Advertisement

பால் வீதி – 13 

 ஆளுநர் கிளம்பும் வரை திரு தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான். ஆயினும் அவன் முகம் ஓரங்களில் இறுகி அவன் கோபத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இறுதியாய் ஆளுநர் விடை பெற்று கிளம்பிய அடுத்த நொடி, திரு, “உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா..’’ என கத்திக் கொண்டே கார்த்திக்கின் மேல் பாய்ந்தான். 

கார்த்திக் கொஞ்சமும் அசையாமல் அப்படியே நிற்க, பிருந்தா, “அண்ணா…’’ என்ற வார்த்தையில் அவனை அணை போட்டு தடுத்தாள். “இதெல்லாம் ஒண்ணும் இல்ல பிந்து. நீ டென்சன் ஆகாத.’’ என்றான் திரு. 

கார்த்திக்கை மேலும் கீழும் பார்த்தவள், “நீங்க பால்கி மாமா பையன் தானே…’’ என்றாள் எங்கோ குவிந்திருந்த நியாபகங்களை திரட்டி. அவன் ‘ஆம்’ என்று தலை அசைத்தான். சில வினாடிகள் குனிந்து தன் கை விரல் நகங்களை ஆராய்ந்தவள், “அப்போ என் கழுத்துல இருந்த தாலி நீங்க போட்டு விட்டதா..?’’ எனக் கேட்டாள். 

‘கழுத்தில் இருந்த’ என்ற இறந்தகால குறிப்பில் அவள் கழுத்தை பார்த்த கார்த்திக் லேசாய் அதிர்ந்தான். அங்கே அவன் அணிவித்திருந்த திருமாங்கல்யம் இல்லை. தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் கழுத்தை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்தவள், மீண்டும் அதே கேள்வியை கேட்ட, ‘ஆம்’ என்று தலையாட்டி வைத்தான் கார்த்திக். 

“அண்ணா…! நீ கொஞ்சம் வெளிய இரு. நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.’’ என்ற பிருந்தாவின் கடுமையான வார்த்தைகளில், ‘நல்லா வாங்கி கட்டட்டும்…’ என்று ஒரு பக்கம் தோன்றினாலும், பால்கியை எண்ணி, “நான் பேசிக்கிறேன் பிந்து.’’ என அவளை தடுக்க முனைந்தான். 

அண்ணனை திரும்பி பார்க்க, அந்தப் பார்வையில், பனிரெண்டாம் வகுப்பில் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்த சிறுவனை திரு பார்த்து பேச நினைக்கையில், ‘என்னோட ப்ராப்ளம். நான் பேஸ் செய்றேன் அண்ணா.’ என்று சொல்லி அவனை கடந்து போன பிருந்தா நினைவிற்கு வந்தாள். 

    

அடுத்து நொடி அங்கு நில்லாதவன், கதவை அடைத்துவிட்டு, வெளியே வெளியேறினான். வெளியே மித்து கதவையே பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டவன், “உங்க அண்ணன் இப்போதைக்கு வெளிய வர மாட்டான். வாங்க விசிட்டர்ஸ் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.’’ என மித்துவை அழைத்து கொண்டு வெளியேறினான். 

தவறு செய்து மாட்டிக் கொண்ட பள்ளிக் குழந்தை தலைமை ஆசிரியர் அறையில் நிற்பதை போல கார்த்திக் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். தனக்கு எதிரே இருந்த இருக்கையை கை காட்டி, “உக்காருங்க கார்த்திக்.’’ என்றாள். 

