கார்த்திக் மிக நிதானமாக, “சரி டம்மி டீம் போட்டுக்கலாம். டீமுக்கு நாலு பேர் போதும் இல்லையா. மித்து நீ, நான்,மம்மி, டாடி ஒரு டீம். திரு, இன்பன், புகழ், பிருந்தா ஒரு டீம். டென் ஓவர். ஒரே மேட்ச். அப்புறம் உங்க கல்யாணம்.’’ என்றான் மித்ராவிடம்.
அதுவரை சிரித்து கொண்டிருந்த பிருந்தா பதட்டமானாள். “என்ன எதுக்கு இந்த வம்புல இழுக்குறீங்க. எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது.’’ என்றாள். அது திருவிற்கு தெரியும் என்றாலும், இன்பனும், புகழும் ஓரளவிற்கு விளையாடுவார்கள், திரு கொஞ்சம் முட்டு கொடுத்தால் பிருந்தாவை பீல்டிங்கில் நிற்க வைக்க கார்த்திக் எண்ணியிருந்தான்.
“என் பொண்டாட்டி பொசுக்குன்னு இப்படி சொன்ன அது எனக்கு கேவலம். நீ பீல்ட்ல நில்லு அது போதும். உன் அண்ணனும், மச்சானுங்களும் எல்லாம் பார்த்துப்பாங்க.’’ என்றான். “சுத்தம்’’ என தலையில் அடித்துக் கொண்ட பிருந்தா கணவனை முறைத்தாள்.
அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு திரு கிளம்பும் வரை மித்ரா தன் அறைக்குள் அடைந்து கொண்டாள். தங்கையின் வீம்பு கார்த்திக்கிற்கு கவலை அளித்தாலும், அடுத்த நாள் காலை அவனோடு, புகழ், மற்றும் இனியனையும் வலை பயிற்சிக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தே அனுப்பி வைத்தான்.
அடுத்த நாள் காலை, மைதானத்தில் திருவிற்கு கார்த்திக் வீசிய பந்துகள் அனைத்தும் நேராக ஸ்டெம்பை முத்தமிட கார்த்திக் தலையில் கை வைத்துக் கொண்டான். புகழ் ஏதோ பந்துகளை தடுத்தாடினான்.
இன்பன் இருவருக்கும் மேல் தடுமாறினான். “டேய்…! இப்படி விளையாடினா என் தங்கச்சி கல்யாணம் எப்படி நடக்கும்டா…” என கார்த்திக் நொந்து போனான். மூவரும் அவனை பார்த்து அசடு வழிய, மட்டைப் பந்தின் அடி முதல் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினான்.
முதலில் இறுக்கமாய் தொடங்கிய அவர்கள் உறவு, மெல்ல மெல்ல இளகி, பின் மாமன் மச்சான் உறவு கடந்து இயல்பாய் நண்பர்களாகி போயினர். தினம் காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும், கார்த்திக்கோடு கழிக்கும் அந்த மைதான நொடிகளை மூவரும் மிக விரும்பினர்.
சின்ன சின்ன சீண்டல், கேலி கிண்டல் என தினமும் அவர்கள் உறவு சீராக வளர தொடங்கியது. திரு பந்தை தடுத்தாள கற்கவே மூன்று நாட்கள் எடுத்து கொண்டான். முதல் பந்து அவன் மட்டையை சீண்டி போக, அவன் உற்சாக கூக் குரலில் முழு மைதானமும் அதிர்ந்தது.
தான் எண்ணிய அளவிற்கு மட்டைப் பந்து விளையாட்டு அத்தனை எளிதல்ல என்பதை திரு உணர்ந்து கொண்டான். அவர்கள் விருது வாங்கும் நிகழ்வின் இரு நாட்களுக்கு முன் வந்த ஞாயிற்று கிழமை ஒன்றில் இரு குடும்பங்களுக்கும் இடையேயான போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற திரு அணி பீல்டிங்கை தேர்ந்தெடுக்க, இறுதி நேரத்தில் பிருந்தா போட்டியில் இருந்து விலகி அவளுக்கு பதில் அவளின் தந்தை மாரிமுத்து களத்தில் குதித்தார். பால்கியும், மதுராவும் விட்டு கொடுத்து ஆட ஏற்கனவே முடிவு செய்திருந்ததில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் அவர்களுக்கு பின் களம் இறங்கிய மித்ரா அனுபவமற்ற மூவரின் பந்துகளையும் பவுண்டரிகளாய் விளாசி தள்ளிக் கொண்டிருந்தாள். திரு ஓடி ஓடி பந்தை எடுத்து வர, அவனை பார்த்து கேலியாய் புருவம் உயர்த்தினாள்.
