Advertisement

பால் வீதி – 7 

 

குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி  அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. 

அந்த புகைப்படத்தின் முன் வரிசையில் திரு பளீர் புன்னைகயோடு நின்றிருந்தான். தமிழ்நாட்டில் இருந்து தேர்வான மூன்று இளைஞர்களில் அவனும் ஒருவன். மித்ரா மூன்றாம் வருடம், படித்துக் கொண்டிருக்கையில், பால்கி வெகு உற்சாகமாக திரு ஆட்சியர் பணிக்கு தேர்வானதை அழைத்து தெரிவித்தார்.

அதோடு அவன் புகைப்படம் வெளியான நாளிதழின் பக்கத்தை புலனத்தில் அனுப்பி வைத்தார். அதை அன்றைக்கு நகலெடுத்தவள், தன் அலமாரியின் பின் புறத்தில் ஒட்டி வைத்தாள். ஒவ்வொரு முறை அந்த புன்னகையை காணும் போதெல்லாம், தானும் அவனைப் போல, வாழ்வில் பெரிதாக எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் அவளுக்குள். 

எப்போதாவது அவனுக்கு அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தோன்றும் அவளுக்கு. தான் தடுமாறி விழுந்த வாழ்க்கை பக்கங்களை படித்தவன் அவன் என்ற தயக்கம் அவளை கட்டி போட்டு விடும். 

வயதும் அனுபவமும் தற்சமயம் அவளுக்கு நிறைய படிப்பினையை தந்திருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் எதேச்சையாக அரவிந்தனை சந்திக்க வேண்டி வந்த போது, “ஹேலோ அரவிந்தன். எப்படி இருக்கீங்க…?’’ என்று புன்னகை முகமாகவே அவனை கடந்து வந்திருந்தாள். 

அரவிந்தன் அவன் எண்ணம் போல மருத்துவ கல்வியின் நான்காம் வருடத்தில் இருந்தான். மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி கலை விழாவில் கலந்து கொள்ள சென்ற போது தான் அவனை சந்தித்தாள். 

இவளை கண்டதும் அவன் முகம் அப்பட்டமாய் அதிர்ச்சியை பிரதிபலிக்க, மித்ரா, அவனை வெகு சாதாரணமாய் கடந்திருந்தாள். ஆனால் அப்படி சாதரணமாய் திருவை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. 

நிறைய தயக்கம் மனத்தினுள். கடைசியாய் கரைந்த விழிகளோடு அவனை ஐந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. இரண்டாம் வருட கல்லூரி விடுமுறையில் இவள் வீட்டில் இருக்கையில் ஒரு முறை திரு அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தான். 

அவனை சந்திக்க முடியாமல் அன்றைக்கெல்லாம் அறையிலேயே அடைந்து கிடந்தாள். மதுரா உணவிற்கு அழைத்த போது கூட, வயிறு வலிக்கிறது என்று சொல்லிவிட்டு, அறைக்கு பழ சாறை கொண்டு வந்து தரும்படி சொல்லி அருந்தினாள். 

இரண்டு நிமிடங்கள் அந்த புகைப்படத்தையே பார்த்திருந்தவள், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி தற்காலிகமாக, அவன் நினைவையும், அலமாறி கதவோடு சேர்த்து அடைத்தாள். 

ஏ.வி.எம் மெய்யப்ப செட்டி திருமண மண்டபம் முக்கிய புள்ளிகளால் நிரம்பி வழிந்தது. பிரதாப்பின் அழைப்பில் ஐ.பி.எஸ் புள்ளிகள் ஒருபுறம். தற்சமயம் துணை ஆட்சியர் பொறுப்பில் இருக்கும் பிரகாஷினியின் ஐ.ஏ.எஸ் புள்ளிகள் ஒருபுறம், இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போன்று கார்த்திக்கின் சார்பில் கிரிகெட் ஜாம்பவான்கள் மற்றும் சில திரை நட்சத்திரங்கள் என்று அந்த இடமே கலை கட்டி இருந்தது. 

