Advertisement

“இன்னும் நீங்க லவ் செய்ய இங்க நிறைய விஷயம் இருக்கு மிஸ் சயின்டிஸ்ட் மேடம். வாங்க போகலாம்.’’ என்று அவளை அழைத்து சென்றான். அப்போது கோர்த்துக் கொண்ட கரங்கள் அதன் பின் பிரியவே இல்லை. 

மற்றொரு அரங்கில், நிலவுக்கு ஒரு பயணம் என்ற தலைப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய காட்சிகளை தத்ரூபமாய் மெழுகு சிலையில் செதுக்கி வைத்திருந்தனர். இருவரும் மகிழ்வோடு, ஆம்ஸ்ட்ராங்குடன் சுயமி எடுத்துக் கொண்டனர். 

மற்றொரு அரங்கில், இதுவரை இந்திய விண்வெளியின் வரலாற்றை ஆவணப்படம் போல புகைப்பட கண்காட்சியாய் தொகுத்து வைத்திருந்தனர். அந்த தொகுப்பின் இறுதியில் 2030 ‘மிஷன் டூ மூன்’ என்ற தலைப்பிட்ட செய்தியில் பிருந்தாவும் தன் குழுவினரோடு இருந்தாள். 

கார்த்திக் அவளை பெருமை பொங்க பார்க்க, “இன்னும் இது எதுவும் நடக்கல. நடந்த பிறகு நீங்க என்னை இப்படி பிரைடா பார்க்கலாம்.’’ என்றுவிட்டு அடுத்த அரங்கம் நோக்கி நடந்தாள். “கண்டிப்பா நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு.’’ என்றவள் அவனை பின் தொடர்ந்து நடந்தாள். 

நடந்து நடந்து களைத்து போனதில், அரங்கின் உள்ளே விற்றுக் கொண்டிருந்த பழசாற்றை வாங்கி இருவரும் பருகினர். நடக்கும் நேரத்தில் எல்லாம் கைகள் கோர்த்தபடி பொதுப்படையான செய்திகளை பேசியபடி நடந்தனர். 

அடுத்து அவர்கள் திரையரங்கள் போலிருந்த அரங்கை அடைந்திருந்தனர். பிருந்தா ஆவலாக அதன் வாயிலை பார்த்துக் கொண்டிருக்க, “இங்கேயே இருங்க. நான் போய் டிக்கட்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன்.’’ என்றவன் நுழைவு சீட்டு விற்றுக் கொண்டிருந்த இடம் நோக்கி நடந்தான். 

இருவருக்குமான அனுமதி சீட்டை பெற்று வந்தவன், அருகில் வர, பிருந்த அவன் கரங்களுக்குள் தன் கரத்தை நுழைத்துக் கொண்டாள். இருவரும் உள்ளே நுழைய, அந்த அறை திரையரங்கம் போலவே இருந்தது. 

உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த பணியாளர்கள், அங்கிருந்த பிரத்யேக இருக்கையில் அவர்களை அமர வைத்து இடுப்புப்பட்டியை பூட்டிவிட்டனர். அந்த அரங்கம் முழுக்க குளுமையாகவும் இருளாகவும் இருக்க, கார்த்தியின் கரத்தில் இருந்த தன் கரத்தின் அழுத்தத்தை கூட்டினாள் பிருந்தா. 

“இட்ஸ் ஓகே. கொஞ்ச நேரத்துல லைட் போடுவாங்கன்னு நினைக்கிறேன்.’’ என்றான் கார்த்திக். அவன் சொல்லியது போல ஓரளவிற்கு அரங்கம் நிறைந்ததும்,  அங்கிருந்த பெரிய திரையில் பால் வண்ண ஒளி பாய்ந்து வந்து அங்கிருந்த இருள் போர்வையை கிழித்தது. 

கண்களை கூச செய்யும் அந்த ஒளியை அவர்கள் சிரமமின்றி பார்க்க, விசேசமான கண் கண்ணாடிகளை தந்திருந்தனர். “வாருங்கள் இப்பொழுது நாம் நமது பால் வெளியை சுற்றி வரலாம்.’’ என்ற அறிவிப்பு வந்ததும், ராக்கெட் கிளம்பும் ஓசை பிண்ணனியில் ஒலிக்க, இவர்கள் அமர்ந்திருந்த இருக்கை மெல்ல அசைத்து மேலே கிளம்பியது. 

