Advertisement

“மா…! நான் பேச வேண்டிய கட்டாயம் வந்துச்சி பேசினேன். எங்க அப்பாவை யார் பேச வந்தாலும் அவங்களை நான் பேச தான் செய்வேன். நீங்க இந்த பணத்தை திரு பேர்ல நல்லா ரிட்டன்ஸ் கொடுக்குற மியூட்சுவல் பண்ட்ஸ்ல போட்டு வைங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன். கிருஷ்ணா அங்கிள் வந்ததும் டாக்டர்ஸ்கிட்ட  பிருந்தா கண்டிசன் பத்தி கேட்டு சொல்றதா சொல்லி இருந்தார்.’’ என்றவன், பால்கி டீபாயின் மீது வைத்து விட்டு சென்ற வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். 

“டேய் நானும் வறேன்.’’ என்ற பால்கியின் குரலுக்கு, “வீட்ல இருங்க. தேவைப்பட்டா கூப்பிடுறேன்.’’ என்றவன் வெளியே நடந்துவிட்டிருந்தான். மகன் சென்றதும் முகத்தில் இருந்த கலக்கம் மாறி, அங்கு இறுக்கம் குடியேற, “இருபத்தியேழு வருசமா நான் உனக்கு வாழ்க்கை மட்டும் தான் கொடுத்திருந்தேன் இல்லையா…?’’ என்றவர் மனையாளை நோக்கி ஒரு விரக்தி புன்னகையை செலுத்திவிட்டு அறைக்குள் சென்று மறைந்தார். 

இன்னும் இந்த திருமணம் தன் குடும்பத்தில் என்ன என்ன சிக்கல்களை இழுத்து வரப் போகிறதோ என்றபடி மறையும் கணவன் முதுகை வலியோடு பார்த்துக் கொண்டிருந்தார் மதுரா. 

மருத்துவமனையில் நுழையும் போதே, கிருஷ்ணா வரவேற்பறையில் காத்திருக்க, “வந்து ரொம்ப நேரம் ஆச்சா அங்கிள்.’’ என்றபடி தன் தலைக்கவசத்தை கழற்றி படி அவரை விசாரித்தான் கார்த்திக். 

“ஜஸ்ட் இப்போ தான் வந்தேன் யங் மேன். பிருந்தாவை பார்த்துட்டு வந்துட்டேன். ஷீ ஈஸ் ஓகே நவ். இப்போ தான் வெங்கட் திருவுக்கு பிருந்தா கண்டிசன் எக்ஸ்ப்ளைன் செஞ்சி முடிச்சான். உனக்கு நான் சொன்னா போதுமா…? இல்ல பிருந்தாவை ட்ரீட் செஞ்சிட்டு இருக்க வெங்கட்டை பேச சொல்லவா…?’’ என்றார். 

“இப்போ தான் திருகிட்ட பேசி முடிச்சதா சொன்னீங்க. சொன்ன விசயத்தையே திரும்ப திரும்ப ரிபீட் செய்யும் போது, அதுவும் பிசியான டாக்டர்ஸ் அந்த வேலையை செஞ்சா கண்டிப்பா இரிடேட் ஆவாங்க. சோ… நீங்களே எனக்கு சொல்லுங்க போதும்.’’ என்றான். 

“குட். அப்படினா வா. ஹாஸ்பிடல் கேண்டீன்ல சூடா ஒரு கப் காபி குடிச்சிகிட்டே நாம பேசலாம்.’’ என்றவர் முன்னால் நடக்க கார்த்திக் அவரை பின் தொடர்ந்தான்.  அதிகம் கூட்டமில்லாத இடத்தை தேர்ந்தெடுத்து இருவரும் அமர்ந்தனர். 