அந்த இடத்தோடு சற்றும் ஒட்ட முடியாமல், திருப்பதியும், வெண்ணிலாவும் அவர்களோடு புகழும் அமர்ந்திருந்தான். “மொய் வச்சிட்டு சீக்கிரம் வீட்டை பார்த்து போயிடலாம்ணே…’’ என்று வெண்ணிலா முப்பதாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தார். 

“அத்தை இங்க மொய் எல்லாம் எழுத மாட்டாங்க. அங்க பாருங்க. வரவங்க எல்லாம் பொண்ணு மாப்பிள்ளை கையில ஒரு பொக்கே இல்ல கிப்ட் தான் கொடுத்துட்டு போறாங்க. நான் வரும் போதே கிப்ட் வாங்கிட்டு போலாம்னு சொன்னேன். நீங்க தான் தட்டு வரிசை அடுக்கனும் அது இதுன்னு தேங்கா வெத்தலை பாக்கு அடுக்கி கட்ட பைய தூக்கிட்டு வந்தீங்க. இப்போ என்ன செய்யிறது.’’ என்றான் எரிச்சலாய். 

“இம்புட்டு பெரிய பணக்காரகங்க எல்லாம் பத்து ரூபா பூவை கொண்டு வந்து கொடுத்துட்டு போவாங்கன்னு நான் என்ன கனவா கண்டேன். என்னவோ போடா ஒரு பொம்பளை தலையில பூ இல்ல…ஒரு ஆம்பளை வேட்டி சட்டையில வரல. நம்ம ஊர்ப் பக்கம் நிச்சய மண்டபம் இப்படியா இருக்கும்…?” என்று அங்கலாய்த்தார் வெண்ணிலா. 

பால்கி தன் மகனின் நிச்சயத்திற்கு தன் பக்க சொந்த பந்தங்கள் அத்தனை பேரையும் தான் அழைத்திருந்தார். ஆனால் அனைவருமே ஒரே மனதாக திருமணம் முடிந்து மாப்பிள்ளை பெண் குல தெய்வ கோவிலுக்கு வரும் போது மொய் செய்து பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்து கொண்டனர். 

ஆனாலும் பால்கியை விட்டுக் கொடுக்க முடியாமல், நாங்களும் வந்தோம் என பெயர் செய்ய திருப்பதியும், வெண்ணிலாவும் கிளம்பி நின்றனர். அவர்களுக்கு துணையாய் புகழ் உடன் வந்தான். 

ஆயிரம் பேர் அங்கு குழுமி இருந்த போதும், தன் உடன் பிறந்தவர்களை கண்டதும், பால்கியின் முகம் மகிழ்வில் நிறைந்தது. “வாண்ணா…! வாம்மா நிலா. வாப்பா புகழ்…!’’ என்று அனைவரையும் தனித்தனியாய் வரவேற்றவர், மதுராவை அழைத்து அவர்களை விருந்தோம்ப வைத்தார். 

வந்தவர்கள் பழசாறு அருந்தி முடிக்கும் வரை இருவரும் அவர்கள் அருகிலேயே நின்றனர். ஊரார் நலம், பயண சௌகர்யம் அனைத்தையும் விசாரித்து முடித்த பின்னர் கூட பால்கி சற்று நேரம் அவர்களோடு தான் இருந்தார். 

ஆனால் பையனை பெற்றவர் எத்தனை நேரம் ஒரே இடத்தில் இருந்து விட முடியும். அடுத்து நிச்சயதார்த்த சடங்குகள் தொடங்க அவர் அங்கிருந்து நகர வேண்டியதாயிற்று. அப்போது கூட புகலிடம் தங்களின் அறை சாவியை கொடுத்து, தேவைப்படும் என்றாள் உபயோகித்து கொள்ள சொல்லிவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தார். 

அங்கிருந்த சூழல் அவர்களுக்கு அத்தனை ஏற்புடையதாய் இல்லை. கூட்டம் ஒரு பக்கம் முண்டியடிக்க, வந்தவர்களோடு மற்றவர்கள் செல்பி எடுக்க என்று அங்கு ஒரே தள்ளு முள்ளாக இருந்தது. அதுவரை அவர்களோடு அமர்ந்திருந்த புகழ் கூட, தனக்கு பிடித்த கிரிகெட் நட்சத்திரங்களை அருகில் கண்டதும் அவர்களோடு செல்பி எடுக்க பறந்துவிட்டான். 

