Advertisement

பால் வீதி – 14 

அலுவலகத்தில் அமர்ந்தபடி தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் திரு. ஆறு மாதங்கள். நெடிய ஆறு மாதங்கள். அவளைப் பார்த்து அவளிடம் பேசி ஆறு மாதங்கள் கடந்திருந்தது. 

தற்சமயம் கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருந்தான். ‘எனக்கு உன்னை பிடிக்கும்.’ என்ற செய்தியை பகிர கூட அவனால் முடியாது போனது. மித்ராவை பார்க்கும் போதே ஏதோ ஒரு அழுத்தம் அவனை  ஆக்ரமிக்க, நாவு மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது. 

இதற்கு இடையில்  சகி என்ற முகநூல் பக்கத்தில் இருந்து வரும் செய்திகள் வேறு அவன் சிந்தை கலைத்து கொண்டிருந்தது. தினம் அவன் எண்ணத்திற்கு ஏற்ப குறுங்கவிதைகள் முகநூல் தூதுவன் வழி வந்து விழும். 

சில நாட்கள் உற்சாகமாய், சில நாட்கள் அவன் தயக்கத்தை கேலி செய்வதை போல, சில நாட்கள் அவனுள் தன்னம்பிக்கையை விதைக்கும் விதமாய். சில நாட்கள் யார் என கேட்டு சலித்தவன், பின்பு கேட்பதை நிறுத்தி இருந்தான். 

ஆனாலும் அந்த கவிதைகள் அவனுக்குள் ஒரு இளைப்பாறுதலை கொடுக்க, தினம் காலை அக்கவிதைகளை எதிர்பார்க்க தொடங்கினான்.அவன் நினைத்தால் இரண்டே நொடிகளில் அந்த போலிக் கணக்கு யாருடையது என்று கண்டறிந்திருக்க முடியும். 

ஆனாலும் தன்னை குறித்து தெரிந்த யாரோ தான் கவிதையின் வழி விளையாடிக் கொண்டிருகிறார்கள் என்பதை உணர்ந்தவன், அறியாமையின் அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். 

அவன் தனக்குள் மூழ்கி இருந்த வேளையில், “சார்…!’’ என்று அவனை இடைமறித்தார் அவனின் உதவியாளர்.  திரு அவரை என்ன என்பதை போல பார்க்க, “சார்…! அண்ணாமலை யுனிவர்சிட்டி எம்.பி.பி.எஸ் பசங்க உள்ளிருப்பு போராட்டம் செஞ்சிட்டு இருக்காங்க. விஷயம் மீடியாவரை போய் ரொம்ப பெருசாயிடுச்சு. நாம கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தினா பிரச்சனை கொஞ்சம் கண்ட்ரோல் செய்ய முடியும்னு அட்மின் சைட்ல பீல் பண்றாங்க. போராட்டம் தொடர்ந்தா அடுத்து மினிஸ்ட்ரி லெவல்ல பிரசர் வரும் சர்ர்.’’ என்றார். 

சில நாட்களாக நடைபெற்று வரும் அந்த உள்ளிருப்பு போராட்டத்தை திருவும் கவனித்து கொண்டு தான் இருந்தான். சுமார் மூன்று வருடங்களுக்கு முன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்த்த பயிற்சிகளை அரசு தன்னுடமை செய்து கொண்டது. 

அதனால் அங்கே புதிதாய் இணைந்த மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், வெறும் பத்தாயிரம் மட்டுமே. ஆனால் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் பயிலும் நான்காம் வருட மாணவ, மாணவியர்கள் சுமார் நான்கு இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. 

ஒரே கல்லூரியில் பயிலும் மாணவர்களின் இந்த கட்டண வேறுபாட்டை கண்டித்து மாணவ, மாணவியர் தினம் ஒரு அறப் போராட்டத்தை முன் நடத்திக் கொண்டிருந்தனர். திரு பிரச்சனையை ஆராய்ந்த வரையில், அண்ணாமலை நிர்வாகத்திற்கு உட்பட்ட மாணவர்கள் அவர்கள் விதிக்கும் கல்விக் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். 

