Advertisement

பால் வீதி – 9

நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த இடத்திற்கு விரைந்திருந்த பிரதாப் நடந்தவற்றை நம்ப முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார்.  

ஆனால் அந்த செயலின் ஆதார காரணியான கார்த்திக் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாது நின்று கொண்டிருந்தான். தனக்கு முன்னால் மூடி மூடி திறக்கும் அவசர சிகிச்சை பிரிவின் கதவுகளையே அவன் விழிகள் பார்த்துக் கொண்டிருந்தது. 

முதலில் அதிர்வில் இருந்து வெளியே வந்தவர் பிரதாப் தான். நடந்த அனைத்தையும் அவர் அறிவார் என்றாலும் கடினப்பட்டு வார்த்தைகளை கோர்த்து, “கார்த்திக்…! நான்… நான் எப்படி பிரகாகிட்ட இதை சொல்லுவேன். அவ நியாபகம் ஒரு நிமிஷம் கூட உனக்கு வரலையா கார்த்திக்.’’ என்றார் வேதனை மண்டிய குரலில். 

கார்த்திக் தன் முகத்தை கூட திருப்பவில்லை. “எல்லாத்துக்கு முன்னாடி நான் எங்க அப்பாவுக்கு மகன் அங்கிள். அதுக்கு அப்புறம் தான் எனக்கு மத்தது எல்லாமும். அந்த மனுசன் இந்த இருபது வருசத்துல ஒரு அப்பாவா என்னை ஒரு இடத்துல கூட விட்டுக் கொடுத்தது இல்ல. நான் எப்படி அவரை விட்டுக் கொடுக்க முடியும் அங்கிள். பிரகாகிட்ட சொல்லுங்க. கண்டிப்பா அவங்க என் நிலமைய புரிஞ்சிப்பாங்க.’’ என்றான் இறுகிப் போன குரலில். 

அவனின் மரியாதை பன்மையே சொல்லிவிட்டது. இனி அவன் வாழ்வில் அவனின் இடத்தை. மருமகனாய் எண்ணியிருந்தவனிடம் வெளிபடுத்த முடியாத கோபத்தை பால்கியிடம் திருப்பினார் பிரதாப்.

“நீ இதை செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை பால்கி. திவ்யா உனக்கும் பொண்ணு மாதிரி தானேடா. உனக்கே தெரியும் தானே… அவளுக்கு கார்த்திக்கை எவ்ளோ பிடிக்கும்னு… இனி இந்த விசயத்தை நான் எப்படி போய் அவகிட்ட சொல்ல முடியும். என் பொண்ணு சுக்கு நூறா உடஞ்சி போயிடுவா பால்கி…’’ என்றவர் முயன்றும் அடக்க முடியாமல், இறுதியில் குரல் கரகரத்து கண்களில் கண்ணீர் வழிந்தது. 

“டேய்…! நடந்தது எதையும் என்னாலையே இன்னும் நம்ப முடியலடா. பிருந்தாவை அப்படி பார்த்ததும்… நான்… உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். நான் நினச்சது ஒன்னு.இங்க நடந்தது ஒன்னு. ஐயம் சாரி பிரதாப்… வெரி சாரி…!’’ என்று தானும் கண் கலங்க, யாருக்கு யார் தேறுதல் சொல்வது எனப் புரியாமல் நண்பர்கள் இருவரும் ஒருவர் கரத்தை மற்றவர் பற்றிக் கொண்டனர். 

