Advertisement

அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த ஹேமா.,  கிளம்புவதற்கு முன் பெங்களூரில் இருக்கும் அவளின் கல்லூரி தோழி ஒருத்திக்கு அழைத்து பேசியிருந்தாள்.,

       அந்த நம்பருக்கு முயற்சி செய்திருந்தான் பிரசாத்., அது கிடைக்காமல் போகவே அந்த நம்பரை விட்டு விட்டு ரதியும் குழலியும் மட்டுமே சந்தித்திருந்தான் பிரசாத்.,

      அவள் காணாமல் போனது முதல் அவளை பற்றி அத்தனை தகவல்களையும் அவளது போன் கால் லிஸ்ட் வரை தேடி எடுத்திருந்தான்.

        கிளம்புவதற்கு முன் ஹேமா சுந்தரி அம்மாவின் அலைபேசியில் இருந்து அழைத்து பெங்களூருக்கு பேசியிருந்தாள்.,

         அது யாருக்கும் தெரியாது சுந்தரி அம்மாவிடம்எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்., நான் உங்கள் அலைபேசியில் இருந்து பேசியது யாருக்கும் தெரிய வேண்டாம்“., என்று சொல்லி பேசிவிட்டு சென்றிருந்தாள்.

          அவள் நேராக சென்னை செல்லாமல்  பெங்களூர் சென்று., அங்கு இருக்கும் இந்த கம்பெனியின் பிரான்ஜில் சேரலாம் என்று தான் முதலில் நினைத்து அங்கு சென்றதே.,

   அந்நேரத்தில் அவளுக்கு அங்கு வேறொரு வாய்ப்பு வர., சற்று விலகி இருந்தால் நல்லது என்ற எண்ணத்தோடு அங்கிருந்து சற்று தொலை தூரத்திற்கு சென்று விட்டாள்.,

          அவள் பெங்களூரில் இருந்து விலகியது வரை மட்டுமே ரதிக்கும்.,  குழலிக்கும் தெரியும்., அதற்கு மேல் அவள் அவர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டாள்.,

      “நான் எங்கிருந்தாலும்., உங்களோடு ஏதாவது ஒருவகையில் தொடர்பில் இருப்பேன்., தயவுசெய்து நான் இங்குதான் இருக்கிறேன் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்“., என்று பெங்களூர் வந்த புதிதில் இருவருக்கும் சொல்லி இருந்ததால் இருவரும் அதைப் பற்றி மேற்கொண்டு பேசவில்லை.

            இப்போதும் அவள் பெங்களூரில் இருந்து கிளம்பி விட்டாள்., என்று மட்டும் தெரியும். ஆனால் எங்கு சென்றால் என்று இவர்கள் இருவருக்கும் தெரியாது.,

          ஏனெனில் பெங்களூரு தோழி பெண்ணியம் பேசுபவள்., ‘அவளுக்கு வீட்டில் பிரச்சனை., திருமண வாழ்க்கையில் மாமியார் பிரச்சனைஎன்று மட்டுமே சொல்லி இருந்ததாள்.

       அவள் இவளுக்கு தீவிரமாக உதவி செய்தால்., மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று சொன்ன காரணத்தினால்., அவள் சொல்ல வில்லை., ஹேமாவுக்கும், குழலிக்கும் பொதுவான தோழிதான் அந்த பெங்களூரு தோழி ரேச்சல்.,

            வரமோ சாபமோ வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்று தான்., தனியே கிளம்பி போராட்டத்தை தொடங்கி இருக்கிறாள் ஒருத்தி., இங்கு ஒருவன் தனியே அவளின்றி வாழ முடியாமல் தான்., வாழ்க்கையை போராட்டத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

         இந்த தகவலை எல்லாம் அங்கிருந்து கிளம்பி வரும்., இந்த ஒரு வாரத்திற்குள் கோட்டை விட்ட கதை தெரியாமல் எப்படியும் அவளை கண்டு பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தான் பிரசாத்.,

          நாட்கள் அவளை கண்டுபிடிக்க முடியாமல் ஓட ஓட., அவனால் சற்றும் குறைக்க முடியாத அளவிற்கு கோபம் எகிரி கொண்டிருந்தது.,

       வீட்டினர் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று  நினைத்து கொள்வான்., அவனோ தன் சகோதரியோடு ஒட்டும் வேண்டாம்.,  உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும்., மனம் முழுவதும் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

       அவளை என்றாவது பார்த்தால் அடித்து விடுவோமோ என்ற எண்ணத்தோடு தான் ஒதுங்கி இருந்தான்.,  திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் மனைவியின் பின்னே போய் விட்டதாக., அவன் அம்மாவின் பேச்சு அவனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது.