அதே நேரம்,அரசு தன்னுடமை செய்வதற்கு முன் இணைந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. இதை மாணவர்களுக்கு புரிய வைத்து போராட்டத்தை எப்படி வலுவிழக்க வைப்பது என்ற சிந்தையில் இருந்த திரு, “சரி. ஈவ்னிங் போய் நேரடியா பேசிட்டு வரலாம். ஸ்டூடண்ட்ஸ் லீடர் யாருன்னு விசாரிச்சி வையுங்க தரணி. வாட்டர் கமிட்டி ரிப்போர்ட்ஸ் கொண்டு வந்து கொடுங்க. மதியம் மீட்டிங் இருக்கு இல்ல. எனக்கு ரிமைன் செஞ்சிடுங்க.’’ என்றதும் தரணி சரி என்று தலை அசைத்து விடைபெற்றார். 

அதற்கு பின் தினசரி வேலைகள் அவனை உள் இழுத்துக் கொண்டன. மாலை அவன் கிளம்பும் முன்னே சுகாதாரத்துறை அமைச்சரும் அவ்விடம் வருவதாக அவனுக்கு தகவல் வந்தது. தரணியிடம், “டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் செஞ்சீங்களா…?’’ என கேட்க, தரணி திருவிடம் கோப்பு ஒன்றை நீட்டினான். 

திரு வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அது அண்ணாமலை பல்கலைக்கழகம் நோக்கி பறந்தது. திரு தன் கையில் இருந்த கோப்பில் கவனத்தை பதித்திருந்தான். அதில் தற்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், பொருளாதார நிலையோடு குறிப்பிடப்பட்டிருந்தது. 

சிலர் மட்டும் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாய் இருக்க, பெரும்பான்மையானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாய் இருந்தனர். தற்சமயம் திருவிற்கு அந்த போராட்டத்தின் காரணம் புரிந்தது. 

ஆண்டிற்கு 4 இலட்சம் கட்டணம் என்றாலும், அதையும் அவர்கள் சில வங்கிகளில் கடன் வாங்கியே செலுத்தி இருந்தனர். இதில் இனி தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று உணர்ந்தவன், முடிவை ஏற்றுக் கொள்ள மனதை தயார்படுத்திக் கொண்டான். 

அவன் கல்லூரி வளாகத்தை அடையும் போது, போராட்டம் தீவிரப்பட்டிருந்தது. மாணவ மாணவியர் அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து, முகத்தில் வெண்மை நிற சாயம் பூசி, கண்களில் மட்டும் மையிட்டு இருந்தனர். 

‘மைம்ஸ்…’ என்று சொல்லப்படுகின்ற கதாபாத்திரங்களாய் மாறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, திரு சென்று இறங்கியதும் அங்கு பரபரப்பு தொற்றியது. அவன் களத்தை நெருங்க நெருங்க, நெருங்க கோசங்களின் ஒலி அடர்த்தி வலுப்பட்டது. 

திரு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தானும் சென்று அமர்ந்தான். அவனின் அந்த செய்கை அவர்களின் ஆவேசத்தை மட்டுப்படுத்த, மாணவர்கள் அமைதியாகினர். 

அனைவரும் மாணவர் தலைவனான முகிலை பார்க்க, “என்ன சார்…! நீங்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்து இருக்கீங்களா…? ரொம்ப சந்தோசம்.’’ என்றான் நக்கலாய். 

அவனை நிமிர்ந்து பார்த்த திரு, “ஹாய் முகில்…! உனக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை உன் பிரண்ட்ஸ்கிட்ட ஷேர் செய்யாம வீணா அவங்க நேரத்தையும், உழைப்பையும் வீண் செஞ்சிட்டு இருக்க. ஈஸ் இட் ரைட்.’’ என்றான். 