அங்கிருந்தவர்களில் தற்சமயம் சற்றே தெளிவான சிந்தனையில் இருந்தவன் கார்த்திக் மட்டுமே. பிரதாப் உடைந்து நிற்பதை கண்டவன், “அங்கிள்…! நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. ஆன்ட்டி உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க. இந்த நேரம் நீங்க வீட்ல எதையும் பேச வேண்டாம். காலைல நானும் அப்பாவும் உங்க வீட்டுக்கு வறோம். நாங்களே வந்து நடந்த விசயத்தை எல்லாம் ஆன்ட்டிகிட்டயும் பிரகாசினிகிட்டயும் எக்ஸ்ப்ளைன் பண்றோம். யூ நீட் சம் ரெஸ்ட்.’’ என்றவன் ஒரு ஓரமாக தலை சாய்ந்து அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த இன்பனை நெருங்கினான். 

அவன் என்ன என்பதை போல நிமிர்ந்து பார்க்க, “பிரதாப் அங்கிளை ட்ரைவ் பண்ணிட்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வாங்க.’’ என்றவன் அவனின் பதிலை கேட்க அங்கே நிற்கவில்லை. ‘நீ செய்கிறாய்’ என்ற கட்டளை அதில் இருந்ததை உணர்ந்த இன்பன் முகம் சுருக்கினாலும் பால்கியின் மனதை வேதனை படுத்த விரும்பாது பிரதாப்பை நோக்கி நடந்தான். 

“நானே போய்கிறேன்…’’ என்று பிரதாப் மறுக்க, “நீங்களே கூட ட்ரைவ் பண்ணுங்க. ஆனா இன்பன் உங்க கூட வரட்டும்.’’ என்றவன் வாகன நிறுத்துமிடம் நோக்கி நடந்திருந்தான். அவனை இனியனும், பிரதாப்பும் பின் தொடர்ந்தனர். 

பிரதாப் தன் கையில் இருந்த மகிழுந்தின் சாவியை இனியனின் கையில் கொடுக்க, “எதைப் பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க அங்கிள். டைம் ஹீல்ஸ் எவ்ரிதிங்.’’ என்றவன், அவர்கள் அமர்ந்த வாகனம் கிளம்பவும் மீண்டும் மருத்துவமனைக்குள் நடந்தான். 

பால்கி ஒரு இருக்கையில் கண் மூடி தலை சாய்ந்து அமர்ந்திருந்தார். இரண்டு மணி நேரங்களுக்கு முன்னால் நடந்த சமபவங்கள் அவர் மனத் திரையில் விடாது முன்னும் பின்னுமாய் அசைந்து கொண்டிருந்தது. 

பிருந்தாவை காணோம் என்று பதட்டத்துடன் அவர்கள் இளம்பிள்ளைக்கு விரைத்து கொண்டிருக்கும் போதே, இனியன் மீண்டும் பால்கிக்கு அலைபேசியில் அழைத்திருந்தான். “பால்கிப்பா…’’ அவன் குரலில் இருந்த அழுகையை கண்டு ஏதோ பெரிதாக நடந்து விட்டதை உணர்ந்து கொண்டவர், “தம்பி என்னடா…’’ என்றார் தானும் மிரண்டு போய். 

“பிருந்தா… பிருந்தா…” மறுபக்கம் அவன் தேம்ப, “டேய் பேசுடா..’’ தந்தையின் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு கார்த்திக் வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி இருந்தான். 

“பிருந்தா கிடைச்சிட்டா பால்கிப்பா. ஆனா… நம்ம பிருந்தாவை நம்ம பிருந்தாவை அந்த பரதேசிங்க ஏதோ பண்ணிட்டானுங்க பால்கிப்பா… அவ ட்ரெஸ் எல்லாம் ஒரே ரத்தம். உடம்பெல்லாம் காயம். என்னால பாப்பாவை  அப்படி பாக்கவே முடில பால்கிப்பா.’’ சொல்லிவிட்டு அவன் தேம்பி தேம்பி அழ, பால்கியின் கண்களில் இருந்து கர கரவென்று கண்ணீர் வழிந்தது. 

