை மட்டும் எடுத்துக் கொண்டவர்.,

“நீங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து நல்லபடியாக ஆன பிறகு சொல்லுங்கள்., அப்போது வாங்கி கொள்கிறேன்”., என்று சொல்லும் போது

தயாளன் அவரிடம் “உங்களிடம் மீண்டும் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டும்”., என்றார்.

எழுந்தவர் மீண்டும் அமர்ந்தபடி சொல்லுங்கள் என்று கேட்டார்.,

அவரும் “இல்லை பிரசாத்திற்கு அப்படிப்பட்ட பெண் அமைந்தால்., அவன் அரசியலில் செல்வாக்கு வர முடியுமா”.,  என்று கேட்டார்.

அவரோ “நிச்சயமாக நான் சொன்ன லக்கனத்தில் ராசியில் பெண் அமைந்தால்.,  நிச்சயமாக சின்னவன் அரசியலில் கால் பதிப்பதோடு பிரகாசிக்கவும் முடியும்., அவன் மனைவியின் ராசி தான் அவனை உயர்த்தும் என்பது அவனுடைய ஜாதக சூழ்நிலை., அவனுடைய கிரகச் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது..,  அதை தான் சொன்னேன் அப்படிப்பட்ட பெண்ணை பாருங்கள் என்று.., வசதி வாய்ப்பு என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம் இல்லையா..,   அந்த பெண்ணின் ராசி உங்கள் மகனின் வாழ்க்கையை உயர்த்தும் என்னும் போது அப்படி பெண் பார்ப்பதில் தப்பு இல்லையே..,  நல்ல குடும்பத்தில் உள்ள பெண் நமக்கு போதாதா”., என்று ஜோசியரும் சொன்னார்.

அவரும் “ஆமாம்”., என கேட்டுக் கொண்டார் அதேநேரம் அவருக்கு மகன் எப்படியாவது அரசியலில் முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால்.., அதைப்பற்றி மனதிற்குள் தயார் நிலையில் இருந்தார்.

பிரசாத்தும் அப்போது தான் யோசித்துக் கொண்டிருந்தான்., ‘காலையில் தன் மனம் படபடப்பாக., ஏதோ ஒன்று என்று மனதிற்குள் கூறியதற்கு காரணம் இதுதானா’., என்று தோன்றினாலும் அவனால்  மேற்கொண்டு யோசிக்கத் தோன்றவில்லை..,

எப்படி நம் குடும்பத்திற்கு சரிவரும்., தன் நிலையில் இருந்து இறங்குவதா., அவனால் எப்படி இறங்க முடியும் என்று யோசனையோடு யோசித்துக் கொண்டிருந்தான்.,

ஜோசியர் கிளம்பி சென்ற உடன் சொர்ணம் தான் “அதெல்லாம் முடியாது.,  அது எப்படி அப்படி பொண்ண பார்க்க முடியும்., நம்ம லெவல்ல உள்ளவங்க  வீட்டில் இந்த மாதிரி ராசி நட்சத்திரம் உள்ள பொண்ணு கிடைச்சா வேண்டாம்னா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது…,

தயாளனும் “முடிந்தால் தேடிப்பார்” என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்து கொண்டார்.,

ஏனெனில் தனக்கு எப்பொழுதுமே ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உண்டு.,  அந்த காரணத்திற்காக  மட்டுமல்லாமல்.,  இந்த ஜோசியர் சொன்னால் நிச்சயம் அதன்படியே நடக்கும்  என்ற எண்ணமும் அவருக்கு இருப்பதால்..,  அமைதியாக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு., கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு வெளியே வந்தார்.

பிரசாத்திடம் “நீ என்ன சொல்ற பிரசாத்”.,என்று கேட்டார்.

அவனும் “எனக்கு யோசிக்கணும் பா” என்று மட்டும் சொன்னான்.

வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருந்தாலும் பிரசாத் யோசனையில் அமைதியாக அமர்ந்திருக்க.,  தயாளன் ஜோசியர் சொன்னதை யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.,

அந்நேரம் நித்யானந்தன் “பார்க்கலாம் பா.,  யோசித்து பாப்போம்.,  கண்டிப்பா தம்பி அரசியல் போகனுமா என்ன”., என்று கேட்டான்.

அவர் நித்யானந்தனை  கேள்விக் குறியாக நோக்கினார்.

“இல்லை., எதுக்கு சொன்னேன் னா.,  சொந்தமான  பிசினஸ் பார்த்தா போதும்., அப்படி ஒன்னும் அரசியலுக்குப் போக வேண்டாமே., அரசியலுக்காக   நம்ம ஸ்டேட்டஸ் விட குறைந்து பொண்ணு பார்க்க வேண்டாம்”., என்று சொன்னான்.