முகில் கோபமாய் திருவை பார்க்க, பொறுமையாய் ஒலிப்பெருக்கி இருந்த இடம் நோக்கி நடந்தவன், “டியர் ஸ்டூடன்ஸ். பஸ்ட் டைம் நீங்க ஸ்ட்ரைக் ஸ்டார்ட் செஞ்சப்பவே கவர்மென்ட் தன்னோட  நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவா உங்க லீடரை கூப்பிட்டு விளக்கிட்டாங்க. ஆனாலும் ரியாலிடியை நீங்க எத்துக்காம இப்படி ஸ்ட்ரைக் செஞ்சிட்டு இருந்தா உங்க நேரமும், படிப்பும் தான் வீணாப் போகும். உங்க அட்டனஸ் எண்பது சதவீதத்துக்கு கீழ குறைஞ்சா உங்களால தியரி எக்ஸாம்ஸ் எழுத முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். நிர்வாகத்துக்கிட்ட கெஞ்சிட்டு இருக்க நேரம், நீங்க உங்க மேல நம்பிக்கை வச்சி படிச்சா… கண்டிப்பா இந்த பொருளாதாரப் பிரச்சனையில இருந்து உங்களால மீண்டு வர முடியும். அதுக்கு நானே ஒரு உதாரணம்.’’ என்றவன் மாணவர்களை நோக்கி ஒரு புன்னகையை செலுத்திவிட்டு மீண்டும் தன் வாகனத்தை நோக்கி நடந்திருந்தான். 

அவன் வாகனத்திற்குள் ஏறி அமரவும், அவன் அருகில் வந்த தரணி, “ஆல் செட் சார்.’’ என்று கைகளை உயர்த்தி காண்பித்தான். அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்னே திரு, ஏன் இவர்களின் கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடியாது என்பதை தெளிவாக பேசி, அதோட தேவைப்படுபவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத் தர முடியும் என்பதையும் ஒரு காணொளியாக பேசி இருந்தான். 

அந்த காணொளி, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு மாணவ மாணவியரின் பெற்றோர்களின் தனிப்பட்ட புலன எண்ணிற்கு (வாட்ஸ் அப்) அனுப்பிவைக்கப்பட, நிதர்சனத்தை புரிந்து  கொண்ட அவர்கள், தங்கள் பிள்ளைகளை உடனே கலைந்து செல்ல சொல்லி, அலைபேசியில் அழைத்து வற்புறுத்த தொடங்கினர். 

மாணவர் மத்தியில் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் ஏதேனும் லாபம் பார்க்கலாம் என நரிகள் போல காத்துக் கொண்டிருந்த நிர்வாகத்திற்கு எதிரான சங்கங்கள் இதனால் ஏமாந்து போயின. 

அமைச்சர் அங்கு வந்து சேரும் போது, போராட்டம் நடந்ததற்க்கான சாயலின்றி கல்லூரி வளாகம் வெறிச்சோடி கிடந்தது. திரு அவரை வரவேற்க, “என்னய்யா செஞ்ச நீ…? நாங்களும் நாலு நாளா வித விதமா பேசிப் பார்த்தோம். ஒரு பய மசியல.’’ என விவரம் கேட்டார். 

அவர்களின் அருகில் நடந்து கொண்டிருந்த தரணி, திருவின் நடவடிக்கை குறிந்து எடுத்து சொல்ல, “சரியான மூளைக்கார பய தான் நீ.’’ என்றவர் திருவின் ஊர் படிப்பு குறிந்து விசாரித்துக் கொண்டிருக்க, அவர்களை கல்லூரியின் முதல்வர் வரவேற்று அவரின் அறைக்கு அழைத்து சென்றார். 

கல்லூரிக்கு அமைச்சர் வருகை தரவிருக்கிறார் என அறிந்ததும், களத்தில் இருந்த பல்வேறு சங்கங்கள் கோரிக்கை மனுவோடு அவரை சந்திக்க காத்திருந்தன. 

இலகுவாக கல்லூரி முதல்வரிடம் உரையாடியபடி, தன்னை சந்திக்க வந்த மருத்துவ, செவிலிய சங்கங்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். அவர்களை தொடர்ந்து மாணவ சங்கங்களும் அவரை சந்திக்க காத்திருந்தன. 