தான் அவுட் ஆனால் தான் திருவின் அணி தப்பிக்கும் என்று உணர்ந்த கார்த்திக், வேண்டும் என்றே கேட்ச் கொடுக்க முனைய, அதையும் தவறவிட்டு திருவின் அணி சொதப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாய் எட்டாம் ஓவரில்கார்த்திக் வேண்டும் என்றே மெதுவாய் நடந்து ரன் எடுக்க, அந்த இடைவெளியில் திருவின் அணி அவனின் விக்கட்டை தட்டி தூக்கினர். அதில் கடுப்பான மித்ரா, கையில் இருந்த மட்டைப் பந்தால் தமையனின் முதுகில் ஒரு அடி போட்டு விட்டே களம் நீங்கினாள்.
அப்படியும் கார்த்திக்கின் அணி மொத்தமாய் அறுபது ரன்களை எடுத்திருந்தது. அந்த இமாலய சாதனையை எப்படி எட்டி பிடிக்கப் போகிறோம் என திருவின் அணி பீதியில் இருந்தது. திருவின் அணி களம் இறங்கும் முன், அவர்களை தனிமையில் சந்தித்த கார்த்திக், “என் தங்கச்சி கல்யாணம் உங்க கைல தாண்டா இருக்கு. நான் ஆப் ஸ்பின்னிங் தான் போடுவேன். அடிச்சி ஆடுங்க.’’ என அவர்களுக்கு தைரியம் கொடுத்துவிட்டு வந்தான்.
அவன் பதட்டத்தை கண்ட திருவிற்கு பதட்டம் தொற்றியது. முதல் இரண்டு ஓவரிலேயே இன்பனும், புகழும் ஆட்டம் இழந்தனர். இத்தனைக்கும் முதல் இரு ஓவரில் பால்கி தான் பந்து வீசியிருந்தார்.
அவர் ஏதோ உலக கோப்பையில் எதிரணியை எதிர்த்து ஆடியவர் போல, விக்கட் விழும் போதெல்லாம் மனைவிடம் ஹைபை கொடுப்பதும், மகளை தூக்கி சுற்றுவதும் என அலப்பறை செய்து கொண்டிருக்க, கார்த்திக் மொத்தமாய் நொந்து போனான்.
‘கால காலத்துல பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி பேரன் பேத்தியோட விளையாட வேண்டிய டிக்கட்டை எல்லாம் கிரிக்கெட் விளையாட கூட்டிட்டு வந்தது என் தப்பு’ என கார்த்திக் தலையில் அடித்து கொள்ள, திருவும் அவன் எண்ணத்தை பிரதிபலிப்பவன் போல அவனை பார்த்து வைத்தான்.
அடுத்து திரு பேட்டிங் செய்ய வர முன்னெச்சரிக்கையாய் தான் பந்து வீச முன் வந்தான். திரு அவுட் ஆக வில்லையே தவிர, பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. கார்த்திக் வீசிய ஒரு ஓவரில் ஏதோ அரை குறையாய் ஓடி நான்கு ரன்கள் எடுத்திருந்தான்.
அடுத்து மாரி பேட்டிங் செய்ய வர, மித்ரா தான் பந்து வீச முன் வந்தாள். ‘போச்சு. எல்லாம் முடிஞ்சது. இனி அடுத்த சான்ஸ் கேட்டு போட்டி நடத்தினா தான் உண்டு.’ என கார்த்திக் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க, மித்ரா வீசிய பந்து அவன் தலைக்கு மேலே பறந்து, அப்போட்டியின் முதல் ஆறாக பதிவாகியது.