அனைவரும், “ஆ…’’ என்ற உற்சாக கூக்குரலை வெளிபடுத்த, பெரிய திரையில், ஆகாயத்தை தாண்டி அவர்கள் பறப்பதை போன்ற காட்சிகள் விரிய, இருக்கைகள் குலுங்க, அணிந்திருந்த முத்திரட்சி ( 3D )  கண்ணாடியின் மூலம் ஆகாயம் இவர்களின் அருகில் தெரிந்தது. 

அடுத்து கருநிற இருள் சூழ, ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்கள் அவர்களை பார்த்து கண் சிமிட்டியது. முதலில் வெளிர் மஞ்சளில் பெரிதாய் தெரிந்த நட்சத்திரம் அடுத்த நொடி அவர்களுக்கு அருகில் வந்தது. 

அருகில் வந்ததும், அதன் வட்ட வடிவ ஒளித்திரலில் புதிதாய் கண்ணும், வாயும் முளைக்க, ‘நான் தான் சூரியன்…’’ என்று பேச தொடங்கிய நட்சத்திரம் தன் வரலாற்றை சில சொற்களில் முடித்து கொண்டு விருட்டென பறந்து பால் வெளிக்குள் மறைந்து போனது. 

அடுத்து அவர்களின் பயணம் தொடர்வதற்கான அறிகுறியாய் இருக்கைகள் மேலும் கீழும்அசைந்தன. அடுத்து வந்த நட்சத்திரம் தன்னை வேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. அது தன் அளவை மாற்றியும், பார்வையாளர்கள் மடியில் அமர்ந்தும் குறும்புகள் செய்தபடி தன் கதை சொல்லியது. 

யாரேனும் அதை பிடிக்க முனைந்தால் விருட்டென மற்றொரு இருக்கைக்கு தாவியது. அது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு உற்சாக பேரலையை கிளப்பிவிட்டது. தன் தனித்துவம் சொன்ன பின் அதுவும் மறைந்துவிட, அடுத்து ‘பீட்டில்ஜீஸ்..’ என்ற அடர் சிவப்பு நிற சூப்பர் நோவா நட்சத்திரம் வந்தது. 

அடுத்த இருபது நிமிடங்கள் அனைவரும் பால்வெளியில் மிதந்தனர். நட்சத்திரங்களின் தனித்தன்மையை அந்த நட்சத்திரங்களே இயக்கமூட்டப்பட்ட வடிவங்களாக வந்து இயம்பி சென்றது பார்வையாளர்களின் சிந்தையை கொள்ளை கொண்டது. 

பால்வெளி விடை பெற, மீண்டும் அரங்கம் இருளில் மூழ்கியது. பிருந்தாவின் இமையோரம் துளி நீர் திரண்டிருக்க, அவளின் இடுப்புப்பட்டியை நீக்கிய கார்த்திக், ‘என் கையை பிடிச்சிக்கோ பிருந்தா… இறங்கலாம்..’ என அவளை அழைத்தான். 

விழிகளில் திரண்டிருந்த நீர்த்துளி விழி ஓரத்தில் ஒற்றை நட்சத்திரமாய் மின்ன, பிருந்தா தனக்கு அருகில் தெரிந்த கார்த்திக்கின் கன்னத்தில் லேசாய் இதழ் ஒற்றி விலகினாள். நடந்து என்ன என அவன் உணரும் முன் சின்ன இதழ் தீண்டல் நிகழ்ந்திருக்க, “இப்போ நீங்க என்ன செஞ்சீங்க..?’’ என்றான். 

பிருந்தா இமை தட்டி விழி நீரை உள் இழுக்க முயன்றபடி, “தாங்க்ஸ்…’’ என்றாள் ஆத்மார்த்தமாய். “நீங்க இப்போ என்ன கிஸ் செஞ்சீங்க தானே.’’ என்றான் கார்த்திக் முகத்தில் பரவிய புன்னகையுடன். 

“அது ஜஸ்ட் ஒரு பிரண்ட்ஷிப் கிஸ் தான்.’’ என்றவள் இறங்கி நடக்க, “அது என்ன கிஸ்ஸா வேணா இருந்துட்டு போகட்டும். சொல்லி இருந்தா நான் என்னோட மாஸ்க் ரிமூவ் செஞ்சி இருப்பேன். நீங்க உங்க பிரண்ட்ஷிப் கிஸ்ஸை எனக்கு தரல. என்னோட மாஸ்க்குக்கு கொடுத்துட்டீங்க.’’ என்றான் வருத்தமாய். 

“உங்க மாஸ்க் தானே பரவாயில்ல விடுங்க. எனக்கு பசிக்குது அடுத்த ப்ளான் என்ன..?’’ என்றபடி வேகமாய் நடந்தாள் பிருந்தா. “இனி உங்களோட இருக்கும் போது நான் மாஸ்க் போடப் போறதில்லை.” என்றவனின் முகம் தான் ஊதிய பலூன் உடைந்து போன சிறுவன் போல வருத்தத்தில் சுருங்கிப் போனது.  