சிப்பந்தி வந்து காபியை பரிமாறி சென்ற பின், அதை ஒரு மிடறு சுவைத்த கிருஷ்ணா, “நாம நினைச்ச மாதிரி பிருந்தாவை யாரும் செக்சுவலா அசால்ட் செய்யல. பியூர்லி இட்ஸ் பிசிகல் வயலன்ஸ். சீன்ல என்ன நடந்ததுன்னு தெரியல. ஆனா பிருந்தா ஒரு நாலு அஞ்சி பேர் கூட போராடி இருக்கா. அதோட தடங்கள் உடம்புல அங்க அங்க இருக்கு. பில்டிங் கட்ற கான்கிரீட் கம்பி வச்சி தாக்கி இருக்காங்க. அதனால ப்ரைன்ல லேசா கன்டூசன் (மூளை வீக்கம்) ஆகி இருக்கு. அதனால தான் இங்க கொண்டு வரும் போது அவளுக்கு சுய நினைவு இல்ல. ரெண்டு இடத்துல எலும்பு முறிவு. அதோட வயித்துல அந்த கம்பி வச்சி குத்தி இருக்காங்க. அதுல இடது பக்கம் கோலன் ரப்ச்சர் (குடல் கிழிதல்) ஆகி, அதையும் சர்ஜிகலா டிரீட் செஞ்சி இருக்காங்க. இப்போதைக்கு லைப் டேஞ்சர் இல்னஸ் கிராஸ் செஞ்சிட்டா. பட் மேற்கொண்டு காம்ப்ளிகேசன் ஆகாம இருக்க டிரீட்மென்ட் செஞ்சிட்டு இருக்காங்க. உனக்கு வேற எதாச்சும் கேக்கணுமா…?’’ என்றார். 

சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன், “அது சரி அங்கிள். ஆனா எந்த மோடிவும் இல்லாம ஏன் பிருந்தாவை அட்டாக் செஞ்சாங்க.’’ என்றான். தன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே வைத்த கிருஷ்ணா, “அப்போ உனக்கு எதுவும் தெரியாதா…?’’ என்றார் ஆச்சர்யமாய். 

தலையை இடைவலமாய் ஆட்டியவன் அவரை கூர்ந்து பார்த்தான். முதன் முதலில் பிருந்தாவை மருத்துவமனையில் பார்த்த போது சக மனிதனாய் வழக்கமாய் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்கியது அவன் மனது. 

ஆனால் மருத்துவர்கள், அவள் உயிருக்கு ஆபத்தில்லை என்று சொல்லிய நொடி முதல், பிருந்தாவிற்கு இப்படி ஒரு அநீதியை இழைத்தவர்களை தேடி கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, ஒரு தோழனாய் அவளை இந்நிகழ்வில் இருந்து வெளி கொண்டுவர வேண்டும் என்ற உறுதியை ஏற்றிருந்தான். 

ஆனால் தற்சமயம் கிருஷ்ணாவின் வினா அவனுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. “அங்கிள் எனக்கு புரியல. பிருந்தா உடம்புல இருந்த ஜுவல்ஸ் எதுவும் மிஸ் ஆகல. செக்சுவல் வயலன்ஸ் எதுவும் நடக்கல. அப்புறம் எதுக்காக இந்த அட்டாக்.’’ என்றான். 

“சோ…! உனக்கு மெயின் சம்பவமே தெரியாதா…? உங்க பெரியப்பா சாரி அதாவது திருப்பதியோட மூத்த பையன் புகழ் லாஸ்ட் வீக் ஒரு பொண்ணை அவங்க வீட்டை எதிர்த்து லவ் மேரேஜ் செஞ்சிகிட்டு ஊரை விட்டு போயிட்டான். பொண்ணோட அப்பா ஏதோ கம்யூனிட்டி சங்க தலைவர் போல. அவர் பொண்ணு கிடைக்காத கோவத்துல ஊருக்கு வந்த பிருந்தாவை பிடிச்சி வச்சிக்கிட்டு, என் வீட்டு பொண்ணு வந்தா தான் உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு கிடைப்பான்னு மிரட்டி இருக்காங்க. போன் வந்து இவங்க மிஸ்ஸிங் கேஸ் கொடுத்து தேடுறதுக்குள்ள… ஊர் பாலத்துக்கு அடியில விளையாட போன பசங்க அங்க பிருந்தா மயங்கி இருக்குறதை பார்த்துட்டு, தகவல் சொல்லி இருக்காங்க. இவ்ளோ தான் எனக்கு தெரியும்.’’ என்றார். 

சற்று நேரம் ஆள்காட்டி விரலால் நெற்றியை நீவிக் கொண்டவன், ‘பிரச்சனைகள் இத்துடன் முடியப் போவதில்லை’ என்பதை உணர்ந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். 

