Advertisement

பால் வீதி – 6 

5 ஆண்டுகளுக்கு பின். 

தொலைக்காட்சி பெட்டியில் ஐ.பி.எல் போட்டி நேரலையில் ஓடிக் கொண்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் கிங்க்ஸ் சென்னையுடன் மோதிக் கொண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் இருந்தது. 

பெங்களூர் அணி, எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கலாம் என்ற நிலையில், பந்து வீச முன்னால் வந்தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளன் கார்த்திக். 

ஏற்கனவே இரண்டு விக்கட்டுகளை கையகப்படுத்தி எதிர் அணியை நிலை குலைய வைத்திருந்தவன், ஓடி வந்து பந்தை முன்னால் வீச, அது எதிரே நின்று கொண்டிருந்த மட்டைப் பந்தாளனை கடந்து, ஸ்டம்பில் பட்டு தெறிக்க, சென்னை சேப்பாக்கம் அரங்கம் மொத்தமாய் அதிர்ந்தது. 

ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப, சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடன மங்கைகள் துள்ளி எழுந்து ஆடினர். தன் கையை மடக்கி, “யா…’’ என்று குரல் எழுப்பிய கார்த்திக், பாதி மைதானத்தை ஓடி கடக்க, அதற்குள் அவன் கூட்டாளிகள், அவனை ஓடி வந்து தூக்கிக் கொண்டனர்.

சேப்பாக்கம் மைதானத்திற்கு சற்றும் குறையாத அதிர்வலையில் இருந்தது பால்கியின் வீடு. அங்கு அவன் பால்ய நண்பர்கள் நால்வரும் குழுமி இருந்தனர். “செம பௌலிங்க். ஏய் கும்தலக்க கும்மாவா பால்கி பையன்னா சும்மாவா…” என்று பாண்டி ராகம் இழுத்து பாட, அவரோடு கிருஷ்ணனும், சந்திரனும் எச பாட்டு பாடினர். 

பிரதாப் வழக்கம் போல அமைதியாக அமர்ந்திருக்க, பால்கியின் விழிகளில் பெருமிதத்தில் சில நீர்த் துளிகள் திரண்டிருந்தது. நண்பர் பட்டாளம் நேற்றைக்கு தான் மைசூர் சுற்றுப் பயணத்தை முடித்து வீடு திரும்பியிருந்தனர். 

இன்னும் இரண்டு நாட்களில் பிரதாப் மகள் பிரகாஷினிக்கும், பால்கியின் மகன் கார்த்திக்கிற்கும் நிச்சயதார்த்த விழா ஏற்பாடாகி இருந்தது. விழாவை இரு குடும்ப உறுப்பினர்களும்  சென்னையில் திட்டமிட்டு இருந்தனர். 

மைசூரிலிருந்து திரும்பியவர்கள், அன்றைக்கு கார்த்திக் விளையாடும் அணி டி-ட்வன்டி இறுதி சுற்றில் மோதுவதால் பால்கியின் வீட்டில் டேரா போட்டு போட்டியை கண்டு குதூகலித்து கொண்டிருந்தனர். 

கார்த்தியின் முகம் தொலைக்காட்சி பெட்டியில் தோன்றும் போதெல்லாம், வீட்டில் விசில் சத்தம் காதை பிளந்தது. “அச்சோ அண்ணா. கொஞ்சம் கம்மியா சவுன்ட் போடுங்க. பக்கத்து வீட்டுகாரங்க  சண்டைக்கு வந்துடப் போறாங்க.’’ என்று கெஞ்சி பார்த்த மதுரா, அவர்கள் எதையுமே காதில் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்ததும், பிரதாப்பை போல தானும் அமைதியாக அமர்ந்து கொண்டார். ஆனாலும் மகன் முகத்தை கண்களில் காணும் போதெல்லாம் ஒரு பெருமிதம் மின்னி மறைந்தது. 

அன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற, அணியின் கேப்டனோடு மற்ற வீரர்களும் கோப்பையை கைப்பற்ற, பால்கியின் வீடு அமளி துமளிபட்டது. மதுரா, அனைவருக்கும் பைனாபிள் கேசரியை செய்து பரிமாறினார். நள்ளிரவிலும், அதிகாலையின் உற்சாகத்தை அந்த இடம் தத்தெடுத்திருக்க, மதுரா கொடுத்த இனிப்பை பெற்று கொண்ட பிரதாப், “மித்ராவுக்கு இன்டன்ஷிப் இன்னும் முடியலையா மது…?’’ என கேட்டார். 