வெளியே நின்று கொண்டிருந்த இன்பனும், புகழும், “ஹே..’’ என கூச்சலிட, கார்த்திக், ‘என்னடா நடக்குது இங்க’ என அதிர்ந்து போய் தன் மாமனாரை பார்த்தான். முதல் பந்தில் ஏதோ அதிர்ஷ்டம் என எண்ணிய மித்ரா அடுத்த முறை பந்தை இன்னும் கவனமாக வீச, அந்த பந்து பவுண்டரியை கடந்து நான்கை அள்ளி வந்தது.
மொத்தமாக அந்த ஓவரின் முடிவில் முப்பத்தி இரண்டு ரன்களை எடுத்தவரை கார்த்திகே வாயை பிளந்து ஆச்சர்யத்துடன் பார்த்தான். “கிராமத்து டீம் கேப்டன் தம்பி. நாலு தடவை கப்பு செயிச்சி இருக்கோம்.’’ என்றார் காவி பற்களை காட்டி.
அடுத்து திருவின் முறை வந்த போது ஒற்றை ரன் எடுத்து, மீண்டும் பந்து வீச்சை எதிர் கொள்ள தந்தையை நிற்க வைத்தான் திரு. அடுத்த ஆறு பந்தில் மொத்த ஆட்டத்தையும் முடித்து வைத்து, மகனின் திருமணத்தை உறுதி செய்தார் மாரிமுத்து.
மித்ராவை தவிர அனைவரும், ‘ஹே..’ என்ற கூக்குரலோடு மாரியை நோக்கி ஓடினர். தாங்கள் தோற்றோம் என்ற எண்ணம் சிறிதுமின்றி கார்த்திக் மாமனாரை தோளின் மேல் தூக்க, இன்பனும், புகழும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டனர்.
வாழ்வில் தன்னை முதன் முறியாக பெருமையாய் நோக்கும் மகனை கண்ட மாரியின் கண்கள் லேசாக கலங்கி கூட போயின. பிருந்தாவின் மடியில் அமர்ந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த ஆதாரா கூட கைகளை தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
மித்ரா கண்களை உருட்டிவிட்டு, உடைமாற்றும் அறையை நோக்கி நடந்தாள். திரு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மித்ராவை பின் தொடர்ந்தான். அவள் அறையை மூடும் முன், அறைக்குள் நுழைந்தவன், கதவை அடைத்து அதில் சாய்ந்து நின்றான்.
அவனை உறுத்து பார்த்த மித்ரா, “என்ன வேணும் உங்களுக்கு?’’ என்றாள் கைகளை உடம்போடு கட்டியபடி. இரண்டு வினாடிகள் அவளை உற்றுப் பார்த்தவன், “உன்கிட்ட மன்னிப்பு கேக்குறதை விட உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு நிரூபிச்சாலே போதும்னு நினச்சேன். நான் சொல்ற ஐ லவ் யூவை விட நான் சொல்ற சாரி தான் உனக்கு பிடிக்கும்னா… இந்த ஒட்டு மொத்த உலகத்துக்கும் முன்னாடி கூட நான் உங்க அண்ணன்கிட்ட சாரி சொல்றேன் மித்து. ப்ளீஸ்…! நீ இல்லாத என் வாழ்க்கை உயிர்ப்போட இல்ல… வெறும் உடம்போட வாழ்றது எவ்ளோ நரகம் தெரியுமா?’’ என்றான் அடைத்து போன குரலில்.
“ஓ…சரி. குட். கேக்க சந்தோசமா தான் இருக்கு. உயிர், உடம்பு எதுகை மோனை எல்லாம் கூட அருமையா இருக்கு. நான் ஒரு உதராணம் சொல்றேன். ஒத்துக்க முடியுதா சொல்லுங்க. இதே எங்க அண்ணன் பேமஸ் கிரிக்கெட்டர்னு உங்க தங்கச்சி அவனை செட் யூஸ் செஞ்சி, அவனை கல்யாணம் செஞ்சிக்கணும்னு அவனுக்கே தெரியாம ட்ரக்ஸ் கொடுத்து அவனை ரேப் செஞ்சிட்டான்னு சொன்னா…’’ மித்ரா வார்த்தைகளை முடிக்கும் முன் திரு, “வாயை மூடு…’’ என்றபடி தன் கைகளை ஓங்கி இருந்தான்.