Advertisement

பால் வீதி – 12

கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டிருதான். இன்னும் இரு வாரங்களில் டி- 20 உலக கோப்பை தொடங்க இருந்தது. கார்த்திக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டிருந்தான்.

தன்னை நோக்கி வந்த பந்துகளை அவன் சரியாக கையாள, பயிற்சி நேரம் முடிந்ததும், “வெல்டன் மிஸ்டர் கார்த்திக். யூ டிட் ய கிரேட் ஜாப்.’’ என பயிற்சியாளர் பாராட்ட, ஒரு புன்னகையில் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, உடைமாற்றும் அறை நோக்கி நடந்தான்.

அத்தனை நேரம் அவனை விட்டு விலகி இருந்த, சிந்தைகள் அவனை சூழ்ந்து கொண்டன. அவனுக்கான அறையில் நுழைந்து, உடை களைந்து, பூஞ்சிதறலாய் தன்னை நனைத்த ஷவருக்கு அடியில் நின்றான். அப்போது ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்து மனதின் அடியில் தேங்கி இருந்த இருந்த சம்பவங்கள் நினைவுகளாய் தளும்பி மேல் வந்தன.

“மித்ராவை எனக்கு கல்யாணம் செஞ்சி கொடுப்பீங்களா…?’’ என்று திரு கேட்டதும், பால்கி அதிர்ச்சியில் உறைந்து நின்றார். கார்த்திக், திமிறிக் கொண்டு அவனை தாக்க வர, தமையனை ஒற்றை கையால் தடுத்து நிறுத்திய மித்ரா, “நான் எதுக்கு உங்களை கல்யாணம் செஞ்சிக்கனும்…?’’ என அவன் கண்களை பார்த்து கேட்டாள்.

சில நொடிகள் அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க தடுமாறிய திரு, பின் அவளுக்கு பின்னால் இருந்த சுவரை பார்த்தபடி, “எப்பவும் நாங்க உங்களுக்கு கீழ தான்னு ஒரு நோய் பிடிச்ச மனநிலை இருக்கே, அதை மாத்த நீங்க என்னை கல்யாணம் செஞ்சிக்கனும்.’’ என்றான்.

“நீங்க நம்புறீங்களா… நீங்க எங்களுக்கு கீழன்னு.’’ என்றாள் திருவை பார்த்து. அவளின் குரலில் இருந்த ஏதோவொன்று அவள் முகம் பார்க்க தூண்ட, ‘இல்லை’ என அவள் கண்களை பார்த்து தலை அசைத்தான் திரு.

“இல்ல நீங்க நம்பலை. நம்பி இருந்தா இப்படி அடுத்தவங்களை நம்ப வைக்க ஒரு கல்யாணத்துக்கு ஆசைப்பட மாட்டீங்க. அதோட அடுத்தவங்க லோ ஸெல்ப் எஸ்டீமை காம்பன்சேட் செய்யிறதுக்கு எல்லாம் என்னால யாரையும் கல்யாணம் செஞ்சிக்க முடியாது. இனி இதைப்பத்தி நீங்க பேசாம இருக்குறது நம்ம பேமிலி ரிலேசன்ஷிப்புக்கு நல்லது.’’ என்றாள் அழுத்தமான குரலில்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் தன் முன் நின்று தேம்பி அழுத மடந்தை இவள் இல்லை, இவள் தீர்கமான சிந்தை கொண்ட மங்கை என்பதை உணர்ந்த திரு அவளை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான்.

“யார் சொல்லி இருந்தாலும் நீ செஞ்சது தப்பு அண்ணா. இனி பிருந்தாவுக்கு கான்சியஸ்னஸ் வந்ததும் இந்த விசயத்தை டிசைட் செய்யலாம். பிரதாப் அங்கிள்கிட்ட பேசினியா எதாச்சும் டீடைல்ஸ் கிடைச்சதா..?’’ என்றபடி தமையனை முன்னால் இருந்த இருக்கை நோக்கி அழைத்து கொண்டு சென்றாள்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை திரு.’’ என்ற பால்கி தம் மக்கட் செல்வங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி நடந்தார். திரு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது புகழின் மனைவி சௌமி அவன் அருகில் வந்து, “நான் கிளம்புறேன் அண்ணா. என்னால இனி இங்க பிரச்சனை வேண்டாம்.’’ என்றாள் கலங்கிய குரலில்.

