“ஓ…தர்மா நீ சொல்லு…”என்று கேள்வியைமற்றவரிடம்திருப்பி விட்டாள்.
“இரத்தசம்பந்தமில்லாத, தன்னமில்லாத, எதிர்பார்ப்பு இல்லாத உறவுங்க அம்மணி…”
“ஓ…”என்றவள் சில நொடிகளுக்கு தன் விளையாட்டில் மூழ்க மற்றவர்கள் அமைதி காத்தனர்.
“ஒரு சொலவடை இருக்கு தெரியுமா சிம்மா?”
“எந்த சொலவடையை சொல்றீங்க அம்மணி…”
“உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று கூறுகிறேன்…”என்றவளின் கூற்று அவர்களுக்கு எதையோ உணர்த்தவும், நால்வரும் அதுவரை இருந்த தளர்வை விடுத்து இரும்பாய் இறுகினர்.
“நல்லது,கெட்டதுல தோள் கொடுக்கறவங்க மட்டும் நண்பன் இல்லை…கூட இருக்கவன் நல்லது செய்யும் போது தட்டிக் கொடுக்கறதும், தப்பு செய்யும் போது தட்டிக் கேட்கறவனும்தானே சிறந்த நண்பன் ருத்ரா…”
“ஆமாங்க அம்மணி…”
“அப்ப கூட இருக்க நண்பன் தப்பு செய்யும் போது தட்டிக்கேட்காம, அவன் செய்யற தப்புக்கு உடன்படறவன் எப்படி நண்பனாவான்?”
“சரிதானுங்க அம்மணி…”
“நண்பன்ற உறவுக்கு இரத்த சம்பந்தம் இல்லைதான்…ஆனா இன்னைக்கு இந்த உலகத்துலதன்னலமில்லாத, முக்கியமா எதிர்பார்ப்பில்லாத உறவுன்னு எதுவுமே இல்லை தர்மா…”
“ஏன்னா கூட இருக்கவன் தப்பு செய்யும் போது அதை தட்டிக் கேட்காதவன், அந்த தப்புல தனக்கு கிடைக்கற ஆதாயத்தை தேடறதாலதான், இன்னைக்கு பல தவறு நடக்கறதுக்கான அடிப்படையே…”என்றவளின் அழுத்தமான கூற்று கேலிக்குரலில் வந்து விழுந்தது.
“என்ன அமைதியாகிட்டீங்க?”
“நீங்க சொல்றது சரிதானுங்க அம்மணி…”
“ம்ம்ம்…”என்றவள் பல்லாங்குழியில் தன் பக்கம் அதிக காய்களை சேர்த்து வென்றிருந்தாள்.
அந்த பல்லாங்குழியை கவிழ்த்து காய்களை ஒதுக்கி காலி செய்தவள், ஒற்றைக் குழியைத் தேர்ந்தெடுத்து அதில் நான்கு காய்களை போட்டாள்.
“ஒரு கதை சொல்லவா தாதா…”
“சொல்லுங்க அம்மணி…”
“இவங்க நாலு பேரும் நெருங்கின நண்பர்கள்…இதுவரைக்கும் கெட்ட பழக்கம்னு எதுவும் இருந்தது இல்லை…இப்ப இவங்ககூட ஒருத்தன் வந்து சேர்ந்துக்கிறான்…”என்றவள் இன்னொரு காயை எடுத்து அந்த நான்குடன் கலந்தாள்.
“இப்ப இவனும் இவங்க நண்பனாகிட்டான்…ஆனா இவனோட பழக்கவழக்கங்கள், குண நலன்கள் எதுவும் சரியில்லை…ஆரம்பத்துல தன்னை நல்லவன் மாதிரி காட்டிக்கிட்டு போக போக தன்னோட குணத்தைக் காட்டறான்...”
“தான் கெட்டதும் போதாததுன்னு இந்த நல்லவங்களையும் கெடுக்க நினைச்சு, அவனோட தீயப்பழக்கங்களை இவங்களுக்கும் பழக்கி விடப் பார்க்கறான்…இந்த நாலு பேரும் ஆரம்பத்துல மறுக்கறாங்கஆனா, இவன் ஆசை காட்டி கடைசியில அவங்களும் இவனோட சேர்ந்து தீயவனாகிப் போனாங்க…”என்றவள் அந்த ஐந்து காய்களையும் விரல்களால் கலந்து விட்டாள்.