அது இரவென்பதாலும், பால்கியின் அலைபேசி கூடுதல் ஓசையுடன் இருந்ததாலும், அவர்களின் உரையாடல் கார்த்திக்கின் செவிகளில் தெளிவாய் விழுந்தது. அவனுக்குமே கேட்ட செய்தி அதிர்ச்சியை தந்தாலும், அவர்களை போல இவனை அச்செய்தி உடையச் செய்யவில்லை. 

செயலற்று அமர்ந்திருந்த தந்தையின் கைகளில் இருந்த அலைபேசியை வாங்கிய கார்த்திக், “ஹெலோ இனியன்… நான் கார்த்திக் பேசுறேன். இப்போ பிருந்தாவை எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சி இருக்கீங்க.’’ என்றான். 

தேம்பிக் கொண்டிருந்த இனியன், “எஸ்.கே. எம் ஹாஸ்பிடல்.’’ என்றான். உடனே அழைப்பை துண்டித்த கார்த்திக் கூகிள் மேப்பில் அதற்கான வழித்தடத்தை தேடியவன், வாகனத்தை அவ்விடம் நோக்கி வேகமாய் இயக்கினான். 

அந்த தனியார் பல் சிகிச்சை மருத்துவமனை இளம்பிள்ளைக்கும் சேலத்திற்கும் இடைப்பட்ட ஒரு  நகர் பகுதியில் அமைந்திருந்தது. இருக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்த பால்கியின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. 

வாகனத்தை இயக்கி கொண்டிருந்த கார்த்திக், பிரதாபிற்கும் அழைத்து விவரத்தை சொல்லி மருத்துவனை முகவரியையும் கொடுக்க, பிரதாப் தானும் அங்கு வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்தார். 

அரை மணி நேரத்தில் இவர்கள் மருத்துவமனையை அடையும் போதே, வெளியே அமர்ந்திருந்த வெண்ணிலா பெருங்குரலெடுத்து அழுதபடி தன் அண்ணனின் பாதங்களில் வந்து விழுந்தார். பால்கி லேசகா தடுமாறும் போதே, கீழே விழுந்த அத்தையை கை கொடுத்து தூக்கி இருந்தான் கார்த்திக். 

“என் பிள்ளையை… குதறி எடுத்து வச்சி இருக்கானுங்க அண்ணே… நான் என்ன செய்வேன். யார் வம்பு தும்பும் வேணாம்னு ஒதுங்கி தானே இருந்தோம்… ஐயோ… எம்புள்ள… மாசாணி அம்மன் சிலை மாதிரி இருப்பாளே… இப்போ மூச்சு பேச்சு இல்லாம கிடக்குறாளே… எம் பையன் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்… அண்ணே… எம் பிள்ளையை காப்பாத்தி கொடுக்க சொல்லுண்ணே…’’ உரத்த குரலில் அழுது கொண்டே இருந்தவர் அப்படியே மயங்கி சரிய, பால்கி, “நிலாம்மா…’’ என பதற, கார்த்திக் அவரை அப்படியே கைகளில் தாங்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் விரைந்தான். 

அடுத்த சில நொடிகளில் அவரும் அங்கு அனுமதிக்கப்பட்டார். பால்கியின் அண்ணன், அண்ணியோடு, இளைய மகன் இனியனும் அங்கிருந்தான். வெண்ணிலாவின் கணவர், தள்ளாத உடல் நிலையோடு ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். 

பால்கி வேகமாக தன் அண்ணனிடம் விரைந்தவர், “என்ன ஆச்சு…?’’ என்றார். அதுவரை அழுகையை அடக்கி கசங்கிய முகத்தோடு நின்று கொண்டிருந்த திருப்பதி, தன் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு, “எல்லாம் என்னால தான்… என்னால தான்…நான் மட்டும் அந்த கேடு கெட்டவனை சேதி தெரிஞ்ச அன்னைக்கே வெட்டிப் போட்டிருந்தா இன்னைக்கு நம்ம தங்கச்சி மக இப்படி  சீரழிஞ்சி போயிருக்கமாட்டா பாலு… எல்லாம் எங்களால தான்..’’ அவரின் ஆக்ரோசத்தை கண்ட அவரின் மனைவி கோமதி அவரை தடுத்து பிடிக்க வர, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவரை தள்ளி நிறுத்தினார். 

