அதிகாலையில் தன்னை காண வந்திருக்கும் நபர் யார் என்ற குழப்பத்தோடு திரு தன் அறையில் இருந்து வெளியே வர, தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அரவிந்தன் குடும்பத்தை கண்டவனின் ரத்த அழுத்தம் தாறு மாறாய் எகிற தொடங்கி இருந்தது.
முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன், “என்ன விஷயம்..?’’ என்றான் நேரடியாக. அரவிந்தனின் தாய் அருகில் இருந்த தன் கணவர் கணேசனை சுரண்ட, அவரோ சற்றே சங்கடமாய் நெளிந்தபடி, “உங்க வீட்டு பொண்ணோட சேட் எல்லாம் லீக் செஞ்சது என் பையன் இல்ல. அவனோட பிரண்ட். அவனுக்கே தெரியாம அவன் மொபைல்ல இருந்ததை எல்லாம் ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து இப்படி செஞ்சிட்டான் ராஸ்கல்.’’ என்றார்.
“அந்த விசயத்துக்காக கம்ப்ளைன்ட் கொடுக்குற எண்ணம் எங்களுக்கு இல்ல. எங்கு பொண்ணு அறியாத வயசுல பேசின விசயத்தை எல்லாம் நாங்க பெருசா எடுத்துக்கிறது இல்ல.’’ என்றான் திரு.
அடுத்து எப்படி பேசுவது என அவர் விழிக்க, அவரின் அருகில் இருந்த அரவிந்தனின் தாய் மேகலா, “எங்களுக்கும் அதே தான். சின்ன பசங்க அறியாத வயசுல தெரியாம செஞ்ச விஷயம் அது. நாங்களும் அதை அப்படியே கடந்து வந்திருப்போம். ஆனா… ரெண்டு பேர் பேரும் பொது வெளியில நாலு பேர் பேசுற பொருளா ஆகிடுச்சு. சின்ன வயசுலையே ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சி தானே இருந்தது. அதான் ரெண்டு பேருக்கும் மேரேஜ் பேசலாம்னு முடிவு எடுத்து இருக்கோம்.” என்றவர் கண்களால் தன் கணவரை பேசும்படி ஊக்கினார்.
மனைவியின் குறிப்பை உணர்ந்தவர், “என் பையனும் மெடிசன் முடிச்சிட்டு, பி.ஜி என்ட்ரன்ஸ் ப்ரிபேர் செஞ்சிட்டு இருக்கான். சேலம் சிட்டில இருக்க கண்மணி ஹாஸ்பிடல் எங்களோடது தான். வசதியிலயும் எங்களுக்கு எந்த குறையும் இல்ல. காலைல தான் உங்க மாமாகிட்ட இது விசயமா பேசினேன். அவர் தன் பொண்ணோட விருப்பம் தான் அவரோட விருப்பம்னு சொல்லிட்டார். அதான் என் மருமகளை நேர்ல பார்த்து விருப்பம் கேட்டுட்டு போக வந்து இருக்கோம்.’’ என்றார்.
மூவரையும் சற்று நேரம் அமைதியாய் பார்த்தவன், “மாமா உங்களை இங்க அனுப்பி வச்சாரா…?’’ என்றான் அழுத்தமாய். மூவரின் முகங்களும் சடுதியில் மாற, கணேசன், “இல்ல… அவர் கேட்டு சொல்றேன்னு தான் சொன்னார். அரவிந்த் பிரண்ட் இங்க கடலூர்ல தான் மெடிசன் பி.ஜி செஞ்சிட்டு இருக்கான். அவன் தான் மித்ரா உங்க வீட்ல தான் இருக்காங்கன்னு தகவல் சொன்னான். அதான் நாங்களே நேர்ல வந்து…’’ அவர் தான் பேச வந்ததை முடிக்கும் முன் திரு அவசரமாய் குறுக்கிட்டான்.
“நீங்க நேரா சேலத்துல இருக்க எங்க மாமா வீட்டுக்கு தான் போய் இருக்கணும். அதான் முறை. இங்க அவருக்கு தகவல் கூட சொல்லாம என்னோட இடத்துல வந்து நிக்கிறது சரி இல்ல.’’ என்று கடினக் குரலில் அறிவித்தான்.
அதிகாலையே எழுந்திருந்த மித்ரா, இவர்களின் பேச்சு வார்த்தையை தன் அறையின் சாளரத்தில் இருந்து கேட்டு கொண்டிருந்தாள். அரவிந்தன் முகத்தை கண்டதும், அவளும் பெருகிய கோபத்தை நேற்றைய நிகழ்வுகளை அசை போட்டு குறைத்தவள் நேராக சமையலறை சென்று மூவருக்கும் பழச்சாறு தயாரித்து கொண்டு வந்தாள்.
