Advertisement

கார்த்திக் சூன்யமான மன நிலையில் அமர்ந்து இருந்தான். சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் அவனை வைத்து செய்து கொண்டிருந்தனர். அவன் குறித்த மீம்களை எல்லாம் கண் கொண்டும் பார்க்க முடியவில்லை. அவனோடு சேர்த்து அவன் குடும்பத்தையே கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர்.

போன வருட டி- டிவண்டி போட்டியில் அவன் ஹாட்ரிக் எடுத்து கோப்பையை வென்ற போது யாரெல்லாம் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ அவர்களே இப்போது அவனை தரையில் போட்டு மண்ணோடு மண்ணாக மிதித்து கொண்டிருந்தார்கள்.

அவன் இரவு உணவை தவிர்க்க, அவனை தேடி வந்த அவர்கள் அணியின் தலைவன், “ஜெயிச்சா கொண்டாடுறதும், தோத்தா நம்மை தரையில போட்டு மிதிக்கிறதும் சாதாரண ரசிகனோட மனநிலை. அவங்களோட கோபத்தை எல்லாம் குட்டி குழந்தையோட அடம் மாதிரி கடக்க தெரியணும் கார்த்திக். நீ இங்க பார்க்கக் வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. நாம எப்பவும் எமோசனலி நியூட்ரலா இருக்கணும்.’’ என்றவர் அவனுக்கான இரவு உணவையும் அறைக்கே கொண்டு வந்து கொடுக்க செய்தார்.

சற்று முன்பு தான் அவன் தாய் தந்தையர் பேசி இருந்தனர். ”அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்.’’ என்று அவர்கள் தேற்ற, “டாட். நான் ஓகே தான். நீங்க டென்சன் ஆகாம இருங்க. அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லையே. எதுக்கும் போலீஸ் ப்ரொடக்சன் கேக்கலாமா..?’’ என கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. இங்க எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்.’’ என்று சொல்லியவர்கள் மேலும் சிறிது நேரம் அவனை ஆற்றுப்படுத்திவிட்டே அலைபேசியை வைத்தனர்.

கார்த்திக்கால் புகழின் இந்த பரமபத ஆட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். அப்போது அவன் அலைபேசி இசைக்க பிருந்தா என்ற பெயர் ஒளிரவும் அவன் மனதில் இத்தனைக் கணம் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இளகி இறகானது.

வேகமாய் அழைப்பை ஏற்றவன், “ஹெலோ…’’ என்றான் உற்சாகமாய். அந்தப் பக்கம் பிருந்தா தயக்கமாய், “ஹெலோ” என்றாள்.

“உங்களுக்கு என்னோட கிப்ட் பிடிச்சி இருந்ததா…? உங்களுக்கு பெஸ்டா என்ன கிப்ட் கொடுக்குறதுன்னு தெரியல. அதான்… ரோஸ் செடி வாங்கி அனுப்பினேன். எல்லோ கலர் உங்களுக்கு பிடிக்குமா…? எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் எல்லோ தான். உங்க வேலை எல்லாம் எப்படி போகுது…?’’ கார்த்திக் உற்சாக குரலில் அவளிடம் கேள்வி மழையை பொழிந்து கொண்டிருந்தான்.

‘இவன் தான் இன்றைக்கு போட்டியில் தோற்றவனா…’ என்று மனதில் சந்தேகம் கொண்டவள், “ஹெலோ…! கொஞ்சம் நிதானமா பேசினா தான் உங்க கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியும். ஆக்சுவலி நான் இன்னைக்கு எதுக்கு உங்களுக்கு கால் செஞ்சேன்னா உங்க டீம் தோத்துட்டதா மேட்ச் பார்த்துட்டு வந்த என் பிரண்ட் சொல்லிட்டு இருந்தா. அதோட நீங்க ஏதோ ஒழுங்கா பர்பார்ம் செய்யலைனும் சொல்லிட்டு இருந்தா. அதான் டல்லா இருப்பீங்கன்னு நினச்சி கால் செஞ்சேன். ஆர் யூ ஓகே மிஸ்டர் கார்த்திக்.’’ என்றாள் பிருந்தா.

