பிரிந்தோம்இணைவோம்

1

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.     
                             – புத்தர்


           காலை நேரம் அலுவலகம் செல்லும் பரபரப்பில் இருந்தது  அந்த வீடு. பெண்கள் மட்டும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

       “எப்படியோ நம்ம மூணு பேரா சேர்ந்தா கடகடன்னு சமையல் முடிச்சிருவோம்.,  அதை மட்டும் உருப்படியா செஞ்சி முடிக்கிறோம்.,  ஆமா சமைச்சிட்டு  இருக்கும் போதே, ஒருத்தி எங்க போனா“., என்று தன் தோழியை தேடினாள் குழலி.

        “ஏன் குழலு நீ கவனிக்கலையா.,  அவ அப்பவே குளிச்சிட்டு கோயிலுக்கு கிளம்பி இருப்பா., இன்னுமா வீட்டில் இருப்பா ன்னு நினைக்கிற., கேப் வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு., அதுக்குள்ள அவ கோவிலிலிருந்து வந்துருவா..,  நம்ம தான் இப்ப குளிச்சி கிளம்பனும்“.,  என்றாள் ரதி.

            “ரதி இந்தா பாரு என்ன குழலு  அப்படி இப்படின்னு கூப்பிடுற வேலை வெச்சுகாதே., ஒழுங்கா குழலி ன்னு கூப்பிடு.,முடியலை னா  பூங்குழலி ன்னு கூப்பிடு.,  இல்லாட்டி நம்ம ஹோம்ஸ்  மாறி பூ ன்னு கூப்பிடு.,  அதை விட்டுட்டு குழலு ன்ன., அப்புறம் இருக்கு பார்த்துக்கோ“.,  என்று திட்டி கொண்டே கிளம்ப போனாள்.

         “அவளும் தான் உன்ன பூவு., பூவே., பூவாத்தா., பூமாதா ன்னு கூப்பிடுறா.,  நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற..,  நீ மட்டும் அவளை ஜேம்ஸ்., ஹோம்ஸ் ன்னு  கூப்பிடுற., அவளும் கண்டுக்க மாட்டேன்ங்கிறா“., என்றாள்.

           “அது அப்படித் தான்., நான் எப்படி கூப்பிட்டாலும்.,  அவ ஒன்னும் சொல்ல மாட்டா., அது போல அவ எப்படி கூப்பிட்டாலும் நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன்“., என்றாள்.

        “என்ன இருந்தாலும் நீங்க காலேஜிலிருந்து ஒன்னாவே இருக்கீங்க“.,  என்றாள் ரதி.

          குழலியோ சிரித்துக் கொண்டே.,  “ஆமா நாங்க ரெண்டு பேரும் காலேஜிலிருந்து ஒன்னா தான் சுத்துறோம்என்றவள்.,

     சிரித்தபடி கிளம்ப போனவளை இழுத்து பிடித்த ரதி .,  “இன்னைக்கு வீடு கிளீனிங் ம்., காய் கட் பண்ணி கொடுக்கிறதோட  நல்ல பிள்ளையா அந்த வேலையை மட்டும் முடிச்சிட்டு ஓடிட்டா“., என்று சொன்னாள்.

          தோழியர் மூவரும் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு இருந்தனர்., ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அந்த சிறிய வீடு அவர்கள் மூவருக்கும் போதுமானதாக இருந்தது.,

          வீட்டில் மூவரும் தங்களுக்கு தேவையானதை தாங்களே சமைத்து கொண்டு., அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தனர்.,

       காலைக்கு மதியத்திற்க்கும் ஒரே வேலையாக குழம்பு சோறு பொரியல் என்று செய்து கொண்டனர்.,  இருவர் சமையலும் மற்ற ஒருவர் பிற உதவிகளும்  செய்யவர்.,

