அவர்கள் எதிர்பார்த்ததை விட மிசன் டூ மூன் திட்டம் வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.  எதிர்பார்த்த நான்கு ஆண்டுகளை விட, அதில் பாதியான இரண்டே ஆண்டுகளில் அவர்களின் அணி இலக்கை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது. 

அவர்களின் தேவைப் பட்டியல்கள் உடனுக்குடன் இந்திய அரசால் நிறைவேற்றப்பட துடிப்பான இளம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கொண்ட அணி மெல்ல மெல்ல நிலவை நேரில் ஆய்வதற்கு நெருங்கிக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு பயிற்சி முடிந்தது எனும் விதமாய் அலாரம் ஒலிக்க, அறையில் ஈர்ப்பு விசை இயல்பிற்கு திரும்பியது. வெளியேறி வந்த பிருந்தாவை மருத்துவ குழு பரிசோதித்தது. அனைத்தும் சரியாக இருக்கிறது என அறிவித்த மருத்துவக் குழு அவளை பாராட்டிவிட்டு கிளம்ப, அவள் குழுவினர் அவளை சூழ்ந்து கொண்டனர். 

அவர்களின் ஆரவார குரல் சற்று நேரம் அந்த இடத்தையே களை கட்ட வைத்தது. சில நிமிடங்களுக்கு பின் திட்டத்தின் முதன்மை அதிகாரி வரவும் அந்த இடம் அமைதியை தத்தெடுத்தது. 

அனைவரையும் ஒரு முறை ஆழமாய் பார்த்தவர், திட்டத்தின் அடுத்த படிக்கான வரைவு திட்டத்தை இந்த வாரத்திற்குள் குழுவினர் சமர்பிக்க வேண்டும் என்ற உத்தரவை கொடுத்துவிட்டு, குரலில் கடமை சற்றும் குறையாமல் பிருந்தாவை பாராட்டி விட்டு சென்றார்.    

தன் குழுவினரிடம் உற்சாகமாய் கை அசைத்து விடை பெற்ற பிருந்தா உடை மாற்றும் அறை நோக்கி நடந்தாள். பூண்டிருந்த எடை அதிகமான ஸ்பேஸ் சூட்டை களைந்து விட்டு, அவளின் வழமையான உடைக்கு மாறியவள், பெட்டக அறையில் இருந்த அந்த சிறிய நகையை பார்த்து அழகாய் புன்னகைத்தாள். 

இரண்டு நாட்களுக்கு முன் கார்த்திக் அனுப்பி வைத்த பரிசு அது. இன்றைக்கு பயிற்சி என்பதால், தன் வீட்டிலேயே தினம் வழமையாய் அணியும் ஆபரணங்களை கழற்றி வைத்து வந்திருந்தவள், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டை மட்டும் கழற்றாமல் வந்திருந்தாள். 

பயிற்சிக்கு செல்லும் முன் அதை கழற்றி வைக்கும் போது, சற்றே சங்கடமாக உணர்ந்தாள். கார்த்திக் கட்டிய தாலியை கழற்றி வைக்கும் போது கூட அவளை பெரிதாக எந்த உணர்வும் தாக்கவில்லை. 

இரு நாட்களுக்கு முன், ‘இன்று தரையில் நடக்கும், பின்னாளில் பறக்க இருக்கும் என் இதய நிலாவிற்கு’ என்ற வாழ்த்து செய்தியோடு அந்த பரிசை கார்த்திக் அனுப்பி இருந்தான். அவன் அப்போது ஹைதிராபாத்தில் இருந்தான். 

வெளியில் இருந்த கவிதையே பிருந்தாவை ஈர்த்துவிட, அவள் அந்த பரிசை மெதுவாக திறந்தாள். உள்ளே மெல்லிய பிரேஸ்லெட் இருந்தது. செயின் மெல்லிதாக இருக்க, அதிலிருந்து குட்டி குட்டி இதயங்கள் கீழ் நோக்கி தொங்குவதை போலவும், இடை இடையே சூரிய குடும்பத்தின் அத்தனை கோள்களும் ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து இருந்தது. 

