பால் வீதி – 18 

ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே பெற்றவர்களுக்கு பெரிய ஆறுதலை அளித்தது. 

விசயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் பதறி உடனே தன் ஐ.பி.எல் தொடரை விட்டுவிட்டு வருவதாக துள்ள, அண்ணனின் மூலம் தகவல் அறிந்த பிருந்தா தான் விடுப்பு எடுத்து செல்வதாக கூறி அவனை போட்டியில் பங்கேற்க சொன்னாள். 

  

முதலில் மறுத்த கார்த்திக், அவளின் தொடர் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டான். மருத்துவமனையை அடைந்த பிருந்தா, அவன் தங்கையின் உடல்நிலையை மணிக்கொரு தரம் தரவாக கொடுத்துக் கொண்டிருந்தாள். 

“நான் நல்லா இருக்கேன் அண்ணா’’ என்ற தன்கையின் வார்த்தைகளை அலைபேசியில் கேட்ட பின்பு தான் கார்த்தியால் இயல்பாக மூச்சே விட முடிந்தது. “ஏன்டி…’’ என உதடு வரை வந்துவிட்ட கேள்வியை, அவளின் மனநிலை கருதி, தவிர்த்துவிட்டவன், “எப்பவும் நான் உன் கூட தான் இருப்பேன் மித்து.’’ என்றான் குரலில் கரகரப்போடு. 

தற்சமயம் அனைவரும் திருவின் ஆட்சியர் மாளிகையில் தான் தங்கியிருந்தனர். முதல் இரண்டு நாட்கள், செயற்கை சுவாசக் கருவியோடு அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவள், அதன் பின் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு, சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டாள். 

அவள் மருத்துவமனையில் இருந்த ஐந்து நாட்களும், பிருந்தா தான் மித்ராவை கவனித்து  கொண்டாள். இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் பிருந்தா தன் அருகில் இருப்பதை ஆறுதலாக உணர்ந்தாள் மித்ரா. 

தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் அமர்ந்து, சாளரத்தின் வழியே தெரிந்த பெரிய ஆல மரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. “என் லீவ் முடிஞ்சது…’’ என்ற அறிவிப்போடு அறைக்குள் நுழைந்தாள் பிருந்தா. 

அவளை நிமிர்ந்து பார்த்த மித்ரா சோபையாய் புன்னகைக்க, “இந்த ஒன் வீக்கா இங்க இருந்து டீமை கைட் செஞ்சிட்டேன். இனி நேர்ல போய் தான் ஆகணும். லேப்ல டெஸ்ட் ட்ரையல் இருக்கு.’’ என்றாள். 

சரி என்பதாய் தலை அசைத்தவள், “என்னால எல்லாரும் கஷ்டம்.’’ என கண் கலங்க, அவளை அணைத்து கொண்ட பிருந்தா, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல..’’ என்றாள். அவள் அணைப்பில் இருந்தபடியே முகத்தை மட்டும் உயர்த்தி, “என்னைவிட பிசிக்கலாவும் சபர் ஆனது நீங்க தான். ஆனா மயக்கத்துல இருந்து முழிச்சதும் ரொம்ப தெளிவா திடமா இருந்தீங்க. என்னால முடியல…’’ என்றாள். 

அவளை ஆழ்ந்து பார்த்த பிருந்தா, “ரொம்ப சிம்பிள். என்னோட பர்சனல் ஸ்பேஸ்குள்ள நான் யாரையும், யாரோட ஒப்பீனியனையும் உள்ள வர விடுறது இல்ல. அங்க நான் தான் ராணி. அங்க என்னோட சரி தப்பை எல்லாம் நான் தான் முடிவு பண்ணுவேன். இன்னொரு உயிரை வஞ்சிக்கதா என்னோட எல்லா சந்தோசமும் என்னை பொருத்தவரைக்கும் சரி.’’ என்றவள் அவளை பார்த்து சிரிக்க, மித்து அவளை ஆச்சர்யமாய் பார்த்தாள். 

“அந்த டீன் ஏஜ்ல ஒரு தெளிவு இல்லாம நீங்க செஞ்ச விஷயம். அப்புறம் அதை அழகா கடந்து வாழ்கையில உங்களுக்குனு ஒரு பாதையை அமைச்சிகிட்டு ட்ராவல் செஞ்சிட்டு இருந்தீங்க. திடீர்னு ஏன்..?’’ என பிருந்தா நிறுத்த, மித்ரா அவளை வலியோடு பார்த்தாள். 

“உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம்.’’ என்றாள் அவசரமாய். “அப்படியெல்லாம் இல்லை.’’ என்றாள். பிருந்தா அவளை அமைதியாய் பார்த்திருக்க, “நான் செஞ்சது தப்புன்னு முதல்ல எனக்கு புரிய வச்சி என்னை மாத்தினதே உங்க அண்ணா தான். அவர் என் சேட்ஸ் பார்த்ததுல எனக்கு ரொம்ப எம்ப்ராசிங்கா இருந்தது. அதனால ரொம்ப வருசம் உங்க அண்ணா முகத்தை கூட என்னால நேரடியா பார்க்க முடியாம இருந்தது.’’ என்றாள். 

அவள் கூற வந்த வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட பிருந்தா, முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாது, தனக்கு எதிரே அமர்ந்திருப்பவளை மதிப்பிடாமல் அவளின் உணர்வுகளை கொட்ட அனுமதித்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“உங்க அண்ணா என்னோட சேட்ஸ் பார்த்ததே என்னால இப்ப வரை ஏத்துக்க முடியல. இதுல அந்த அரவிந்த் அதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிட்டான். வேற யார் பத்தியும் கூட நான் அதிகம் கவலைப்படலை. ஆனா எங்க அம்மா, அப்பா. அவங்களுக்கு நான் இன்னும் குட்டிப் பொண்ணு தான். அவன் கூட டீன் ஏஜ்ல அப்படி சேட் செஞ்சப்ப அதோட சீரியஸ்னஸ் எனக்கு தெரியலை. ஆனா அதை அவன் எல்லார் முன்னாடியும் வெளிச்சம் போட்டு காட்டினதும், அவங்களை எப்படி நேருக்கு நேர் பேஸ் பண்றதுங்கிற பயம் வந்துடுச்சி. என்னோட குற்ற உணர்ச்சி தாங்க முடியாத அளவுக்கு அதிகம் ஆயிருச்சு. அதான்… நான்…’’ அவள் குரல் கலங்க துவங்க, அவளை அணைத்து கொண்டாள் பிருந்தா. 

“ஷ்…! உங்களை யாரும் எதுவும் தப்பா நினைக்கலை. எல்லாரும் அந்த ஏஜை கடந்து வந்தவங்க தான். சும்மா அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு உங்களுக்குள்ள சுருண்டு போகாதீங்க. அது தான் இந்த சேட் லீக் செஞ்சவனோட மோடிவ். நான் இப்படிதான்னு தைரியமா, திமிரா இருங்க. அடுத்த லீட் கிடைக்கிற வரைக்கும் தான் உங்க விஷயம் வைரலா இருக்கும். அப்புறம் இந்த உலகம் அதை கடந்தும் மறந்தும் போயிடும்.’’ என்றாள். 

மித்து சம்மதமாய் தலை அசைக்க, “நான் ஊருக்கு கிளம்புறேன்.’’ என்றாள். மித்து அதற்கும் தலை அசைக்க, “எப்பவும் இந்த ரூம்குள்ளேயே அடைஞ்சி கிடக்க கூடாது. நெக்ஸ்ட் வீக் காலேஜ் ஜாயின் செஞ்சிடனும்.’’ என்றாள். 

மித்து அதற்கும் தலையை மட்டும் அசைக்க, அவளை பார்த்து மிருதுவாய் புன்னகைத்த பிருந்தா, “திருப்பி நான் உங்களை பார்க்கும் போது… இந்த உலகத்துல இருக்க மொத்த சந்தோசமும் எனக்கு உங்க கண்ல தெரியணும் சரியா… இதுக்காவது தலை ஆட்டாம சரின்னு வாயை திறந்து சொல்லுங்க…’’ என்றாள்.   

   

“சரி” என்றாள் மித்ரா. “இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.” என்றாள் பிருந்தா. அவள் அமிழ்ந்திருந்த வேதனை மனநிலையில் இருந்து சற்றே வெளியேறி வந்த மித்ரா கோடாய் புன்னகைத்து, “சரி…” என்றாள் சற்றே உரக்க. 

“தட்ஸ் த ஸ்பிரிட்.’’ என்ற பிருந்தா, மீண்டும் ஒரு முறை மித்ராவை அணைத்து விடை கொடுத்து வெளியே வந்தாள். வரவேற்பறையில், பால்கியும், மதுவும் அமர்ந்திருந்தனர். மது அன்றைய சமையலுக்கான காய் கறிகளை அறிந்து கொண்டிருக்க, பால்கி பூண்டை உரித்துக் கொண்டிருந்தார். 