அவன் நுனி இருக்கையில் அமர, “மேக் யுவர் செல்ப் கம்பர்டபிள். நாம கொஞ்சம் நிறைய பேசணும்.’’ என்றாள். அவன் நன்றாக சாய்த்து அமர்ந்ததும், “அப்புறம் உங்க கிரிக்கெட் லைப் எல்லாம் எப்படி போகுது. இன்னும் சிக்ஸ் மன்த்ல டீ- 20 ஸ்டார்ட் ஆகப் போகுது இல்ல. யார் உங்களை ஏலம் எடுப்பாங்கன்னு நினைக்கிறீங்க…”   

அவள் பெயர் கூட சரியாக நினைவில்லாத தன்னிடம், தன்னை குறித்த அத்தனை விசயங்களையும் சரியாக விசாரிக்கும் அவளை கார்த்திக் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஆச்சர்யத்தின் காரணம் புரிந்தவன், “டெய்லி கம்பல்சரி நியூஸ் பேப்பர் வாசிக்கணும்ங்கிறது அண்ணாவோட ரூல். ஸ்போர்ட்ஸ் செக்சன்ல உங்க போட்டோ அடிக்கடி பார்த்து இருக்கேன். நேர்ல டக்குன்னு நியாபகம் வரல.’’ என்றவள் அவனைப் பார்த்து லேசாக புன்னகை பூத்தாள். 

அதற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாத கார்த்திக், மையமாக தலையை மட்டும் உருட்டி வைத்தான். அதற்கும் பிருந்தா வாய் விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பையே கண் இமைக்காமல் கார்த்திக் பார்த்துக் கொண்டிருந்தான்.

நலுங்கிய மருத்துவமனை உடை. சரியாக வாரப்படாத கூந்தல். அம்மாவசை வான் வெளியாய் பொட்டில்லாத பிறை நெற்றி. இடது மூக்கில் மூக்குத்தியாய் ஒரு குட்டி மச்சம். அவள் கற்ற கல்வியின் கலை அத்தனையும் பெரிய கண்களில் தீட்சண்யமாய் ஒளிர்விட்டுக் கொண்டிருந்ததில் அழகின் அத்தனை இலக்கணங்களையும் மாற்றி எழுதிக் கொண்டிருந்தாள் பிருந்தா. 

சம்மணமிட்டு அமர்ந்தவள், இரு கை விரல்களையும் கோர்த்து, அதில் தன் தாடையை தாங்கி, “சொல்லுங்க மிஸ்டர் கார்த்திக், எதுக்காக நீங்க என் கழுத்துல அந்த தாலி செயினை போட்டு விட்டீங்க. லீகலா தன் சுய நினைவுல இல்லாத ஒருத்தரை மேரேஜ் செஞ்சிக்கிறது சட்டப்படி தப்புன்னு உங்களுக்கு தெரியாதா…?’’ என்றாள். 

“அது…’’ கார்த்திக் திணறலாய் ஆரம்பிக்கும் போதே, “எங்க அம்மா பால்கி மாமாகிட்ட ஓன்னு ஒப்பாரி வச்சி இருப்பாங்க. என் பொண்ணு வாழ்க்கை போச்சேன்னு. உடனே அதை நான் எப்படி போக விடுவேன், இதோ பிடிச்சி தரேன்னு… உங்க கைல தாலியை எடுத்து கொடுத்து இருப்பார். எல்லாரும் உங்களை ஆபத்பாந்தவனா பார்க்க நீங்களும் வேற வழி இல்லாம என் கழுத்துல அந்த தாலி செயினை போட்டுட்டீங்க ரைட். தமிழ் சினிமால தான் இந்த மாதிரி கிளிஷே சீன் வந்தா பயங்கரமா கலாய்ப்பேன். சோ சேட் என் வாழ்க்கையிலேயே நடந்துருச்சு.’’ என்றவள் போலியாய் அலுத்துக் கொள்ள கார்த்திக் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்ததை போல கூறும் அவளை விழி அகலாது பார்த்திருந்தான். 

“அதெல்லாம் ஓகே மிஸ்டர் கார்த்திக். உங்களுக்கு இப்போ சமீபமா தானே நிச்சயம் நடந்தது. அந்த பொண்ணு பேர் கூட…’’ என்று பிருந்தா தன் நெற்றிப் பொட்டில் தட்டி யோசிக்க, கார்த்திக் மெதுவாய், “பிரகாஷினி’’ என்றான். 

