Advertisement

“அதெல்லாம் கலெக்டர் சார் அவர் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார். அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாம போகலாம்.’’ என்றவன் முன்னால் நடக்க, மித்து அவன் வேகத்தில் அவன் பின் ஓடினாள். 

திரு கேட்க முடியாத தூரம் வந்ததும், “பிருந்தா என்ன சொன்னாங்க.’’ என்றாள். அதற்குள் அவர்கள் வாகனத்தை நெருங்கியவன், யாரிடம் கோபத்தை காட்டுவது எனப் புரியாமல், காரின் முகப்பில் ஓங்கி குத்தினான். 

தமையனின் கோபம் கொண்ட மித்து பயந்து பின்னால் நகர, தன் கோபம் அவளை பாதிக்கிறது என்பதை உணர்ந்தவன், “ஒண்ணும் இல்ல மித்து. சாரி… ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல். வீட்டுக்கு போய் அப்பா மடியில கொஞ்ச நேரம் படுத்து இருந்தா சரி ஆயிடும்.’’ என்றவனை கண்டு அவள் குழம்பி போய் தலை அசைக்க, அடுத்த நொடி அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். 

அதன் பிறகு கார்த்திக் அவளை காண முயலவில்லை. இரு நாட்கள் கழித்து, மித்து தயங்கியபடி கார்த்திக்கிடம் வந்து, “அவங்க தாலி என்கிட்ட தான் இருக்கு.’’ என்றாள்.  குரலில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத கார்த்திக், “நீயே போய் அவங்ககிட்ட கொடுத்திட்டு, அண்ணா சொன்ன டைம் முடிஞ்சதும் வாங்கிப்பேன்னு சொல்லி கொடுத்துட்டு வந்துடு.’’ என்றான். 

தமையனை நன்றாக பிருந்தா வருத்தி இருக்கிறாள் என்பதை புரிந்து மித்து அவனுக்காய் வருந்தினாள். கார்த்திக் கூறியபடி பிருந்தாவை தனிமையில் சந்தித்தவள், அவன் கூறிய செய்தியை அறிவிக்க, அந்த தாலியை வாங்கி கொண்ட பிருந்தா, “அம்மா எதாச்சும் பிரச்சனை செஞ்சா அவசரத்துக்கு உதவும். டைம் கேட்டதுக்கு உங்க அண்ணனுக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க.’’ என்றவள் தாலியை பத்திரப்படுத்திக் கொண்டாள். 

மித்ரா அங்கிருந்து கிளம்ப முனைய, “நாளைக்கு ஒரு நாள் மட்டும் உங்க அண்ணாவை ஹாஸ்பிடல் வர சொல்ல முடியுமா…? மாப்பிள்ளை சொன்னா தான் எங்க அம்மா என்னை வேலைக்கு அனுப்புவாங்க.’’ என்றாள் பிருந்தா. 

“அண்ணாகிட்ட சொல்றேன்.’’ என்றவள் கதவு வரை சென்று விட்டு, ஏதோ தோன்றியவளாக மீண்டும் அவளிடம் வந்து, “அண்ணா நம்பர் தரேன்.. சேவ் செஞ்சிக்கோங்க. நான் நைட் ஊருக்கு போறேன். நீங்க எது சொல்லணும்னாலும் ஸ்ட்ரைட்டா அவர்கிட்ட பேசிக்கலாம்.’’ என்றவள் கார்த்தியின் அலைபேசி எண்ணை பிருந்தாவிடம் பகிர்ந்து விட்டு வந்தாள். 

பால்கி பிருந்தா குறிந்து பேச வந்த போது,”பார்த்துக்கலாம்பா… கொஞ்ச நாள் போகட்டும். அந்த பொண்ணுக்கு வேற மாதிரி எண்ணம் இருந்தா நாம கம்ப்பல் செய்ய கூடாது.’’ என்றவன் மேற்கொண்டு அது குறித்து பேசாததோடு, வீட்டில் இருந்து யாரும் மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை எனவும் நிறுத்தி வைத்திருந்தான். 

அன்றைக்கு மொட்டை மாடியில் வெறும் தரையில் படுத்திருந்தான் கார்த்திக். தன்னை நோக்கி கண் சிமிட்டிய விண் மீன்களை பார்த்துக் கொண்டிருந்தவன், ‘அவள் காதலிப்பது இந்த பால்வெளியை தானே…’ என தன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தான். 

அந்த நேரம் அவன் அலைபேசி இசைக்க, திரையில் மின்னிய புது எண்ணை கண்டவன், யார் என்ற குழப்பத்தோடு அழைப்பை ஏற்றான். மறுமுனையில் பிருந்தா, “ஹெலோ கார்த்திக்…!’’ என அழைக்க, பட்டென எழுந்து அமர்ந்தவன், “சொல்லுங்க பிருந்தா. ஆர் யூ ஆல்ரைட். ஏதாச்சும் வேணுமா. ஹாஸ்பிடல் வரவா…?’’ என்று கேட்டபடி எழுந்து நடக்க தொடங்கி இருந்தான். 

