பால்வெளி – 26

திரு கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கண் கலங்குவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். அவன் கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத சம்பவங்கள் தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு முன் தன் முன் வந்து நின்றவன், ‘இப்போ நான் திருப்பி கொடுக்க வந்திருக்கிறேன்.’ என்று சொன்ன போது தன்னை காயப்படுத்தவே வந்திருக்கிறான் என நினைத்தவன், உடலோடு உள்ளத்தையும் இறுக்கிக் கொண்டு, வார்த்தை தாக்குதலுக்கு தயாரானான்.

ஆனால் அவன் முன் வந்து அமர்ந்தவன், சற்றே கரகரத்த குரலில், “சாரி. வெரி சாரி திரு. என்னோட தப்பால தான் நீங்க உங்க தங்கச்சி கூட பேசுறது இல்ல. எல்லாமே என் தப்பு தான். அன்னைக்கு நான் ஒரு ரெஸ்பான்சிபில் அடல்ட்டா நடந்து இருந்து இருந்தா யாருக்கும் எந்த பிரச்னையும் வந்து இருக்காது. இட்ஸ் ஸ்பாயில்ஸ் எவ்ரிதிங்.’’ என்றான் மனம் வருந்தி.

தவறு முழுக்க தன் மீதிருந்தும், தான் மன்னிப்பு கேட்கும் கார்த்திக் திருவின் மனதில் உயர்ந்து நின்றான். மறுவார்த்தை சொல்ல முடியாமல் திரு உறைய, “உங்க தங்கச்சியோட சேர்த்து என் தங்கச்சியையும் உங்ககிட்ட திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.’’ என்றான் புன்னகையோடு.

அவன் ஒற்றை புன்னகையில் அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுத்தமும் ஒரே நொடியில் விடை பெற, கார்த்திக்கை நெருங்கி அணைத்தவன், அவன் தோளில் முகம் புதைத்து, “சாரி…! எல்லாமே என்னால தான். நான் தான் ரொம்ப தப்பு தப்பா பேசி எல்லாரையும் ஹர்ட் செஞ்சிட்டேன். ஐயம் சாரி கார்த்திக். ட்ரூலி ரியலி சாரி. இந்த பனிஷ்மென்ட் எனக்கு தேவை தான்.’’ என்றவனின் கண்களிலிருந்து இரு பெரிய நீர் திவலைகள் உருண்டு கார்த்திக்கின் தோள் நனைத்தது.

எத்தனை நேரம் அந்த கணங்கள் நீண்டதோ, “அப்போ நான் ரெண்டாவது குழந்தை பெத்துகவா திரு.’’ என்று கார்த்திக் கேட்கவும், சற்று நேரம் அவன் பேச்சின் பொருள் புரியாதவன் அது புரிந்ததும், ‘இவன் நம்மிடம் விளையாடுகிறானா?’ என்பதை போல அவன் முகம் பார்த்தான்.

கண் ஓரங்கள் சுருங்க அவன் தன் சிரிப்பை அடக்குவதை கார்த்திக்கின் உடல்மொழி காட்டிக் கொடுத்தது. கன்னங்கள் சூடேற, “இதெல்லாம் ஏன் என்கிட்டே கேக்குறீங்க?’’ என்றான் திரு வெளிப்பட துடித்த வெட்கத்தை அடக்கும் வகை அறியாமல்.

“இல்ல உங்களுக்கு தெரியாம இனி எங்க வாழ்க்கையில எந்த சம்பவமும் நான் செய்றதா இல்ல. இங்க இருந்து வீட்டுக்கு போனதும், உங்க தங்கச்சிய கட்டி புடிச்சு அழுத்தமா ஒரு லிப் லாக் கொடுக்க போறேன். அதான் நீங்களே பர்மிசன் கொடுத்தாச்சே… அப்புறம்.’’ கார்த்திக் மேலும் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ, அதற்குள் அவன் வாயை தன் கை கொண்டு பொத்திய திரு, “நான் தான் சாரி சொல்லிட்டேனே.’’ என்றான் பாவமாய்.