“ஆ… பிரகாஷினி. பொண்ணு ரொம்ப அழகா இருந்தாங்க. அதுவும் நியூஸ் பேப்பர்ல தான் பாத்தேன். கங்கிராட்ஸ்.’’ என்றாள். இந்த வாழ்த்திற்கு என்ன மறுமொழி சொல்லுவது  என தெரியாது, கார்த்திக் விழிக்க, “வாழ்த்துகள் சொன்னா நன்றி சொல்லணும் மிஸ்டர் கார்த்திக்…’’ என்றாள் உதட்டில் வழிந்த புன்னகையோடே. 

அப்போது தான் கார்த்திக்கின் மூளையில் அந்த விஷயம் பொறி தட்டியது. பிருந்தா தன்னை அமர வைத்து குணமான சொற்கள் கொண்டு குத்திக் கொண்டிருப்பதை. அத்தனை நேரம் இருந்த பதட்டம் குறைய, நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.

 “நான் நியூஸ் பேப்பர் பாக்குறது இல்ல. அதுக்கு நேரமும் இருந்தது இல்ல. இயர்லி மார்னிங் தொடங்கி நைட் வரை என் மைன்ட், ஆக்டிவிட்டி எல்லாமே கிரிக்கெட் மட்டும் தான். சின்ன வயசுல கிரிக்கெட் தவிர வேற எதையும் பெருசா நான் மூளைக்குள்ள திணிக்க ட்ரை செஞ்சது இல்ல. எக்ஸ்ட்ரீம்லி சாரி அதனால உங்க ஸ்பேஸ் அச்சீவ்மென்ட்ஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்க முடியாம போயிடுச்சி. ரொம்ப பெருமையா இருக்கு. கன்கிராட்ஸ்…’’ என்றவன் அவளை நோக்கி கைகளைநீட்டி இருந்தான். 

பிருந்தா முகத்தில் எந்த மாற்றத்தையும் காண்பிக்காது கைகளை நீட்ட, வலுவான தன் கரங்களால் மெத்தென்று இருந்த பிருந்தாவின் கரம் பற்றி குலுக்கினான் கார்த்திக். தேவைக்கு அதிகமான அழுத்தத்தை தன் கரங்களில் உணர்ந்தவள், கைகளை விடுவித்து கொண்டாள். 

“கான்சியஸ் இல்லாத பொண்ணு கழுத்துல தாலி கட்டறது க்ரைம் தான். அதை நான் இல்லைன்னு சொல்லவே இல்ல. சின்ன வயசுல சிவிக்ஸ் படிக்கும் போது நானும் படிச்சி இருக்கேன். ஆனா ஒரு அம்மா கண்ணீருக்கும், கவலைக்கும் முன்னாடி எதுவுமே தப்பு இல்லைன்னு எங்க அப்பா நம்பினார். அதனால  தான் அந்த நேரத்துல நான் உங்க கழுத்துல அந்த தாலியை போட்டு விட்டேன்.’’ என்றவன் அப்படியே மௌனமானான். 

அவன் இன்னும் பேசுவான் என்பதை ஊகித்து பிருந்தா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், நிமிர்ந்து அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்து, “உங்களால என் கூட லைப் ஷேர் செஞ்சிக்க முடியாதா…?’’ என நேரடியாக கேட்டான். 

பிருந்தாவிற்கு பட் என வெடித்து சிரித்தாள். எத்தனை முயன்றும் அவளால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை. அவள் சிரிக்கக் சிரிக்க கார்த்திக் இறுகிக் கொண்டிருந்தான். சற்று நேரம் சிரித்து முடித்தவள், ஒருவழியாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “ஐயம் சாரி. என்னால முடியல.’’ என்றாள். 