இறுதியாய் கொக்கியை பொருத்தும் பகுதியில் பெண்ணொருத்தி விண்வெளி உடையில் இருப்பதை போல, மிக தத்ரூபமாய் அந்த அணிகலன் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை கண்டதும் பிருந்தாவின் உள்ளம் அவன் நேசத்தில் உருகிட, அவள் இதழ்கள் அவன் பெயரை மென்மையாய் உச்சரித்தது. 

அப்போதே அதை கையில் அணிந்து கொண்டவள், அதன் பிறகு அதை கழற்றி வைக்கவே இல்லை. இன்றைய பயிற்சியில் அதை அணிந்திருக்க முடியாது என தெரிந்து இருந்தாலும், உடை மாற்றும் நேரம் வரை, அதை அணிந்தே இருந்தாள்.  

 

தன் இலகு உடைக்கு மாறிய அடுத்த கணம், அந்த பிரேஸ்லெட்டை எடுத்து முதல் காரியமாய் அணிந்து கொண்டாள். தன் பொருட்களை எடுத்துக் கொண்டவள், அறையை விட்டு வெளியேற, எதிரே வந்த தான்யா, “நம்ம டீம்க்கு டிரீட் தரனும் மேம் நீங்க.’’ என்றாள் ஆங்கிலத்தில். 

“கண்டிப்பா. மிசன் முடியட்டும். டெல்லி தாஜ்க்கே போகலாம்.’’ என்றாள். அவள் அப்படி சொன்னதும், “நீங்க நம்ம ப்ரோக்ராம் ஹெட்டை விட ரொம்ப மோசம் போங்க.’’ என்றவள்  கண்களை சுருக்கி ஏமாற்றத்தை வெளிக்காட்ட, அவள் தலையில் லேசாக தட்டியவள், “வேலையைப் பாரு போ..’’ என்றுவிட்டு தன் குடியிருப்பு பகுதிக்கு சென்றாள். 

வீட்டை அடைந்ததும் கதவு லேசாக திறந்திருக்க, காலையில் பூட்டு விட்டு தானே சென்றோம், என்ற எண்ணத்தில் பிருந்தா கதவை முழுமையாக திறக்க, கதவின் மேலே ஏதோ ஒன்று டப் என வெடித்து அவளின் மீது பூ மழை பொழிந்தது. 

என்ன நடக்கிறது என அவள் உணரும் முன், நான்கு புறங்களில் இருந்ததும், “ஹாப்பி பர்த்டே மேம்… பிருந்தா…’’ என்ற குரல்கள் அவளை சூழ்ந்து கொள்ள, சில நொடிகள் கழித்து கண்களை திறந்தவளுக்கு தன் மொத்த குழுவும் அவளின் முன் நிற்க, அவர்களை ஆச்சர்யமாய் பார்த்தாள். 

அவர்களுக்கு எல்லாம் நடு நாயகமாய், கார்த்திக் நின்றிருந்தான். அவனை கண்ட பிருந்தாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அதற்குள் பிறந்த நாள் பாடலை அங்கிருந்த அனைவரும் உற்சாகமாக பாட, அவளின் அருகே வந்த கார்த்திக், அங்கிருந்த சிறிய மேஜையின் அருகே அவளை அழைத்து சென்றான். 

பாயும் விண்கலம் ஒன்றின் முகப்பில் பிருந்தாவின் முகம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த கேக்கில்,  நிலவில் நடக்க இருக்கும் என் பெண் நிலவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என  எழுதப்பட்டிருந்தது. 

“கார்த்திக்…’’ என்றவளின் குரல் உணர்ச்சி வேகத்தில் கரகரக்க, “இட்ஸ் யுவர் டே மை குவின்.’’ என்றவன், அவள் காதின் அருகே குனிந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள்.’’ என்றான். பிருந்தா லேசாக கலங்கிய விழிகளோடு, அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க, தான்யா கேக்கின் மீதிருந்த சிறிய மெழுகுவர்த்திகளை உயிர்பித்தாள்.