கிருஷ்ணா தன் முகத்தையே பார்த்திருப்பதை உணர்தவன், “தாங்க்ஸ் அங்கிள். பிருந்தாவோட இந்த நிலைமைக்கு காரணமானவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே ஆகணும். நான் பிரதாப் அங்கிள்கிட்ட பேசுறேன்.” என்றவன் எழுந்து நிற்க, தானும் அவனை தொடர்ந்து எழுந்தவர், “ஓகே கார்த்திக். நானும் அப்ப கிளம்புறேன். அப்பா வந்ததும் எனக்கு பேச சொல்லு.’’ என்றவர் வெளியேற, கார்த்திக், பிருந்தா அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவை நோக்கி நடந்தான். 

குறைந்திருக்கும் என்று இவன் எண்ணியிருந்த ஆட்களின் எண்ணிக்கை கூடி தான் இருந்தது. தன் தாயின் காலடியின் கீழ் மண்டியிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தான் புகழ். சற்று தள்ளி நின்று அழுது அழுது சிவந்த முகத்தோடு மேலும் கரைந்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. 

“கோதை உம் மவனை ஒழுங்கா இங்க இருந்து கிளம்பி போக சொல்லு. இல்ல இருக்குற வெறியில நானே அவனை குத்தி கொன்னு போட்ருவேன்.’’ என கத்திக் கொண்டிருந்தார் திருப்பதி. 

“என்னால தான் இதெல்லாம். நான் எங்க வீட்டுக்கு போயிடுறேன் அங்கிள். புகழ் மேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் என்னால தான்.’’ என்று அந்த பெண் மெளனமாக குலுங்கி அழ, “இது ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல்னு யாராவது ஒருத்தர் வந்து நமக்கு சொல்லிகிட்டேஇருக்கணுமா…? எல்லாரும் முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. நான் பிருந்தாவை பார்த்துகிறேன்.’’ என்றான் கார்த்திக். 

அதுவரை அன்னையின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருந்த புகழ் ஆத்திரத்தோடு எழுந்து கார்த்திக்கை நெருங்கினான். “அதை சொல்ல நீ யாருடா…? நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு..’’ என்றான். 

‘மறுபடியும் முதல்ல இருந்தா…?’ என்று தனக்குள் ஆயாசப்பட்டுப் போன கார்த்திக், இவனிடம் என்ன பேச என்று அயர்ந்து நிற்கும் போதே, “அவர் எதுக்குடா போகணும். நீ முதல்ல இடத்தை காலிப் பண்ணு. இந்த கல்யாணம் நடந்தா பிரச்சனை வரும்னு தெரிஞ்சே அந்த பொண்ணு கூட போன இல்ல. நீ கிளம்பு.’’ என்று ஆங்காரமாய் முன்னால் வந்து அவன் கழுத்தில் கை வைத்து வெளியே தள்ளினார் திருப்பதி. 

தந்தையின் கைகளில் இருந்து தன் கழுத்தை விடுவித்துக் கொண்ட புகழ், “அப்பா…! உங்களுக்கு இதெல்லாம் புரியாது. இன்னைக்கு இவன் பிருந்தா கழுத்துல பால்கிப்பா சொன்னதால தாலி கட்டி இருக்கலாம். ஆனா அவங்க வீட்ல நம்ம பிருந்தா நிம்மதியா வாழ முடியாதுப்பா. வாழவும் அவங்க விடமாட்டாங்க.’’ என்றவன் கார்த்திக்கை வெறுப்புடன் பார்த்தான். 

“பேசணும்னு பேச கூடாது புகழ். எங்க வீட்ல நீ சொல்ற எந்த விசயத்தையும் நாங்க பாக்குறது கிடையாது. பிருந்தா எங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்ல இருந்ததை விட அவ எங்க வீட்ல சந்தோசமா தான் இருப்பா..” என்றான் கார்த்திக் கடுப்புடன். 

வானத்தில் உலவி கொண்டிருந்த தேவையை காட்டில் வாழும் அரக்கன் கையில் பிடித்து கொடுத்ததை போல, அவன் அண்ணனும், மாமன்களும் எகிறிக் கொண்டிருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அப்படி என்ன தகுதி குறைச்சலை தன்னிடம் கண்டுவிட்டார்கள் என்ற புகைச்சல் அவனுள் படிய தொடங்கியது. 

“ஓ… நீங்க எதையும் பார்க்குறது இல்ல…’’ என்ற புகழ் எதையும் என்பதற்கு கொடுத்த அழுத்தத்தில், கார்த்திக் அவனை கேள்விக்குறியோடு பார்க்க, “அப்ப சரி… உன் தங்கச்சி மித்ராவை எங்க திருவுக்கு கல்யாணம் செஞ்சி கொடுப்பியா…?” என்றான். 