சற்று நேரம் அமைதியாய் நடந்து வந்தவன், “என்னோட பிரண்ட் வீடு இங்க இருக்கு. அங்க தான் லன்சுக்கு போறோம்.’’ என்றபடி அவன் வாகனத்தை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடக்க, பிருந்த அவனை தொடர்ந்தாள்.  

இருவரும் கார்த்திக் நண்பன் குருவின் வீட்டை அடையும் போது நேரம் நண்பகலை கடந்திருந்தது. குருவும், அவன் அன்னையும் இருவரையும் மிகுந்த உற்சாகாத்தோடு வரவேற்றனர். அதிலும் குருவின் அன்னை பிருந்தாவிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொண்டார். 

மிக எளிமையான காய் கறி  உணவே பரிமாறப்பட, “சிஸ்டர் சாரி தப்பா நினைச்சிக்காதீங்க. கார்த்திக் கேம்ல இருக்கும் போது எல்லாம் ஸ்ட்ரிக்டா டயட் மெயின்டைன் செய்வான். நம்ம இஷ்டத்துக்கு நான் வெஜ் எல்லாம் சமச்சி போட முடியாது. அவன் வரும் போது எல்லாம் அவனோட சேர்த்து எங்களுக்கு இதே இலை தழை தான்.’’ என்றான் கார்த்திக்கின் நண்பன் குரு சோகமாய். 

“நோ ப்ராப்ளம். எனக்கு கூட இந்த மாதிரி சிம்பிள் வெஜ் சாப்பாடு தான் பிடிக்கும்.’’ என்றாள் பிருந்தா. “போச்சும்மா… இவன் கூட சேர்ந்து இலை தழை சாப்பிடுற பொண்ணாவே பார்த்து புடிச்சிட்டான். இவங்க வீட்ல இனி நான் வெஜ் எடுக்குற வேலை இல்ல. சரியான கஞ்சன்…’’ என்று குரு கார்த்தியை கலாய்க்க, கார்த்திக் நண்பனின் முதுகில் வலுவாய் தட்டி அவன் பேச்சை நிறுத்தினான்.     

  

மதிய உணவிற்கு பின் வீட்டில் இருந்த நால்வரும் இணைந்து, சுண்டாட்ட விளையாட்டை (கேரம்) தொடர்ந்தனர். மாலை குருவின் தங்கை கல்லூரியில் இருந்து வந்திட, அவளோடு அவளின் சில தோழிகளும் வந்திருந்தனர். 

வந்தவர்கள் அனைவரும், கார்திக்கோடு சுயமி எடுப்பதிலும், அவன் கையெழுத்து பிரதி பெறுவதிலும் முனைய, பிருந்தா அவர்களின் துள்ளல் மகிழ்வை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தாள். 

“இவங்க பிருந்தா. என்னோட பிரண்ட். இஸ்ரோ சயின்டிஸ்ட்.’’ என கார்த்திக் அவளை அந்த பெண்களுக்கு அறிமுகப்படுத்த, அவர்களோ, அதை ஒரு, ஓவோடு கடந்துவிட்டனர். அது கார்த்திக்கிற்கு அளப்பரிய வருத்தத்தை தந்தது. 

தன்னை விடவும் இங்கு அதிகம் கொண்டாடப்பட வேண்டியவள் பிருந்தா என்ற எண்ணம் அவனுக்குள்  நிலைக்க, அது அவன் முகத்திலும் எதிரொலித்தது. அவன் முகத்தில் இருந்து அகத்தை அறிந்து கொண்ட பிருந்தா, அவன் அருகில் அமர்ந்து மெல்லிய குரலில் “இட்ஸ் ஓகே. புகழுக்காக நாங்க எதையும் செய்றது இல்ல.’’ என்று அவனை தேற்றினாள். 

மாலை தேநீர் அருந்திய பின் இருவரும் விடை பெற்று கிளம்ப, குருவின் தாய், பிருந்தாவிற்கு எளிய காட்டன் புடவை ஒன்றை தாம்பூலத்தோடு வைத்து கொடுத்தார். பிருந்தா அவரை வணங்கி அதை பெற்று கொள்ள, அதுவரை நின்று கொண்டிருந்த கார்த்திக், பட்டென தானும் அவரின் கால்களில் விழுந்தான். 