முதலில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், தங்களுக்கு சம்பளம் வருவதில்லை என மனு கொடுக்க, அதை தொடர்ந்து, முதுநிலை செவிலியர்களும் மனு கொடுத்தனர். அவர்களின் குறைகளை கேட்ட அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார். 

அதுவரை இலகுவாக அமர்ந்திருந்த திரு, இயன்முறை முதுநிலை மாணவியர் தலைவி என்ற அறிமுகத்தோடு உள்ளே வந்த மித்ராவை கண்டதும் பரபரப்புற்றான். “சொல்லுங்கம்மா…’’ என அமைச்சர் மித்ராவிடம் பேச, திருவின் விழிகளோ மேலும் மேலும் மெருகேறி சுடர்விட்டு ஒளிர்ந்த அவளின் தீட்சண்ய விழிகளில் பதிந்திருந்தது. 

“சார். பிசியோ பி.ஜி ஸ்டூடன்ஸ்ல நாங்க தான் சார் கவர்மென்ட்ல இங்க பஸ்ட் பேட்ச். எம்.எம்.சி பி.ஜி ஸ்டூடண்ட்ஸ்க்கு கொடுக்குற மாதிரி மன்த்லி ஸ்டைபென்ட் இங்க எங்களுக்கு கொடுக்குறது இல்லை சார். நாங்களும் கிளினிகல் ஏரியால பேசன்ட்ஸ்க்கு சர்வீஸ் செய்றோம் சார். ஏற்கனவே மூணு தடவைக்கு மேல டி.எம்.ஈல ( Department of Medical Education)  ரிக்வஸ்ட் லெட்டர் கொடுத்தாச்சு சார். நிறைய ஸ்டூடண்ட்ஸ் வில்லேஜ் பேக்ரவுண்ட்ல, கஷ்டப்படுற குடும்பத்தை சேர்ந்தவங்க சார். இந்த மன்த்லி ஸ்டைபன்ட் கிடைச்சா அது அவங்களுக்கு உதவியா இருக்கும் சார்.’’ என்றாள். 

அவளின் கோரிக்கையை பொறுமையாக கேட்ட அமைச்சர், “நான் டி.எம்.யில பேசுறேன் மா. எதுக்கும் நீங்க உங்க ஹாஸ்பிடல் டீன் மூலமா ஒரு கோரிக்கை மனுவை எனக்கு அனுப்பி வைங்க.’’ என்றவர் மித்ரா கொடுத்த கடிதத்தை திருவின் கரத்தில் கொடுத்து, “இதை எனக்கு கொஞ்சம் நியாபகப்படுத்துப்பா.’’ என்றார். 

மித்ரா திருவின் இருப்பை முழுமையாக உணர்ந்தாள். ஆயினும் அவன் பக்கமே திரும்பாமல், கருமமே கண்ணாக அமைச்சரை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் திருவோ மற்றவர்கள் குறித்து கவலைக் கொள்ளாமல், மித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“தம்பி…’’ என அமைச்சர் இருமுறை அழைக்கவும் கனவில் இருந்து விழிப்பவன் போல, “சார்…’’ என்றான் திரு. ‘என்னாச்சு இவனுக்கு’ என்பதை போல அவனை பார்த்து வைத்தவர், “தம்பி உங்ககிட்ட கொடுத்து இருக்க கோரிக்கை மனு எல்லாம் ஸ்டூடன்ட்ஸ் சம்மந்தப்பட்ட விஷயம். திங்கட்கிழமை போன் போட்டு எனக்கு கொஞ்சம் நியாபகப்படுத்துங்க.” எனவும் ‘சரி’ என்பதாய் தலை அசைத்து வைத்தான். 

