Advertisement

பால் வீதி – 5 

காலை கண் விழிக்கையில் வீடே நிசப்தமாக இருந்தது. அலைபேசி இல்லாது இருந்ததால், மித்ரா இரவில்  சீக்கிரமே உறங்கி இருந்தாள். அவள் கீழே வந்த போது, அவர்கள் இல்லத்தில் பணிபுரியும் வேலைக்காரப் பெண்மணி மட்டுமே இருந்தார். 

இவள் தலையை கண்டதும், அவள் வழமையாக அருந்தும், நாட்டு சர்க்கரை கலந்த பாலை சூடாக கொண்டு வந்து கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டவள், “எல்லாரும் இன்னைக்கு சீக்கிரம் போயிட்டாங்க போல. ஏதாச்சும் சொல்லிட்டு போனாங்களா அக்கா..’’ என கேட்டாள். 

‘அம்மாவும் ஐயாவும் காலேஜ்ல ஏதோ வேலையிருக்குன்னு இன்னைக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்க பாப்பா. தம்பி இப்போ தான் விளையாட போனாரு.’’ என்றவர், “என்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டேன் பாப்பா. நான் கிளம்புறேன். ஆ… சொல்ல மறந்துட்டேன். மத்யானம் கிளாஸ்க்கு உங்களை கூட்டிட்டு போய் விட தம்பி வரதா சொல்லிட்டு போனாரு.’’ என்றார். 

“சரி அக்கா. நீங்க கிளம்புங்க. நான் பார்த்துகிறேன்.’’ என்றவள், அவர் கிளம்பியதும் கதவை அடைத்து விட்டு வந்து அருகிருந்த சொகுசு நாற்காலியில் விழுந்தாள்.கைபேசி இல்லாதது ஒரு கையே இல்லாத வருத்தத்தை தர,, “டாட் கிட்ட எந்த ஷோ ரூம்ல மொபைல் சர்வீஸ் கொடுத்தாருன்னு கேக்காம விட்டுட்டேனே. இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எப்படியாச்சும் வாங்கிடணும்.’’ என்று எண்ணிக் கொண்டாள். 

அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, ‘இந்த நேரத்துல யாரா இருப்பாங்க…’ என்ற குழப்பத்தோடு சென்று கதவை திறந்தாள். வெளியே திரு பதட்டத்துடன் நின்றிருந்தான். அவன் முகத்தில் இருந்த பதட்டத்தின் காரணம் புரியாவிட்டாலும், “வீட்ல யாரும் இல்லையே…’’ என்றாள். 

“பால்கி அப்பாவுக்கு ஆக்சிடன்ட் ஆயிருச்சாம். நான் லன்ச் பேக் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன். இப்போ தான் போன் வந்தது. வீட்ல கார்த்திக் இல்லையா…?” என்றான். 

‘அப்பாவுக்கு என்ன ஆச்சு. மம்மியும் கூட தானே இருந்து இருப்பாங்க. நீங்க உடனே எங்க கார்த்தி அண்ணாவுக்கு கால் பண்ணுங்க.’’ என்றவளின் விழிகளில் உடனே நீர் கோர்த்து. 

“உங்க அண்ணா லைன் ரீச் ஆகல. ஜி.எச் கூட்டிட்டு போறதா 108 அம்பூலன்ஸ் ட்ரைவர் சொன்னாரு. சரி இப்போ நான் தனியா போகவா இல்ல நீயும் வறியா…?’’ என்றான் திரு. 

‘டூ மினிட்ஸ். ட்ரெஸ் மட்டும் சேஞ் செஞ்சிட்டு வந்துடுறேன்.’’ என்றவள் சென்ற இரண்டு நொடிகளில் திரும்பி இருந்தாள். கையில் அகப்பட்ட உடைகளை அணிந்து, முகத்தில் லேசாக நீர் ஊற்றி கழுவி விட்டு அப்படியே கிளம்பியிருந்தாள். 

“கால் டாக்சிக்கு கூப்பிடவா…?’’ என கேட்கும் போதே, திரு தன் வாகனத்தை உயிர்ப்பித்து கிளம்பும் அறிகுறியாய் முறுக்கிக் கொண்டிருந்தான். வேறு வழி இல்லாத மித்ரா அவன் பின்னால் சென்று அமர்ந்தாள். 

