Advertisement

அதே நேரம் செவிலி ஒருவர் வந்து, “வெண்ணிலா கூட இருக்குறவங்க யாரு?’’ என கேட்க அங்கிருந்த அறுவரும் எழுந்து நின்றனர். “அவங்களுக்கு கான்சியஸ் வந்துருச்சு. ஓவ்வொருத்ரா உள்ள வந்து பாருங்க.’’ என்றார். 

ஆனால் ஒரே நேரத்தில் திருப்பதி, கோதை, பால்கி, கார்த்திக், இனியன் மற்றும் மாரி அனைவரும் அவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தனர். வெண்ணிலா கரைந்த விழிகளோடு தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்தார். 

திருப்பதி, “எல்லாம் சரி ஆயிடும் கண்ணு. நீ பதறாத. உம் பிள்ளை வாழ்க்கைக்கு நாங்க பொறுப்பு.’’ என்றார். வெண்ணிலா பதில் பேசாமல் தனக்கு தனது தேம்பலை தொடர்ந்தார். “அழாத நிலாம்மா. அதான் அண்ணன் சொல்றாரு இல்ல. எல்லாம் சரியாகிப் போகும்.’’ என்றார் பால்கி. 

அவரை வேதனையுடன் நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா, “நம்ம ஊரு சனம் பத்தி உனக்கு தெரியாதாண்ணே…! பிள்ளைய வெளிய தங்கி படிக்க அனுப்பி வச்சதுக்கே எங்க நாத்தனாருங்க நெருப்பள்ளி கொட்டின மாதிரி பேசிகிட்டு இருந்தாங்க. இன்னைக்கு அவங்க சொன்னது எல்லாம் உண்மை ஆகிப் போச்சு. இனி என் பொண்ணு எப்படி நாலு பேருக்கு முன்னாடி நடப்பா. அவளை கேள்வி கேட்டு கொன்னு புதைச்சிடுவாளுங்களே. இனி எம் பொண்ணுக்கு நான் எப்படி மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பேன். என் ஆசை மக வாழ்க்கை மண்ணாப் போச்சே…’’ அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவர் வீராவேசமாக நெற்றியில் அறைந்து கொண்டு கதறி அழ, அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த பால்கி தங்கையின் கைகளை பற்றிக் கொண்டார். 

“நிலா…! அண்ணனுங்க நாங்க ஒண்ணுக்கு ரெண்டு பேரு இருக்கோம். பிள்ளைய அப்படியே விட்ருவோமா. உனக்கு என்ன…? உன் பிள்ளை கல்யாணம் நடக்கணும். அவ்ளோ தானே. கண்டிப்பா நடக்கும். என் பையன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான். அவ எங்க வீட்டு மருமக. ரோட்ல போறப்ப வண்டியில அடிபட்டா வைத்தியம் பார்த்துட்டு வீட்டுக்கு போறதில்லை. அது மாதிரி தான் இதுவும். சும்மா இதுக்கெல்லாம்  பயந்துகிட்டு. விடு எது நடந்தாலும் பார்த்துக்கலாம்.’’ என்றார். 

பால்கி மகன் என்று வெளியே குறிப்பிட்டு பேசியது இனியனை. ஆனால் தந்தைக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார்த்திக் அவர் தன்னை தான் சொல்கிறார் என்று நினைந்து அதிர்ந்து போனான். 

ஆனாலும் தற்சமயம் எதையும் காட்டிக் கொள்ள முடியாது, அமைதியாய் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இனியன் அப்படி நிற்கவில்லை, “பால்கிப்பா…! அத்தை தான் படிக்காதவங்க. உணர்ச்சி வேகத்துல ஏதோ பேசிட்டு இருக்காங்க. நீங்களும் ஏன் சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருக்கீங்க. திரு மச்சானுக்கு பேசிட்டோம். அவரு கிளம்பி வந்துட்டு இருக்காரு. அவரு வந்ததும் எல்லாத்தையும முடிவு செஞ்சிக்கலாம். நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கை. எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் செய்ய முடியாது.’’ என்றான் சற்றே காரமாய். 

அவனுக்கு பால்கியின் வார்த்தை பீதியை கிளப்பி இருந்தது. அவனும் அவர் கார்த்திக்கை தான் முன் மொழிகிறார் என் பயந்தே வார்த்தைகளை விட்டிருந்தான். கால காலமாய் அவர்களுக்குள் இருக்கும் கோடு அவன் அறிந்ததே. அதோடு பிருந்தாவின் கனவுகளையும் அறிந்தவன். நூற்றில் ஒரு வாய்ப்பாக பால்கியின் வார்த்தை பலித்தாலும் அங்கு கேள்விக் குறியாகப் போவது பிருந்தாவின் வாழ்க்கை என்று உணர்ந்தவன் வேக வேகமாய் பேசி இருந்தான். 

