Advertisement

பால் வெளி – 4 

அந்த வாரம் எழுதிய தேர்வுகளில், உயிரியலில் கூட மித்ரா மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றாள். வழக்கமாக மதுரா மட்டும் தான் மகளின் மதிப்பெண்களை பார்த்து குதிப்பார். ஆனால் இம்முறை பால்கியே, ‘என்ன பாப்பா… பயாலாஜி நல்லா ஸ்கோர் செஞ்சிட்டு இருந்த. என்ன ஆச்சு உனக்கு. உனக்கு நீட் ப்ரீபேர் செய்ய இன்ட்ரஸ்ட் இல்லைனா சொல்லிடு. தேவையில்லாம நேரத்தோடு சேர்த்து பணத்தையும் வேஸ்ட் செஞ்சிட்டு இருக்க நீ…” என்று சற்றே கடுமையான குரலில் மகளிடம் உரைத்து இருந்தார். 

தந்தையின் கோபத்தை எதிர் கொள்ள முடியாமல் மிரண்டு நின்றாள் மித்ரா. “அடுத்த டெஸ்ட்ல நல்ல ஸ்கோர் செஞ்சிடு மித்து. கொஞ்சம் கவனம் எடுத்து படி. ஏற்கனவே ஒரு வருசம் உனக்கு வீண் ஆயிடுச்சு தானே.’’ என்று மதுரா தான் கொஞ்சம் தணிந்து பேசி,மகளை சமாதானம் செய்தார். 

அன்றைக்கு இரவு, மித்ராவிற்கு உறக்கம் வரவே இல்லை. அவள் விரல்கள் புலனத்தில் (வாட்ஸ் அப்)  அரவிந்தனோடு பேசிய பழைய பேச்சு வார்த்தைகளின் நீள, அகலங்களை மெல்ல அளந்து கொண்டிருந்தது. 

அவனுக்கு  புலனத்தில் போட்டிருந்த தடையை அவளே நீக்கினாள். உடனே ஏகப்பட்ட மன்னிப்பு வாசகங்கள் அந்த செயலியை நிறைத்தன. மீண்டும் இருவரும் இயல்பாக பேச தொடங்கினர்.

அவளின் அழகை அடிக்கடி புகழ்ந்தான். அவள் உடை அணியும் நேர்த்தியை வியந்தான். வகுப்பு முடிந்த பிறகும் இருவரும் இணைந்து படித்தனர். அவன் விளக்கிய இயற்பியல் பாடங்கள் அவளுக்கு எளிதாக புரிந்தன. அந்த முறை நடந்த வாரந்திர தேர்வில் மித்ரா மொத்தமாக நல்ல மதிப்பெண்களை பெற்றாள். 

பால்கி மகளை ஊக்குவிக்க, அவள் நெடு நாட்களாய் கேட்டு கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை வாங்கி பரிசளித்தார். மித்ரா மகிழ்வில் துள்ளி  குதித்தாள். அலைபேசியில் பாடம் குறித்து அரைமணி நேரம் பேசினாள், அவளின் அழகு குறித்து இரண்டு மணி நேரம் பேசினான் அரவிந்தன். 

நேரடி வகுப்புகள் இல்லாத நாட்களில், அவளை சுயமி அனுப்ப சொல்லி அந்த புகைப்படங்களை ரசித்தான். மித்ரா மெல்ல மெல்ல அந்த புகழ் போதைக்கு அடிமையாக தொடங்கினாள். ‘நீ எனக்கு மிகவும் முக்கியமானவள்’ என்பதை தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து கொண்டே இருந்தான். 

காலை குட் மார்னிங் தொடங்கி, இரவுவின் குட்நைட் வரை வித விதமான பிரத்யேக செய்திகளை அனுப்பி, அவளின் சிந்தை முழுக்க நிறைய தொடங்கினான். அந்த பிணைப்பை மேலும் இறுக்கும் வகையில் அவனின் பிறந்தநாள் வந்தது. 

அவள் தான் முதலில் வாழ்த்த வேண்டும் என்று சொல்லி அன்றைய உரையாடலை நள்ளிரவு வரை நீடித்தான். அதன் பிறகும் இரவு உடையில் முதன் முதலில் அவளை சுயமி அனுப்ப சொல்லி அந்த புகைப்படத்தை ரசித்தான். அன்றைக்கு முழுவதும் நீ தான் என் தேவதை என அவளை கொண்டாடி தீர்த்தான். 

அதன் பிறகு அவன் கேட்காமலேயே தன் அழகை எடுத்து காட்டும் புகைப்படங்களை அவனுக்கு அனுப்ப தொடங்கினாள். இம்முறை அவளின் பிறந்த நாள் வந்த போது, “இனி உன் பிறந்த நாள் எல்லாமே நீ என் கூட தான் கொண்டாடனும். எஸ்… ஐயம் லவ் வித் யூ…’’ என்று அவளோடன தன் காதலை உறுதி செய்தான். 