“இப்ப இந்த ஐஞ்சு பேரும் ஒரே மாதிரிதான்…இந்த ஐஞ்சு பேர் இன்னும் பல ஐயாயிரம் பேரை உருவாக்குவாங்க…இப்படிதான் நல்லது மறைஞ்சு கெட்டது பரவுது…”என்றவளின் வாதத்தை ஏற்கும்படி நால்வரும் அமைதி காத்தனர்.
“நாலு நல்லவங்க சேர்ந்து, அந்த ஒரு கெட்டவனையும் நல்லவனா மாத்தாம இவங்களும் ஏன் கெட்டவங்களாகிப் போனாங்க?”என்றவளுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாது நால்வரும் முழித்தனர்.
“இங்க எத்தனை பேர் நல்லவங்களா இருக்காங்க? எத்தனை பேர் கெட்டவங்களா இருக்காங்கன்றது விஷயம் இல்ல…இங்க யாரோட எண்ணங்கள் வலுவா இருக்கோ அதுதான் ஜெயிக்கும்…ஆழ்மன எண்ணங்களுக்கு அந்த சக்தி இருக்குன்னு, உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல…இன்னைக்கு இந்த உலகத்துல தீய எண்ணங்கள்தான் அதிகம் ஆக்கிரமிச்சு இருக்கு…”
“சரிதானுங்க அம்மணி…”
“என்ன சரி?நான் இப்ப என்ன சொன்னேன்னு விளக்கமா சொல்லுதர்மா?”
“நல்லவங்க யாரும் நம்ம கூட இருக்கும் யாரையும் நல்லவனா மாத்தணும்னு பெருசா முயற்சி எடுக்க மாட்டேங்கறாங்க…அதோட நல்லவங்க எப்பவும் தீயதைக் கண்டு ஒதுங்கித்தான் போவாங்க…ஆனா கெட்ட எண்ணம் கொண்டவங்க அப்படி இல்லை…நான் மட்டும் ஏன் கெட்டவனா இருக்கணும்னு எல்லாரையும் தைரியமா நெருங்குவாங்க…”
“சரியா சொன்ன தர்மா… கெட்ட எண்ணங்கள் கொண்டவனுக்கு இருக்க தைரியம் ஏன் நல்லது நினைக்கறவங்களுக்கு இல்லை…? அப்படி இருந்திருந்து அந்த முதல்கட்ட கெட்டவனை, நல்லவங்க எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியிருந்தாலோ இல்ல அவனையும் நல்லவனா மாத்தியிருந்தா…” என்றவள் தான் கூறவந்ததை முழுமையாக கூறாது, அவர்களே புரிந்துக் கொள்ள நிறுத்தினாள்.
“நீங்க சொல்றது எப்பவும் சரியாதான் இருக்குங்க அம்மணி…எங்களாலதான் உங்க பேச்சுக்கு மறுத்து பேச முடியல…”என்று தாதா சற்று சங்கடத்துடன் கூறவும் இவள் வாய்விட்டு சிரித்தாள்.
“ஹா ஹா ஹா…அனுபவம் பேசுது தாதா…”என்றவள்,
“சரி இன்னும் ஒன்னு கேட்கறேன்…அதுக்கு பதில் சொல்லுங்க…”
“சொல்லுங்க அம்மணி…”
“அந்த ஒரு கெட்டவன் எப்படி திடீர்னு முளைச்சான்?”என்றவளின் இலகுத்தன்மை அவர்களுக்கு சற்று தைரியம் கொடுத்தது.
“நீங்க சொன்ன மாதிரி அவன் எண்ணங்கள் சரியில்லாம இருந்திருக்கலாம் அம்மணி…”
“ஓ இருக்கலாம்…ஆனா இல்ல…”
“ஒருத்தன் கெட்டவன் ஆகறதுக்கு அவ்வளவுதானுங்க அம்மணி காரணம் இருக்க முடியும்…”என்று சிம்மா கூறவும்,
“ஓ…”என்று இறுதியாக இழுத்து நிறுத்தினாள்.
“இவ்வளவு சொன்னீங்க ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணமான ஒருத்தரை விட்டுட்டீங்களே?”என்றதும் நால்வரும் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அது யாருங்க அம்மணி?”
“கடவுள்…”என்றவளின் தீவிரமான பதிலில் நால்வரும் திகைத்தனர்.
“அம்மணி…”
“ஆமா ஒருத்தன் கெட்டவனா உருவாக அத்தனை சூழ்நிலையையும், நபரையும் உருவாக்குவது அந்த கடவுள் இல்லாம வேற யாரு?”என்றாள் பெரும் இறுக்கத்துடன்.
