Advertisement

ஆனாலும் மேலும் சிறிது நேரம், கேலியும் கிண்டலுமாக வம்பளந்து விட்டே நண்பர்கள் பட்டாளம் இடத்தை காலி செய்தனர். “நிச்சயதார்த்த மேடையில நீங்க அப்படியே ஆகணும் சீனியர்..’’ என்று மிரட்டிவிட்டு மதுரா உறங்குவதற்காய் பால்கியோடு அறைக்குள் நுழைய, கால சுழற்சியை எண்ணி பிரதாப் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். 

 முசோரியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தின் மாணவர் தங்கும் அறையில் அமர்ந்திருந்த திருவின் விழிகள் ஜன்னலின் வழி கசிந்து வந்த நிலவொளியின் மீதே இருந்தது. 

ஆயிற்று இந்தியாவின் குடிமை பணியில் அமர, இந்த பயிற்சி மையத்தில் இணைந்து இன்றொரு ஒன்றரை வருடம் கடந்திருந்தது. அடுத்த பயிற்சி, பேஸ் டூ என்று சொல்லப்படுகின்ற நேரடி களப் பயிற்சி. 

எந்த மாவட்டத்திற்கு பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்படுவான் என்பதை அவன் அறியான். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் பாரத் பவன் என்று சொல்லப்படுகின்ற இந்திய சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பியிருந்தனர் அவனோடு பயிற்சி பெறும் சக மாணவ மாணவியர். 

இன்றைக்கு தூக்கம் கலைந்து திரு அமர்ந்திருக்க ஒற்றை காரணம் அவளன்றி வேறு யாராக இருக்க முடியும். அவளை பார்த்து பேசி முழுதாய் ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தது. அவள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் பால்கியின் வாயிலாக அவ்வப்போது அவன் அறிய நேரும் போதெல்லாம், கலங்கிய கண்களோடு, “சாரி அத்தான்…!’’ என்ற மித்ராவின் முகம் தான் மனக் கண்ணில் மின்னி மறையும். 

இன்றைக்கு அந்த நீண்ட நெடிய ஐந்து வருடங்கள் கழித்து அவளின் குரலை கேட்டிருந்தான். கார்த்திக் அணி ஐ.பி. எல் தொடரில் வென்றதை தெரிவிக்க, சற்று நேரத்திற்கு முன் தான் பால்கி அழைத்திருந்தார். 

நள்ளிரவில் அவரின் அழைப்பு என்றதும், வீட்டில் யாருக்கும் எதுவும் பிரச்சனையோ என பயந்தவன், சற்று பதட்டத்துடனே அந்த அழைப்பை ஏற்று இருந்தான். ஆனால் அவன் கவலைகள் அர்த்தமற்றை என்று அறிவிக்கும் வகையில் எதிர்புறம் பேசிய பால்கி மிகுந்த உற்சாகத்தோடு, “திரு… சி.எஸ்.கே கப் வின் செஞ்சிட்டாங்கடா. கார்த்திக் தான் மேன் ஆப் த மேட்ச். ஹாட்ரிக் விக்கட் எடுத்தான். அப்புறம் விடீயோ போட்டு பாரு…’’ என்று தொடர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டே சென்றார். 

பேச்சு கார்த்திக் குறித்து என்தும், கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றியவன், கொஞ்சமும் உற்சாகமின்றி, “ரொம்ப சந்தோசம் பால்கிப்பா…’’ என்றான் சம்பர்தாயமாய். அதே நேரம் பால்கி, “ஒரு நிமிசம் திரு. பாப்பா கால் பண்றா. நான் கான்பரன்ஸ் போடுறேன். ஒவ்வொருத்தருக்கா பேச நேரம் இல்லை.’’ என்றவர் அந்த அழைப்பில் மித்ராவையும் இணைத்தார். 

“டாட்…! இப்போ தான் ஐ.சியூல இருந்து வெளிய வந்தேன். சென்னையே திருவிழா மாதிரி இருக்கு. என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை கட்டி பிடிச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. அண்ணா பேசினானா டாட்…’’ என்றாள் குதூகலாமாய். 

அழைப்பில் நடுவில் ஒருவன் இருப்பதையே மறந்த பால்கி, ‘பேசினான்டா. இன்னும் ஏதோ பார்மாலிடீஸ் இருக்குன்னு லைனை கட் செஞ்சிட்டு போயிட்டான். எப்படியும் நாளைக்கு உனக்கு கூப்பிடுவான்னு நினைக்கிறேன்.’’ என்றார். 

“டாட்…! அவனை ஒழுங்கா என்னை வந்து பாத்துட்டு அப்புறமா எதுனாலும் செய்ய சொல்லுங்க. உங்க க்ரிக்கட்டர் இப்போ எல்லாம் ரொம்ப தான் பந்தா பண்றான்.’’ என மகள் சலித்துக் கொள்ள, “டேய்…! அவன் நிச்சயத்துக்கு நீ வரமாட்டேன்னு சொன்ன கோபம் அவனுக்கு. அதான் பேசாம சுத்திட்டு இருக்கான்.’’ என்றார் மகளை சமாதானப் படுத்தும் வகையில். 