அந்தப் பக்கம் அட்டகாசமாய் சிரித்த கார்த்திக், “இட்ஸ் ஜஸ்ட் கேம் பிருந்தா. தோத்துப் போனா ரசிகன் வெளிப்படுத்துற கோபத்தை எல்லாம் அடம் பிடிக்கிற குழந்தையை கடந்து போற மாதிரி அன்பா  கடந்து போயிடணும். இது தானே ஆரம்பம். இன்னும் மேட்சஸ் இருக்கு. பார்த்துக்கலாம்.’’ என்றான் நம்பிக்கையோடு.

அவனின் அந்த தன்னம்பிக்கை அவளுக்கும் பிடித்திருக்க, “பரவாயில்ல… அப்போ நான் போன் போட்ட பர்போஸ் வேஸ்ட். எனிவே… இனி வர மேட்ச் எல்லாம் நல்லா பர்பார்ம் செய்ய என்னோட வாழ்த்துகள் கார்த்திக்.’’ என்றாள்.

“நீங்க என்ன பர்போஸ்க்காக போன் செஞ்சீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..’’ என்றான் கார்த்திக். தலையை உலுக்கிக் கொண்டவள், “மேட்ச் லூஸ் செஞ்சதால ரொம்ப வருத்ததுல இருப்பீங்க. ஆறுதல் சொல்லலாம்னு நினச்சி தான் போன் செஞ்சேன்.’’ என்றாள் பிருந்தா.

“அப்படியா…. அப்போ நான் ரொம்ப அப்சட்டா இருக்கேன் பிருந்தா… என்னை பூஸ்ட் பண்ற மாதிரி ஆறுதல் சொல்லுங்க ப்ளீஸ்…!’’  என்ற அவன் குரலில் பிருந்தா விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பை மறுபுறம் ரசித்துக் கொண்டிருந்தவன், “தாங்க யூ சோ மச் பிருந்தா. நீங்க போன் செஞ்ச ஒரு நிமிஷம் முன்னாடி வரைக்கும் ரொம்ப அப்சட்டா டிப்ரஸ்டா பீல் செஞ்சிட்டு இருந்தேன். அம்மா, அப்பா, எங்க டீம் கேப்டன் யார் சொன்ன சாமாதானமும் என் மனசை அமைதிபடுத்தல. ஆனா போன்ல உங்க பேர் பார்த்ததும் மொத்தமா மனசு லேசா ஆயிடுச்சு. இந்த நிமிஷம் நீங்க கால் செய்யலைன்னா இந்த நாளை கடக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்.ஒன்ஸ் அகைன் தாங்க யூ சோ மச்.’’ என்றான் ஆத்மார்த்தமாய்.

சில நிமிடங்கள் பிருந்தாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தோளை குலுக்கிக் கொண்டவள், “இட்ஸ் ஓகே. பரவாயில்லை. நீங்க எனக்கு செஞ்ச ஹெல்ப்போட கம்பேர் செய்யும் போது இட்ஸ் ஜஸ்ட் ய போன் கால். அவ்ளோ தான். வேற ஒண்ணுமில்லை.’’ என்றாள்.

“அந்த ஒரு போன் காலுக்காக தான் நான் ஆறு மாசமா காத்துட்டு இருந்தேன் பிருந்தா. இட்ஸ் நாட் ய ஜஸ்ட் போன் கால். இது அதுக்கும் மேல ரொம்ப ஸ்பெஷல்.’’

அவன் வார்த்தைகளில் இருந்த குழைவு அவளை எங்கெங்கோ இழுத்து செல்ல முனைய, தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவள், “ஓகே… மிஸ்டர் கார்த்திக். நிறைய வேலை இருக்கு. பாய்.’’ என்று அழைப்பை துண்டிக்க முனைந்தாள் பிருந்தா.