காதல் சொல்லிய பிறகு அவர்களின் பேச்சில் படிப்பின் வாடை குறைந்து, காமத்தின் வாடை அதிகம் வீச தொடங்கியது. ‘உன்கிட்ட தானே இதெல்லாம் நான் கேக்க முடியும் பா…’ என்று அவளின் அரை குறை சுயமிகளை அனுப்ப வைத்தான். 

கொஞ்சம் கொஞ்சமாய், தன் உடலை இயக்கும் இயக்குநீர்களின் (ஹார்மோன்கள்) சித்து விளையாட்டிற்கு மித்ரா அடிமையானாள். முன்பு எதையெல்லாம் சீ என்றாளோ இப்போது அவற்றையே அடக்க முடியாத ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கினாள். 

தன் அறைக்குள் அவனோடு என்ன பேசினாலும், பயிற்சி மையம் செல்லும் போது கவனத்தோடு படித்தே தேர்வுகளை எதிர்கொண்டாள். அதானால் மகளின் மாற்றம் பெற்றவர்களுக்கு தெரியவில்லை. 

அரவிந்தன் எத்தனை முயன்றும் மித்ராவிடமிருந்து ஒரு முத்தத்தை கூட அவனால் பெற முடியவில்லை. அவன் விரும்பிய தனிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவன் அழைத்த பூங்கா, ஆள் இல்லாத சினிமா இதற்கெல்லாம் மித்ரா மறுத்துவிட்டாள். 

இப்போதைக்கு தன்னுடன் பேசுவதே போதும் மெல்ல மெல்ல பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தவன், அவளுடன் காணொளி காட்சி வாயிலாக தன் அந்தரங்க பேச்சு வார்த்தையை தொடங்கினான். 

“அந்த ஷாலை மட்டும் கழட்டேன்’’ என்று ஆரம்பித்த பேச்சு வார்த்தை தற்சமயம் சிம்மியில் வந்து நிற்கிறது. கார்த்திக் வந்து கதவை  தட்டும் போது, அரவிந்தன், அவளிடம் சிம்மியை கழற்ற சொல்லி கெஞ்சி கொண்டிருந்தான். 

 தன் காதில் ப்ளூ டூத் செயலியை மாட்டிக் கொண்டு அவனுடன் மென் குரலில் பேசிக் கொண்டிருந்தவள், கார்த்திக் கதவை ஓங்கி தட்டவும் சுய நினைவை அடைந்து, பதறி அழைப்பை துண்டிதவள், கார்த்திக்கிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு, உடல் முழுக்க வியர்த்து வடிந்தாள். 

அப்போது தான் கவனித்தாள், அவளின் அலைபேசி பதறி அவள் எழுந்ததில் கட்டிலில் இருந்து துள்ளி கீழே விழுந்திருந்தது.   சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதன் பிறகே அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். 

ஆனால் அது தன் இயக்கம் நிறுத்தி அணைந்து போயிருந்தது. ‘உச்’ கொட்டியவள், மெதுவாக எழுந்து தன் மதிய வகுப்பிற்கு தயாராக தொடங்கினாள். மதியம் மகளுக்கு அழைத்து பார்த்த பால்கி, அது அணைந்து போயிருக்கிறது என்றதும், நேராக பயிற்சி மையத்தின் ஆசிரியருக்கு அழைத்துவிட்டார். 

“எஸ் சார். உங்க டாட்டர் கிளாஸ்ல தான் இருக்காங்க. ஓகே சார்… கிளாஸ் முடிஞ்சதும் கூப்பிட சொல்றேன்.’’ என சொல்லி அழைப்பை துண்டிக்க அதன் பிறகே பால்கியாள் இயல்பாக மூச்சுவிட முடிந்தது. 

வகுப்பு முடிந்ததும், ஆசிரியர் தன் அலைபேசியை கொடுத்து, “உங்க அப்பா கால் செஞ்சி இருந்தார் மித்ரா. பேசு.’’ என சொல்ல, ‘தன் அலைபேசி அணைந்து போனதால் தந்தை ஆசிரியருக்கு அழைத்து இருக்கிறார்.’ என்பதை உணர்ந்து கொண்டவள், “டாட்…! நான் கிளாஸ்க்கு வந்துட்டேன். என்னோட போன் கீழ விழுந்து ஸ்விட்ச் ஆப் ஆயிருச்சு டாட்.’’ என்றதும், “சரிடா…! கிளாஸ் முடிஞ்சதும் பத்திரமா வீட்டுக்கு வந்துடு. நாங்க மாரி அங்கிளை பாத்துட்டு வந்துடுறோம்.’’ என்றார். 

“ஓகே டாட்..’’ என்ற மகள் மீண்டும் தன் கவனத்தை படிப்பில் செலுத்தினாள். அன்றைக்கு மதியமே பால்கியும், மதுராவும் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, மாரியை பார்க்க சென்றனர். 