சரி கிளம்பலாம் என்று அரவிந்தனின் குடும்பம் முடிவெடுத்த நொடியில், கையில் ஏந்திய பழச்சாறு தட்டுடன் பிருந்தா வெளியே வந்தாள். “யாரு இப்போ இவளை வெளியே வர சொன்னது.’’ என்று திரு பல்லை கடிக்க, அவர்களை நோக்கி புன்னகை முகமாய் நடந்து வந்தாள்.
அவளின் முகத்தை கண்டதும், அரவிந்தனின் முகம் ஒரு செயற்கை பிரகாசத்தை தத்தெடுத்தது. அவனின் பெற்றோர்களும் அவளை நோக்கி வாஞ்சையாய் புன்னகைத்தனர். மூவரிடமும் ஆளுக்கு ஒரு கோப்பையை நீட்ட அவர்கள் அதை புன்னகை முகமாகவே பெற்றுக் கொண்டனர்.
“நல்லா இருக்கியா மித்ரா’’ என்று மேகலா பொதுவாக பேச்சு வார்த்தையை தொடங்க, அவரை பார்த்து பெரிதாக புன்னகைத்த மித்ரா, “ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி.’’ என்று விட்டு திருவின் அருகில் சென்று உரிமையோடு அமர்ந்தாள்.
அத்தனை நேரம் கல்லென இறுகி இருந்த திருவின் முகம், அவளின் அந்த செய்கையில் லேசாக இளகியது. “சொல்லுங்க ஆன்ட்டி. என்ன விசயமா என்னை பார்க்க வந்து இருக்கீங்க…?’’ என்றவள் தன் கரத்தை அருகிருந்த திருவின் கரத்தின் மீது வைத்தாள்.
அரவிந்தின் பார்வை அவளின் கரத்தின் மீதிருக்க, அவள் குரல் ஒலித்த தொனியில், இப்போது என்ன பேச என மேகலா தயங்க, திருவே, “உன்னை அரவிந்தனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்காங்க.’’ என்றான் குரலில் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல்.
“ஓ…அப்படியா.’’ என்றவள் அரவிந்தனை நோக்கி திரும்பி, “சரி அரவிந்த் என் வீடு தான் முதல் வீடா…. இல்ல அந்த ஜோஸ்பின், ரித்திகா, தேஜல் அங்க எல்லாம் போய் பொண்ணு கேட்டுட்டு கடைசியா இங்க வந்து இருகீங்களா..?’’ என்றாள்.
அரவிந்தனின் பெற்றோர் குழப்பமடைய, அவனின் முகமோ அவமானத்தில் கன்றி சிவந்தது. மேகலா, “நீ என்னமா சொல்ற?’’ என இவளிடம் கேட்க, “ஆன்ட்டி உங்க பையன் கூட சேட் செஞ்ச காரணத்துக்காக நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தா… எனக்கு முன்னாடி நான் சொன்ன பொண்ணுங்களை எல்லாம் பார்த்துட்டு தான் என்னை பார்க்க வந்து இருக்கணும். ஏன்னா மிஸ்டர் அரவிந்த் ஒரே நேரத்துல ஒரே மாதிரி மெசேஜை என்னோட சேர்த்து இன்னும் நாலு பொண்ணுங்களுக்கு அனுப்பி அவங்களையும் சின்சியரா லவ் செஞ்சிட்டு இருந்தார். இதெல்லாம் அவர் உங்களை இங்க கூட்டிட்டு வரும் போது சொல்லலையா…?’’ என்றாள் அப்பாவியாய்.
அரவிந்தனின் தந்தை அவனை, ‘என்ன இது என்பதை போல பார்க்க’ அவனின் தாயோ அவள் சொல்வதை நம்ப முடியாதவர் போல அவளை பார்த்தார். “என் பையன் அப்படிப்பட்டவன் கிடையாது.’’ என்றார் சற்றே கோபம் கூடிய குரலில்.
மித்ரா புன்னகை முகமாகவே, “ஆன்ட்டி…! என்கிட்ட கைமேல ஆதாரம் இருக்கு. இது டிஜிடல் உலகம். டாக்டரா இருக்க உங்களுக்கு நான் என்ன சொல்ல வறேன்னு புரியும்னு நினைக்கிறன். ஜஸ்ட் அவரோட பழைய நம்பர் இருந்தா போதும், அவர் போன் வாங்கின முதல் நாள் ஆரம்பிச்ச ஹாய் சேட்ல இருந்து எல்லாத்தையும் தோண்டி எடுக்க முடியும். எங்க மாமாவே கலெக்டர் தான். இவரோட சைபர் கிரைம் ஆபிசர்சை கூப்பிடலாமா…?’’ என்றாள்.