“இன்னும் த்ரீ மன்த் இருக்கு சீனியர்.’’ என்றார் மதுரா சிரித்தபடி. “அப்படியா. நிச்சயத்துக்கு வந்துருவா தானே.’’ என்றதும், “இல்ல சீனியர், ஏதோ நியூரோ கேசை இவங்க டீம் டேக் ஓவர் செஞ்சி இருக்காங்களாம். அந்த பேசன்ட் இப்போ தான் ரெகவரி பேஸ்ல இருக்காராம். விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டா.’’ என்றார். 

“ஓ…! இன்டன்ஷிப் பீரியட் ரொம்ப முக்கியம் தான். சரி நேரடியா விடியோ டெலிகாஸ்ட் செஞ்சிடலாம்.’’ என பிரதாப் மொழிந்து கொண்டிருக்கும் போதே, “என்ன சீனியரும், ஜூனியரும் டீப்பா டிஸ்கசன் செஞ்சிட்டு இருக்கீங்க.’’ என்றபடி அங்கு வந்து அமர்ந்தார் பால்கி. 

“எல்லாம் உங்க அருமை மகளை பத்தி தான்.’’ என்ற மதுரா, “இருங்க… கார்த்திக்கை ஸ்கிரீன்ல காணோம். நான் போய் அவனுக்கு கால் செஞ்சி பாக்குறேன்.’’ என்றபடி தன் அலைபேசியை எடுத்து கொண்டு தனியே நகர்ந்தார். 

பிரதாப் முதுகலை பயின்ற போது, மதுரா அங்கு இளநிலை மாணவி. மதுராவின் முதல் கணவன், மதுராவின் அத்தையின் மகன், சஞ்சீவியும் பிரதாப்புடன் தான் படித்தான். அப்போதிருந்தே மதுராவை பிரதாப் நன்றாக அறிவான். 

இலக்கிய மன்றங்களில் அவளின் பேச்சாற்றல் கண்டு வியந்தவன் மெல்ல அவள் பால் ஈர்க்கவும் பட்டான். ஆனால் அந்த ஈர்ப்பு காதலாக கனியும் முன்பே, சஞ்சீவிக்கும் அவளுக்கும் திருமண உறுதியே முடிந்துவிட்டது என்பதை அறிந்தவன், அந்த ஈர்ப்பை தனக்குள்ளே  புதைத்து கொண்டான். 

மதுரா சஞ்சீவி திருமணத்தின் போது, பிரதாப் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் இருந்தான். அதானால் அவனால் அப்போது அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பின் பெற்றவர்களின் ஆசைப்படி திவ்யாவை மணந்து, தானும் சம்சார சாகரத்தில் மூழ்கினான். 

மதுரா என்ற பெயர் அவன் நினைவடுக்கில் மிக ஆழத்திற்கு சென்ற நாளொன்றில் நெடு நாட்களாக திருமணம் ஆகமால் சுற்றிக் கொண்டிருந்த பால்கி தனக்கு திருணம் என அழைக்க, அந்த திருமணத்திள் மணப் பெண்ணாக மதுராவை கண்டவனின் இதயம் உயர் மின்சாரத்தை தொட்டதை போல அதிர்ந்தது. 

அப்போதைக்கு எதையும் காட்டிக் கொள்ளாமல், மணமக்களை வாழ்த்தி வந்தவன், அதன் பிறகே மதுராவின் கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்ததையும், அதன் பின் உடன் பணி புரியும் பால்கியின் மீது விருப்பம் கொண்டு அவனை மணக்க இசைந்ததையும் விசாரித்து அறிந்து கொண்டான்.  

‘நான் அவசரப்பட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால்…’ என்ற எண்ணம் அவனுள் எழுவதை என்ன முயன்றும் அவனால் தடுக்க முடியவில்லை. கல்லூரி நாட்களில், கலை நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம், பிரதாப், ‘என் இனிய பொன் நிலாவே…’ பாடும் போதெல்லாம், ‘ஒன்ஸ் மோர் சீனியர்…’ என்று முதல் வரிசையில் அமர்ந்து கத்திய மதுரா கண் முன் தோன்றி அவனை அலைகழித்தாள்.       

 

‘பா…. பா…’’ என்று மழலையில் மிழற்றிய மகளே அப்போதைக்கு அவன் மனதை நிலைப்படுத்தினாள். அதன் பிறகு மெல்ல மெல்ல பால்கியின் மனைவியாக பிரதாப் மதுராவை தன் மனதிற்குள் பதிய வைத்தார். 

“சீனியர் போன்ல கார்த்திக்…’’ என்ற மதுராவின் குரலில், பிரதாப் தன் நினைவுகளில் இருந்து கலைந்து நிமிர்ந்து பார்த்தான். மற்றவர்கள் எல்லாம், அவனுக்கு முன்பே கார்திக்கோடு பேசிவிட்டனர் என்பதை அவர்களின் முகபாவமே காட்டிக் கொடுக்க, ஒரு சிறு புன்னகையோடு அலைபேசியை பெற்றுக் கொண்டார். 