இனியனின் பேச்சு, கார்த்திக்கின் ஈகோவை தூண்ட போதுமாய் இருந்தது. அப்போதும் தன் ஆத்திரத்தை அடக்கி அமைதியாய் நின்று கொண்டிருந்தான். ஆனால் இனியனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த திருப்பதி, மகனின் புடனியில் வேகமாய் ஒரு அடி கொடுத்தார். 

“அப்பா…’’ என்று மகன் முறைத்து பார்க்க, “பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது  மரியாதை இல்லாம நீ எதுக்குடா குறுக்க பேசிட்டு இருக்க. என்ன உங்க நொண்ணன் மாதிரி நீயும் எதாச்சும் பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியோ? உங்களை நம்பி ஒரு வாய் உறுதி என்னால கொடுக்க முடியுதா…? எப்படி என்னை கூனிக் குறுகி நிக்க வச்சி இருக்கீங்க பாரு. உங்க திரு நேத்து தான் கலெக்டர். என் தம்பி முப்பது வருசமா வாத்தியார். ஒழுங்கா பேசமா நின்னா இங்க இரு. இல்ல கிளம்பி போயிட்டே இரு.’’ என்றார் கடினமாய். 

மீண்டும் செவிலியர் வந்த அந்த அறைக்குள் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பினார். வெண்ணிலாவிற்கு ஏற்றப்பட்டிருந்த சலைன் முடிந்திருக்க, அவரும் இவர்களோடு வெளியே வந்து அமர்ந்தார். அவரின் அருகில் கோதை அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். 

அதே நேரம் ஒரு செவிலியர் வந்த, “பிருந்தா கூட இருக்குறவங்க வாங்க.’’ என அழைத்தார். பால்கி எழுந்து முதல் ஆளாக விரைந்தார். அந்த செவிலியர், பிருந்தா அணிந்திருந்த உடைகள் மற்றும் நகைகளை ஒப்படைத்துவிட்டு, “சார் இந்த பார்ம்ல சைன் போடுங்க.’’ என்றார். 

அதுவரை கோதையின் பக்கத்தில் அமர்ந்திருந்த வெண்ணிலா ஓடி வந்து மகளின் உடைமைகளை கையில் வாங்கினார். உடை முழுக்க திட்டு திட்டாக ஆங்காங்கே ரத்தக்கரை. அவள் தோடு ஒரு இடத்தில் பாதியாக உடைந்திருந்தது. போன பிறந்த நாளுக்கு அவள் அண்ணன் வாங்கி பரிசளித்து இருந்த சிறிய ராக்கெட் பெண்டட் கழுத்தணி மட்டும் ரத்தக்கறையோடு முழுதாய் இருந்தது. 

வெள்ளிக் கொலுசிலும் ரத்தக்கறை. மகளின் உடைமைகளை வேக  வேகமாய் ஆராய்ந்தவர்  அதில் இருந்த ரத்தக்கறைகளை கண்டு அப்படியே அதில் முகம் புதைத்து கதறி தீர்த்தார். பால்கி கையறு நிலையில் தங்கையின் கண்ணீரை பார்த்துக் கொண்டிருந்தார். 

“எம் பொண்ணு நீ சொன்ன மாதிரி காரிலோ பைக்கிலோ அடி பட்டு செத்திருந்தா நம்ம குடும்பத்துக்கு கன்னி சாமி ஆகி இருப்பான்னே. கழுத்து தாலி இல்லாம… இந்த மாதிரி நிலையில அவளுக்கு எதாச்சும் ஒன்னு ஆச்சுன்னா நான் என்ன செய்வேன் அண்ணே… ஐயோ…’’ அவர் கதற கதற, அதுவரை ஓரமாய் நின்று கொண்டிருந்த மாரி, வேகமாய் முன் வந்து அவரின் முடி பற்றி தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தார். 

“அப்போவே சொன்னேன். எங்க அக்கா பையனுக்கு பிள்ளையை கட்டி வச்சிடலாம்னு. மகனும் ஆத்தாளும் கூட்டு சேர்த்து ரயிலேத்தி படிக்க அனுப்பி வச்சீங்க இல்ல. இன்னைக்கு என் பிள்ளை சீரழிஞ்சி நிக்கிறா. எம் மவளுக்கு எதாச்சும் ஆகட்டும். உன்னை மொதல்ல செங்க சூளையில உசிரோட வச்சி எரிக்கிறேன் இருடி.’’ என்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார். 

