Advertisement

பால் வீதி – 16 

‘இன்றைக்கு கண்டிப்பாக வெளியே போகத் தான் வேண்டுமா…? வேண்டாமா…?’ என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் பிருந்தா. முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டியும் பெங்களூரில் தான் நடப்பதாக இருந்தது. 

அதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பெங்களூர் பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன்னால், கார்த்திக்கை ஆற்றுப்படுத்துவதற்காய் பிருந்தா அழைத்திருக்க, அன்று முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அவனிடமிருந்து குறுஞ்  செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

இரவில் உறங்க செல்லும் முன் சில நிமிடங்கள் அழைத்து பொதுப்படையாக பேசுபவன், இரவு வணக்கத்தோடு அலைபேசியை துண்டிக்க, அவன் பேசும் வார்த்தைகளே அவன் மீதான பெரும் மதிப்பை பிருந்தாவிற்குள் தோற்றுவித்தது. 

நாளை மாலையோடு பயிற்சி முடிந்துவிடும் என்பதால், ‘வெளியே சுற்றிப் பார்க்க தன்னோடு வர முடியுமா..?’ என்று அழைத்திருந்தான் கார்த்திக். ஒரு சாதாரண நட்பின் அழைப்பு தான். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் பிருந்தாவிற்கு அத்தனை தயக்கமாய் இருந்தது. 

அதே யோசனையோடு பிருந்தா தனக்கான இரவு சமையலில் ஈடுபட்டிருக்க, அவளின் அலைபேசி இசைத்து அவளை அழைத்தது. கரண்டியோடு அவள் யார் அழைப்பது என அலைபேசியை எட்டிப் பார்க்க, கார்த்திக்கின் பெயர் அதில் ஒளிரவும், தயக்கத்தோடே அழைப்பை ஏற்றாள். 

“ஹாய் பிருந்தா..’’ அவன் உற்சாக குரலுக்கு, “ஹாய் கார்த்திக்.’’ என மெதுவாய் விடை கொடுக்க, “என்னங்க வாய்ஸ்ல எனர்ஜி லெவல் ரொம்ப ட்ராப் ஆன மாதிரி தெரியுது.’’ என்றான். பிருந்தா விடை கொடுக்காமல் அமைதியாய் இருக்க,  “ஓ… நான் வெளிய கூப்பிட்டது பிடிக்கலையா…?’’ என்றான் உத்தேசமாய். 

“அப்படிலாம் இல்ல…’’ என பிருந்தா இழுக்க, “கமான் பிருந்தா. உங்க கூட ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மெயின்டைன் பண்ணனுங்கிறது தான் என் பஸ்ட் மோட்டோ. அதோட நாம ரிலேடிவ்ஸ். என் கூட பழக உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.’’ என்றான். 

அப்போதும் பிருந்தா அமைதியாய் இருக்க, “ஓகே. நான் உண்மைய சொல்லிடுறேன். வீக்லி ஒன்ஸ் உங்க அம்மா எனக்கு கால் செஞ்சி பேசுவாங்க. லாஸ்ட் டைம் பேசும் போது ரெண்டு பேரும் மீட் பண்ணப் போறதா அவங்ககிட்ட தெரியாத்தனமா அடிச்சிவிட்டேன். அவங்க என்னடான்னா தினம் போன் செஞ்சி பிருந்தாவை போய் பார்த்தீங்களா, வெளிய போனீங்களா… ஜோடியா போட்டோ எடுத்தா எனக்கும் அனுப்புங்க… படம் போட்டு வீட்ல மாட்டணும், அப்படி இப்படின்னு பேசிட்டே இருக்காங்க. எவ்ளோ நாள் தான் பொய் மேல பொய்யா சொல்லி நானும் சமாளிக்கிறது.’’ என கார்த்திக் அலுப்பாய் முடிக்க, பிருந்தா அந்தப் பக்கம் வாய் விட்டு சிரித்தாள். 

தன்னுடைய தாய், எப்படியெல்லாம் புகைப்படம் கேட்டு நச்சரித்திருப்பார் என்ற கற்பனை அவளுள் மிகப் பெரும் ஹாஸ்யத்தை தூண்டியிருக்க, பிருந்தா நிறுத்த முடியாமல் பொங்கி பொங்கி சிரித்தாள். 

மிக நுட்பமாய் வாசிக்கப்பட்ட பீதோவன் இசை போல, அவளின் சிரிப்பொலியை ஆழ்ந்து ரசித்திருந்தான் கார்த்திக். ஒரு வழியாய் சிரித்து முடித்தவளோ, “ரொம்ப பாவங்க நீங்க. நீங்க எந்தப் பக்கம் போனாலும் எங்க அம்மா வாய் வார்த்தையாலேயே நல்லா கேட் போட்டு இருப்பாங்க. எங்க அம்மாவை சமாளிக்க கூடிய ஒரே ஆள் எங்க திரு அண்ணா தான். அதுக்காகவே நாளைக்கு நான் கண்டிப்பா உங்க கூட அவுடிங் வறேன்.’’ என்றாள். 