“டாட்…! நான் அவனுக்கு கிளியரா என்னோட சிட்சுவேசனை எக்ஸ்ப்ளைன் செஞ்சிட்டேன். அவனோட ப்ரோபசன் எப்படி அவனுக்கு பேசனோ அதே மாதிரி தான் எனக்கு என்னோட ப்ரோபசனும். இப்போ தான் அருண் கான்சியஸ் வந்து இருக்கான். என்னோட பஸ்ட் அசைன்மென்ட் கேஸ். இன்னும் ரெண்டு நாள்ல அவனை ஆர்டிபிசியல் வென்டிலேசன்ல இருந்து வீன் செய்ய போறோம். ஒரு பிசியோ தெரபிஸ்ட்டா… நான் அங்க இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இப்படியே உங்க பையன் சீன் போட்டுட்டு இருந்தா நான் நேரா பிரகாவுக்கு போன் போட்டு இவன் காலேஜ் டைம்ல செஞ்ச லீலை எல்லாம் போட்டு கொடுக்க வேண்டி இருக்கும். உங்க பையன்கிட்ட சொல்லி வையுங்க.’’ என்று போலியாய் தந்தையை மிரட்டினாள். 

“பாப்பு… என்னடா ஆள் ஆளுக்கு உங்க அண்ணன் கல்யாணத்தை நிறுத்துறதுலையே குறியா இருக்கீங்க. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதா. அண்ணா நாளைக்கு உன்னை பார்க்க வருவான். அதுக்கு நான் கேரண்டி. சரியா…?’’ என்றதும் மகள் வழமையாய், “ லவ் யூ டாட். குட் நைட்…” என்றவள் அலைபேசியின் வழி ஒரு முத்தத்தையும் பறக்க விட, அவள் குரலில் உறைந்திருந்த திரு என்ற சிலையின் உடல் மொத்தமாய் சிலிர்த்து அடங்கியது. 

அவள் அழைப்பை துண்டிக்கவும் தான் அழைப்பில் திரு இருபத்தை உணர்ந்தவர், “டேய் திரு. நீ ஏன்டா அமைதியா இருந்த. நீ லைன்ல இருந்ததையே மறந்துட்டேன் போ. பாப்பாகிட்ட ரெண்டு வார்த்தை பேசி இருக்க வேண்டியது தான. சரி… லேட் நைட் ஆயிடுச்சு. நீ தூங்கு. நான் நாளைக்கு கால் பண்றேன்.’’ என்றவர் அழைப்பை துண்டித்து விட, அப்போதிருந்து திரு ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான்.  

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை எச்சரித்து அலைபேசியை திருப்பி தரும் போது, வெறும் அறிவுரையில் அவள் முழுதாக மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு குறைவாக இருந்தது. அதனால் அவளின் அலைபேசியை  அவள் அறியாது தன் தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் சில செயலிகளின் உதவியோடு கொண்டு வந்தான்.

முதல் மூன்று மாதங்கள் அவனுக்கு ஒரே பதட்டமாக இருந்தது. அந்த அரவிந்தன் எத்தனை முறை முடக்கினாலும், முகபுத்தகத்தில் வேறு வேறு கணக்குகள் தொடங்கி, மித்ராவை தொடர்பு கொள்ள முயன்றான். 

ஆனால் இம்முறை மித்ரா கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. மருத்துவத்திற்கான நீட் தேர்வை கைவிட்டு, அந்த வருடத்தில் இலவசமாக கலந்தாய்வில் கிடைத்த, பிசியோ தெரபி இளநிலை பயிற்சியை தேர்வு செய்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் கல்வியில் இணைந்தாள். 

பால்கிக்கும், மதுராவிற்கும் மகள் மருத்துவர் ஆகாதது வருத்தமாய் இருந்தாலும், விரும்பிய துறையில் மகள் கோலோச்சட்டும் என்று அவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தனர். தான் பயிலும் கல்வியின் வாய்ப்பு வாசல்கள் அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருக்கிறாள் என்பதை அவளின் இணைய தேடல்களின் வழி அறிந்து கொண்டவனுக்கு பூரண திருப்தி. 

சரியாய் ஒரு வருடம் கழித்து தன் கண்காணிப்பு வட்டத்திற்குள் இருந்து அவளை விலக்கி வைத்தான். அந்த இடைப்பட்ட நாட்களில் மீண்டும் அரவிந்தன் மூலம் தொல்லைகள் வந்தால், நேரடியாக பால்கியிடம் தெரிவிக்க எண்ணியிருந்தான். ஆனால் அதற்குரிய அவசியம் நேரவில்லை. 

இந்த வருடம் இளநிலை பயிற்சி முடித்ததும், அடுத்த வருடம், அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுநிலை இயன்முறை மருத்துவத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஸ்போர்ட்ஸ் துறையை தேர்வு செய்ய இருக்கிறாள் என்பதும் பால்கியின் மூலம் அவன் அறிய நேர்ந்தது.  

‘மறுபடி ஏன் அவளுக்கு என்கிட்டே பேசவே தோணலை. அட்லீஸ்ட் ஒரு தாங்க்ஸ் சொல்றதுக்கு ஆவது பேசியிருக்கலாம்.’ அவன் மனது எண்ண, மனசாட்சியோ, ‘அவ என்னைக்குடா உன்னை எல்லாம் மனுசனா மதிச்சி இருக்கா. அப்படியே அவங்க பாட்டி ரத்தம். உன்னை எப்பவும் இளக்காரமா தானே பாப்பா. தேவையில்லாம நீ தான் ஹட்ச் டாக் மாதிரி அவ பின்னாடி சுத்திட்டு இருக்க.’ என்று நினைவூட்ட கண்களை மூடி அமர்ந்து கொண்டான். 

சற்று நேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தவன், அதன் பிறகு சிந்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கண்களை மூடி உறங்க முயன்றான். தன்னை வெறுக்கும் யார் நினைவும் தனக்கும் வேண்டாம் என.

உள்ளுக்குள் முறுக்கி கொண்டவன் அப்போது அறியவில்லை, அவள் நினைவுகளிலும், செயல்களிலும் அவன் சிந்தைகள் தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்பதை. 

பால் வீதி வளரும். 

Advertisement