எடுத்ததுமே, “வாழ்த்துகள் மாப்பிள்ளை…!’’ என்றார் பிரதாப். “தாங்க்ஸ் அங்கிள். எப்படி இருக்கீங்க…” என்று கார்த்திக் விசாரித்ததும், “ரொம்ப ஹாப்பியா இருக்கேன் மாப்பிள்ளை. வேற லெவல் பீல்டிங். ரொம்ப பெருமையா இருக்கு.’’ என்றதும், “எல்லாம் டீம் வொர்க் தான் அங்கிள். இங்க முடிக்க வேண்டிய பார்மாலிடிஸ் இன்னும் கொஞ்சம் இருக்கு. அம்மாகிட்ட அப்புறம் கூபிடுறேன்னு சொல்லிடுங்க. அப்படியே பிரகாகிட்டயும் சொல்லிடுங்க அங்கிள்.’’ என்றான். 

“ஹா… ஹா… இப்பவே ஹஸ்பன்ட் டியூட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சா. கண்டிப்பா சொல்லிடுறேன்.’’ என்றதும், “அங்கிள்…’’ என்று சிணுங்கலாய் இழுத்தவன், “ஓகே அங்கிள். பாய். வச்சிடுறேன்.’’ என்றவன் அலைபேசியை துண்டிக்க, முகத்தில் இருந்த முறுவலோடு அலைபேசியை மதுராவிடம் நீட்டினார் பிரதாப்.   

“மாமனும் மருமகனும் கொஞ்சி முடிச்சாச்சா. ஏன்டா அரைமணி நேரமா உன் பக்கத்துல உக்காந்துட்டு இருக்கேன். தலையை குனிஞ்சிகிட்டு அப்படி என்னடா யோசனை உனக்கு?’’ என பால்கி வினவியதும், கொஞ்சமாய் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளியே நிர்மலமான புன்னகையோடு, “ வேற என்ன உன் பையன் ஐ. பி. எல் கப் வேற ஜெயிச்சிட்டான். இனி நீ எவ்ளோ வரதட்சணை கேக்க போறியோங்குற யோசனை தான்.” என்று பிரதாப் மொழியவும், மற்ற நண்பர்களும் அவர்களை சுற்றி அமர்ந்தனர். 

“டேய் பால்கி நல்ல சான்ஸ்…! ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் புக் பண்ணிட சொல்லு’’ என கிருஷ்ணன் மொழிய, “டேய் துபாய்ல அந்த ட்வின் டவர் இருக்கு இல்ல. அங்க ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கி தர சொல்லு..’’ என்று சந்திரனும், “அதெல்லாம் ஓல்ட் பேசன். நாசாவுல நிலாவுக்கு போக ஏதோ புக்கிங் நடக்குதாமே… அங்க ஹனிமூனுக்கு புக் பண்ண சொல்லு… மூனுக்கே போய் நம்ம பையன் ஹனிமூன் கொண்டாடிட்டு வரட்டும்…’’ என்று பாண்டியும் ஆளுக்கு ஒரு யோசனையை அள்ளி தெளித்து விட்டனர். 

“அடப் பாவிங்களா…! பிரண்டுங்கன்னு உங்களை நம்பி கூட வச்சி இருந்தா இப்படி எனக்கே  சகுனி வேலை பாக்குறீங்களே… ஜூனியர் வந்து உங்க சீனியரை காப்பாத்துமா…’’ என மதுராவை பேச்சில் இழுத்தார் பிரதாப். 

“எங்க பொண்ணு ஜில்லா கலெக்டர் ஆக்கும். வேணும்னா நீங்க போட்ட லிஸ்டை எல்லாம் நீங்களே வாங்கி கொடுங்க. போனா போகுதுன்னு கல்யாணத்துக்கு ஒத்துகிறோம்.’’ என்று பெண் வீட்டு மனுசியாய் பேசினார் மதுரா. 

“மதும்மா… உம் புருசனுக்கு ரிட்டேர்மென்ட் ஆயிடுச்சுடி. இப்படியெல்லாம் என் வயித்துல புளியை கரைக்காத. டேய் தெய்வங்களா… உங்களுக்கு புண்ணியமா போகும். கேசரியை சாப்பிட்டாசுன்னா போய் படுங்கடா. நாளைக்கு எல்லாரும் அவங்க அவங்க ஊருக்கு கிளம்பனும். நிச்சய வேலை வேற தலைக்கு மேல இருக்கு.’’ என அப்போதைக்கு சங்கத்தை கலைத்துவிட்டார். 

Advertisement