அவன் உள்ளே நுழையவும், வேறு வழியின்றி, மித்ரா அவனை பின் தொடர்ந்தாள். அங்கு சில நோயாளிகள் காத்திருக்க, திரு அங்கிருந்த வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று தாழ்ந்த குரலில் பேசி வந்தான்.
இருவரும் அங்கிருந்த நோயாளிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தனர். “அப்பாவுக்கு என்ன ஆச்சு…? ஏன் இங்க வந்து இருக்கோம்.’’ என்றாள் மித்ரா சற்றே ஆத்திரம் ஏறிய குரலில்.
திரு வாய் பேசவே இல்லை. தன் கால் சாராயிலிருந்து மித்துவின் அலைபேசியை எடுத்து அவள் முன் நீட்டினான். மித்ரா அதிர்ந்து போய் திருவை பார்த்தாள். அதே நேரம் அவர்களுக்கு முன் இருந்த கதவு திறக்கப்பட, “மிஸ். மித்ரா… நீங்க உள்ள போகலாம்.’’ என்று வரவேற்பறையில் இருந்த பெண் அறிவித்தார்.
மித்ரா திருவை திரும்பி, திரும்பி பார்த்தபடி உள்ளே நுழைந்தாள். அங்கிருந்த மருத்துவர் அவளை இன்முகத்துடன் வரவேற்றார். “உக்காரும்மா…’’ என்றவர், சற்று நேரம் அவளிடம் பொதுப்படையான விசயங்களை கேட்டறிந்தார்.
அவள் சற்றே இலகு நிலைக்கு மீளவும், “படிக்கிற வயசுல நீங்க செய்ற காரியம் தப்புன்னு உங்களுக்கு தெரியலையா…? வீட்ல உங்களுக்கு என்ன பிரச்சனை…?’’ என்றார் மிருதுவாக.
தலை குனிந்து அமர்ந்த மித்து, “நீட் எக்ஸாம் ப்ரிபேர் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து நான் ரொம்ப தனியா இருக்க மாதிரி பீல் ஆச்சு. அப்போ தான் அரவிந்த் ரொம்ப பிரண்ட்லியா சேட் செய்ய ஆரம்பிச்சான். முதல்ல நாங்க பிரண்டா தான் இருந்தோம். அப்புறம் அவன் லவ் ப்ரோபோஸ் செஞ்சான். எனக்கும் அவனை பிடிச்சது…’’ என்றாள்.
“அதனால அவர் கூட எல்லை மீறி செக்ஸ் சாட் வரை போய் இருக்கீங்க. அப்படித் தானே.’’ மருத்துவர் இப்படி உடைத்துக் கேட்பார் என்று எதிர்பாராத மித்து அதிர்ந்து அவர் முகம் நோக்கினார்.
“இந்த நீட் எக்ஸாம் பாஸ் செஞ்சிட்டா நீங்க ஒரு டாக்டர். வயசு கூட பத்தொன்பது தொடங்கிருச்சு போல. ஆக நீங்க செய்றது தப்புன்னு தெரிஞ்சே தான் செஞ்சி இருக்கீங்க. சில்லியா ரீசன் சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு பார்க்காதீங்க மித்ரா. நீங்க அந்த பையன் கூட செஞ்ச சாட்டிங் எல்லாம் கொஞ்சம் கூட எடிட்டிங் இல்லாம மத்தவங்க பார்வைக்கு வைக்கப்பட்டா உங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தீங்களா…?” என்றார் விசயத்தின் தீவிரத்தை உணர்ந்தும் கடின குரலில்.