        ‘பெண்கள் அனைவருமே மோசமா இல்லை., இந்த மாமியார் அவதாரம்  எடுக்கும் அம்மாக்கள் மட்டும் மோசமாஎன்று தோன்றியது.

       அன்று இரவு நண்பனோடு சற்று மது அருந்திவிட்டு புலம்பிக் கொண்டிருந்தான்.,  “ஏண்டா இந்த அம்மா எல்லாம் இப்படி இருக்காங்க., அவங்க பொண்ணுங்க மட்டும் அவங்க  புருஷனோட சந்தோசமா வாழ்ந்தா., என் பொண்ணு புருஷனை கைக்குள்ள வச்சிருக்கான்னு.,  பெருமையா பேசுவாங்க..,

        அதே அம்மா ஏன் மாமியாரா மாறும் போது.,  தான் மகன் மருமகள் சிரிச்சு பேசினாலே., மயங்கிட்டா., கைகாரி., ஒரு மாசத்துல மயக்கிட்டா  ன்னு சொல்றாங்க.,  இதெல்லாம் என்ன நியாயம்.,

         அவங்க பொண்ணு நா ஒரு பேச்சு., அவங்க மருமகளா இருந்தா ஒரு பேச்சாடா., அதுவும் பொண்ணு தானே..,  ஏன்டா அப்படி யோசிக்க மாட்டாங்களா“.,  என்று தன் குமுறல்களை தன் வீட்டில் அமர்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தான்.

        எதிர்த்தால் போல இருந்த நண்பன் அவன் மொத்தமாக புலம்பி தீர்க்கட்டும் என்ற எண்ணத்தோடு அவன் புலம்புவதை எல்லாம் அமைதியாக காது கொடுத்து  கேட்டுக் கொண்டிருந்தான்.,

      அவளை பிரிந்து நாட்கள் கடக்க தொடங்கிய பின்பு அடிக்கடி புலம்புவான்., ஆனால் இதோ கிட்டத்தட்ட இந்த ஐந்து நாட்களாக இது போல தினமும் மது அருந்தி விட்டு., அவனிடம் அதிகமாக புலம்பிக் கொண்டிருக்கிறான்.

     ஆனால் இவனுக்கு குடிப் பழக்கம் கிடையாது., இப்போது புதிதாக தொடங்கியிருப்பதால் அதிகமான புலம்பல் என்பதை உணர்ந்த அவனது நண்பன்., ‘இனி இவனை இப்படி விடுவது சரிவராது‘., என்ற எண்ணத்தோடு.,

        “நீ சொல்வதெல்லாம் சரி., நீ மட்டும் இப்ப தண்ணி அடிக்கிறியே., இதே மாதிரி உன் வொய்ஃப் எங்காவது உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு., உன்ன பத்தி பொலம்பிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்., யோசிச்சு பாரு“., என்று சொன்னான்.

      சற்று நேரம் அமைதியாக இருந்தவன்.,  சத்தமாக சிரித்தபடி.,”போடா போடா என் ஒய்ஃப்க்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது., அவ ரொம்ப நல்ல புள்ள  நாலு கெட்ட வார்த்தை போட்டு திட்டி இருப்பா.,  அப்படின்னு கூட நினைக்க முடியாது டா., அது கோவத்துல கூட பதிலுக்கு பதில் கொடுத்துட்டு வர மாட்டா.,  இது சரிப்பட்டு வராதுடா.,

        அவ என் கையில கிடைக்கட்டும்.,  முதலில் அவளுக்கு திட்டுறதுக்கு ட்ரெய்னிங் கொடுக்கணும்., சண்டை போடுவதற்கு டிரெய்னிங் கொடுக்கனும்.,   அம்மாவா இருந்தாலும் சரி., மாமியாராக இருந்தாலும் சரி., அவக்கிட்ட கோவப்பட்டா., அவக் கோபத்தை காட்ட முதலில் அவளுக்கு  டியூஷன் எடுக்கனும்“., என்று உளறிக்கொண்டு இருந்தான்.

       “நீ டியூஷன் அப்புறம் எடுக்கலாம்., இப்ப போய் தூங்கு போ., இன்னையோட இந்த பழக்கத்தை நிறுத்தி கோ“., என்று சொன்னான்.