“ஐயோ கார்த்திக். அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க சிக்ஸ் மன்த் டைம் கேட்டதால நானும் எதையும் வீட்ல சொல்லல. அதோட அம்மா நான் சொல்ற எதையும் புரிஞ்சிக்காம அழுது தீர்ப்பாங்க. அவங்களை வருத்தப்படுத்திட்டு வேலைக்கு போகவும் கஷ்டமா இருக்கு. நாளைக்கு ஹாஸ்பிடல்ல டிஸ்சார்ஜ் சொல்லி இருக்காங்க. நான் டூ வீக்ஸ்ல ஜாப் ஜாயின் செய்யணும். சோ நீங்க நாளைக்கு வந்து, எங்க அம்மாகிட்ட நான் வேலைக்கு போறதுக்கு பர்மிசன் கொடுத்துட்டு போகணும். அப்போ தான் அம்மா ஆர்பாட்டம் செய்யாம என்னை வேலைக்கு அனுப்புவாங்க.’’ என்றாள். 

அவள் பேசுவதை முழுதாய் கேட்டவன், “ஓகே. நாளைக்கு எனக்கும் ப்ராக்டீஸ் இருக்கு. ஈவ்னிங் த்ரீ உங்களுக்கு ஓகே வா.’’ என்றான். பிருந்தா, “சரியா இருக்கும்.’’ என்றதும், “ஓகே பிருந்தா பாய்…’’ என்றவன் அழைப்பை துண்டித்தான். 

 

அடுத்த நாள் மாலை கார்த்திக் மருத்துவமைக்கு கிளம்பினான். பிருந்தாவின் அறையில் அவள் மட்டுமே இருந்தாள். அடி வயிற்றை ஒற்றை கையால் பற்றிக் கொண்டு அசௌகர்யமாய் அமர்ந்திருந்தாள். 

கார்த்திக் கதவை தட்டி விட்டு உள் நுழைய, வரவேற்பாய் தலை அசைத்தவள், “அண்ணா வீட்டுக்கு போயிருக்காங்க. என் திங்க்ஸ் எடுத்துட்டு வர. அம்மா பார்மசிக்கு மருந்து வாங்க போயிருக்காங்க.’’ என்றாள். 

“ம்.’’ என்றவன் அருகிருந்த இருக்கையில் அமர்ந்தபடி, “நீங்க ஏன் ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா உக்காந்து இருக்கீங்க. எதாச்சும் ப்ராப்ளமா. டாக்டர் வர சொல்லவா…?’’ என்றான். 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லா பொண்ணுங்களுக்கும் வர மன்த்லி இஸ்யூஸ் தான். இங்க கொஞ்சம் அன் ப்ரிப்பேர்டா இருந்தாச்சு. அதான். வேற ஒண்ணும் இல்ல.’’ என்றவள் மீண்டும் படுக்கையில் நெளித்தபடி அமர்ந்திருந்தாள். 

“ஓ… நான் வெளிய இருக்கேன். அம்மா வந்ததும் கால் பண்ணுங்க.’’ என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல், வெளியேறி இருந்தான். உடனே தங்கைக்கு அழைத்தவன், அவள் அழைப்பை ஏற்கவும், “மித்து பயோ சானிடரி நாப்கின்ஸ்ல எது பெஸ்ட்.’’ என கேட்க, அவன் கேள்வியில் சற்று குழப்பியவள், “அது எதுக்கு உனக்கு..?’’ என்றாள். 

“என்னை கேள்வி கேக்கமா பதில் சொல்லு.’’ என்றான். மித்துவும் தனக்கு தெரிந்த இயற்கை அணையாடையின் பெயரை சொல்ல, அங்கிருந்த மருந்தகத்தில் அவன் கேட்ட பொருள் கிடைக்கவில்லை. 

உடனே வாகனத்தை எடுத்துக் கொண்டு, அது கிடைக்க கூடிய இடத்திற்கு சென்று, அந்த அணையாடையை வாங்கியவன், அதை எடுத்துக் கொண்டு அறைக்கு திரும்பினான். தற்சமயம் அறையில் வெண்ணிலா இருக்க, வந்தவனை வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். 

யார் கவனத்தையும் கவராது தன் கையில் இருந்த கருப்பு நிற நெகிழிப்பையை பிருந்தாவின் பக்கம் வைத்தவன், வெண்ணிலாவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். கார்த்திக்  வைத்த பையின் கருமை நிறத்தை வைத்தே, உள்ளே என்ன இருக்கும் என்று ஊகித்த பிருந்தாவின் இதழ்களில் சிரிப்பு குமிழிட்டது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாது என்ன வாங்கி வந்திருக்கிறான் என எடுத்துப் பார்த்தாள். 

‘பரவாயில்ல ஏதோ ஆர்கானிக் பேட்ஸ்..’ என்று எண்ணிக் கொண்டவள், அப்படியே அமர்ந்திருக்க, “நாம வெளியே போய் காத்தோட்டமா பேசலாம் அத்தை.’’ என்று வெண்ணிலாவை அங்கிருந்து கிளப்ப முயன்றான். 