அதுவரை தகப்பனின் கோபத்தை பொறுத்துக் கொண்டிருந்த இனியன், “எதுக்கு இப்போ அம்மாவை அடிக்குறீங்க. நீ தான் உலகம்னு தன்னை நம்பி வந்தவளை தான் எங்க அண்ணன் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான். நீங்க தான் உள்ள சேத்துக்க மாட்டேன்னு சொல்லி விரட்டி விட்டீங்க. அதனால தான் அவன் அவங்களை கூட்டிட்டு ஊரை விட்டு போனான். எங்க அண்ணன் என்ன தப்பு செஞ்சான்னு எல்லாரும் அவனை கரிச்சி கொட்டிட்டு இருக்கீங்க. அவனை காதலிச்ச பொண்ணை தைரியாமா தாலி கட்டி கூட்டிட்டு போயிருக்கான். அதை ஏத்துக்க முடியாத பொட்டை பசங்க நம்ம தங்கச்சிய பிடிச்சி வச்சி.. தூ… இது தான் அவனுங்க வர்க்க வீரம் போல… எச்ச பசங்க… திரு அண்ணா வரட்டும். அவனுங்க அத்தனை பேரையும் வீடு புகுந்து அவங்க அப்பன் ஆத்தா கண்ணு முன்னாடி வெட்டிப் போடுறோம். இனி அவனுங்க நம்ம பொண்ணுங்க நிழலை தொட கூட யோசிக்கணும்.’’     

இனியன் ஆவேசமாய் பேசிக் கொண்டிருக்க, பிரச்சனையின் ஆணி வேர் மெதுவாக கார்த்திக்கிற்கு புரிய தொடங்கியது. மகனின் ஆவேச பேச்சு திருப்பதியின் கோபத்தை மேலும் தூண்டி விட, அவன் முதுகில் சுளீர் என்று இரண்டு அடி போட்டவர், “படிச்சவன் பேசுற மாதிரியாடா பேசற. நீ அவனுங்களை வெட்டிட்டு ஜெயிலுக்கு போ… நானும் உங்க அம்மாவும் பிச்சை எடுக்க தெருவுக்கு போறோம். எத்தனை முறை படிச்சி சொன்னேன். வேற ஆளுக பிள்ளைங்க கூட சாவகாசம் வேண்டாம் வேண்டாம்னு. உங்க அண்ணனை இப்போ இல்லடா… இன்னும் பத்து வருஷம் கழிச்சி ரெண்டு பிள்ளை பெத்த பின்னாடி அவனுங்க கண்ல பட்டா அப்பவும் கொல்லுவானுக… அவங்க ஜாதி வெறி அப்படி. இப்படி உங்களை எல்லாம் பலி கொடுக்கவா காட்டுல மேட்ல கஷ்டப்பட்டு நாலு எழுத்து படிக்க வச்சோம். இப்படி ஓவ்வொரு பிள்ளையா கண்ணு முன்னாடி கருகுறதை பார்க்குறதுக்கு பதிலா பால்டாயில குடிச்சிட்டு நான் ஒரேடியா பாடையில போயிடுறேன்…’’ என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தார். 

தற்சமயம் தந்தை எதை சொன்னாலும் ஏற்கப் போவதில்லை என்பதை உணர்ந்த இனியன் இறுகி நிற்க, அவரின் மனைவி கோதை, “ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. நீங்க தைரியமா இருந்தா தானே வெண்ணிலாவுக்கு தைரியமா இருக்கும். திரு வந்து எல்லாத்தையும் சரி செய்வான். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க’’ என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். 

Advertisement