‘இவங்க இதெல்லாம் செஞ்சா நாம எதை செய்றது.’ என அங்கிருந்த ஊழியர்கள் பாவமாய் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். “பால்கிப்பா…’’ என்ற அவள் குரலில் இருவரும் நிமிர்ந்து பார்க்க, “நான் கிளம்புறேன்.’’ என்றாள் இருவருக்கும் பொதுவாய். 

பிருந்தா பெரிதாக இதற்கு முன் அவர்களிடம் பழகியது கிடையாது. எப்போதாவது ஏற்படும் சந்திப்பில் கூட, சிறு புன்னகையோடே கடந்து பழக்கம். பிருந்தாவை பார்த்து லேசாய் முறுவலித்த மது, “கிளம்பிட்டியா…! ஒரு அஞ்சி நிமிஷம் இரு. சூடா பிரிஞ்சி சாதம் செஞ்சேன். பேக் செஞ்சி தரேன்.’’ என்றபடி எழுந்தார். 

“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. ட்ராவல்ல எனக்கு சாப்பிடுற பழக்கம் இல்லை.’’ என்றாள். “ஓ..’’ என்ற மது அவளின் முகம் பார்க்க, பையை தூக்கி கொண்டு இரண்டு அடி நடந்தவள் மீண்டும் திரும்பி வந்து, “எப்பவும் தடுக்கி விழுந்த குழந்தையை நீங்க தான் தூக்கி நிறுத்தனும்னு நினைக்காதீங்க. சில சமயம் அவங்களை கண்டுக்கமா இருந்தா அவங்களே விழுந்த வலியை கூட மறந்துட்டு எழுந்து நடப்பாங்க.’’ என்றாள். 

மது அவளின் வார்த்தைகளை கிரகிக்க முயன்று கொண்டிருக்கும் போதே, தன் பையை தூக்கி கொண்டவள், “பை பால்கிப்பா… பை ஆன்ட்டி.’’ என்றவள் வாசலில் தனக்காய் காத்திருந்த மகிழுந்தை நோக்கி நடந்திருந்தாள். 

“நல்ல பொண்ணு.’’ என்ற பால்கி பாராட்ட, “நாம கூட நைட் ஊருக்கு கிளம்பலாம். நாளைல இருந்து நாள் காலேஜ் போகணும். அடுத்த வாரம் செமஸ்டர் தொடங்கிடும். மித்துவை திருவையே நெக்ஸ்ட் வீக் ஹாஸ்டல்ல விட சொல்லிடலாம்.’’ என்றபடி அரிந்த காய் கறிகளை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி நடக்கும் மனைவியை புரியாது பார்த்துக் கொண்டிருந்தார் பால்கி. 

மருத்துவமனையில் இருந்தே மகளை தன் கண் வளையத்திற்குள் வைத்துக் கொண்டிருந்தவள், திடீரென ‘போகலாம்’ என சொல்ல பாவம் அவரும் தான் என்ன செய்வார். 

அன்றைக்கு இரவே இருவரும் ஊருக்கு கிளம்பி விட, தன் அறையில் தனிமையில் அடைந்து கிடந்தவளை காண வந்தான் திரு. கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட அவன் அவளிடம் பேச முனையவில்லை. இன்றைக்கு தன்னை தேடி வந்தவனை நேர் பார்வையால் சந்திக்க முடியாமல் திணறினாள் மித்து. 

அவளை நேர் கொண்டு பார்த்தவன், “கொஞ்ச நேரம் மொட்டை மாடில காத்து வாங்கிட்டு வரலாம் வா.’’ என அழைத்தான் திரு. ‘நான் வரவில்லை.’ என சொல்லலாம் என அவன் முகம் பார்க்க நிமிர்ந்தவள் அது காட்டிய கண்டிப்பில், எதுவும் சொல்ல முடியாது பேசாமல் அவனை பின் தொடர்ந்தாள். 

மொட்டை மாடியின் ஓரத்தில் ஒரு பெரிய நிற்கும் தொலை நோக்கி பொருத்தப்பட்டிருக்க, அதன் அருகே சென்றவன் அமைதியாய் அதன் வழியே வானை ரசித்துக் கொண்டிருக்க, மித்து என்ன செய்வது என புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.