தயாளன் தான் “என்ன புரிஞ்சுகிட்டு தான் எல்லாரும் பேசுறீங்களா., அவன் ஜாதகத்திலே வசதி குறைவான பொண்ணு தான் அமையும் ன்னு இருக்கு..,  அவன் அரசியலுக்கு போனாலும் சரி., போகாவிட்டாலும் சரி..,  அவனுக்கு இப்படி பட்ட பொண்ணு தான் கிடைக்கும்.., அப்படின்னு இருக்கும் போது எப்படி மாற்ற முடியும்”., என்று சொல்லிவிட்டு

பிரசாத்தை நோக்கி “நீ என்னடா சொல்ற..,  நீ சொல்றதை சொல்லு”., என்று சொன்னார்.

“பார்க்கலாம் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்”., என்று சொன்னான்.

“அப்போ அரசியலும்., வேண்டாங்க அப்படித்தானே”.,என்று கேட்டார்.

அவனும் சற்று யோசித்த படி “என்ன சொல்றது ன்னு தெரியலை.,  எனக்கு என்னவோ இப்ப எதுவும் தோணல”., என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அவனுடைய மனநிலையை நித்யானந்தனாலும் புரிந்து கொள்ள முடிந்த அளவிற்கு., தயாளன் க்கும் புரிந்தது.., ஏனெனில் கிட்டத்தட்ட தயாளன் அரசியலுக்காக அனைவரிடமும் கலந்து பழகுவது போல.., நித்யானந்தம்  அவனுடைய பிசினஸ் கம்பெனி என்று வரும்போது அனைவரிடமும் பழக தான் செய்வான்..,

ஆனால் பிரசாத் கிட்டத்தட்ட தாயின் வார்ப்பாக சற்று யாருடனும் நெருங்கிப் பழகாத அவனிடம் போய் வசதி குறைவான குடும்பத்தில் தான் உனக்கு பெண் எடுக்க வேண்டுமென்று சொன்னால்.,அவன் என்ன செய்வான் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அதேநேரம் நித்தியானந்தன் மனைவி “அதை ஏன் அப்படி யோசிக்கணும்., ஒருவேளை பொண்ணு அழகா இருந்து சாதாரண குடும்பமா இருந்தா கூட., நல்ல ராசி நட்சத்திரம் எல்லாம் ஜோசியர் சொல்ற மாதிரி நல்லா இருந்தா  முடித்து விட வேண்டியது தானே., கல்யாணம் முடிச்சிட்ட அப்புறமா நம்ம வீட்டுக்கு வந்தாச்சு னா அந்த பொண்ணு வசதியான வீட்டு பொண்ணு மாதிரி தானே வாழப் போகுது.,  இதுல என்ன இருக்கு தம்பிக்கு ஒரு வேளை எம்எல்ஏ சீட்  கிடைத்து., ஜெயிக்கிற வாய்ப்பு இருந்தா.,  அப்புறம் அந்த பொண்ணுக்கு வெளியே உள்ள மரியாதை., எம்எல்ஏ ஒய்ஃப் ங்கிற பேர் தானே இருக்கும்.,

அந்த வீட்டு பொண்ணு வசதி குறைவு பொண்ணு அப்படின்னு யோசிக்க மாட்டாங்களே”., என்று சொன்னாள்.

பிரசாத் அவளை நிமிர்ந்து பார்க்க.,

ஏன் தம்பி எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க., ஒருவேளை அந்த பொண்ணோட ராசி நீங்க எம் எல் ஏ  ஆகிட்டீங்கன்னா., அந்தப் பொண்ண அப்படித்தான சொல்லுவாங்க.., உங்க பொண்டாட்டி என்கிற பெருமையுடன் இருக்கும்.,  அதே மாதிரி நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்  இந்த வீட்டு மருமக.,  இன்னாருடைய மருமக தான் சொல்லுவாங்க..,  யாரும் அவங்க அம்மா அப்பா வீட்டை பத்தி பேச போறது இல்ல இல்ல..,  நீங்க அப்படியே யோசிச்சு பாருங்க தம்பி”., என்று சொன்னாள்.

சொர்ணத்தம்மாள் தான் “ஏங்க அந்த ஜோசியர் ட்ட போன் பண்ணி கேளுங்க.,  ஒரு சாஸ்திரத்துக்கு அந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம்  பண்ணி அப்படி ஓரமா வச்சிட்டு.,  நமக்கு தகுந்தாற்போல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா”., என்றார்.

பிரசாத் தான் தன் தாயை முறைத்தவாறு “என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது.,  அந்தளவுக்கு கேவலமானவனா தெரியுதா”.,  என்று கோபமாக கேட்டான்.

