Advertisement

பால் வீதி – 15

சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கும், ஹைதராபாத் அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது. இரு அணியின் கேப்டன்களும் டாஸ் போட்டு பார்க்க களம் காண தயாராகி இருந்தனர்.

மஞ்சள் நிற சீருடையில் தயாரான கார்த்திக், நேற்றைக்கு தான் பிருந்தாவிற்காய் அனுப்பி வைத்த பரிசுப் பொருள் குறித்து சிந்திதித்து கொண்டிருந்தான். கடந்த ஆறு மாதங்களாய் அவளை தொடர்பு கொள்ள இம்மியளவும் அவன் முயலவில்லை.

ஆனால் பெங்களூர் மண்ணை மிதித்ததில் இருந்தே அவளின் நியாபகங்கள் அவனை வட்டமிட தொடங்கின. நான்கு நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, இறுதியாய் அவளை சந்தித்த நிமிடங்கள் அவன் மனத்திரையில் வந்து செல்ல, அவள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி என்று முடிவெடுத்தவன் தன்னை அவளுக்கு நினைவூட்ட முடிவு செய்தான்.

அவளுக்காய் என்ன பரிசு பொருள் வாங்குவது என அவன் தலையை பிய்த்து கொண்டிருக்கும் போது, ஒரு பூச்செண்டு விற்கும் வாசலில் கண்ட, ‘ரோஜாக்களை விற்று ரோஜாக்களை விட உயர்ந்ததாய் என்ன வாங்கிவிட முடியும்.’ என்ற வாசகம் அவன் கவனம் ஈர்த்தது.

உடனே அவளுக்கு ரோஜாக்களை வாங்கி பரிசளிக்கலாம் என எண்ணியிருந்தான். ஆனால் ரோஜா ஒரே நாளில் வாடி விடுமே என்ற எண்ணம் வந்ததும், நாம் ஏன் தினம் பூக்கும் ஒரு ரோஜா செடியை வாங்கி பரிசளிக்க கூடாது என முடிவெடுத்தவன், எத்தகைய கால நிலையையும் தாங்கி வளரும் ஒரு ரோஜா செடியை நகரின் பிரபலமாய் இருந்த நர்சரியில் தேடி பிடித்து வாங்கி வந்தான்.

அவனது தொப்பி, மற்றும் குளிர் கண்ணாடியையும் தாண்டி சிலர் அவனை அடையாளம் காண, மீண்டும் பயிற்சி மையத்திற்குள் வந்து சேர்வதற்குள் அவனுக்கு போதும போதும் என்றானது. அவள் வேலைக்கு செல்ல தனக்கு சம்மதம் என அறிவிக்க கடைசியாய் அவளை பார்த்தது.

அதன் பிறகு, அவளின் அன்னை தான் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அழைத்து, மாப்பிள்ளை நலம் விசாரித்து கொண்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்னால் கூட அவனை அழைத்தவர், “மாப்பிள்ளை…! இந்த வாரம் உங்க விளையாட்டு நடக்குற இடம் பெங்களூராமே. அப்படியே ஒரு எட்டு பிருந்தாவை போய் பார்த்துட்டு வாங்க மாப்பிள்ளை. அது வேலை செய்ற இடத்துல இருந்து சுளுவா வெளியே விட மாட்டாங்க.’’ என்றார் தயங்கி தயங்கி.

“அதுக்கு என்ன அத்தை, கண்டிப்பா போய் பார்த்துட்டு வறேன். நேத்து போன்ல பேசும் போது கூட, அவளோட ப்ராஜக்ட் விசயமா பிசியா இருக்குறதா சொன்னா. நானும் மேட்ச் முடிஞ்சி ப்ரீ டைம் கிடைக்கும் போது கண்டிப்பா போய் பார்த்துட்டு வறேன்.’’ என்று அடித்துவிட்டான்.

அவரோடு பேசிய பிறகே, பிருந்தாவின் நினைவுகள் மேலும் நெஞ்சை முட்ட, ரோஜா செடியை வாங்கி வந்தவன், அதில் சேர்த்த அட்டையில் நான்கு வார்த்தைகள் எழுத இரவு முழுக்க சிந்தித்து சிந்தித்து அறையெல்லாம் குப்பைக் கூளம் செய்து வைத்தான்.