மீண்டும் சற்று நேரம் சிரித்து முடித்தவள், கண்களின் ஓரம் வழிந்த நீரை சுண்டிவிட்டு, “ஓ மை காட். நீங்க டிபரண்டா ப்ரோபோஸ் செய்றீங்க கார்த்திக். உங்க ஸ்டைல் நல்லா இருக்கு. ஆனா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கையை பிடிச்சி இனி என் வாழ்க்கை உன் கூடத்தான்னு நம்பிக்கை கொடுத்துட்டு உங்க அப்பா சொன்னதும் என் கழுத்துல தாலியை போட்டு விட்டு இருக்கீங்க. நாம ஆதி காலத்துல இல்ல கார்த்திக். நீங்க எங்க அம்மா கண்ணீரை மதிச்சி என் கழுத்துல தாலி போட்டதை எல்லாம் கூட நான் தப்பு சொல்ல வரல. ஆனா அதுக்கு அப்புறம் நீங்க நடத்துகிட்ட நடந்துக்கிற விதம் எனக்கு பிடிக்கல.’’ என்றவள் வெளிப்படையாக முகத்தில் ஒவ்வாமையை காட்டினாள். 

கார்த்திக் அவளை புரியாது பார்க்க, “எங்க அம்மா, அப்பா அவ்வளவா வெளி உலகம் தெரியாத வெள்ளந்தி கிராமத்து மனுசங்க. அவங்க அழுததும், அதுக்கு தங்கச்சி சென்டிமென்ட் உள்ள உங்க அப்பா தாலி கட்ட சொன்னதும் ஓகே. ஆனா நல்லா படிச்சி வெளி உலக அறிவு இருக்க நீங்க என்ன செஞ்சி இருக்கணும். அவங்க முன்னாடி என் கழுத்துல தாலியை கட்டி இருந்தாலும், அந்த விசயத்தை பெருசு செய்யாம அமைதியா இருந்து இருக்கணும். இந்த மாதிரி நான் தெளிவா எழுந்து உக்காந்து இருக்கும் போது, அப்படி ஒரு சிட்சுவேசன்ல உங்க கழுத்துல அந்த தாலியை போடுற மாதி ஆகிடுச்சுன்னு  சொல்லி சாரி கேட்டு இருக்கனும். நானும் சிரிச்சிட்டே அந்த தாலியை கழட்டி உங்ககிட்ட கொடுத்து இருப்பேன். சின்ன வயசுல எனக்கு உடம்பு சரியில்லைனா எங்க வீதில இருக்க பள்ளிவாசல்ல போய் அம்மா எனக்கு தாயத்து கட்டிட்டு வருவாங்க. மூணு நாள் கழிச்சி அந்த தாயத்தை கழட்டி போற்றுவோம். அது மாதிரி தான் நீங்க என் கழுத்துல கட்டின தாலியும்.’’ என்றாள். 

கார்த்திக் அவளை பார்த்துக் கொண்டு இருக்க, “ஆனா நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க கார்த்திக். என் கழுத்துல ஒரு தாலியை போட்டதும் நான் உங்க உடமை அப்படிங்கிற ஆணாதிக்க மனப்பான்மை உங்களுக்குள்ள வந்துடுச்சு. உங்க நிச்சயத்தை முறிச்சி இருக்கீங்க. என்னோட விருப்பம் என்னன்னு தெரியாமையே என்னை உங்க வைப்னு வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்துறீங்க. புரிஞ்சிக்கோங்க கார்த்திக், வாழ்கையை பகிர்ந்துக்கப் போற லைப் பார்ட்னரை பரஸ்பர நம்பிக்கை, சிநேகம், அப்புறம் காதலை வச்சி தான் செலெக்ட் செய்ய முடியும். இந்த மூணுல ஒன்னு கூட இப்போதைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இல்ல. நம்ம வாழ்க்கை முதல்ல நமக்கானது கார்த்திக். நம்ம சந்தோசம், மன அமைதி ரொம்ப முக்கியம். அதை யாருக்காகவும் நாம சாக்ரிபைஸ் செய்ய கூடாது.” என்றவள் அவனை ஆழ்ந்து பார்த்தாள். 