“என் மேல் இந்த அளவிற்காவது கருணை காட்டியதற்கு மிக்க நன்றி தேவி…’’ என்றான் கார்த்திக் நாடக பாணியில். அதற்கும் பொங்கி சிரித்தவள், “அச்சோ நான் தேவி இல்ல… பிருந்தா.’’ என்றாள். 

“ஏங்க தூய தமிழ்ல பேச ட்ரை செஞ்சேங்க. விட்டா நாலு பொண்ணுங்களை வச்சி மெயின்டைன் செய்ற ப்ளே பாய் லிஸ்ட்ல சேர்த்துடுவீங்க போல இருக்கு.’’ என்றான். 

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரித்தவள், “அச்சோ போதும். சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. நாளைக்கு எங்க மீட் செய்யலாம்னு எனக்கு மெசேஜ் போடுங்க. இப்போ நான் போய் சமச்சி சாப்பிடுறேன். டைம் ஆச்சு.’’ என்றாள். 

“ஓகே பிருந்தா. குட் நைட்.’’ என்றவன் அழைப்பை துண்டிக்க, ஒரு புன்னகையோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவள், சமையல் அறையில் இருந்து லேசாய் தீயும் வாடை வரவும், “அச்சோ..’’ என்று அலறியபடி சமையலறை நோக்கி ஓடினாள். 

அடுத்த நாள் காலை, அவளின் குடியிருப்பு வாயிலுக்கே கார்த்திக், மகிழுந்தோடு காத்திருந்தான். பிருந்தாவிடமிருந்து அழைப்பு வர, “உங்க குவாட்டர்ஸ் வாசல்ல தான் இருக்கேன். ஆஷ் கலர் ஆஷ்ட்ரான்  கார். வெளிய வாங்க.’’ என்றான். 

குடியிருப்பை காத்திருந்த பெரிய கதவுகளோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கதவு திறக்க, இளம் பச்சை நிற சல்வார் அணிந்த பிருந்தா வெளியே வந்தாள். அவன் நடந்து வரும் சாயலே பெரும் பூச்செடியோன்று வேர் கால்கள் கொண்டு நடந்து வருவதை போல அத்தனை அழகாய் இருந்தது. 

தொப்பியும், கண்களில் கறுப்பு நிற கண்ணாடியும் அணிந்திருந்த கார்த்திக், எட்டிப் பார்த்து கை அசைக்க, அவனை நோக்கி புன்னகைத்தபடியே நடந்து வந்தாள். கார்த்திக் தன் பக்க கதவை திறந்து விட , உள்ளே ஏறி அமர்ந்தவள், “எங்க போறோம்…?’’ என கேட்டாள். 

“சர்ப்ரைஸ்…’’ என்றவன் அவளை பார்த்து புன்னகைத்தபடி வாகனத்தை கிளப்பினான். வழக்கம் போல எவ்வித அலங்காரமும் இல்லாமல் துடைத்து வைத்த பொன் சிலை போல மின்னியவளை தான் அணிந்திருந்த கறுப்பு கண்ணாடியின் உபயத்தால் பக்கவாட்டில் ரசித்தபடி வந்தான். 

நீள முடியை தளர பின்னியிருந்தாள். திருத்தப்படாத அடர் புருவம் வில்லாய் வளைந்திருந்தது. இயல்பில் சிவந்த இதழ்கள். பிறை நெற்றியில் குட்டியாய் ஒரு கருப்பு சூரியனை சூடியிருந்தாள். அணிந்திருந்த பருத்தி உடை அத்தனை பாந்தமாய் அவளுக்கு பொருந்தி இருந்தது. 

காதில் வெண்ணிறத்தில் ஒளிரும் ஒரு நட்சத்திர தோடு. கழுத்தில் மிக மெல்லிதாய் ஒரு சங்கிலி. இடது கையில் மட்டும் கைக் கடிகாரம். பிருந்தா பாதையை கவனித்தபடி வர, “பெங்களூர்ல எங்க எல்லாம் போயிருக்கீங்க.’’ என்றான் கார்த்திக். 

“பெருசா எங்கயும் போனதில்ல. அண்ணா இங்க வரும் போது ஒரு முறை பொட்டானிக்கல் கார்டன் போயிட்டு வந்தோம். எனக்கு நேரமும் கிடைக்காது. அதனால பெருசா வெளிய சுத்தினது எல்லாம் இல்ல.’’ என்றாள். 