 “அண்ணா நாம சீரும் செய்ய வேண்டாம். ஒண்ணும் செய்ய வேண்டாம். இப்படியே நைசா வெளிய போயி மறுபடி ஊருக்கு ட்ரைனை பிடிச்சிருவோமா..?’’ என்றார் வெண்ணிலா ரகசியமாய். 

“அப்புறம் என்னத்துக்கு அவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வரணும். கொஞ்ச நேரம் அமைதியா இரு வெண்ணி. கூட்டம் குறைஞ்சதும் சீர் தட்டை அவங்ககிட்ட கொடுத்துட்டு நாம கிளம்பிடலாம்.’’ என்று தங்கையை அமைதி கொள்ள செய்தார் திருப்பதி. 

ஆனால் நேரம் ஆக ஆக கூட்டம் கூடியதே தவிர குறைவதாக இல்லை. தங்கள் அணியின் கேப்டன் கிளம்ப அவரை வழி அனுபுவதற்காய் அவருடனே வந்த கார்த்திக், மீண்டும் மேடைக்கு திரும்பும் போது, யதேச்சையாக அவர்கள் இருவர் மட்டும் தனியாய் அமர்ந்திருப்பதை கண்டவன், “அத்தை…’’ என்ற உரிமை அழைப்போடு அவர்களின் அருகே வந்தான். 

கார்த்திக் இவர்களின் அருகில் வந்து நிற்பான் என்று எண்ணிப் பார்க்காத இருவரும் சற்றே திகைத்து எழுந்து நின்றனர். “ஏன் இங்க உக்காந்து இருக்கீங்க. உங்களை தனியா விட்டுட்டு அப்பா எங்க போனாரு. சரி வாங்க என் கூட…” என்றவன் அவர்களின் பதிலுக்காய் காத்திருக்காமல் வெண்ணிலாவின் காலின் கீழிருந்த கட்டைப்பையை கையில் எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தான். 

ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்ட இருவரும் வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்தனர். ஐந்து வருடங்கள் கார்த்திக்கின் நடத்தையையும் சற்றே மாற்றியிருந்தது. கிரிகெட் வாழ்வில் ஆரம்பத்தில் ஒற்றை தமிழனான அவன் குழுவினரோடு இணைந்து பயணிப்பதில் பெரும் சவால்களை சந்தித்தான். 

பெரும் அவமாங்ககளையும், புறக்கணிப்புகளையும் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் குழு தலைவன் தான் அவன் துவண்டு விடாமல் பார்த்துக் கொண்டான். சில கசப்பான அனுபவங்கள் தான் வாழ்விற்கு தேவைப்படும் நல் அனுபவங்களை கற்று தரும். அது போல அவன் அன்றைக்கு அனுபவித்த சில கசப்பான சம்பவங்கள் எந்த மனிதரையும் வருத்தும் செயலை செய்து விட கூடாது என்ற பாடத்தை கற்று தந்திருந்தது. 

கார்த்திக் கையில் கட்டைப்பையோடு வர, பிரகாஷினி அவனை சற்றே வியப்போடு பார்த்தாள். அதற்குள் மகனை கண்டுவிட்ட மதுரா முன்னே வந்து அவன் கையில் இருந்த கட்டைப் பையை வாங்கினார். 

“மா… அத்தையும், மாமாவும் அங்க தனியா இருந்தாங்க. அவங்களை ஸ்டேஜ்கிட்ட கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே.’’ என்று தாழ்ந்த குரலில் தாயை கடிந்தவன், அவனுக்கு பின்னால் நின்றிருந்த இருவரையும் முகத்தில் கேள்விக் குறியோடு  பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷியிடம், “எங்க பெரியப்பா… ரெண்டாவது அத்தை. வா ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.’’ என்று ஜோடியாய் இருவரின் காலிலும் விழுந்தான். 

Advertisement