அதே நேரம் கதவை திறந்து கொண்டு திரு உள்ளே நுழைந்தான். அவன் கையில் சிறிய பிளாஸ்டிக் பெட்டி இருக்க அதை பிருந்தாவின் கைகளில் கொடுத்தவன், அவள் அருகே இருந்த கருப்பு நிற நெகிழியை, ‘இது யார் செய்த வேலை’ என்பதை போல பார்த்து வைத்தான். 

வெண்ணிலா அதற்குள், “மாப்பிள்ளையை வாங்கன்னு கேளு திரு…’ என்று மகனை அதட்டினார். முகத்தில் சலிப்பை அப்பட்டமாக காட்டி, “வாங்க மாப்பிள்ளை…!’’ என்றான் திரு. திரு கொடுத்த டப்பாவை எடுத்துக் கொண்டு பிருந்தா கழிவறை செல்ல, கார்த்திக், ‘என்னடா நடக்குது இங்க’ என குழம்பிப் போய் அமர்ந்திருந்தான். 

“வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க மாப்பிள்ளை சார்…’’ என்று திரு கார்த்திக்கின் காதருகில் கிசுகிசுக்க, அவனை பார்த்து முறைத்தவன், வெண்ணிலாவிடம் திரும்பி, “பிருந்தா வேலைக்கு போகட்டும் அத்தை. அடுத்த ரெண்டு வருஷம் முழுக்க எனக்கு மேட்ச் இருக்கு. எனக்கு கேப் கிடைச்சா நான் பிருந்தாவை போய் பார்த்துட்டு வறேன். அவங்களுக்கு தான் குவாட்டர்ஸ் இருக்கும் இல்ல.’’ என்றான். 

முகத்தில் பிடித்தமின்மையை காட்டிய நிலா, “அவளை உங்களோட கூட்டிட்டு போலாம்ல மாப்பிள்ளை. இப்போவே இருபத்திரண்டு வயசு முடிய போகுது. கால காலத்துல பேரன் பேத்தி பாக்குற ஆசை எங்களுக்கும் இருக்காதா. இத்தனை நான் இந்த திரு பய தான் அதையும் இதையும் சொல்லி அவளை படிக்க வச்சிட்டே இருந்தான். இப்போ நீங்க அவ வேலைக்கு போகணும்னு சொல்றீங்க.’’ என்றார் சலிப்பாய். 

தன்மகள் நிலவிற்கு ஆளை அனுப்புவதை விட, இடுப்பில் குழந்தையை வைத்து நிலாவை காட்டி சோரூட்ட வேண்டும் என்பது தானே சாராசரி இந்திய தாய்மார்களின் கனவு. 

நிலாவின் அறியாமையை எண்ணி மனதிற்குள் நொந்த கார்த்திக், “அதெல்லாம் நாங்க பாத்துகிறோம் ஆன்ட்டி. நாங்க எங்க இருந்தாலும் பிறக்கிற குழந்தை பிறக்க தான் போகுது. ஆப்ரேசன் செஞ்சி இருக்குறதால ரெண்டு வருஷம் குழந்தை ப்ளான் வேண்டாம்னு டாக்டர் என்னை கூப்பிட்டு தனியா பேசினார் அத்தை.’’ என கார்த்திக் அடித்து விட, ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்பதை போல திரு அவனை பார்த்திருந்தான். 

“அப்படியா சாமி. நான் ஒரு மடச்சி. செத்து பொழச்சி வந்த பிள்ளையை பத்தி யோசிக்காம. அப்ப நீங்க சொன்ன மாதிரியே பாப்பாவை பெங்களூருக்கு அனுப்பி வச்சிடுறேன்.’’ என்றார். 

சற்று நேரம் அவரோடு பேசிக் கொண்டிருக்க, பிருந்தா குளித்து முடித்து ஒரு சந்தன நிற பருத்தி சுடிதாரில் வெளியே வந்தாள். மருத்துவமனை உடை தவிர்த்து பிற உடையில் இப்போது தான் பார்க்கிறான். 

அம்மா தலை சீவி விடுங்க, என அவள் தாயிடம் செல்லம் கொஞ்ச, அவளின் நீண்ட பின்னல் அப்போது தான் அவன் கவனம் ஈர்த்தது. ரசனையில் இருந்த பார்வை மெல்ல ஈர்ப்பிற்கு மாற, ‘க்கும்…’ என்று குரல் கொடுத்து அதை தடுத்தான் திரு.

பிருந்தா தன் வாழ்வில் வேண்டும் என்று ஏதோ ஓர் குரல் உள்ளே உந்திக் கொண்டே இருக்கிறது. பால்கி கொடுத்த தாலியை வாங்கி அவள் கழுத்தில் போடும் போதே, கார்த்திக் அவளோடு உணர்வால் பிணைந்துவிட்டான். 

அதற்கு பிருந்தா ஆணாதிக்கம் என்று பெயரிடுகிறாள். கார்த்திக் அதை கடமை என்று நம்புகிறான். இரண்டிற்கும் இடையில் இருக்கும் காதல் என்ற ஒன்று உயிர் கொள்ள காத்திருந்ததை இருவரும் அறியவில்லை.   

 

பால் வீதி வளரும். 

Advertisement