திருப்பதி ஒரு பக்கம் அவரை பிடிக்கப் போக, இனியன் ஒரு பக்கம் அவரை தடுக்க அனைவரையும் மீறி அவர் திமிறிக் கொண்டிருந்தார். அதற்குள் மருத்துவமனை வாயில் காப்பாளர் வந்து, “ஹாஸ்பிட்டல்ல என்ன செஞ்சிட்டு இருக்கீங்க. ரெண்டு பேர் தவிர மீதி எல்லாரும் வீட்டுக்கு போங்க. இங்க இந்த மாதிரி சத்தம் எல்லாம் போட கூடாது.” என்று அறிவிக்கவும், மாரி வெண்ணிலாவை முறைத்து விட்டு தான் நின்று கொண்டிருந்த மூலையில் சென்று நின்று கொண்டார்.  

படிவத்தில் கையெழுத்து போட்டு முடித்திருந்த பால்கி, “சிஸ்டர்… பிருந்தாவை ஒரு முறை பார்க்கணும்.’’ என்றார். “சார் அவங்க கண்டிசன் கொஞ்சம் கிரிட்டிகலா இருக்கு. அவங்களை ஆபரேசன் தியேட்டருக்கு ஷிப்ட் செய்ய ரெடி செஞ்சிட்டு இருக்காங்க. இப்ப பார்க்க முடியாது.’’ என்றார். 

“நான் இங்க கன்சல்டிங் வர கார்டியாலஜிஸ்ட் கிருஷ்ணா பிரண்டு தான். எதுக்கும் உங்க டாக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்றீங்களா..?’’ என்றார். சரி என்று தலை அசைத்து சென்ற செவிலி திரும்பி வரும் போது, “சார் நீங்க மட்டும் உள்ள வாங்க.’’ என அழைத்து சென்றார். 

அந்த அவசர சிகிச்சை பிரிவின் படுக்கையில் பிருந்தா ஆளே அடையாளம் தெரியாமல் வேரோடு பிடுங்கி வெயிலில் எறியப்பட்ட பசுந்தளிர் போல வாடிக் கிடந்தாள். அவளை சுற்றிலும் ஏதேதோ கருவிகள் இணைக்கப்பட்டு ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி இருந்தனர். 

வெண்ணிலாவின் அழுகுரல் தற்சமயம் பால்கியின் காதுகளில் மீண்டும் எதிரொலித்தது. ‘என் தங்கை மகள்  ஒரு வேளை பிழைக்காமல் போனால் அவள் நிலை… ஐயோ’ அவர் மூளைக்குள் ஆயிரம் கற்பனைகள் தறிகெட்டு ஓடியது. 

அங்கிருந்த மருத்துவரிடம் சில நொடிகள் பேசியவர் மனதிற்குள் முடிவெடுத்தவராக வெளியே வந்தார். நேராக கார்த்தியிடம் சென்றவர், “இன்னைக்கு வாங்கின சாரி, நகை எல்லாம் நம்ம வண்டியில தான இருக்கு.’’ என்றார். அவன் ‘ஆம்’ என தலை அசைக்க, “அதுல இருந்து தாலியை மட்டும் எடுத்துட்டு வா கார்த்திக்’’ என்றார். 

கார்த்திக் அதிர்ந்து அப்படியே நிற்க, “என்னடா போய் எடுத்துட்டு வா.’’ என்றார். கார்த்திக் தெளியாத முகத்துடன் தாலியை எடுத்து வர சென்றான். அவன் சென்றதும், “இப்போ நமக்கு நேரம் இல்லை. எல்லாரும் பிள்ளை பிழச்சி வரணும்னு நம்ம குலதெய்வத்தை வேண்டிகிட்டு அபப்டி இந்த கல்யாணத்தையும் ஆசிர்வாதம் செஞ்சிடுங்க.’’ என்றவர் இனியனை பார்த்து, “யாரையாச்சும் லவ் பண்றியா..?’’ என்றார் கடுமையாய். 

பால்கியப்பா தன்னிடம் இதுவரை உபயோகிக்காத குரல் என்பதை உணர்ந்த இனியன் ‘இல்லை’ என வேகமாய் தலை ஆட்டினான். அவனுக்கு சற்று பின்னால் நின்று கொண்டிருந்த திருப்பதி, ‘ஆமான்னு சொன்னா இங்கேயே வெட்டி போட்ற மாட்டேன்..’ என்ற தினுசில் மகனை முறைத்து கொண்டிருந்தார். 