மித்து பதில் பேசாமல் அமர்ந்திருக்க, “இந்த வயசுல எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கணும்னு வர ஆர்வம் இயல்பு தான். ஆனா நீங்க அதுக்காக தேர்ந்தெடுக்குற பாதை தான் உங்க மரியாதையை தீர்மானிக்கும். மூடின கதவுக்குள்ள யாரும் நம்மளை எட்டிப் பார்க்க முடியாதுன்ற தைரியத்துல நீங்க சில விசயங்களை செய்றீங்க. ஆனா உங்க உள்ளங்கைல இருக்க போன் உங்க நடத்தையை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டிரும். உங்க போனை ரிப்பேர் செஞ்ச இடத்துல உங்க சாட்டிங் ஹிஸ்ட்ரிய ரெகவர் செஞ்சது உங்க சொந்தக்காரரா போனார். இல்லைனா அந்த போட்டோ எல்லாம் இந்நேரம் உலகம் முழுக்க கண்ட கண்ட வெப்சைட்ல அப்லோட் ஆகி இருக்கும். பொண்ணுங்களுக்கு தெரியாம அவங்களை தப்பா போட்டோ எடுத்து மிஸ் யூஸ் பண்றவங்க இருக்க இதே உலகத்துல உங்களை மாதிரி தெரிஞ்சே நெருப்புல விழுந்து உடம்போட மனசையும் சுட்டுகிற பொண்ணுங்களும் இருக்க தான் செய்றீங்க.’’ என்றவர் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
மித்ரா பதில் பேச முடியாமல், அப்போதும் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். “இப்போ வெளியே வெயிட் செஞ்சிட்டு இருக்காரே உங்க ரிலேடிவ் இன்னைக்கு காலைல மொதோ ஆளா என்னை பார்க்க வந்தார். உன்னோட போன் சாட்டிங் பத்தி லேசா சொல்லிட்டு, உனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலைனும், முடிஞ்ச அளவுக்கு நல்ல கவுன்சிலிங் கொடுக்கணும்னும் கேட்டுகிட்டார். உன்னோட சாட்டிங் எல்லாம் லேசா படிச்சப்பவே உனக்கு மனரீதியா எந்த பிரச்சனையும் இல்லைன்னு எனக்கு புரிஞ்சது. சாதாரண எதிர்பாலின ஈர்ப்பு தான் உனக்கு வந்து இருக்குறது. என்ன சாட்டிங் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம். நம்ம நாட்ல எத்தனை கவர்மென்ட் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் நல்ல திறமை இருந்தும் உன்னை மாதிரி ப்ரைவேட்டா நீட் கோச்சிங் எடுக்க வழி இல்லாம, தங்களோட கனவை எல்லாம் பொசுக்கிகிட்டு ஆர்ட்ஸ் காலேஜ் போயிட்டு இருக்காங்க தெரியுமா…? உனக்கு தனியா ரூம் கொடுத்து, உன்னை டிஸ்டர்ப் செய்யாம படிக்க வச்சா… நீ லோன்லியா பீல் ஆகுதுன்னு சொல்லி ஆகாத வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க.
உன்னோட இந்த சாட்டிங் உன் வீட்ல தெரிஞ்சா வீட்ல இருக்க பெரியவங்க என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா..? அதுக்கு தான் காலா காலாத்துல பொண்ணுங்களை கட்டிக் கொடுத்துடணும்னு பேசுவாங்க. நிறைய பேர் கஷ்டப்பட்டு பொண்ணுங்களை கிட்சன்ல இருந்து வெளி உலகத்துக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க. உன்ன மாதிரி பொண்ணுங்களோட முட்டாள் தனமான செய்கையால மறுபடி பொண்ணுங்களை கிட்சன்ல அடைக்காமா இருந்தா சரி. சொல்லு உனக்கு நான் ஏதாச்சும் கவுன்சிலிங் கொடுக்கணுமா…? உண்மையா ஏதாச்சும் பிரச்சனை இருந்தா தானே கவுன்சிலிங் கொடுக்க முடியும்.’’ என்றார்.