“இனி நான் தோத்துப் போனா மட்டும் தான் போன் போடுவீங்களா…?’’ என கேட்டான் கார்த்திக். அவன் குரலில் இருந்த ஏக்கம் பிருந்தாவின் மனதை அசைக்க, “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே. லாஸ்ட்  வேர்ல்ட் கப் மேட்ச் மாதிரி ஹாட்ரிக் எடுத்து மேன் ஆஃப் த மேட்ச் அவார்ட் வாங்கினாலும் கங்கிராட்ஸ் சொல்ல கண்டிப்பா கால் பண்ணுவேன்.’’ என்றாள் பிருந்தா உத்வேகமாய்.

அந்த குரலில் இருந்த உத்வேகம் கார்த்திக் இதயத்திற்குள்ளும் இடம் மாற, “குட் நைட் பிருந்தா. ஹாவ் ய ஸ்வீட் ட்ரீம்ஸ்.’’ என்றவன் அழைப்பை துண்டித்திருக்க, பிருந்தா தன் கைகளில் இருந்த அலைபேசியையே பார்த்துக் கொண்டிருதாள்.

வானின் வெளிர் நீல நிறத்தில் சுரிதார் அணிந்து , அதற்கேற்ற வெண் முத்து அணி பூட்டி, கூந்தலை தளர்வாய் தோளில் புரளவிட்டு தயாராகிக் கொண்டிருந்தாள் மித்ரா. விடுதி அறையில் படுக்கையில் உருண்டு கொண்டிருந்த அவளின் தோழி சரிகா, மித்ராவை குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மித்ரா இதழுக்கு இளம் ரோஜா நிற சாயத்தை பூசிக் கொண்டிருக்க, சரிகா “ஏண்டி…! நம்ம கோரிக்கை மனுவை கொண்டு போய் கொடுத்துட்டு வர தானே கலெக்ட்ரேட் போற. என்னவோ உன்னை பொண்ணு பாக்க வர மாதிரி ரெண்டு மணி நேரமா கண்ணாடி முன்னாடி நின்னு மேக்கப் போட்டுட்டு இருக்க.’’ என்றாள்.

தோழியை நோக்கி ஒரு மந்திரப் புன்னகையை செலுத்திய மித்ரா தான் விட்ட வேலையை தொடர்ந்தாள். “என்னமோ போ…! ஜாலியா ஓ.டி போட்டுட்டு அவுடிங் போற. விபு சார் பிராக்டிகல் கிளாஸ்ல போய் உக்காரணும்னு  நினைச்சாலே அல்லுவிடுது.’’ என்றவள் குளியலறை நோக்கி நடந்தாள்.

“அதான் நேத்தே கூட வாடின்னு உன்னை கூப்பிட்டேன். பெரிய இவ மாதிரி ஒரு பொண்ணும், ஒரு பையனும் போகட்டும்னு அந்த கோபியை என் கூட கோர்த்துவிட்ட. இப்போ அனுபவி.’’ என்றாள்.

“இன்னைக்கு பஸ்ட் கிளாஸ் விபு சாரோடதுன்னு எனக்கு நியாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல.” என்றாள் சரிகா. “சரி சரி…! ரொம்ப பீல் செய்யாத. வரும் போது உனக்கு பிடிச்ச பேபி கார்ன் வாங்கிட்டு வறேன்.’’ என்றவள் தன் கைப்பையோடு, கோரிக்கை மனுவையும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள்.

“பாத்துடி. உன் அழகுல அந்த கலெக்டர் சார் மயங்கி பொண்ணு கிண்ணு கேட்டு வந்திராம.’’ என்றாள் சரிகா. “இந்த பொண்ணு கேட்டா எல்லாம் கிடைக்காது.’’ என்றவள் தோழியை நோக்கி கண் சிமிட்டி  விட்டு, தன் பேசினோ வண்டியை நோக்கி நடந்தாள்.

Advertisement