அவன் கரங்களில் இருந்து தன் வாயை விடுவித்துக் கொண்ட கார்த்திக், “ஓகே. உங்களை நான் மன்னிசிடுறேன். ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி என் தங்கச்சி கூட மேரேஜ் நடந்தாலும் ஆறு மாசம் உங்களுக்கு பஸ்ட் நைட் கிடையாது. அப்புறம் நீங்க ரெண்டு பேர் வெளிய எங்க போனாலும் நானும் கூட வருவேன்.’’ என்றான் கட்டளை போல.

“முதல்ல கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் உங்க கண்டிசனை எல்லாம் சொல்லுங்க.’’ என்றான் திரு விரக்தியாய். “அது எப்படி நடக்காம போகும். அதெல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கும். நான் சொல்றதை மட்டும் அப்படியே செய்யுங்க.’’ என்றவன் திருவின் காதலின் அடிப்படை ரகசியங்கள் பகிர்ந்தான்.

அன்றைக்கு மாலை பால்கியின் மொத்த குடும்பமும், எழுத்தாளர் அமைப்பில் நடக்க இருந்த பாராட்டு விழாவிற்கு தயாராகி கொண்டிருந்தது. ஆதாரா உற்சாக பந்தாய் அவர்களுக்கு இடையில் துள்ளிக் கொண்டிருந்தாள்.

வாயிலில் வாகனம் வந்து நின்ற ஓசையில், “நானு…. நானு’’ என்றவள் குதித்து கொண்டு வாயிலை நோக்கி ஓடினாள். தன் வாகனத்தில் இருந்து இறங்கிய திருவை கடந்தும் அவள் தயங்கி நிற்க, வேகமாய் முன்னே நடந்து வந்தவன், கண்களில் திரண்ட சந்தோசக் கண்ணீருடன் மருமகளை நெஞ்சோடு அள்ளிக் கொண்டான்.

அவனை முதல் முறை பார்த்த தயக்கமே தவிர, புகைபடத்தின் உதவியால் அவன் அறிமுகம் முன்னமே ஆதிராவிற்கு கிடைத்திருந்ததில், மாமனின் கைகளில் பாந்தமாய் அமர்ந்து கொண்டாள் ஆதாரா.

வலது கையில் பூச்செண்டுடன் தயக்கமின்றி வீட்டிற்குள்  நுழைந்தவன், யாருடைய ஆச்சர்யப்பார்வையையும் பொருட்படுத்தாது, நேராக கார்த்திக் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி நடந்தான்.

கார்த்திக் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது திருவை பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்திக்கை நெருங்கியதும், கையில் குழந்தையோடு காதலியை திருமணத்திற்கு கேட்கும் காதலன் போல் முட்டி போட்டு அமர்ந்தவன், கையில் இருந்த பூச்செண்டை அவனை நோக்கி நீட்டி, “லவ் யூ கார்த்திக்’’ என்றான்.

சில நிமிடங்கள் திருவை குறுகுறுவென்று பார்த்த கார்த்திக், முழங்காலில் அமர்ந்திருந்தவனை எழுப்பி, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ டூ திரு.’’ என்றான். அப்பனின் செய்கையை பின்பற்றி, குட்டி மகளும் தன் மாமனின் கன்னத்தில் முத்ததிட்டு, “லவ் யூ…’’ என்று மழலையில் மிழற்றினாள்.

அவளின் செய்கையில் மற்ற இருவரும் பொங்கி சிரிக்க, பெண்கள் இருவரும் விழிவிரிய நடக்கும் சம்பவத்தை நம்ம இயலாது பார்த்துக் கொண்டிருந்தனர். பால்கி மகனின் எண்ணம் புரிந்தவராக முன்னால் ஓடி வந்து, திருவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “லவ் யூ திரு’’ என்றார்.

கன்னத்தை துடைத்து கொண்டவன், வெட்க சிரிப்போடு, “மீ டூ பால்கிப்பா’’ என்றான். மதுராவும் திருவை நெருங்கி அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “ரொம்ப சந்தோசம் திரு.’’ என்றார்.