அரவிந்தனின் முகம் உடனே பயத்தில் வெளிறியது. நண்பன் ஏற்றி விட்டதால் பெருமளவில் பணமும், புகழும் கிடைக்கும் என்றே நம்பி மித்ராவை திருமணம் செய்து கொள்ள உத்தேசித்து இருந்தான்.
அவளுக்கு தன் மீது கோபம் இருக்கும் என எதிர்பார்த்திருந்தான். தற்சமயம் தானும் ஒரு மருத்துவன் என்பதால் அந்த கோபத்தை எப்படியேனும் கொஞ்சி கொஞ்சி சரிகட்டி, பிரபல கிரிக்கெட் வீரன் கார்த்திக்கின் மச்சானாக முடிவு செய்திருந்தான்.
ஆனால் மித்ரா தனது பழைய வண்டவாளங்கள் அத்தனையும் அறிந்து வைத்து, அதை தண்டவாளத்தில் ஏற்ற காத்திருப்பாள் என கொஞ்சம் கூட அவன் நினைத்து பார்த்திருக்கவில்லை.
அரவிந்தனின் முகம் வெளிறியதைகண்டு திருவிற்கு வெடித்து சிரிக்க வேண்டும் போல பேராவல் உந்தியது. இருக்கும் சூழல் கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால் எந்த சூழலும் மித்ராவை கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில் அவள் இதழில் இருந்த குறுநகை, முழு நகையாக மலர்ந்தது.
அதற்கு மேல் அந்த சூழலை சகிக்க முடியாத அரவிந்தின் தந்தை, “கிளம்பலாம்.’’ என வெளி நோக்கி நடக்க, அரவிந்தன் வேக வேகமாய் தந்தையை பின் தொடர்ந்தான். மித்ராவை வெறுப்புடன் பார்த்த மேகலாவும் தன் மகனை பின் தொடர்ந்தார்.
அவர்களின் வாகனம் கிளம்பியதும், திரு வெடித்து சிரித்தான். அவன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, “போதும் போதும் உங்க சிரிப்பு. என்னை பொண்ணு கேட்டு அவன் வந்தா இப்படித் தான் உக்காரவச்சி பேசிட்டு இருப்பீங்களா. மூஞ்சில ரெண்டு குத்து விட்டு ஓட விட வேண்டாம். உங்களுக்கு கொஞ்சம் கூட என் மேல பொசசிவ்னெஸ் இல்ல போங்க.’’ என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
அப்போதும் சிரிப்பதை நிறுத்தாதவன், “பொசசிவ்னஸ் லவ் இல்ல மித்து.’’ என்றுவிட்டு, அவள் முகத்தில் விழுந்த முடியை காதோரம் சொருகிவிட்டான். “ஆமா இவருக்கு பொசசிவ் இல்லாம தான் மூஞ்சி தோசைக்கல் மாதிரி கருத்து போச்சாக்கும்.’’ என்றவள் உதட்டை சுளித்தாள்.
“அது பொசசிவ் இல்ல. உன் மேல இருந்த அக்கறை. உன் உபசரிப்புக்கு அவங்க தகுதியானவங்க இல்ல. அதனால வந்த கோபம்.’’ என்றான் நிதானமாய். அவனை திரும்பி பார்த்தவள், “எல்லாத்துக்கு ஒரு பதில் வச்சி இருக்கீங்க. சரி நான் காலேஜ் கிளம்புறேன். எனக்கு ப்ரேக் பாஸ்ட் பேக் செஞ்சி வையுங்க.’’ என்றவள் தன் அறை நோக்கி நடந்தாள்.
“சரிங்க மேடம்.’’ என திரு சிரித்தபடி பவ்யமாக சொல்ல,அவனை திரும்பி பார்த்தவள், ஒரு அழகிய புன்னகையோடு தலையை குலுக்கி சென்றாள். அதே நேரம் அவன் அலைபேசி அழைக்க, அதை திரு ஏற்றதும், “சார்… அந்த பேக் ஐ.டி ஹோல்டர் நேம் மிஸ் மித்ரா.’’ என்றது மறுபக்க குரல்.
நடந்து செல்லும் அவளை யோசனை படிந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவன், “தாங்கயூ சிவா.’’ என்றான். கேள்விக்கு தான் எதிர்பார்த்த விடை தான் என்றாலும், தான் அறிந்த விடையை அவளுள் தேட முடிவெடுத்தவனின் புருவங்கள் சிந்தையில் வளைந்தது.
தனக்கான பயிற்சி அறையில் இருந்தாள் பிருந்தா. அந்த அறையில் செயற்கையாய் புவியின் ஈர்ப்பு விசையை குறைத்திருந்தனர். விண்வெளி வீரர்கள் அணியும் உடையை அணிந்திருந்தவள், காற்றில் லேசாக மிதந்து கொண்டிருந்தாள்.