Advertisement

மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள்.

குழப்பமாய் அதை கையில் எடுத்து பார்த்தவள், அது தாலி என்பதை உணர்ந்ததும், உடனே அருகில் இருந்த மித்ராவிடம் அது குறித்து கேட்டாள். “இன்னும் ஒரு நாள் போகட்டும் பிருந்தா. உங்க உடம்பு கொஞ்சம் சரியாகட்டும்.  உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன்.” என்றாள்.

மித்ராவை சில நிமிடங்கள் பார்த்த பிருந்தா, அடுத்த நொடி தாலியை தலை வழியே கழற்றி எடுத்திருந்தாள். “இது எனக்கு ரொம்ப அன் கம்பர்டபிளா இருக்கு. கொஞ்சம் இதை சேபா வசிக்க முடியுமா…?’’ என கேட்டாள்.

தன் குடும்பம் எண்ணுவதை போல சராசரி பெண் அல்ல என்பதை அவளிடம் கழித்த இரண்டு நாட்களில் அறிந்து கொண்ட மித்ரா, தாலியை வாங்கி தன் கைப் பையில் பத்திரப்படுத்தினாள். நடந்த சம்பவத்தை கேள்விப்படும் போது நிலா அத்தை எத்தனை அதிர்ச்சி அடைவார்கள் என்பதை எண்ணும் போதே அவள் மனதில் சிறு புன்னகை உதயமானது.

ஆனால் அவள் அறியாதது தன் அத்தையை விட, அதிகம் அதிரப் போவது தன் தமையன் என்பதை. அன்றைக்கு பிருந்தாவின் தாக்குதல் தொடர்பான புகாரின் மேலதிக நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ள கார்த்திக் பிரபாவை சந்திக்க சென்றிருந்தான்.

நடந்த நிச்சயத்தை நிறுத்தி இருந்ததின் பேரில் இரு குடும்பங்களுக்கும் இடையில் மனக் கசப்பு இருந்த போதும், தன்னை காண வந்திருந்த நண்பனின் மகனை நல் முறையில் வரவேற்றார் பிரபா.

“அங்கிள்…! பிருந்தா கேஸ் டீடைல்ஸ்…!’’ என இழுக்க, சற்று நேரம், தன் நெற்றியை ஆட்காட்டி விரல் கொண்டு நீவி கொண்டவர், சில புகைப்படங்களை எடுத்து மேஜையின் மீது பரப்பினார். கார்த்திக் குழப்பத்தோடு அந்த புகைப்படங்களை கையில் எடுத்து பார்க்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெவ்வேறு நான்கு நபர்களின் புகைப்டங்கள் அதில் வரிசையாக இருந்தது.

புகைப்படத்தை பார்த்து முடித்த கார்த்திக், “அங்கிள்…! எனக்கு புரியல. இந்த போட்டோஸ்க்கும் பிருந்தா கேஸ்க்கும் என்ன சம்மந்தம்…’’ என்றான் பொறுமையின்றி. முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாத பிரதாப், “இவங்க தான் பிருந்தாவை கிட்னாப் செஞ்ச கிட்னாபர்ஸ். பிருந்தா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன அதே தேதி, அதே நேரத்துல, இவங்களுக்கும் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க. பிருந்தா மயங்கி கிடந்த பாலத்துக்கு முன்னாடி இருந்த தோப்பு வீட்ல இவங்க நாலு பெரும் மயங்கி கிடந்ததா ஏ.ஆர். என்ட்ரில இருக்கு.’’ என்றதும், கார்த்திக்கின் முகம் மேலும் குழப்பத்தை தத்தெடுத்தது.

“அது எப்படி அங்கிள் சேம் டேல இவங்களும் அட்மிட் ஆக முடியும். அட்லீஸ்ட் திரு வந்து தன்னோட தங்கச்சியை தாக்கினவங்களை பழி வாங்குறதா இருந்தா கூட நடுவுல ஒரு நாள் கேப் இருக்கணுமே.’’ என்றான்.