கண்களில் நீர் தேங்க அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. நடையில் தயக்கம் இருந்தாலும், உறுதியான மனதோடு தங்கையை நோக்கி நடந்தான் திரு. நெருங்கும் வரை தான் இருவருக்கும் தயக்கம்.

அண்ணன் தன்னை நெருங்கியதும், பிருந்தா பாய்ந்து திருவை அணைத்துக் கொண்டாள். அவளின் வேகத்தில் திரு சற்றே தடுமாற,  கார்த்திக் மகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

“இந்த லவ் யூ சொல்ல உங்களுக்கு இவ்ளோ நாள் தேவைப்பட்டுச்சா.’’ என்று தேம்ப, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன், தங்கையின் நெற்றியில் ஆதுரமாய் இதழ் பதித்தான். “ஐ ரியலி மிஸ் யூ அண்ணா.’’ என்றவள் கண்ணீரோடு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

கரகரத்து போன குரலில், “நானும்’’ என்றவன் கண்கள் தாண்டிய வழிய துடித்த கண்ணீரை கடினப்பட்டு உள்ளுக்குள் இழுத்தான். ஒருவர் மற்றவர் அருகாமையில் ஆறுதலை தேட, கார்த்திக்கின் கனைப்பு குரல் திருவை நடப்பிற்கு திருப்பியது.

அப்போது தான் தனக்கு எதிரே முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது, தனக்கு நடக்கும் நிகழ்விற்கு யாதொரு சம்மந்தமும் இல்லை என்ற தொனியில் இறுகி நின்றிருந்த மித்ராவை கண்டான் திரு.

கார்த்திக் பிருந்தாவை மெதுவாய் தன் பக்கம் இழுக்க, திரு மித்ராவை நோக்கி நடக்க தொடங்கினான். தன் கைகளை உயர்த்தி அவனை நிறுத்திய மித்ரா, “உங்க கொஞ்சலை எல்லாம் உங்க மச்சானோட நிறுத்திக்கிறது நல்லது.’’ என்றாள் கடுமையாய்.

தன்னை சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்த்தவன், அடுத்த நொடி கொஞ்சமும் தயங்காது, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். “நான் தப்பு செஞ்சிட்டேன். நிறைய தப்பு செஞ்சிட்டேன் மித்து. என்னை கல்யாணம் செஞ்சி எனக்கு தண்டனை கொடு. தள்ளி வச்சு தண்டனை கொடுக்காத. ப்ளீஸ்…!’’ என்றான்.

அவனையே பார்த்தபடி நெருங்கி வந்தவள், “அப்ப என்னை கல்யாணம் செய்றது உங்களுக்கு தண்டனையா?’’ என்றாள் குரலில் இருந்த கடுமை மாறாமல். திரு என்ன பதில் சொல்வது என திகைத்து விழிக்கும் போதே, “லவ் யூ சொன்னா எல்லாம் மன்னிக்க முடியாது. வேணும்னா எங்க அண்ணா கூட ஒரு டென் ஓவர் கிரிகெட் விளையாடி ஜெயிச்சிட்டு வாங்க. அப்புறம் உங்களை மன்னிக்கிறதை பத்தி யோசிக்கிறேன்.’’ என்றாள்.

‘இப்ப இவ என்ன சொல்ல வறா.’’ என திரு குழம்பும் போதே, தன் நாத்தனாரின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட பிருந்தா பொங்கி சிரிக்க தொடங்கினாள். அவள் சிரிக்க தொடங்கிய பின்பே மதுராவிற்கும், பால்கிக்கும் கூட மித்ராவின் விளையாட்டு புரிந்தது.

கார்த்திக் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மச்சானுக்கு விட்டுக் கொடுத்துவிடலாம் என எளிதாக எண்ணிக் கொண்டான். பாவம் அவன் அறியவில்லை, கார்த்திக் மட்டைப் பந்து விளையாட்டில் மட்டையை சரியாக பிடிக்க கூட அறியாதவன் என்பதை.