அவர்கள் புறப்படும் நேரம் வந்ததும், அமைச்சர் முதலில் கிளம்பினார். கல்லூரி முதல்வர், திருவும் கிளம்புவான் என்ற எதிர்பார்ப்பில் வாயிலில் நின்றார். தன் வாகனம் வரை நடந்து சென்றவன், சற்றே தொலைவில் தன் தோழிகளோடு உரையாடிக் கொண்டிருந்த மித்ராவை கண்டான். 

ஒரு அறிமுகப் பார்வையை கொடுத்திருந்தாலாவது அவன் மனம் சமன்பட்டிருக்கக் கூடும். அவள் அவன் புறமே திரும்பாதது வழக்கம் போல தன்னை ஒதுக்கி வைக்கிறாள் என்ற எண்ணத்தை அவனுள் வலுவாக விதைத்து. 

அது அவனின் உள் அகந்தையை வலுவாக தூண்டிவிட, “சார்…! பைனலா ஒரு ஸ்டூடன்ட் ரிக்வஸ்ட் லெட்டர் கொண்டு வந்தாங்க இல்ல. அவங்களை கொஞ்சம் கூப்பிடுங்க.’’ என்றான். 

முதல்வர் தன் அருகில் இருந்த உதவியாளரை பார்க்க, “அந்த எம்.பி.டி பொண்ணு சார்..’’ என்றவர் சொன்னதோடு அல்லாமல், வேகமாய் ஓடிப் போய் மித்ராவை ஆட்சியர் அழைப்பதாக சொல்லி அழைத்தார். 

மித்ராவின் முகத்தில், ‘இப்போ எதுக்கு கூப்பிடுறார்…?’ என்ற குழப்பம் தோன்றினாலும், முகத்தில் இறுக்கத்தை ஒட்ட வைத்தவள், அவன் இருந்த இடம் நோக்கி நடந்தாள். மித்ரா தன் அருகில் வரவும், வேகமாக வாகனத்தினுள் ஏறி அமர்ந்தான். 

தான் ஒரு ஆட்சியர் என்ற அதிகாரத் தோரணையை குரலில் தேக்கி, “உங்க பேர் என்ன..?’’ என்றான் திரு. முகத்தை நிர்மலமாக வைத்துக் கொண்ட மித்ரா, “மித்ரா சார்…’’ என்றாள். “ம்…’’ என்று பொதுமையாய் தலை அசைத்தவன், “நாளைக்கு உங்க ஸ்டூடன்ஸ் டீடைல்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு கலெக்ட்ரேட்ல வந்து என்னைப் பாருங்க.’’ என்றான். 

மித்ரா ‘சரி’ என்பதாய் தலை அசைக்கவும், திரு தரணிக்கு சைகை காட்ட வாகனம் உயிர் பெற்று அங்கிருந்து கிளம்பியது. அவன் கிளம்பும் வரை இறுகி இருந்த மித்ராவின் முகம், அந்த வாகனம் மறையவும் பெரிதாய் புன்னகையில் மலர்ந்தது. 

வாகனத்தில் அமர்ந்திருந்த திரு பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவங்களால் அவன் தன் மாமா குடும்பத்தினரோடு இருந்த தொடர்பை முற்றிலும் நிறுத்தி இருந்தான்.  

அவன் பெற்றவர்களும் சரியாய் அவனோடு பேசுவதில்லை. இன்பன் மட்டும் தான் அவ்வப்போது வீட்டு நடப்பை அறிவிப்பான். மித்ராவை நினைவுகள் மனதில் எழும் போதெல்லாம், “உங்களை என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாது.’’ என்று முகத்திற்கு நேரே தீட்சண்யமாய் மறுத்த அவளின் முகம் தோன்றி மறையும். 

சற்று நேரம் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், அலைபேசியை கையில் எடுத்து வெகு நாட்களாய் காணாது கட்டுப்பாடோடு தவிர்த்துக் கொண்டிருந்த மித்ராவின் முகநூல் பக்கத்தை திறந்தான். 

இரு மாதங்களுக்கு முன்னால் தான் முதுநிலை விளையாட்டு துறை இயன்முறை கல்வியில் இணைந்ததை கல்லூரி முகப்போடு சுயமி எடுத்து முகநூலில் அறிவித்து இருந்தாள். 