அனைவரையும் நோக்கி, “தாங்க யூ ஆல்…’’ என்றவள், மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க, அனைவரும் மீண்டும் ஒரு முறை, பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை பாடி முடித்தனர். அவள் முதல் துண்டை கையில் எடுத்து கார்த்திக்கிற்கு ஊட்ட, அந்த மகிழ்ச்சியான தருணத்தை ரத்தோட் அலைபேசியில் நிழற்படங்களாக சிறைபிடித்துக் கொண்டிருந்தார். 

அதன் பிறகு வந்திருந்த அனைவருக்கும் கேக் கொடுத்து, தான் வாங்கி வந்திருந்த கார வகைகளோடு குளிர் பானத்தையும் கார்த்திக் பரிமாற துவங்க, அவனோடு பிருந்தாவும் இணைந்து கொண்டாள். 

“மேம். நீங்க சரியான அழுத்தம் மேம். சார் தான் உங்க ஹப்பினு சொல்லவே இல்ல பாத்தீங்களா. அதுக்கு பனிஷ்மென்ட்டா எங்க எல்லாரையும் ப்ரீ டிக்கட்ல டி- ட்வண்டி வார்ல்ட் கப் மேட்ச் எங்க நடந்தாலும், அங்க நீங்க கூட்டிட்டு போகணும்.’’ என அறிவித்தாள். 

அவளின் குழுவினரும், “ஆமா… ஆமா… இந்த சின்ன ட்ரீட் எல்லாம் செல்லுபடியாகாது.’’ என கோரஸ் பாட, பிருந்தா, “அதெல்லாம் நீங்க உங்க கிரிக்கெட்டரை  தான் கேக்கணும்.’’ என நைசாக நழுவினாள். 

“நீங்க சொன்னா அதுக்கு அப்புறம் அங்க என்ன அப்பீல் இருக்க போகுது மேம்.’’ என்று குழுவில் இளையவனான தீபக் ஆங்கிலத்தில் அவளை கேலி செய்ய, ரத்தோட் தான், “போதும் போதும். அவரே கிடைச்ச ப்ரேக்ல அவர் வைப்பை பார்க்க வந்திருக்கார். அவங்களை தனியா விட்டுட்டு எல்லாரும் கிளம்பலாம். நம்ம டீம் ஹெட்டுக்கு வேற நாளைக்கு உண்டான செட் யூல் சப்மிட் செய்யணும். கமான் குவிக்.’’ என்று அங்கிருந்த அனைவரையும் கிளப்பி தான் ஒரு சீனியர் என்பதை நிரூபித்தார். 

தான்யா, “உங்க கடமை உணர்சிக்கு அளவே இல்லையா சார்.’’ என புலம்பினாலும், மற்ற குழுவினரோடு அவளும் கிளம்பினார். அவர்கள் அனைவரும் கிளம்பியதும், அந்த இடத்தில் ஒரு அழகான அமைதி சூழ்ந்தது. 

கார்த்திக் மென்மையான குரலில், “கோவமா…?’’ என்றான். பிருந்தா ‘எதற்கு?’ என்பதை போல அவனை பார்த்து வைக்க, “உங்க பர்மிசன் இல்லாம நீங்க தான் என் வைப்னு சொல்லிட்டேன் இல்ல அதுக்கு.” என்றான் தயங்கியபடி. 

அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “உங்க குவாட்டர்ஸ்க்குள்ள பேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான் அலவ்டுன்னு சொன்னாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு உங்க பர்த்டே டேட் தெரிஞ்சிகிட்டேன்.  சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அவங்க அப்படி சொன்னதும் எனக்கு வேற வழி தெரியல. அதான் நான் உங்க ஹஸ்பன்ட் தான்னு சொல்லி உள்ள வந்தேன்.’’ என்றான். 

குரலில் லேசான தயக்கம் இருந்த போதும், அதில் இருந்த மகிழ்வை இனம் கண்டவள், “நான் கட் பண்ற பஸ்ட் பர்த் டே கேக். தாங்யூ கார்த்திக்.’’ என்றாள் உளமாற. கார்த்திக் அதிர்ந்து போய் அவளை பார்த்தான். 