         இன்று கோயிலுக்கு செல்ல வேண்டும்., என்று நினைத்ததால் வீடு மட்டும் சுத்தம் செய்து விட்டு.,  அவர்களுக்கு தேவையான காய்கறி வெட்டி எடுத்துக் கொடுத்து விட்டு அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே கோயிலுக்கு கிளம்பி இருந்தாள் இன்னொருத்தி.,  அவளைப் பற்றி தான் இப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

                  ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டே இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.,  அவர்களுக்கான அலுவலகத்திற்கு கேப் வர எனவே அடுப்பின்  வெக்கையில் வேலை செய்த களைப்பு போக இருவரும் ஹாலிலேயே காலை நீட்டி அமர்ந்திருந்தனர்.,

         அதே நேரம் வீட்டில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

         ரதி சென்று கதவை திறக்கவும் வந்தது என்னவோ ஹேமா தான்.

         “என்னடி காலங்காத்தாலே கோயில் கிளம்பிட்ட.,  இன்னைக்கு என்ன விசேஷம்என்று கேட்டாள்.

         “இன்னிக்குப் போகலை னா.,  பாட்டி ட்ட திட்டு வாங்கணும்., பாட்டி நேத்தே போன்ல கோயில் போயிட்டு வந்துரு ன்னு  சொல்லிட்டாங்க., அதனால தான் போனேன்“.,  என்று சொன்ன ஹேமா.,  திடீரென்றுஅதிகாலை சுபவேளை சர்க்கரைப்பொங்கல் கிடைத்ததுஎன்று பாடினாள்.

              அவளை அறிந்த தோழியோஉண்மையை சொல்லுடி., பாட்டி சொன்னாங்கன்னு கோயிலுக்கு போனியா..,  இல்ல சக்கரை பொங்கல் வாங்குவதற்காக கோயிலுக்கு போனியா“.,  என்று கேட்டாள்.

        இவளும்பாட்டி சொன்னதற்காக தான் கோயிலுக்குப் போனேன்.., ஆனா நம்ம நல்ல நேரம் சர்க்கரை பொங்கல் கிடைச்சுச்சு., நம்ம பூசாரி தாத்தா நம்ம மூணு பேரு இருக்கோம் தெரிஞ்சே.,  எனக்கு நிறைய கொடுத்துவிட்டாங்க.,  உங்களுக்காக சர்க்கரை பொங்கல் வாங்கிட்டு வந்துருக்கேன்.,  சோ என்னைய வேலை செய்யலைன்னு திட்டக்கூடாது., அப்படியே ஆனாலும் வீட்டை சுத்தம் செய்து எல்லாம் செஞ்சு வெச்சுட்டு தானே போனேன்“., என்று தோழிகளோடு சர்க்கரை பொங்கலை வைத்துக்கொண்டு பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

         “எப்படி தான் மோப்பம் பிடிப்பியோ தெரியாது., அடுத்த தெருவுல இருக்குற கோயில்ல சக்கரை பொங்கல் கொடுக்கிறப்ப., வெண்பொங்கல் கொடுக்கும் போதெல்லாம் கரெக்ட்டா போய் வாங்கிட்டு வந்துடுறா“., என்று ரதி சொல்லவும்.,

          அந்த மோப்பம் பிடிக்கிற சக்தி எனக்கு இல்லை.,  எங்க பாட்டிக்கு தான் இருக்குன்னு நினைக்கிறேன்., கரெக்டா என்னைக்கு  சக்கரை பொங்கல்., வெண்பொங்கல் கொடுக்கிறாங்களோ அன்னைக்கு எல்லாம் எங்க பாட்டி என்ன கோவிலுக்கு போக சொல்லி முதல் நாளிலேயே போன்ல ஆர்டர் போடுறாங்க.,  அவங்களுக்கு தெரிந்திருக்குமோ“.,  என்று வேண்டுமென்றே ஹேமா ரதியிடம் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