கார்த்திக் அப்போதும் அமைதியாக இருக்க, “இப்ப உங்களுக்கு என் மேல இருக்குறது அட்மிரேசன் மென்டாலிட்டி. அவ்ளோ தான். கொஞ்ச நாள் போனா அதெல்லாம் மாறிடும். ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சிக்கதா ரெண்டு பேர் சேர்ந்து வாழ்றது ரொம்ப கஷ்டம். நான் என்ன சொல்ல வறேன்னு உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன். இனி என் அனுமதி இல்லாம என்னை நீங்க உங்க மனைவின்னு யார்கிட்டயும் சொல்ல கூடாது. இங்க நடந்தது லீகல் மேரேஜ் இல்ல. சோ… நாம லீகலா டிவோர்ஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்ல. எங்க வீட்டுல இருக்குறவங்ககிட்ட நான் பேசிக்கிறேன். உங்க வீட்டு சைட் நீங்க பேசிடுங்க. இங்க நடந்ததை எல்லாம் இங்கேயே விட்டுட்டு நாம நம்ம லைப் பின்னாடி போகணும் கார்த்திக்.’’ என்றவள் இது தான் என் முடிவு என்பதை போல அவனை உறுதியாக பார்த்தாள். 

இத்தனை உறுதியாக தன்னை மறுப்பவளிடம் அடுத்து என்ன சொல்லி பேசுவது என புரியாத கார்த்திக், ‘உனக்கு நான் வேண்டாம் என்றால்… எனக்கும் நீ வேண்டாம் போ’ என்ற மன நிலைக்கு தான் முதலில் தள்ளப்பட்டான். 

அவளிடம் எதுவும் பேசாது கதவு வரை சென்றவன், மீண்டும் அவளை திரும்பி பார்த்து, “நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா..?’’ என்றான். புன்னகையுடன் ‘ஆம்’ என்றவள், “ஆமா. நான் முடிவே இல்லாத பால்வெளியை காதலிக்கிறேன்.’’ என்றாள்.  

இந்தப் பொண்ணோட என பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றியவன், “என்னால கிரிக்கெட்ல நல்லா வர முடியும்னு கண்டு பிடிச்சி ஏழு வயசுல என் கையில கிரிக்கெட் பேட் எடுத்துக் கொடுத்தவர் எங்க அப்பா தான். அந்த நம்பிக்கை பொய் ஆகல. அவர் எடுத்து கொடுத்து நான் உங்க கழுத்துல போட்ட தாலி. கண்டிப்பா என் வாழ்க்கையும் நல்லா அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு என்ன என்னைப்பத்தி தெரியணும். அவ்ளோ தானே. பேசலாம். பழகலாம். உடனே நீங்க ஓகே சொல்ல வேண்டாம். ஒரு ஆறு மாசம், இல்ல ஒரு வருஷம் டைம் எடுத்துக்கோங்க. அதுக்கு அப்புறமும் என்னை பிடிக்கலைன்னா நான் உங்களை கம்பல் செய்ய மாட்டேன்.’’ என்றான். 

தன்னிடம் பழகி பார்க்க சொல்லி ஒரு பெண்ணிடம் கெஞ்சுவோம் என்று கிஞ்சித்தும் எண்ணிப்  பார்த்திராதா கார்த்திக்கின் குரல் அழுத்தம் இழந்து மென்மையாகவே வெளி வந்தது. 

புருவத்தை உயர்த்தி அவனை கேள்விக் குறியாய் பார்த்தவள், “எத்தனை நாள் ஆனாலும் என் முடிவு மாறது. நீங்க உங்க டைம் வேஸ்ட் செய்யப் போறதைப்பத்தி எனக்கு ஒண்ணும் இல்ல.’’ என்றவள் படுக்கையின் அருகே மூடி வைத்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள். 

அவள் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டவன், மித்ரா இருந்த காத்திருப்போர் அறை நோக்கி நடந்தான். மித்ராவும், திருவும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.  

இவனை கண்டதும் இளக்காரமாக உதட்டை வளைத்த திரு எழுந்து நிற்க, அதே பார்வையோடு அவனை எதிர் கொண்ட கார்த்திக், தங்கையின் பக்கம் திரும்பி, “போலாம்’’ என்றான். திருவை ஒரு முறை பார்த்தவள், தமையனிடம் குனிந்து, “அண்ணா…! அப்பா வறேன்னு சொல்லி இருக்கார்.’’ என்றாள்.  

Advertisement