கார்த்திக் தாலி இருந்த நகை பெட்டியை எடுத்துக் கொண்டு வரவும், “வாங்க எல்லாரும் உள்ள போகலாம்..’’ என்று விட்டு முன்னால் நடந்தார். சில நிமிடங்களுக்கு முன்னால் தான் அந்த அவசர திருமணத்திற்கு மருத்துவரிடம் சில நிமிடங்கள் மட்டும் அனுமதி வாங்கினார். 

கார்த்திக்கின் கையில் இருந்த நகைப் பெட்டியை வாங்கிய பால்கி, அதை கையில் எடுத்து, அவர்கள் குல தெய்வம் இருக்கும திசைப்பக்கம் திரும்பி நின்று கண்களை மூடி வணங்கினார். அவரைப் போலவே மற்ற நால்வரும் கோவில் இருந்த திசைப் பக்கம் திரும்பி நிற்க, கார்த்திக்கும், இனியனும் அப்படியே இறுகி நின்று இருந்தனர். 

தெய்வத்தை வணங்கி முடித்ததும், நேராக திரும்பி நின்றவர், “நிலா…! உன் பொண்ணுக்கு இனி என்ன நடந்தாலும் அவ உன் அண்ணன் வீட்டு மருமக. எப்பவுமே நம்ம வீட்டு பொண்ணு. இந்த தாலியே அவளை காப்பாத்தி கொண்டு வரும். நம்ம குலசாமி ஊதுகாளி நம்ம வீட்டு பொண்ணுங்க தாலியில இருப்பான்னு அம்மா சொல்லும். அதை கட்டி பிள்ளை உசிரை கட்டி போடுவோம், எதுவும் இனி அவளை அசைக்க முடியாது. எம் பையனுக்கு உன் பொண்ணை தர சம்மதமா…?’’ என்றார். 

வெண்ணிலா வார்த்தைகளின்றி அண்ணனின் காலில் விழ, மாரி அவர் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். பால்கி இனியன் இருக்கும் திசை நோக்கி திரும்பி, “டேய்…! தொட்டு கும்பிட்டு வந்து தாலியை பாப்பா கழுத்துல போடு.’’ என்றார். 

அந்தப் பக்கம் கோதை மருமகளின் கழுத்தை தூக்கி பிடிக்க விரைந்திருந்தார். பால்கி தன் கண்களில் வழிந்த கண்ணீரை, அணிந்திருந்த கண்ணாடியை கழற்றிவிட்டு அழுந்த துடைத்து கொண்டிருக்கும் போது, அவர் கரத்தில் இருந்த தாலி வாங்கப்பட்டிருந்தது. 

அனைவரும் ஆளுக்கு ஒரு உணர்ச்சி பிரபாகத்தில் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும் போது, கார்த்திக் பிருந்தாவின் கழுத்தில் தாலியை அணிவித்து முடித்திருந்தான். 

பால்கி இனியன் நின்று கொண்டிருந்த திசைப் பக்கமே கார்த்திக்கும் நின்று கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. அதோடு அவர் இனியனிடம் காதலிக்கிறாயா…? என்று கேட்டவர் நீ தான் பிருந்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. 

அவர் வார்த்தைக்கு வார்த்தை என் மகன் மகன் என்றதும், கார்த்திக் தாலியை வாங்கும் போது யாருக்கும் அவனை தடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. நடந்து முடிந்த சம்பவத்தின் வீரியம் பால்கிக்கு உரைத்த போது, “டேய்…! என்னடா செஞ்சி வச்சிருக்க…?’’ என்று கேட்டதும், “நீங்க சொன்னதை தானே செஞ்சேன் டாட்…!’’ என்றான் மகன் சளைக்காமல். 

அதே நேரம் நண்பனை காண வந்த பிரதாப் மருத்துவர் அங்கு நடக்கும் அவசர திருமணம் பற்றி கூறவும் வேகமாய் உள்ள நுழைந்தவர் கண்ட காட்சி, கார்த்திக் பிருந்தாவின் கழுத்தினல் தாலி அணிவித்த வைபவத்தை தான். 

நினைவலைகளில் மூழ்கி இருந்தவரின் தோள் தொட்டு நடப்பிற்கு திருப்பினான் இனியன். “பால்கிப்பா… திரு அத்தான் லைன்ல உங்ககிட்ட பேசணுமாம்.’’ என்றான். வாழ்வில் முதன் முறையாக திருவிடம் பேச தயங்கி அந்த அலைபேசியை சங்கடமாய் பார்த்துக் கொண்டிருந்தார் பால்கி. 

   

பால் வீதி வளரும் 

Advertisement