அவள் அமர்ந்தது தான் தாமதம். வாகனம் மின்னல் வேகத்தில் கிளம்பியது. மித்ரா சற்றே பயந்து தனக்கு பின்னால் இருந்த கம்பியை இறுக பற்றிக் கொண்டாள். அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் முன் வாகனத்தை நிறுத்தியவன், “வா… உள்ள போய் பார்க்கலாம்.’’ என சொல்லிவிட்டு முன்னால் அதி வேகமாய் நடந்தான். 

அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, மித்ரா கிட்டத்தட்ட அவன் பின்னால் ஓடினாள். இவர்கள் உள்ளே நுழையும் போது அந்த இடமே களேபரமாக இருந்தது. காலையில் இரு பேருந்துகள் மோதிக் கொண்டதில் பெரும் விபத்து என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர். 

அனைவரும் பரபரப்பாக இயங்க, திரு கூட்டத்தில் தன் பால்கி அப்பாவை தேடிக் கொண்டிருந்தான். மித்ரா அங்கிருந்த சூழல் கண்டு மிரண்டு போனாள். அங்காங்கே சிதறி இருந்த இரத்தம், ரத்தம் உறைந்த பஞ்சுகள் என்று பார்ப்பதற்கே அந்த காட்சிகள் அவளுக்கு ஒவ்வாமையை தந்தது. 

வெள்ளை அங்கி அணிந்த பயிற்சி மருத்துவர்கள், கையுறை அணிந்த கரங்களோடு பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு, செவிலியர்கள், செவிலிய மாணவிகள் மற்றும் இதர துறை மருத்துவ ஊழியர்கள் பம்பரமாய் சுழன்று நிலையை சமாளிக்க முயன்று கொண்டிருந்தனர். 

தன் துப்பட்டாவை கொண்டு மூக்கை மூடிக் கொண்ட மித்து, ஒவ்வொரு கட்டிலாக தன் தந்தையை தேடி வர, ஒரு நோயாளி ரத்தமாக வாந்தி எடுத்தார். மித்து பதறி அங்கிருந்து விலக முயல, அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒரு கோப்பையை அவர் முன் நீட்டி, அவர் இலகுவாக வாந்தி எடுக்க உதவினார். 

அவளின் முகத்தில் ஒவ்வாமையை கண்ட பயிற்சி மருத்துவர், “யாரை தேடி வந்து இருக்கீங்க…?’’ என்றார். அவள் சிறு குழந்தை போல விழிக்க, கட்டிலின் மறுபக்கம் நின்று கொண்டிருந்த திரு, “பாலகுமரன்” என்றான். 

‘அப்படி யாரும் இங்க அட்மிட் ஆன மாதிரி தெரியலையே. எதுக்கும் நீங்க மெடிகல் கேசுவாலிடிலயும்  செக் பண்ணிடுங்க. கேஸ் அதிகமா இருக்குன்னு, ஸ்டேபிலா இருக்க கேஸ் எல்லாம் அங்க தான் ஷிபிட் செஞ்சாங்க.’’ என்றார் மருத்துவர். 

“தாங்க்ஸ் மேடம்.’’ என்றவன் மித்துவை அழைத்து கொண்டு, அவர்கள் சொன்ன பகுதி நோக்கி விரைந்தான்.  அந்த பகுதி அவசர சிகிச்சை பிரிவை விட மோசமாக இருந்தது. அங்கிருந்த நோயாளிகளின் வாயில் மூக்கில் எல்லாம் டியூப்களை மாட்டி வைத்திருந்தார்கள். 

மூக்கில் மாட்டி இருந்த டியூபில் இருந்து பச்சை நிற திரவம் வடிந்த படி இருக்க, இங்கு வெள்ளை அங்கி அணிந்த பயிற்சி மருத்துவர், வாய் வழியே இருந்த டியூபில் மற்றொரு டியூபை இணைந்து சளியை எல்லாம் வெளியே எடுத்துக் கொண்டிருந்தார். 

திரு அங்கு சென்றும் விசாரிக்க, அங்கும் அப்படி ஒரு நோயாளி அனுமதிக்கப்படவில்லை என்ற பதிலே கிடைத்தது. “இன்னொரு வார்ட் சொல்லி இருக்காங்க.வா… அங்க போய் பார்த்துட்டு வந்துடலாம்.’’ என அழைத்தான். 