         ரதியோஆமாடி., உங்க பாட்டி கிருத்திகைக்கு கோயிலுக்கு போ., அந்த நாளுக்கு கோவிலுக்குபோ.,  பிரதோஷத்திற்கு கோயிலுக்கு போ ன்னு சொல்றாங்க.,  நீ ஆபீஸ் போறதுக்காக  கோயில்ல  தலையை காமிச்சிட்டு..,  சாமிகிட்ட பை பை சொல்லிட்டு ஓடி வந்துடுற.., இது உங்க பாட்டிக்கு தெரியாது..,  கேட்டா நான் கோவிலுக்கு போனேன்.., வேணாலும் பூசாரி தாத்தா கிட்ட கேளுங்க., அப்படின்னு சொல்லிட்டு போற..,

             உங்க பாட்டி தொல்லை தாங்காம நீ காலையிலேயே அட்டனன்ஸ் போட்டுட்டு வந்துடுற.,  சாமி நான் வந்துட்டேன் இன்னைக்கு என் கடமைக்கு அப்படின்னு சொல்லிட்டு வர்றவ..,   நல்ல பிள்ளையா சக்கரை பொங்கல் வாங்கிட்டு வர்றது யாருக்காவது தெரியுமா“.., என்று கேட்டாள்.

           “ரகசியத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளனும்., இப்படி  எல்லாம் பப்ளிக்கா போட்டு உடைக்கக் கூடாது., நமக்கு தேவை கோவில் சக்கரை பொங்கல்., அந்த டேஸ்ட் கிடைக்கனும்., .,

       அது மட்டும் தான் நம்ம பார்க்கணும்“.,  என்று ஹேமா சொன்னாள்.

       குழலியோ அதெல்லாம் சரிதான்., நீ கோயிலுக்கு போறது அது யெல்லாம் பாட்டிக்கு தெரியுது.., ஆனா கோயிலுக்கு போயிட்டு  வர சொல்லுற இந்த மாதிரி  நாள்  எதையாவது சரியா  கடைபிடிக்கிறீயா..,  நல்ல கேண்டீன்ல வந்து நான்வெஜ் வெளுத்து வாங்குற.,

     பாட்டி சனிப்பிரதோஷம் கோயிலுக்கு போக சொன்னாங்க., நீ அன்னைக்கு ஆபீஸ் இல்லாத போதும்.,  காலையிலேயே போய் சாமி கும்பிட்டு வந்துட்டு மத்தியானம்.,  மீன் குழம்பு மீன் ப்ரை ன்னு  வைத்து வெளுத்து வாங்குறது பாட்டிக்கு தெரியுமா“., என்று  அவளிடம் கேட்டாள்.

           “இங்க பாரு., நீ எனக்கு தான் பிரெண்ட்., பாட்டிக்கு ஃபரண்ட் இல்ல.,  அப்படியே அங்க போய் சொல்லிக் கொடுக்கிற மாதிரி பேசின.,  நான் உங்க அப்பாக்கு போன் பண்ணி., ஏடாகூடமா சொல்லிக் கொடுத்து உனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்க வழியே பார்க்க வச்சுருவேன் பார்த்துக்கோ“., என்று மிரட்டினாள்.

          “ஆமாண்டி காலேஜ் படிக்கிற டைம் இருந்து., எங்க அப்பாக்கு நீ தான் ஸ்பை.,  நான் பசங்க யார்கிட்டயும்  பேசினால் கூட  அப்பாட்ட சொல்லி கொடுத்துடுவேன்., சொல்லி கொடுத்துடுவேன்., மிரட்டுவ, இன்னும் இதே பொழப்பா வச்சுட்டு சுத்து“., என்று சொன்னாள்.