தொண்டையை செறுமிக் கொண்டவர், “பிருந்தாவை பத்தி உனக்கு என்ன தெரியும்..?’’ என்றார். திரு தன்னிடம் கேட்ட கேள்வியை தற்சமயம் பிரதாப் வேறு தொனியில் கேட்பதாக உணர்ந்த கார்த்திக், எரிச்சலை உள்ளுக்குள் அடக்கி கொண்டு அவரை பார்த்து ஒரு அழகிய புன்னகை பூத்தான்.

“இனி தான் அங்கிள் தெரிஞ்சிக்கணும். அதான் ரெண்டு பேருக்கும் லைப் லாங் ஜர்னி இருக்கே. மெதுவா தெரிஞ்சிக்கிறோம்.’’ என்றான்.

அவனின் சமாளிக்கும் பதிலை கேட்டவர், அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு, “பிருந்தா ப்ராபரா இண்டியன் மார்ஷியல் ஆர்ட் கத்துகிட்டவ. களறி, அடிமுறை ரெண்டுமே நல்லா தெரிஞ்ச பொண்ணு. நாலு பேரையுமே ஒத்த ஆளா நின்னு சமாளிச்சு இருக்கா. இவ நாலு அடி வாங்கினா எதிரிக்கு பத்து அடி கொடுத்து இருக்கா. எல்லாரும் மோசமான போன் ப்ராக்சர்ஸ்சோட தான் அட்மிட் ஆகி இருக்காங்க. ஈவன் வயித்துல கம்பி குத்தி கிழிச்சு கூட, அவங்க ஊர் எல்லை வர தைரியமா நடந்து வந்து இருக்கா. ஷீ ஈஸ் ய  ஸ்ட்ராங் கேர்ள்.’’ என்றதும், அதிர்ச்சி மாறாமல் அவர் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் உறை நிலையில் இருப்பதை கண்டு, “என்ன கார்த்திக் இதுக்கே அதிர்ச்சியான எப்படி. இன்னைக்கு நம்ம ஆளுநர் பிருந்தாவை நேர்ல சந்திச்சு நலம் விசாரிச்சிட்டு போக வரப் போறார். நான் தான் அவரோட பாதுகாப்புக்கு கூட வர வேண்டி இருக்கும்.’’ என்றதும், “ஏன்..?’’ என்பதை போல கார்த்திக் பார்க்க, நக்கலான சிரிப்பை உதட்டில் தேக்கியவர், “உனக்கு தான் லைப் லாங் டைம் இருக்கே. மெதுவா கேட்டு தெரிஞ்சிக்கோ கார்த்திக். எனக்கு என்னவோ அது அவ்வளவு ஈசியா சாத்தியப்படாதுன்னு தோணுது. திரு கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னான்… அந்த பொண்ணுக்கு கிரிக்கெட்டும் பிடிக்காதாம். கிரிக்கெட்டர்ஸ்சும் பிடிக்காதாம்.” என்றார்.

கார்த்திக் பிரகாஷினியை மறுதலித்த வலி அவரின் குரலில் அப்பட்டமாய் வெளிப்பட, இரும்பின் உறுதியை குரலில் ஏற்றி, “என் வைப்புக்கு கிரிகெட், அப்புறம் கிரிக்கட்டர்ஸ் எல்லாம் பிடிக்கணும்னு அவசியமே இல்ல அங்கிள். அவளோட லைப் பார்ட்னரா என்னை பிடிச்சா போதும்.’’ என்றவன் அவரிடம் விடை பெறமால் அங்கிருந்து கிளம்பினான்.

வெளியேறும் கார்த்திக்கின் முதுகை வெறித்துக் கொண்டிருந்த பிரபாவின் இதயம் நிராசையில் வெறுமை கொண்டது. காலம் நாம் தீர்மானிக்கும் எதையும் நடத்தி வைப்பதில்லை. அது நீர் வழிப் படும் புனை. பால்கியுடனான தம் நட்பை அசை போட்டவர் மெல்ல இறுக்கத்திலிருந்து இளகி தன் அன்றாட நடப்பிற்கு திரும்பினார்.

தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் மனதில் ஒரே கேள்வி தான் இருந்து. அது பிருத்தா. அடி முதல் நுனி வரை அவள் குறித்து அறிய வேண்டும் என்ற உந்துதலில், கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த தந்தையை அவசர அவசரமாக கல்லூரிக்குள் இருந்த உணவகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தான்.

‘என் தங்கச்சியோட ரெண்டாவது பொண்ணு.’ என்ற அளவில் மட்டுமே அவருக்கே பிருந்தா குறித்து தெரிந்திருந்தது. மற்ற கேள்விகளுக்கு எல்லாம், “திருவனந்தபுரத்துல காலேஜ் படிச்சிட்டு இருக்கிறதா  திரு சொல்லுவான். அப்புறம் ப்ளஸ் டூ படிக்கும் போது ஏதோ அவர்ட் வாங்க டெல்லிக்கு போயிட்டு வந்தா..’’ என்பது வரைக்கும் தான் அவர் அறிந்த அதிகப்படி தகவல்.

அவரிடம் விடை பெற்றவன் அடுத்து காண சென்றது வெண்ணிலாவை. மாப்பிள்ளையை தட புடலாய் வரவேற்று கோழி பிடிக்க சென்றவரை மறித்து, அவன் பிருந்தா குறித்து விசாரிக்க, அவரின் பதில்கள் பால்கியை விட மோசமாக இருந்தது.

“இங்க இருந்த கவர்மென்ட் பள்ளிக் கூடத்துல தான் சாமி பனிரெண்டாவது வர படிச்சா. அப்புறம் காலேஜுக்கு தான் கேரளா அனுப்பி வச்சான் திரு  பய. நாங்க வேண்டாம்னு சொன்னோம். அவன் தான் கேக்கல.’’ எனவும், “பிருந்தா களறி எப்போ கத்துகிட்டா..?’’ என கேட்க, “அவ எட்டாவது படிக்கும் போதே களி நல்லா கிண்டுவாளே..’’ எனவும் மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டவன், வயிறு முட்ட சாப்பிட்டு வந்ததாய் சொல்லி அங்கிருந்து நழுவ அரும்பாடு பட்டுப் போனான்.

இனி அடுத்தவர்களிடம் அவள் குறித்து விசாரிப்பது வீண் என் உணர்ந்தவன், அவள் குறித்து அவளிடமே அறிந்து கொள்வது என முடிவெடுத்த பின்  மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினான்.

காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்த மித்ரா இவனை கண்டதும் எழுந்து வந்தாள். “மித்து பிருந்தா கூட இல்லாம வெளிய என்ன செஞ்சிட்டு இருக்க…?’’ என்றான். அவனை தயக்கமாய் பார்த்தவள், “இன்னைக்கு கவர்னர் பிருந்தாவை பார்க்க வரப் போறாங்களாம். ஹாஸ்பிடல் சுத்தி செக்யூரிட்டி போர்ஸ் டைட் செஞ்சி இருக்காங்க. அவங்க ப்ளட் ரிலேசனுக்கு மட்டும் தான் ரூம்ல கூட இருக்க பர்மிசன்னு சொன்னாங்க. அதனால திரு அத்தானை வர சொல்லிட்டு நான் வெளிய இருக்கேன்.’’ என்றாள்.

மித்துவின் அத்தான் என்ற அழைப்பை மனதில் குறித்துக் கொண்டவன், தங்கையின் அருகே காலியாக இருந்த இருக்கையில் அமர, மித்துவும் அவன் அருகில் அமர்ந்தாள். “பிருந்தாவை எதுக்காக கவர்னர் பாக்க வராங்கன்னு உனக்கு தெரியுமா..?’’ என்றான்.

அவள் இல்லை எனும் விதமாக தலை அசைக்க, சலிப்பாக ‘உச்’ கொட்டியவன், “யாருக்குமே தெரியல அவளை பத்தி.’’ என்றான். “பிருந்தா பத்தி எல்லாம் தெரிஞ்சி ஒருத்தர் திரு அத்தானா தான் இருக்க முடியும். வேணா அவர்கிட்ட கேட்டுப் பார்க்கவா…?’’ என்றாள்.

Advertisement