பொறுமை பொறுமை என்று தன்னை அடைகாத்து கொண்டிருந்தவனுக்கு, புகழின் ஒரு வார்த்தை மொத்த கடிவாளத்தையும் அறுத்து விட, “சம்மந்தம் இல்லாம இதுல எதுக்கு அவளை இழுக்குற புகழ்.’’ என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். 

“ஏன் எங்க திருவுக்கு என்ன குறைச்சல்…? கலெக்டர். உங்க பொண்ணை நல்லபடியா பார்த்துப்பான். உன் தங்கச்சியை விட அவனுக்கு தகுதி அதிகம். அப்புறம் என்ன..?’’ என்றான். 

மகன் சம்மந்தம் இல்லாமல் உளருவதை கண்ட திருப்பதி, “டேய்…! தேவை இல்லாம பேசாம ஒழுங்கா இங்க இருந்து போயிடு.’’ என்றார். வெண்ணிலா அண்ணன் மகன்களை கடிந்து கொள்ள முடியாமல், பரிதாபமாய் நின்றிருந்தார். 

தந்தையை நோக்கி திரும்பிய புகழ், “அப்பா… போதும்ப்பா இவங்க கிட்ட நாம யாசகம் வாங்கி பஞ்சம் பிழைச்சது எல்லாம். இப்போ நாம நாலு பேருக்கு செய்ற நிலமையில இருக்கோம். அது பணம்னாலும் சரி… வாழ்க்கைனாலும் சரி… இவங்க தானமா கொடுக்குற எதுவும் நமக்கு வேண்டாம்.’’ என்றான். 

பேச கூடாது பொறுமையை இழக்க கூடாது என்று தான் கார்த்திக் நினைத்து இருந்தான். ஆனாலும் அவனை மீறியே வார்த்தைகள் வெளி வந்து விழுந்தன. “தானமா கொடுக்குற எதையும் திருப்பி வாங்குற பழக்கம் எங்க குடும்பத்துக்கு இல்ல. உன் அத்தை மகளுக்கு நான் வேண்டாம்னு அவ எழுந்து சொல்லட்டும். ஒரு நிமிஷம் நான் இங்க இருக்க மாட்டேன்.’’ என்றான். 

காவல் நிலையத்திற்கு சென்று திரும்பி இருந்த திருவின் செவிகளில் விழுந்தது அந்த வார்த்தை தான். “அப்போ நீ என் தங்கச்சிக்கு வாழ்க்கை பிச்சை போட்டு இருக்கியா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். 

“நான் அப்படி எதுவும் பேச வரல. ஆனா நீங்க தான் மறுபடி மறுபடி பேசி அப்படி என்னையும் பீல் செய்ய வைக்குறீங்க.’’ என்றான் கார்த்திக். அதே நேரம் தந்தையோடு மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் மித்ரா. 

தமையன் கோமாய் பேசுவதை கண்டவள், “கார்த்திக். எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க..?’’ என்றவள் வேகமாக முன் சென்று அவனின் கரம் பற்றினாள். மதுரவின் மூலம் நடந்த செய்தியை கேள்விப்பட்டு அவசர விடுப்பெடுத்து விடிய விடிய பயணித்து வீட்டிற்கு வந்திருந்தாள். 

மகளின் பின்னால் வந்த பால்கி, “பிருந்தா கண் முழிக்கிற வரை கூட யாராலையும் பொறுமையா இருக்க முடியாதா…?’’ என்றார் ஆற்றாமையுடன். திரு நெடிய ஐந்து வருடங்களுக்கு பின் அவளின் முகம் காண்கிறான்.

பிறை ஒன்று வளர்ந்து  முழு மதியானதை போன்ற பால் முகம். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சொரூப சுந்தரியாய் நின்றிருந்தாள். கல்வியும் அது கொடுத்த அனுபவமும், அவள் உடல் மொழியில் ஒரு கம்பீரத்தை தந்திருந்தது. 

எது திருவுக்குள் இருந்து அவனை உந்தியது என்பதை அவனே அறியான். பால்கியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன், “நீங்க எங்களை சமமா நினைக்கிறதா இருந்தா உங்க பொண்ணு மித்ராவை எனக்கு கல்யாணம் செஞ்சி கொடுங்க.’’ என கேட்டு இருந்தான். 

பால் வீதி வளரும். 

Advertisement