மித்ரா கண்களில் தேங்கிய கண்ணீரோடு, “சாரி மேம்.’’ என்றாள். “உனக்கு நீயே ஏதாச்சும் காரணம் சொல்லி உன்னோட தப்பான நடத்தைக்கு எல்லாம் ரீசன் சொல்லிக்காத. லோன்லியா பீல் செஞ்சா உங்க அம்மா, அப்பா பெட் ரூம்ல போய் தூங்கு. மார்னிங் டைம்ல கார்டனிங் செய். சின்ன சின்ன பிரீதிங் எக்சர்சைஸ் செய். முடிஞ்ச அளவுக்கு உன் பேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணு. நிறைய நல்ல புத்தகம் படி. உடனே எல்லாம் சரி ஆகிடும்னு சொல்ல முடியாது. உன்னோட மனோ பலத்தை பொறுத்து தான் நீ இந்த விசயத்துல இருந்து வெளிய வர முடியும். மறுபடி ஏதாச்சும் இஸ்யூஸ்னா வா. உங்க பேரன்ட்ஸ் கூப்பிட்டு அவங்களுக்கும் ஒரு கவுன்சிலிங் செசன் அரேஞ் செஞ்சிடலாம்.’’ என்றார்.
“நோ டாக்டர். இந்த விசயம் அவங்களுக்கு தெரிய வேண்டாம்.’’ என்றாள் வேகமாய். உடனே மருத்துவரின் முகத்தில் குறும் புன்னகை மலர்ந்தது. “அது சரி…’’ என்றவர், “சரி கிளம்புங்க மிஸ் மித்ரா. இனி மறுபடி சந்திக்காம இருப்போம்.’’ என்றார்.
மித்ரா வெளியே வந்ததும், திரு எழுந்து வெளி நோக்கி நடக்க தொடங்கினான். மித்ரா அமைதியாய் அவனை பின் தொடர்ந்தாள். அடுத்து திரு அவளை நல்ல உணவகத்திற்கு அழைத்து சென்றான்.
இருவரின் இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டிருக்க, கூட்டமற்ற அந்த உணவகத்தில் இருவரும் எதிரெதிராய் அமர்ந்தனர். மித்ராவிற்கு பிடித்த உணவு வகைகளை அவன் தருவிக்க, அது கூட மித்ராவின் கவனத்தில் பதியவில்லை.
அவளின் அலைபேசியை எடுத்து, பக்கவாட்டில் வைத்தவன், “உங்க அப்பா முகத்தை பார்த்து தைரியமா சொல்ல முடியாத எந்த விசயத்தையும் இனி செய்யாத மித்ரா. உன்னை லவ் பண்றதா சொன்ன அந்த அரவிந்த் உன்கிட்ட சேட் பண்ண சேம் டைம், இன்னும் ரெண்டு பொண்ணுங்க கூடவும் சேட்டிங்ல இருக்கான். அவன் போனை ஹேக் செஞ்சதுல தெரிஞ்சது. அந்த சாட் எல்லாம் கண்ல கூட பார்க்க முடியல. ஆனாலும் உன்னை நம்ப வைக்க எனக்கு வேற வழி இல்ல.’’ என்றவன் தன் அலைபேசியை எடுத்தவன் தன் நண்பனின் உதவியோடு இரவோடு இரவாக அரவிந்தனின் புலனத்தை துப்பறிந்து திரட்டிய வலை பேச்சை எல்லாம் ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து தன் அலைபேசியில் சேகரித்திருந்ததை அவளிடம் நீட்டினான்.
சில பதிவுகளை மேலோட்டமாக வாசித்தவள், மீதியை வாசிக்க வலுவின்றி அலைபேசியை திருவிடம் நீட்டினான். தன்னிடம் பேசிய அத்தனை வார்த்தைகளையும் ஒரு வரி மாறாமல் மூவருக்கும் அனுப்பி இருந்தான்.
மித்ரா கண்களை மூடி அமர, “வீட்ல எல்லாரும் இன்னும் உன்னை குழந்தையா தான் பார்க்குறாங்க மித்து. அதனால தான் நீ தனியா ரூமை பூட்டிட்டு என்ன செய்றேன்னு எட்டி பார்க்காம இருக்காங்க. அவங்க உன் மேல வச்ச நம்பிக்கையை நீ உடைச்சிட்ட.’’ என்றான் திரு வேதனையோடு.