“ஓ..’’ என்றவன், நகரின் மையத்தில் இருந்து இருபது நிமிடங்கள் தொலைவில் இருந்த அந்த அறிவியல் கண்காட்சி அரங்கிற்குள் சென்று வாகனத்தை நிறுத்தினான். டேஷ் போர்டிலிருந்து முக கவசம் ஒன்றை எடுத்துக் கொண்டவன் அதை அணிந்து கொள்ள, “இரும்புக்கை மாயாவி ரேஞ்சுக்கு உங்க அடையாளத்தை மறைக்கிறீங்க.’’ என்றாள் பிருந்தா. 

“எவ்ளோவுக்கு எவ்ளோ பப்ளிசிட்டி கிடைக்குதோ, அதே அளவுக்கு நம்ம ப்ரைவசி போயிடும். இப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செஞ்சி தான் வாழனும்.’’ என்றவன் வாகனத்தை பூட்டிவிட்டு இறங்க, இருவரும் ஒன்றாய் அரங்கத்தை நோக்கி நடந்தனர். 

நுழைவு சீட்டை கார்த்திக் முன்பதிவு செய்திருந்ததால் இருவரும் அரங்கிற்குள் நுழைந்தனர். முகப்பிலேயே அது விண்வெளி குறித்த அறிவியல் கண்காட்சி அரங்கம் என்பதை புரிந்து கொண்ட பிருந்தா, “கார்த்திக். நாம என்ன ஸ்கூல் பசங்களா? இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்க..?’’ என்றாள். 

“கொஞ்ச நேரம் அமைதியா வாங்க மேடம்…’’ என்றான். வெளி அரங்கில் பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொரு கிரகம் போல் வேடம் அணிந்து, அந்த கிரத்தின் தோன்றம், பருமன், பரப்பளவு தனித்துவம் முதலிய அடங்கிய பாடலுக்கு நடனமாடி வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். 

பிருந்தா அறியாத புதிய தகவல் ஒன்றும் அதில் இல்லை என்றாலும், அந்த பாடலும் குழந்தைகளின் நடனமும் அவளை வெகுவாக கவர, அழகிய புன்னகையோடு அவர்களின் வரவேற்பை ஏற்றபடி உள் நுழைந்தாள். 

அடுத்த திடலில், பெருவெடிப்பு என்ற விளையாட்டை வைத்திருந்தனர். கோள்கள் போன்ற வட்ட வடிவ உருளைகளில் உட்காரும் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்க, தங்களுக்கு இரண்டு அனுமதி சீட்டை கார்த்திக் வாங்கி வர, பிருந்தா குழப்பத்தோடு ஒரு உருளை பந்தில் ஏறி அமர்ந்தாள். 

அங்கிருந்த பத்து உருளைகளிலும் ஆட்கள் ஏறியதும், அவ்விடம் இருளில் மூழ்கியது. பிருந்தா அருகில் இருந்த கார்த்திக்கின் கரத்தை தன்னிச்சையாய் பிடித்துக் கொண்டாள். பின்னணியில், ஆங்கிலத்தில் அழகிய குரல் ஒன்று பிரபஞ்ச பெரு வெடிப்பை வார்த்தைகளால் விளக்க தொடங்கவும், இவர்கள் அமர்ந்திருந்த உருளைகள் உருள தொடங்கின. 

பெரிய நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதற, என்ற வரிகள் வரும் போது, ஒளி அடர்த்தி நிறைந்த மஞ்சள் நிற விளக்குகள் நாளா புறமும் திடுமென எரிய, ‘ஓ..’ என்ற உற்சாக கூக்குரல் அரங்கை நிறைந்தது. 

அடுத்து சூரிய குடும்பம் உயிர் பெற்ற வரலாற்றை அந்த குரல் மெது மெதுவாய் சொல்லி முடிக்க,  ஒன்பது உருளைகளும் நீள்வட்டப்பாதையில் நடுவில் இருந்த சூரியனை சுற்றி சுழல்வதை போல வந்து நின்றன.

கார்த்திக்கும், பிருந்தாவும் ஏறி அமர்ந்திருந்த உருளை பூமியாய் இருக்க, அது தன்னை தானே சுற்றியபடி நீள்வட்டப் பாதையில் சூரியனையும் சுற்றி வந்தது. மேலும் இரண்டு நிமிடங்கள் இயங்கு நிலையில் இருந்த உருளைகள், இது தான் நம் பூமியின் கதை என்ற வார்த்தைகளோடு பின்னணி குரல் நிறைவடைய, உருளைகளும் தங்கள் பயணத்தை நிறுத்திக் கொண்டன. 

நன்றாக சுற்றி விட்டதில் இறங்கும் போது பிருந்தா தடுமாற, கார்த்திக் அவள் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டான். பிருந்தாவே அவன் தோள்களில் சாய்ந்து இளைப்பாறினாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “இட்ஸ் ய அமேசிங் பீல் கார்த்திக். ஐ லவ் இட்.’’ என்றாள் கண்களில் வழியும் புன்னகையோடு. 

Advertisement