அவர்கள் சென்ற நேரம், மாரியை கேத் லேப் என்று சொல்லப்படுகின்ற இதய அடைப்பு நீக்கும் சிறப்பு அறுவை அரங்கிற்கு அழைத்து செல்ல தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது வெண்ணிலாவும், அவரோடு திருவும் மட்டுமே துணையிருந்தனர்.

இருவரையும் கண்டதும், மாரி கண்கலங்கினார். அவரின் கரங்களை பற்றிக் கொண்ட பால்கி, “ஒண்ணும் இல்ல. எல்லாம் சரியாயிடும். நீங்க இப்போ தான் தைரியமா இருக்கணும்.” என்று நம்பிக்கை கொடுக்க, அவரின் கரம் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். 

சற்று நேரம் வெண்ணிலாவிற்கு ஆறுதல் சொல்லி விட்டு இருவரும் கிளம்பும் போது, காலையில் கொண்டு வந்த உணவு கூடையை, திரு கொண்டு வந்து காரில் வைத்தான். மதுரா உடனே, “திரு வீட்டுக்கு வா. நைட் ரெண்டு பேருக்கும் நான் டிபன் கொடுத்து விடுறேன்.’’ என்று அழைத்தார். 

“அதெல்லாம் வேண்டாம் மதுமா. இங்க கேன்டீன் புட் நல்லா தான் இருக்கு. நாங்க அட்ஜஸ்ட் செஞ்சிகிறோம்.’’ என்றான். “டேய் பெரிய மனுசா வாடா. கொஞ்ச நேரம் வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு, ரெப்ரெஷ் ஆயிட்டு போவியாம். நைட்டு அம்மாவை வீட்டுக்கு அனுப்பிடு.’’ என்றார் பால்கி. 

அவரிடம் மறுத்து பேச முடியாமல், சரி என்பதாய் தலை அசைத்தவன், தன் இருசக்கர வாகனத்தை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்ததும், கீழ் தளத்தில் விருந்தினர் வந்தால் பயன்படுத்தக் கூடிய அறைக்கு சென்று படுக்கையில் சரிந்தான். 

நேற்று முதல் தந்தையின் நிலையை எண்ணி, கலங்கி, மருத்துவமனை நாற்காலியில் உறங்க முடியாது சுருங்கிக் கிடந்தவன், சுகமான படுக்கை உடலை அழுத்தியதும் உறக்கத்தில் ஆழ்ந்தான். 

மாலை சூடான தேநீரோடு மதுரா அவனை எழுப்ப, முகம் கழுவி வந்தவன், தேநீரோடு பரிமாறப்பட்ட தாளித்த சூடான நிலக்கடலை பயிரையும் ரசிச்து உண்டான். மதுரா சற்றே கவலையான குரலில், “பால்கி…! மதுரா போனுக்கு ட்ரை செஞ்சா ஸ்விட்ச் ஆப்னே வருது.’’ என்றார்.

“அது ஒண்ணும் இல்ல. போன் கீழ விழுந்து ஸ்விட்ச் ஆப் ஆகிருச்சாம். நான் அவங்க கோச்சிங் சென்டருக்கு கூப்பிட்டு பேசினேன்.” என்றார். அதுவரை சற்றே கலவரத்தில் இருந்த மதுராவின் முகம் தெளிந்தது. 

“அது சரி…! முன்னாடியே சொல்ல மாட்டீங்களா…! நான் பயந்தே போயிட்டேன்.’’ என்றவர் கணவனின் அருகில் இலகுவாய் அமர்ந்தார். அதுவரை கையிலிருந்த நிலகடலையில் கவனமாய் இருந்தவன், “போன் இப்ப எங்க இருக்கு பால்கிப்பா. இங்கு பூர்வீகாவுல தெரிஞ்ச பிரண்ட் ஒருத்தன் இருக்கான். சரி செஞ்சி கொடுத்துட்டு போறேன்.’’ என்றான். 

“இருப்பா அவ ரூம்ல போன் இருக்கான்னு பார்த்துட்டு வறேன்.’’ என்று எழுந்து சென்ற மதுரா திரும்ப வரும் போது, மித்ராவின் அலைபேசியோடு வந்தார். அதை வாங்கி பார்த்த திரு, அலைபேசியை இயக்க முயன்றான். அவன் எத்தனை முயன்றும் அது உயிர் பெற மறுத்தது. 

“என்ன பிரச்சனைன்னு தெரியல பால்கிப்பா. நான் போனை எடுத்துட்டு போய் கொடுத்துட்டு நாளைக்கு காலைல வரும் போது வாங்கிட்டு வந்து தறேன்.’’ என்றான். 

பால்கி சரி என்றதும், மதுரா அவர்களுக்கான இரவு உணவை எடுத்து வந்து கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டவன், அங்கிருந்து கிளம்பினான். அவன் வெளியே வரும் போது, மித்ரா தன் இருசக்கர வாகனத்திள் வந்து இறங்கினாள். 

Advertisement