அவளை திரும்பி பார்த்த திரு, “நம்ம சிட்டி கலெக்டர் என்னோட சீனியர் தான். மார்னிங் போய் நேர்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துட்டேன். டிஎஸ்.பிக்கும் ஒரு லெட்டர் கொடுத்தாச்சு. டி.எஸ்.பி நேர்ல உங்க வீட்டுக்கு போயிருக்கார். இனி நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம். பார்த்துக்கலாம்.’’ என்றான்.

“இல்ல. என்னால தான் பிருந்தாவுக்கு இந்த நிலைமை. நான் இனி உங்க குடும்பத்துல இருக்குறது சரியா இருக்காது.’’ என்றாள். “உங்களை திருப்பி அனுப்பி வைக்கிறது தான் சரியா இருக்காது. நடந்ததுல உங்க தப்பு எதுவும் இல்ல. கீழ்த்தரமா எங்க வீட்டுப் பொண்ணை கடத்தி அவங்க வீரத்தை காட்டின உங்க குடும்பத்துக்கு நாங்க கொடுக்க நினைக்கிற பதிலடி என்ன தெரியுமா…? எங்க குடும்பத்தை நம்பி வந்த பொண்ணை ராணி மாதிரி வாழ வச்சி காட்டுறது தான். இங்க இருக்க யாரும் உங்களை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டாங்க. எல்லாமே சீக்கிரம் சரி ஆயிடும். நாங்க சரி செஞ்சிடுவோம். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.’’ என்றவன் புகழை அழைத்து சௌமியை வீட்டிற்கு அழைத்து செல்ல சொன்னான்.

அவன் திருப்பதியின் முகத்தை பார்க்க, அவர் என்னவோ செய்து கொள்ளுங்கள் என முகத்தை திருப்பி கொண்டார் அதே நேரம்  பிருந்தா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த மித்ரா, “கொடுத்துட்டு இருக்க செடேசன் (மயக்க மருந்து) எல்லாம் டேப் அப் செஞ்சிட்டு இருக்காங்க. ஈவ்னிங் பிருந்தாவுக்கு கான்சியஸ் வந்துடும்.’’ என தன் தந்தையிடமும், தமையனிடமும் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

திரு அவளையே பார்த்துக் கொண்டிருக்க, நேராக அவள் அவனிடம் நெருங்கி வர, நொடி நேரத்தில் அவன் உடல் முழுக்க மின்சாரம் தாக்கியவன் போல அதிர்ந்து போனான். நொடியில் அவன் தன் பார்வையை வேறு திசை நோக்கி திருப்பிக் கொள்ள, “திரு அத்தான்…’’ என அவளை அழைத்தாள் மித்ரா.

தன் காதில் கேட்கும் வார்த்தைகள் நிஜமா என திரு அவளை நிமிர்ந்து பார்க்க, “எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடுங்க. நான் இங்க இருந்து மித்ராவை பார்த்துகிறேன். எதாச்சும் வேணும்னா  உங்களுக்கு கால் பண்றேன்.’’ என்றதும் அவன் தலை சம்மதமாய் அசைந்தது.

அவள் திரும்பியதும், “என்னோட நம்பர்..’’ என அவன் தயக்கமாய் இழுக்க, அவனை தீர்க்கமாய் பார்த்தவள், “இருக்கு..’’ என்று விடு அங்கிருந்து நகர்ந்தாள். பேசி பேசி அனைவரையும் அவள் கிளப்ப, கார்த்திக், “நானாவது உன் கூட இருக்கேன் மித்து. ஏதாச்சும் எமர்ஜென்சினா நீ தனியா என்ன செய்வ…?’’ என கேட்டு கொண்டிருந்தான்.