      “உங்க அப்பா என்னைய  தான் நல்ல பிள்ளை ன்னு நம்பி உன்ன பொறுப்பா  ஒப்படைத்து இருக்காங்க.., பத்திரமா பாத்துக்க சொல்லி இருக்காங்க.,  என் பொண்ணுக்கு ஒண்ணுமே விவரம் தெரியாது., யாரையும் நம்பி  ஏமாந்துவிடக்கூடாது கண்ணு.,  பார்த்துக்கோ., ன்னு சொல்லி இருக்காங்க.,  அப்ப நான் தான் உன்னை பார்க்கணும்“.,  என்று அவளிடம் பழைய கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

             கிராமப்புறத்தில் இருந்து வந்து படிப்பதற்காக கல்லூரி சேர்ந்த புதிதில் பூங்குழலியின் தந்தை ஹேமாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை., ‘என் பொண்ணு விபரம் தெரியாதவம்மா பார்த்துக்கோ கண்ணு.,  இந்த ஊர் பழக்கவழக்கங்கள் எல்லாம் அவளுக்கு தெரியாது., அவ ஊருக்குள்ள  வளர்ந்த பிள்ளை நல்ல படிப்பா ன்னு கொண்டு வந்து நான் காலேஜ்ல எல்லாம் சேர்த்துட்டேன்.,  ஆனாலும் பயமா இருக்கு இல்ல கண்ணு.., நம்ம ஊர்ல யார் வாயிலையும்  உழுந்தூர கூடாது பாரு..,

       அதுக்காக தான் அவளை நல்லபடியா ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கிற வரைக்கும் நான் பத்திரமா பார்த்துக்கனும்‘.,  என்று சொல்லியிருந்தார்.

        அதை வேதவாக்காக பிடித்துக்கொண்டாள் ஹேமா., குழலியை பாட்டிக்கு அதிகம் பிடிக்கும்.,  பாட்டியிடம் எதுவென்றாலும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது இதை சொல்லியே குழலியை மிரட்டி வைத்துக் கொண்டிருப்பாள்.,

         இல்லையென்றால் பாட்டி விரதத்தை கடைபிடிக்க சொல்லும் போதெல்லாம்., அதை மீறி இவள் அசைவ உணவுகளை உண்பது இதற்குள் பாட்டிக்கு போயிருக்கும்.., ஆனால் பாட்டிதன் பேத்தி தன் பேச்சை கேட்டு ஒழுங்காக கோயிலுக்கெல்லாம் செல்கிறாள்., விரத நாட்களை எல்லாம் சுத்தபத்தமாக கடைப்பிடிக்கிறாள்என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

         அதன் பின்பு ரதியும் குழலியும் கிளம்பி வர மூவரும் அரட்டை அடித்தபடி காலை உணவை முடித்துக் கொண்டு.,  மதியத்திற்கு அவர்களுக்கான உணவையும் எடுத்துக் கொண்டு.,  கிச்சனை சுத்தம் செய்து பாத்திரங்களை எல்லாம் கழுவி போட்டு விட்டு அவர்கள் கிளம்பவும்.., அவர்களுக்கான அலுவலக கேப் வரவும் சரியாக இருந்தது.

             மூவரும் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பத்து பெண்கள் என்றாலும்.,  அவரவர் வேலைகளை அவர் அவர்களே செய்து கொள்வார்கள். கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்திருந்தனர்.

          அதுமட்டுமல்லாமல் தங்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டையும் சுத்தமாக வைத்து விட்டு செல்வர்., ஏனெனில் மாலை வரும் போது அலுவலக வேலை எவ்வளவு இருக்கும் என்று தெரியாது., சில நேரங்களில் வீட்டில் வந்து செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால் அதை முடிக்க வேண்டும்., 

           அந்த நேரத்தில் வந்த அசதியில் வேலை செய்ய முடியாது., என்பதற்காக எப்பொழுதும் அவர்கள் இப்படித்தான் செய்து கொள்வது.., அது மட்டுமல்லாமல் இரவு ஆன்லைனில்  வேலை செய்யும்படி இருந்தால்., அன்று இரவு உணவை வெளியில்  மூவரும் சேர்ந்து ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வார்கள்.,

       அதற்காகவே வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது வீட்டை சுத்தமாக வைத்து விட்டு கிளம்ப வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதப்படாத உடன்படிக்கை.

      அலுவலகம் வந்து இறங்கியதும் மூவரும் அவரவர் காண இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.