அந்தப் புகைப்படத்தையே விழி அகற்றாது திரு பார்த்துக் கொண்டிருந்தான். ஆறு வருடங்களுக்கு முன் தான் மிரட்டிய சிறு பெண் எங்கோ தொலைந்து அறிவும், தெளிவும் கொண்ட மங்கையாக காட்சி தந்தாள் மித்ரா. 

‘மித்து…’ மிக மிருதுவாய் அவள் பெயரை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் திரு. அதே நேரம் சகி என்ற முகநூல் பக்கத்தில் இருந்து அவனுக்கு செய்தி வந்திருப்பதாய் முகநூல் தூது செயலி அறிவித்தது. திரு யோசனையில் இடுங்கிய புருவங்களோடு அந்த செயலியை திறந்தான். 

‘சதிராட களம் காணும் சாணக்கியனே 

சகி காணும் காலம் வாய்க்கவில்லையோ..?’ என செய்தி வந்திருக்க, சற்று நேரம் சிந்தித்தவன், 

‘மேக திரையில் இருந்து நிலவே வெளிவர காத்திருக்குது என் நட்பின் வானம்.’ என பதில் கொடுத்து அவள் தனக்கு தோழி தான் என்பதை ஆழமாய் பதிவு செய்தான் திரு.  அவனின் பதில் கண்ட மித்ரா, ‘சரியான கேடி அத்தான்.’ என மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.  

பெங்களூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தன் குடியிருப்பில் தனக்கான உணவை சமைத்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அப்போது யாரோ கதவை தட்ட, “வருகிறேன்…’’ என ஆங்கிலத்தில் உரைத்தவள் வேகமாய் சென்று கதவை திறக்க, வெளியே பணிக் காவலர் நின்று கொண்டிருந்தார். 

“என்ன..’’ என அவரிடம் இந்தியில் வினவ, “உங்களுக்கு வந்த பரிசு…’’ என ஒற்றை ரோஜா செடியை அவளிடம் நீட்டினார் அக்காவலர். அங்கு தருவிக்கப்படும் அனைத்து பொருட்களும் சோதனைக்கு உட்பட்டே உள்ளே அனுமதிக்கப்படும் என்பதால், அந்த ரோஜா செடியையும் சோதனையில் கிண்டி கிளறி இருந்தனர். 

அதன் வேர் வரை அடிவாங்கியிருக்க, இனி நான் பிழைக்கமாட்டேன் என்பதை போல சோகமாய் தலை தாழ்ந்திருந்து அந்த குட்டி இளமஞ்சள் நிற ரோஜா செடி. 

‘எந்த முட்டாள் இங்கு செடியை பரிசாக அனுப்பியது.’ என தனக்குள் நொந்து கொண்டவள், ஒரு நன்றியை காவலருக்கு தெரிவித்துவிட்டு, செடியை பெற்றுக் கொண்டாள். 

அப்போது தான் ரோஜா தொட்டியின் கீழ் இருந்த துண்டு சீட்டை கவனித்தாள் பிருந்தா. அதில், “ஒரு நாளில் வாடிடும் ரோஜாவல்ல என் நேசம். தினம் தினம் பூத்து குலுங்க காத்திருக்கும் பேரன்பு அது.’’ என்ற வாக்கியங்களுக்கு கீழ், கார்த்திக் ஹஸ்பன்ட் ஆஃப் பிருந்தா என கையெழுத்திட்டு அனுப்பி இருந்தான். 

என்ன முயன்றும் ஹஸ்பன்ட் ஆஃப் என்ற வார்த்தைகளை படித்தவுடன் பிருந்தாவின் முகம் அடக்க முடியாத புன்னகையில் விரிந்தது.

காதல் சதிராட்டத்தில் நால்வரையும் தள்ளி பின் அவர்களை தள்ளாட வைக்க காத்திருந்த காலம், மெதுவாய் பொதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. 

பால் வீதி வளரும்.  

 

 

 

Advertisement