மிக சிரமப்பட்டே  அந்த இரு வரிகளை எழுதி முடித்தவன், இறுதியில் கையெழுத்திடும் போது தன்னையும் மீறி ஹஸ்பன்ட் ஆஃப் என குறிப்பிட்டு இருந்தான். அந்த வார்த்தைகளை வாசிக்கும் போது, அவனுக்கே அவன் குறித்து சிரிப்பாய் வந்தது.

“நம்ம டீம் பஸ்ட் பவுலிங்…’’ என அருகிருந்த ஆஸ்திரேலிய வீரன் ஒருவன் சொல்லி செல்ல, “இதோ வறேன்.’’ என்று அவனுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்த கார்த்திக், நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஒரு மட்டைப்பந்து வீரனாய் களத்தில் இறங்கினான்.

பிருந்தா அன்றைக்கு அதி முக்கிய வேலையில் இருந்தாள். இன்னும் நான்கு வருடங்கள் கழித்து விண்ணில் பறக்க கூடிய ஸ்பேஸ் ஷிப்பின் வெளிப்புற தோற்றத்தை கொண்டு அதன் இயக்கவியல் கோட்பாட்டை  சூத்திரங்களின் மூலம் நிர்மானிக்க முயன்று கொண்டிருந்தாள்.

நேரம் முடிந்ததும், எழுந்து செல்லும் வேலை அல்ல அவளுடையது. நேரம் போவதே தெரியாமல் அவள் தன் பணியில் மூழ்கியிருக்க, அவளின் அருகே ரத்தோட் சிங் வந்து அமர்ந்தான். ‘உன் வேலை இன்னும் முடியவில்லையா…?’’ என அவன் ஹிந்தியில் கேட்க, ‘முடிந்தது கிளம்ப வேண்டும்.’ என்றவளின் பார்வை கணினியிலே நிலை கொண்டிருந்தது.

தோள்களை குலுக்கி கொண்ட ரத்தோட், தன் கணினியை உயிர்பிக்க, அப்போது தான்யா உள்ளே வந்தாள். ஹைதராபாத்தை சேர்ந்த அவள், விண்வெளி ஆய்வு மையத்தில் இளம்நிலை உதவி பொறியாளர் பணியில் இருப்பவள்.

வாயெல்லாம் பல்லாக வந்தவளை கண்டு, “என்ன தான்யா…! கிஷோர் கூட அவுடிங் முடிஞ்சதா. செம எனர்ஜிடிக்கா வந்து இருக்க.’’ என்றார்.

“ஆமா அந்த மூஞ்சி ஒரு பவர் சோர்ஸ். சேர்ந்து போனா என் மூஞ்சில பல்ப் எரிய. இது வேற விஷயம் சிங்.’’ என்றாள்.

“அப்படி என்னமா விஷயம்.’’ என்றார் அவர். “இன்னைக்கு நடந்த பஸ்ட் டி- ட்வண்டி மேட்ச்ல ஹைதராபாத் சன் ரைசர்ஸ் வின் செஞ்சிட்டாங்க. சி. எஸ்.கே சரியான டப் கொடுத்தாங்க தான். ஆனா வழக்கமா பின்னி பெடல் எடுக்குற கார்த்திக் இந்த முறை ரெண்டு வாட்டி கேட்ச் மிஸ் செஞ்சிட்டான். பவுலிங்கும் பெருசா ஒண்ணும் இல்ல. பேட்டிங்லயும் சரியான சொதப்பல். அதனால எங்க டீம் பொழைச்சது. ஜெயிச்சது நாலு ரன் வித்யாசத்துல தான். எப்படி இருந்தாலும் ஜெயிச்சிட்டோம்ல.’’ தான்யா உற்சாகத்தில் பொங்கிக் கொண்டிருந்தாள்.

அதுவரை தேமே என்று தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா, கார்த்திக் என்ற வார்த்தை வெளிப்பட்டதும் நடந்து கொண்டிருந்த கலந்துரையாடலை கவனிக்க தொடங்கினாள். பிருந்தாவிற்கு பெரிதாய் மட்டைப் பந்தாட்டதின் மீது பிரியம் இருந்ததில்லை.