மித்ரா கண்களில் நீர் தளும்ப, “சாரி… அத்தான்…!” என்றாள். மறுப்பாய் தலை அசைத்தவன், “நான் பார்த்த விசயத்தை எல்லாம் உங்க அப்பா பார்த்திருந்தா இன்னைக்கு நிஜமாவே உங்க அப்பாவை ஹாஸ்பிடல்ல தான் பார்த்திருப்போம். அவ்ளோ நம்பிக்கை உன் மேல அந்த மனுசனுக்கு. காதலும் வாழ்கையில முக்கியம் தான். ஆனா உண்மையா உன்னை நேசிக்கிறவங்க இப்படி இருட்ல உன்னை திறந்து பார்க்க ஆசைப்படமாட்டாங்க. இதெல்லாம் எப்படி உன்கிட்ட பேசுறதுன்னு கூட எனக்கு தெரியல.’’ என்றவன் கண்களை மூடி அமர்ந்து விட, மித்து தேம்பி அழ தொடங்கினாள்.
கண்களை திறக்காதவன், “அழாதே மித்ரா. ப்ளீஸ்…! இங்கேயே எல்லாத்தையும் மறந்துடு. எங்க அப்பா இன்னைக்கு உயிரோட இருக்க காரணம், ஒரு டாக்டர் தான். டாக்டர்ஸ் லைப் எவ்ளோ கிரிடிகலா இருக்கும்னு இன்னைக்கு நேர்ல பாத்துட்டு வந்து இருப்பேன்னு நம்புறேன். நீ பார்த்தது ஒரு பக்கம் தான். இன்னைக்கு காலைல எங்க அப்பா உயிரை காப்பாத்திட்டார்னு சொல்லி எங்க அம்மா எங்க அப்பாவுக்கு ஆஞ்சியோ செஞ்ச டாக்டர் கால்ல போய் விழுந்துட்டாங்க. இது வேலை இல்ல. சேவை. சாதாரண மனுசனை கடவுளா மத்தவங்க கண்ணுக்கு காட்ற சேவை. உன்னால முழு மனசோட இதுல ஈடுபட முடியும்னா மேற் கொண்டு படி. இல்லைனா, பேசாமா உனக்கு பிடிச்ச வேற கோர்ஸ் எதுலயாவது ஜாயின் செஞ்சிடு. தயவு செஞ்சி மறுபடி இப்படி எந்த வலையிலையும் போய் விழுந்துடாதா. மதுமாவுக்கு, பால்கிப்பாவுக்கும் அதையெல்லாம் தாங்குற சக்தி இல்ல.’’ என்றவன் கண்களை திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
மித்துவின் தேம்பல் அடங்க வெகு நேரம் ஆனது. அவளின் தேம்பல் சற்றே ஓயவும், திரு கண்களை திறந்தான். அந்த கண்களில் மலை அளவு வேதனை. உணவு மேஜையின் மீதிருந்த, கைக்குட்டை காகிதங்களை எடுத்தவன், முகத்தை துடைத்து கொள்ள சொல்லி அவளை நோக்கி நீட்டினான்.
மித்து முகத்தை துடைத்து கொள்ளவும், “சாப்பிடு…’’ என்று உணவு வகைகளை அவளை நோக்கி நகர்த்தி வைத்தான். ஒரு வாய் உணவினை எடுத்து வாய் வரை கொண்டு சென்றவள், “உங்களுக்கு…’’ என்றாள்.
“இதோ சாப்பிடுறேன்.’’ என்றவன், தனக்கான உணவை பெயருக்கு கொறித்தான். மித்துவை வீட்டு வாயிலில் இறக்கி விடும் போது, அவள் மீண்டும் கரகரத்த குரலில், “சாரி…!” என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “வெறும் வார்த்தைக்கு மதிப்பே இல்ல மித்து. செயல்ல உன் சாரியை காட்டு.’’ என்றவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் கிளம்பியிருந்தான்.
செயலில் மன்னிப்பை காட்டுவது எப்படி என அறியாதவள், தூரத்தில் புள்ளியாக மறையும் அவனை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள்.