“சின்ன வயசுல கேக் கட் பண்ணி பர்த்டே செலிபிரேட் செய்ய நிறைய ஆசைப்பட்டு இருக்கேன். ஆனா அப்ப இருந்த எங்க பொருளாதார சூழல் அதுக்கு இடம் கொடுத்தது இல்ல.’’ என்றவள் மேஜை மீதிருந்த சிறிய  துண்டாக்கி சுவைக்க, கார்த்திக்கின் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது.                 

   

“அதுக்கு அப்புறம் காலேஜ் வந்ததுக்கு அப்புறம் பிரண்ட்ஸ் எல்லாரும் பர்த்டே பார்ட்டின்னு என்ஜாய் செய்யும் போது பெருசா எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இருந்ததே இல்ல.’’ என்றவள் க்ரீம் ஒட்டி இருந்த தன் விரல்களை அருகிலிருந்த திசு பேப்பர் கொண்டு துடைக்க முயன்றாள். 

அவள் பேச ஆரம்பித்த கணத்திலிருந்து, அவள் மீதிருந்த பார்வையை அகற்றாதிருந்தவன் மனத்திரையில் சிறு வயதிலிருந்தே வருடா வருடம் திருவிழா போல கொண்டாடப்பட்டு வந்த அவன் பிறந்த நாட்கள் கண் முன் வந்து போயின. 

அவளின் ஏக்கம் நிறைந்த குழந்தைப் பருவம் இதயத்தில் அவனுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க,  பிருந்தாவை நெருங்கியவன், இனிப்புகள் பூசியிருந்த அவள் விரல்களை தன் இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டான். 

பிருந்தா திகைத்து போய் அவனைப் பார்க்க, “உங்களோட எல்லா பஸ்ட்டும் என்னோட தான் இருக்க போகுது மிசஸ் பிருந்தா கார்த்திக்.’’ என்றவன் அவள் திகைப்பில் இருந்து விடு படும் முன் அவள் இதழ்களில் அழுத்தமாய் தன் இதழ்களை பதித்தான். 

சில மணி நேரங்களுக்கு முன்னால், செயற்கையாய் ஒரு அறையில் பறந்து கொண்டிருந்த போது, ஏற்படாத மிதக்கும் உணர்வு, அவனின் ஒற்றை முத்தத்தில், ஹார்மோன்களின் வெள்ளப் பெருக்கில் கட்டவிழ, ஏதோ ஒரு பெயர் தெரியாத பால்வெளியில் மிதக்க தொடங்கினாள் பிருந்தா.

ஒவ்வொரு முறை விலகும் போதும், முன்பை விட அழுத்தமாகவும், ஆழமாகவும் பிணைந்து கொண்டனர் புதிதாய் இணைந்த கூட்டாளி இதழ்கள். இருபது நிமிடங்களுக்கு மேல் மோதிக் கொண்ட இதழ்கள், சமாதான உடன்படிக்கையில் மெல்ல கீழிறங்கி கழுத்து வளைவில் ஓய்வெடுக்க, பிருந்தா, “உங்களோட அமையப் போற எல்லா பஸ்ட்டும் இதே மாதிரி பெஸ்ட்டா இருக்குமா மிஸ்டர் கார்த்திக்.’’ என்றாள். 

அவள் குரலில் இருந்தது, மோகமா கேலியா என கண்டறிய முடியாத கார்த்திக், “ட்ரை செஞ்சி பார்த்துடலாம் மேம்.’’ என்றபடி தன் இதழ்களால் மெல்ல மெல்ல அவள் உடல் அளக்க துவங்கினான். 

சற்று நேரத்திற்கு முன் மிதந்து கொண்டிருந்த பால் வெளிகள், அவள் கண்களில் மின்னலாய் வெடித்து சிதற, இருவரும் பிரபஞ்ச பால்வெளியின் காதல் அடுக்கில் மெல்ல மெல்ல தொலைய தொடங்கினர். 

இவர்கள் தங்களை மறந்து காதல் உலகில் தொலைய, நானூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த இன்னொருதியோ தன் அலைபேசியில் சுமந்து வந்திருந்த செய்தியை நம்ப முடியாமல் நள்ளிரவிலும் விழித்திருந்தாள். 

பால்வெளி வளரும்.