சொர்ணா தான்  “இல்ல தம்பி நான் எதுக்கு சொல்ல வர்றேன்னா.,  நம்ம வீட்டுக்கு அப்படி ஒரு பொண்ணு வந்துச்சுன்னா”., என்று ஏதோ சொல்ல வரவும்…

“அம்மா தயவுசெய்து பேசாதீங்க.,  அப்பா எனக்கு கல்யாணத்தை பத்தி பேசவே பேசாதீங்க”., என்று சொன்னான்.

தயாளனோ., “டேய் சின்னவனே அப்படி யோசிக்க கூடாது., ஜோசியர் எதை சொன்னாலும் சரியா இருக்கும்.,  ஒருவேளை அந்த பொண்ணு வர நேரம்.,  கலா சொன்ன மாதிரி உனக்கு  சீட் கிடைச்சி ஜெயிச்ச னா அந்த பொண்ண எல்லாரும் எம்எல்ஏ ஒய்ஃப் ன்னு தான் சொல்ல போறாங்க., இந்த வீட்டு மருமகள் ன்னு தான் சொல்ல போறாங்க.., என்ன கல்யாணம் முடிஞ்ச புதுசுல மாமனார் வீட்டுக்கு போகவேண்டியது தான் இருக்கும்.,  இந்த ஊருக்குள்ளேயே நம்ம பொண்ணு பாத்துட்டா., காலையில போயிட்டு  சாயங்காலம் வர்ற மாதிரி வச்சுக்கலாம்.., அங்க போய் நீ தங்க வேண்டாம் அவ்வளவு தானே.., கலா சொன்ன மாதிரி  பொண்ணு அழகா இருந்துச்சு னா., வெளியே அது மட்டும்தான் தெரியும்., யாரும் அங்கே வசதி பற்றி பேச மாட்டாங்க.,  வசதி மட்டும் தானே குறைவா வரும் ன்னு சொல்லியிருக்காங்க ன்னு நினைச்சிக்கோ.., சிலர் ஜாதகத்தில் உடலில் குறைபாடு இருக்கும் ன்னு சொல்லுவாங்க.., அது போலவே அமையவும் செய்யும்.,

வசதி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் டா., அப்படி  யோச்சிக்கோ.,  அதுமட்டுமில்லாமல் எம்எல்ஏ எலக்சன் ல நிக்க போற னா.,  இதை வச்சே நல்ல பேர் வாங்கமுடியும்., வசதி பார்க்காத மனுஷன் எல்லார்ட்டையும் நல்ல பழகுவாங்க ன்னு பேரு வாங்கிடலாம்”.,  என்று சொன்னார்.

சொர்ணாவோ.,  “நீங்க இப்படியே சொல்லாதீங்க., எனக்கு வர்ற மருமக எப்படி இருக்கனும் ன்னு எனக்கு ஒரு ஆசை இருக்குல்ல., மற்றவர்கள் முன்னாடி நான் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்., நம்மள பார்த்து என்ன எல்லாம் சொல்லுவாங்க., இவனுக்கு ஏதோ பிரச்சனை ன்னு கூட சொல்லுவாங்க”.,  என்று கோபமாக பேசினார்.,

தயாளனோ “நமக்கு இப்போ எது முக்கியமோ., அதை தான் யோசிக்கணும்,  நீயே உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ணாத”.,  என்று சொல்லி வாயை மூட வைத்தார்.,

அதேநேரம் பிரசாத்தோ “அப்பா நடக்கிறது நடக்கும் போது பாத்துக்கலாம்..,  அவசரப்படாதீங்க”.,  என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

நண்பனும் “விடுடா பாத்துக்கலாம்.,  எப்பவுமே எல்லாமே சொன்ன படியே நடக்கும் என்று கட்டாயமா இருக்கு., அது மட்டும் இல்லாமல் வசதி மட்டும் தானே குறைவு ன்னு சொன்னாங்க”..,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

எத்தனை பேர் எத்தனை சொன்னாலும் எழுதிவைத்த விதி மாறாது என்பது யாருக்கும் புரிவதில்லை.,  மதியால் வெல்லலாம் என்று நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை மதியை இழுத்து போவதே இந்த விதி தான் என்று., விதி தான் நம்மை நூல் கட்டி ஆடவைக்கும் பொம்மையாக ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பது நிறைய பேருக்கு புரிவதில்லை.

காதல் என்பது
என்னவென்றே
தெரியாத போதே.,

காதலோடு வாழ
நினைத்தேனடி.,

மனம் நிறைய
காதலை தந்துவிட்டு
மறைந்து போனது ஏனோ.,
மறந்து விடுவேன் என்று
நினைத்தாயோ..,

மறக்க மட்டுமல்ல
என்னை உயிர்ப்பிக்க கூட
உன் நினைவுகள் வேண்டும்.,

Advertisement