“நல்லா இருக்கணும்.’’ என்று அவர் இருவரின் உச்சி மீது கை வைத்து ஆசிர்வதிக்க, குரு  கண் சிமிட்டி நண்பனை கேலி செய்தான். அவர்களை பொறுத்தவரை தான் விரும்பும் பெண்ணை அழைத்து வந்திருப்பதாகவே அனைவரும் எண்ணினர். 

மாலை வேளையில் ஆளரவமற்ற பூங்கா சாலையில் தன் வாகனத்தை நிறுத்திய கார்த்திக், “ஒரு வாக் போயிட்டு வரலாமா…?” என பிருந்தாவை அழைத்தான். சம்மதமாய் தலை அசைத்தவள், அவனோடு இறங்கி நடந்தாள். 

அவளுக்கு முன் நடந்தவன், திரும்பி நின்று அவளை பார்த்தபடி  நடக்க, பிருந்தா விழிகளை உருட்டினாள். “ஏங்க உங்களை ஒண்ணு கேக்கவா…? திட்ட மாட்டீங்க தானே.’’ என்றான். 

“அப்போ நான் திட்டப் போற மாதிரி ஏதோ கேக்க போறீங்க..?’’ என்றாள் பிருந்தா சிரித்தபடி. மறுப்பாய் தலை அசைத்தவன், “அப்படியெல்லாம் இல்ல. கொஞ்சம் இன்டிமேட் ஆனா விஷயம் தான். ஆனா எனக்கு இந்த டவுட் ரொம்ப நாளா இருக்கு. கேக்கலைனா தலை வெடிச்சிடும் போல.’’ என்றான். 

“சரி கேளுங்க. கேள்வி ரொம்ப மோசமா இருந்தா உங்க தலையில நங்குன்னு  ஒரு கொட்டு வைப்பேன். அப்படி வச்சிட்டா நீங்க மறுபடி அதே கேள்வியை என்கிட்ட கேக்க கூடாது. சரியா…?’’ என்றாள். 

‘சரி’ என்பதாய் கட்டை விரலை உயர்த்தி காட்டியவன், “லாஸ்ட் டைம் நான் உங்களை ஹாஸ்பிடல்ல பாக்க வந்தப்ப… நீங்க கொஞ்சம் டிஸ்கம்போர்ட்டா பீல் செஞ்சிட்டு இருந்தீங்க இல்ல.’’ என கார்த்திக் நிறுத்த, “ஆமா…’’ என்ற பிருந்தா அதுக்கு என்ன இப்ப என்பதை போல அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள். 

“இல்லைங்க…! நீங்க கூட அன்னைக்கு என்கிட்ட மன்த்லி இஸ்யூஸ் தான் இந்த மன்த் கொஞ்சம் அன்பிரீப்பேர்டா வந்தாச்சு அப்படின்னு சொன்னீங்க. நானும் என் தங்கச்சிகிட்ட எல்லாம் கேட்டு பெஸ்ட் ஆர்கானிக் பேட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். ஆனா நீங்க அதை டச் செய்யவே இல்ல. உங்க அண்ணா அப்புறம் ஏதோ சின்ன டப்பால கொண்டு வந்தான். அதை வாங்கிட்டு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தீங்க. அந்த மாதிரி குட்டி டப்பாவுல பேட் செஞ்சி கொடுக்குறாங்களா  என்ன…? எனக்கு என்ன டவுட்னா என் மேல இருந்த கோபத்துல நான் வாங்கிட்டு வந்ததை அன்னைக்கு யூஸ் செய்யலையா? இல்ல நான் தப்பா எதுவும் வாங்கிட்டு வந்துட்டேனா. இப்போ ஏன் இதை கேக்குறேன்னா… பியூச்சர்ல மறுபடி பல்ப் வாங்க கூடாது இல்லையா அதான்.’’ என்று தன் கேள்வியை முன் வைத்தான் கார்த்திக்.     

நடப்பதை நிறுத்தி விட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள் பிருந்தா. அவள் முகத்தில் அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து, லேசாய் ஒரு அழுத்தம் வந்திருந்தது. பிருந்தா தன் கைகளை உயர்ந்த தன்னை கொட்டத் தான் போகிறாள் என நினைத்து கண்களை மூடினான் கார்த்திக். 

ஆனால் உயர்த்திய தன் கைகளை அவன் முதுகில் தட்டி, “குட் கொஸ்டீன்..’’ என பாராட்டிய பிருந்தா, அவன் கேள்விக்கு பதில் சொல்ல தொடங்கினாள். அவள் பேச பேச, அவன் கண்டறியா திருவின் மற்றொரு முகம் அவன் முன் விரிய தொடங்கியது. 

பால் வீதி வளரும். 

Advertisement