ரத்தோட்டிடம் வளவளத்துக் கொண்டிருந்தவளை, திருப்பி பார்த்து முறைத்த பிருந்தா, “கிடைச்ச ஒரு நாள் அவுடிங்கையும் கிரிக்கெட் பாக்க போய் வேஸ்ட் செஞ்சிட்டு வந்துட்டியா.’’ என்றாள்.

“நீங்க லீவ் கொடுத்தாலும், இங்கயே உக்காந்து ரிசர்ச் ஜர்னல்ஸ் ரீட் செஞ்சிட்டு இருப்பீங்க. உங்க ஜென் நிலை எல்லாம் எனக்கு இல்லை மேம். நான் எல்லாம் சாதாரண மனுசி. லீவ் விட்டா, ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு, ஜாலியா டி- டிவண்டி கிரிக்கெட் பார்த்துட்டு, பாய் பிரண்ட் கூட பைக்ல சிட்டிய நாலு ரவுண்ட் வந்துட்டு, பைனலா ரெண்டு குல்பி வாங்கி சாப்பிட்டு வர ஆளு. உங்களை மாதிரி சாமியார் வாழ்க்கை எல்லாம் எனக்கு செட் ஆகாது.’’ என்றவள் தன் இருக்கைக்கு சென்று கணினியை உயிர்ப்பித்தாள்.

ரத்தோட் இதழ்களுக்குள் புன்னகையை அடக்க, தலையை உலுக்கி கொண்ட பிருந்தா, தன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு, அங்கிருந்து எழுந்தாள். அதற்கு மேல் கவனத்தை குவித்து வேலை பார்க்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

“என்ன இருந்தாலும் அவங்க மதராசி தானே. சென்னை தோத்தா வலிக்க தான் செய்யும்.’’ என்று அதற்கும் கேலியில் இறங்கினாள் தன்யா. பிருந்தா பதில் ஏதும் சொல்லவில்லை. மடமடவென்று தன் பொருட்களை சேகரித்தவள், தன் குடியிருப்பிற்கு கிளம்பியிருந்தாள்.

வீட்டை வந்து சேர எடுத்துக் கொண்ட அரை மணி நேரமும், கார்த்திக் தான் அவள் சிந்தையில் நிறைந்து இருந்தான். ஆறு மாதங்களுக்கு முன்னால் அவள் கேட்டுக் கொண்டபடி, தன் அன்னையிடம் பணிக்கு செல்ல ஒப்புதல் வாங்கி தர வந்திருந்தவன், அதன் பிறகு எந்த சூழலிலும் அவளை தொடர்பு கொள்ள முயலவில்லை.

இந்த ஆறு மாதங்களில் மாதம் ஒருமுறை வீட்டிற்கும், திருவிற்கும் அழைத்து பேசி இருந்தாள். பொதுவாகவே அலைபேசியை தகவல் பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகப்படுத்தும் அதிசய பிறவி பிருந்தா.

வீட்டை அடைந்ததும், பூட்டை திறக்கையில் காலையில் தலை தொங்கி இருந்த ரோஜா செடி, தற்சமயம் வீசும் தென்றலுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தது. நுனியில் மொட்டாக இருந்த ரோஜாவை லேசாக வருடிக் கொடுத்தவள், வீட்டிற்குள் நுழைந்ததும், அலைபேசியை கையில் எடுத்து  வைத்து அமர்ந்து கொண்டாள்.

தனக்கு உதவி என்று தேவைப்பட்ட போது, தான் கேட்டதையும், கேட்காததையும் சேர்த்து செய்த அவன் பெருந்தன்மையை எண்ணிக் கொண்டவள், தற்சமயம் அவன் வருந்தமாய் இருக்க கூடும் என்பதை உணர்ந்து, ஆறுதல் சொல்வதில் பிழை ஏதும் வந்துவிடப் போவதில்லை என தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன் மித்ரா கொடுத்த அவன் அண்ணனின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுப்பதா..? வேண்டாமா…? என்ற குழப்பத்தோடு அந்த எண்ணின் மீது கையை கொண்டு செல்வதும் பின் எடுப்பதுமாக அமர்ந்திருந்தாள்.

Advertisement