உடனே மித்து, “நான் எங்கயும் வரல. ப்ளீஸ்…. என்னை வீட்ல கொண்டு போய் விட்ருங்க. எனக்கு பயமா இருக்கு.’’ என்று அழவே தொடங்கி இருந்தாள் மித்து. 

அவள் அழுகையில் பத்தொன்பது வயது பருவ மங்கை என்பது மாறி, ஐந்து வயது குழந்தையாக திருவிற்கு தெரிந்தாள் மித்து. ஆனாலும் நேற்றைக்கு அவன் அலைபேசியில் கண்ட விஷயங்கள், அவனை இளக விடாமல் தடுத்தது. 

“மித்ரா…! இந்த நீட் எக்ஸாம் கிளியர் செஞ்சா நீயும் அடுத்த டாக்டர். அப்போ தினம் இது மாதிரி நூறு கேஸ் நீ ஹேண்டில் செய்யணும். குழந்தை மாதிரி பிகேவ் செய்யாம ஒழுங்கா என் கூட வா.’’ என்று அதட்டியவன், அவள் பின்னால் வருகிறாளா என்று கூட பார்க்காது முன்னால் நடந்தான். 

மித்து வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்து ஓடினாள். அடுத்து அவர்கள் எலும்பு முருவு சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்தனர். அங்கே எலும்பில் எல்லாம் கம்பிகளால் துளை போட்டு கால்களையும், கைகளையும் தொங்க விட்டு இருந்தனர். 

இவர்கள் சென்ற நேரம், பயிற்சி மருத்துவர் ஒருவர், நோயாளியின் காலில் இருந்த கட்டுகளை அவிழ்த்து கொண்டிருந்தார். கட்டுகள் பிரிக்கப்பட்டதும் கால் முழுக்க புரையோடி , எலும்புகளே வெளியே தெரியும் அளவிற்கு சீழும், இரத்தக் களறியுமாக இருந்தது அந்த நோயாளியின் கால். 

இம்முறை மித்ரா என்ன முயன்றும் முடியாமல், அவசரமாக வெளியே ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். அங்கும் பால்கி இல்லை என்பதை விசாரித்த பிறகே திரு வெளியே வந்தான். வாந்தி எடுத்ததற்கும் ஏதோ திட்டப் போகிறான் என நினைத்த மித்ரா அழுகையை அடக்கியபடி நின்றிருந்தாள். 

“அப்பா எங்க இருக்கார்….’’ என்றாள் திக்கி திணறி. “வா… சொல்றேன்.’’ என்றவன் தன் வாகனத்தை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தான். மித்ரா அங்கிருந்து கிளம்பினால் போதும் என அவன் பின்னால் ஏற்க குறைய ஓடினாள். 

அவன் வண்டியை கிளப்பியதும் பாய்ந்து சென்று அவன் பின்னால் அமர்ந்து கொண்டாள். வண்டியின் வேகத்தில் முகத்தில் மோதிய குளிர் காற்று அவளை அமைதியடைய செய்தது. வண்டி கிளம்பி சிறிது நேரம் கழித்தே வேறு ஏதோ பாதையில் செல்வதை உணர்ந்தவள், “இப்ப எங்க போறோம். இது எங்க வீட்டுக்கு போற ரூட் இல்லையே.’’ என்றாள். 

“பால்கிப்பா இருக்க இடம் தெரிஞ்சிடுச்சு. அங்க தான் போறோம்.’’ என்றான். அவனின் இறுகிய குரல் அவளை மேலும் கேள்விகள் கேட்க விடாமல் தடுத்தது. இம்முறை திரு தன் வாகனத்தை நிறுத்திய இடம் அழகிய நந்தவனம் போல இருந்தது. 

“இங்க…எதுக்கு…’’ என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது தான் அங்கிருந்த ‘ராஜரத்தினம் மனநல மருத்துவர்.’ என்ற பெயர்ப் பலகையை கண்டாள். குழப்பத்தில் முகம் சுருங்க, “இங்க எதுக்கு…’’ என்று அவள் கேட்கும் போதே, திரு உள்ளே நடந்துவிட்டிருந்தான். 

Advertisement