“டேய் உன்னை விட ஹாஸ்பிடல் பத்தி எனக்கு நல்லா தெரியும். எது நடந்தாலும் நான் ஹாண்டில் செய்வேன். ரெண்டு நாளா ஹாஸ்பிடலே கதின்னு இருக்கீங்க. நான் பாத்துகிறேன். எல்லாரும் கிளம்புங்க. நிலா ஆன்ட்டி, நீங்க மட்டும் நைட் வந்தா போதும்.’’ என்றாள்.

“அது இல்ல மித்து…’’ என கார்த்திக் மறுத்து பேச வரும் முன், “டேய்…! நீ அப்பா அம்மாவை கூட்டிட்டு பிரதாப் அங்கிள் வீட்டுக்கு போயிட்டு வா. ப்ராபர் எக்ஸ்ப்ளனேசன் கொடுக்க வேண்டியது நம்ம கடமை. அப்படியே பிருந்தா கேஸ் டீடைல்ஸ் கிளாரிபிகேசன் எல்லாம் கேட்டுட்டு வா. நம்ம வீட்டு பொண்ணை இப்படி செஞ்சவங்களை நாம சும்மா விடக் கூடாது.’’ என்றாள்.

யார் மறுப்பும் எடுபடாமல் அனைவரும் கிளம்ப, திரு தயங்கியபடி வந்து, “வேணும்னா நான் உங்க கூட துணைக்கு இருக்கவா…?’’ என கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் மேல நம்பிக்கை இல்லனா தாராளமா இருக்கலாம்.’’ என்றாள். அதற்கு மேல் அவன் ஏன் அங்கே நிற்க போகிறான்.

அன்று மாலை பிருந்தாவிற்கு சுய நினைவு மீண்டது. அப்போது அவள் அருகில் மித்ரா மட்டுமே இருந்தாள். பிருந்தா குழப்பமாய் மித்ராவை பார்க்க, “நான் பால்கி அங்கிள் பொண்ணு. ரெண்டு நாளா எல்லாரும் இங்க தான் இருந்தாங்க. இப்போ தான் வீட்டுக்கு ரெப்ரஷ் ஆகிட்டு வர போயிருக்காங்க.’’ என்றாள்.

பிருந்தாவிற்கு தேவைப்பட்ட உதவிகள், சிகிச்சைகள் அத்தனையும் மித்ராவே மேற்கொண்டாள். திருவிற்கு அழைத்து, இரவு அவர்கள் தாய் தந்தையை மட்டும் அழைத்து வர சொன்னாள். பிருந்தாவை இப்போது பார்க்க வருகிறோம் என்று ஒற்றை காலில் நின்ற தமையனையும், தந்தையையும் ஆயிரம் காரணங்கள் சொல்லி வீட்டிலயே நிற்க வைத்தாள்.

வெண்ணிலா மகள் விழித்து எழுந்து அமர்ந்திருப்பதை கண்டு, கேவி கேவி அழுதார். கையில் கொண்டு வந்திருந்த குல சாமி திருநீரை மகளின் நெற்றியில் பூசி விட்டார். “எல்லாம் நம்ம ஊதுகாளி….’’ என்று அவர் ஏதோ சொல்ல வர, எதுவும் பேச வேண்டாம் என்று திரு அவரை பார்வையிலேயே அடக்கினான்.

தமையன் அருகிருந்த கொஞ்ச நேரமும் பிருந்தா, தன் அண்ணனின் கைகளை அழுத்தமாய் பற்றிக் கொண்டிருந்தாள். அந்த அழுத்தத்தில் அவர்களின் பிணைப்பை மித்ரா உணர்ந்து கொண்டாள். அவர்கள் கிளம்பும் முன் திரு, மித்துவிற்கு நன்றி தெரிவிக்க, “உங்க நன்றியை எதிர்பார்த்து நாங்க எப்பவும் எதையும் செய்றது இல்ல. இதெல்லாம் எங்க கடமைன்னு நம்புறோம்.’’ என்றவள் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் சென்று மறைய, வார்த்தைகளில் வாள் வீசி செல்லும் வஞ்சியை விழி அகலாது பார்த்திருந்தான் திரு.

Advertisement