“ஏனுங்க அம்மணி எப்ப பாரு எல்லாத்துக்கும் கடவுளையே குத்தம் சொல்றீங்க?”என்று மனம் தாளாது ருத்ரா கேட்டுவிட,ஏதோ பெரிய நகைச்சுவை சொன்னது போல அந்த இடம் அதிர பெருங்குரலெடுத்து சிரித்தாள் அவள்.
அவளின் அந்த சிரிப்பில் திகைத்து,
“அம்மணி…”என்றான் சிம்மா பதட்டமாக.
“அம்மணி நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?”என்று ருத்ரா தவிப்புடன் கேட்கவும் சட்டென அவளின் சிரிப்பு நிற்க, அவளின் விழிகள் தீவிரமானது.
“நான் சரியாத்தானே ருத்ரா சொன்னேன்…”
“அம்மணி…”
“இந்த உலகத்துல கெட்டதுன்னு ஒன்னு இல்லைன்னா, கடவுளே இல்லை ருத்ரா…”
“அம்மணி…”என்றனர் அதிர்வுடன்.
“கடவுள் இருக்கணும்னா இந்த உலகத்துல கெட்டதும் இருக்கணும்…தான் இருக்கேன்னு மக்களுக்கு காட்டத்தான் கடவுளும், அப்பப்ப இது போல பல தீயதை உருவாக்கி விடறாங்க…அதைத்தான் நானும் சொன்னேன்…”என்றாள் அதிதீவிரத்துடன்.
“ஏனுங்க அம்மணி இப்படி சொல்றீங்க? எல்லாத்துக்கும் கடவுளே காரணம் இல்லையே…அதது அவன் செய்யும் வினைப்பயன் தானே…இதுக்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்?”என்று பெரும் மனத்தாங்கலுடன் தாதா கேட்டதும்,
மாதா பிதாவிற்கு அடுத்த இடமாக குரு இருக்கும் இடமான அந்த பள்ளி வளாகம் பெரும் பரபரப்பை விட, சிறகடிக்கும் அதிக பட்டாம்பூச்சிகளை தன் ஒரே கிளையில் சுமந்திருப்பது போல காட்சியளித்தது.
இளைய சமுதாயம் நாளையைப் பற்றிய கனவில், இன்று கவலையில்லாமல் தங்களின் எதிர்காலத்தை திட்டமிடும் இடமாக இருக்கும் அந்த பள்ளிக்கூடத்தில், புத்திக்கூர்மைக்கு மட்டுமில்லை புன்னகைக்கும் பஞ்சமில்லை.
அங்கு உலாவும் ஒவ்வொரு பிள்ளையின் முகத்திலும் தென்படும், அந்த உற்சாகமும் ஊக்கமும் வேறு எங்கும் கண்டறிய முடியாத ஒன்றல்லவா…? அவர்களின் தோளில் தொங்கும் புத்தகப்பையின் கனத்தை துளியும் கண்டுகொள்ளாது வெகு இலகுவாக தங்கள்இலட்சிய பாதையை எட்டி நடைபோடுபவர்கள்அவர்களல்லவா?
தாய் தந்தைக்கு பிறகு அவர்களின் நலன் விரும்புவதும், அவர்களைஅதிகம் பாதுகாக்கும் தன்னலமில்லாத ஜீவனான இந்த குருக்கள் வாசம் செய்யும் இடம் இது அல்லவா…?
தந்தைக்கு இணையாக வாழ்க்கை பாதையின் வழிகாட்டியாகதங்களின் கரம் பற்றி அழைத்து செல்பவர்கள், தாய்க்கு இணையான கண்டிப்புடனும், கருணையுடனும் இருக்கும் இந்த குருக்களையும் பள்ளிக்கூடத்தையும் எவராலும் தன் வாழ்நாளில் மறந்துவிட முடியுமா என்ன?
அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கும் இடமான பள்ளிக்கூடம், இங்கும் அதே படிநிலைகளைத் தாங்கி நின்றது.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவகத்தில் பெரும் நிசப்தம் குடி கொண்டிருக்க, அதை யார் முதலில் கலைப்பது என்று புரியாது அவர்களுக்குள் சிந்தனை வயப்பட்டிருந்தனர்அங்கிருந்தவர்கள்.
தலைமையாசிரியர் தன் எதிரில் இருப்பவனை ஒருவித எரிச்சலுடன் நோக்க, அவனோஅந்த இடத்தை தன் கூர்விழி பார்வையால் ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.