      “கண்டிப்பா கண்டிப்பா இனிமேல் நான் குடிக்கவே மாட்டேன் டா., என் ஹேமாக்கு  அது பிடிக்காது., அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத எதையும் நான் செய்யமாட்டேன்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       கல்யாணம் பேசத் தொடங்கும் போது அந்த அளவு வெறுத்த மனநிலையில் இருந்தவன்., இன்று அந்தப் பெண் மீது அத்தனை பாசத்தோடு இருப்பதை பார்த்தவன்., ‘ஏன் அவன் அம்மாவிற்கு புத்தி இப்படி போயிற்று., தன் மகனின் சந்தோஷமான வாழ்க்கையை விடவா வசதி பெரியது., எப்படி இப்படி அவர்களால் நினைக்க முடிகிறது“., என்ற எண்ணத்தோடு வாய்க்குள் ஏதோ முனங்கியபடி படுத்திருந்த பிரசாத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

         கிட்டத்தட்ட இந்த பதினைந்து நாட்களாக சேவ் செய்யாமல்  தாடியோடு பார்க்க எப்படியோ இருந்தாலும்., அதுவும் ஒரு வகையில் அவனுக்கு அழகாக இருப்பதாக தான் நண்பனுக்கு தோன்றியது., இனி அவனை நிச்சயமாக குடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பாட்டில்களை எல்லாம் எடுத்து ஒரு கவரில் போட்டு கட்டி தனியாக எடுத்து வைத்தான்.,

      முடிந்த அளவு வீட்டை சுத்தம் செய்து விட்டு., அவனும் படுத்து விட பிரசாத் தூக்கத்தில் முணங்குவது முழுவதும் தெரிந்தது.,

       “ஹேமா என்னை பத்தி நீ நினைக்கவே இல்ல இல்ல., நான் என்னடி பாவம் பண்ணுனேன்., உன்மேல உயிரையே வச்சிருக்கேன்., ஏண்டி என்னை புரிஞ்சுக்கல.., உனக்கு சந்தேகம் வந்துருச்சினா., என்கிட்ட கேட்டிருந்தா.,  நான் விதவிதமா நிவர்த்தி பண்ணியிருப்பேன்., சந்தேகம் வாழ்க்கையை  நரகமாகி விடும் ன்னு  சொல்லிட்டு., என்ன மொத்தமா நரகத்தில் தள்ளிட்டு போயிட்டியே.,  நீ இல்லாமல் எப்படி இருப்பேன்.,

      பகல்ல வேலை அது இதுன்னு இழுத்து போட்டுட்டாலும்., வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன் முகத்தை தேடுற  என்னோட கண்ணுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்., உன்னோட அருகாமையை தேடுற என் மனசுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்., முடியல ஹேமா., நீ இல்லாமல் என்னால முடியல.,

        அப்புறம் ஏண்டி என் கூட ஒரு அப்படி அன்னியோன்னியமா வாழ்க்கை வாழ சம்மதிச்ச., நான் உன் கூட வாழ்ந்த வாழ்க்கையில் கூடவா உனக்கு புரியல..,  நான் உன்மேல எந்த அளவுக்கு அன்பையும் ஆசையும் வச்சிருந்தேன்னு.,  கடமைக்காக வாழ்ந்தேன் ன்னு நினைச்சுட்டியா“., என்று அவன் புலம்புவதை கேட்ட அவன் தோழனுக்கு தான் ஐயோ என்று இருந்தது.,

      இத்தனை அன்பை தன் மனைவி மேல் வைத்திருப்பவனை எப்படி மாற்றமுடியும்.,  எந்த எண்ணத்தில் அவளை வீட்டை விட்டு விரட்டினார்கள் என்று நினைத்துக் கொண்டான்.,

           தேவதை கூட சாபம்
           கொடுக்கும் என்று
           இப்போதுதான் தெரிந்து
           கொண்டேன்.,

           நீ தந்து விட்டு சென்ற
           பிரிவு என்னும் சாபம்.,
           கொடுமையிலும் கொடுமையடி.,
             சாப விமோசனத்தை சீக்கிரம்
             தந்துவிடு.,

          வலித்து வலித்து இதயம்
          வலிமை இழந்து விடும் போல.,
         மொத்தமாய் துடிப்பை நிறுத்தும்
          முன்பே வந்துவிடு தேவதையே.,

Advertisement