Advertisement

பால் வீதி – 11 

எத்தனை நேரம் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தார்களோ முதலில் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக் . “மாம் ரொம்ப பசிக்குது. எனக்கு தோசை சுட்டுக் கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உங்க ரூம்ல போய் ரொமான்ஸ் பண்ணுங்க.’’ என்றான் கேலியாக. 

அவன் முதுகில் ஒரு அடி போட்ட மதுரா, “எனக்கு தெரியாம கல்யாணம் செஞ்சிக்கிட்டவனுக்கு தோசை எல்லாம் சுட்டு தர முடியாது போடா. நீயும் உன் அப்பாவும் சேர்ந்து எனக்கு தோசை சுட்டு தாங்க. போங்க.’’ என்றவர் மீண்டும் அருகிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

“மாம்… ப்ளீஸ்… அப்பா தோசைன்னு சொல்லி தோசை கல்லுல இட்லி சுட்டு தருவார். உங்களை மாதிரி ரோஸ்ட்டா அவருக்கு சுட தெரியாது. நீங்களே சுட்டு கொடுங்க…’’ என கெஞ்ச, “டேய் நானாவது இட்லி மாதிரியாச்சும் தோசை சுடுறேன். நீ சுடுறதுக்கு பேரே வைக்க முடியாது மை சைன்.’’ என கிண்டலில் இறங்கினார். 

“சித்தப்பா…’’ என்ற இனியனின் அழைப்பில் பால்கி நிமிர்ந்து பார்த்தவர்,, “டேய்… உள்ள வந்து உக்காருங்கடா. மது நீ தோசை ஊத்து. நான் அதுக்கு முன்னாடி பிரஷ் ஜூஸ் கலக்குறேன். சாப்பிடலாம்.’’ என்றவர் சமையலறைக்குள் நுழைய, “எங்களுக்கு எதுவும் வேண்டாம். நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்” என்றான் திரு. 

“முதல்ல சாப்பிடலாம். அப்புறம் பேசலாம்.’’ என்றான் கார்த்திக். “மா. எனக்கு பசிக்குது. சீக்கிரம்.’’ என்றான். “உள்ள வந்து உக்காருங்கப்பா. ரெண்டு நிமிஷம். தோசை ஊத்தி கொண்டு வறேன்.’’ என்றவர்   சமையல் அறைக்குள் நுழைய, “சோ… உங்க அப்பா மேல இருந்த பொசசிவ்னஸ்ல என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்ட அப்படித்தானே.’’ என்றான் திரு. 

அவன் கண்களை நேரடியாய் சந்தித்த கார்த்திக், “பொசசிவ்னஸ் இல்ல. பாசத்துல.’’ என்றவன், உணவு மேஜையில் இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்து, துண்டு போட்டு உண்ண தொடங்கினான். மதுரா சூடாக தோசையை சுட்டு கொண்டு வந்தவர், “டேய் திரு. வந்து உக்காரு. ‘’ எனவும், “எங்களுக்கு வேண்டாம். சாப்பிட்டு கூப்பிடுங்க. நாங்க தோட்டத்துல நிக்குறோம்.’’ என்றவன் மறுமொழிக்கு காத்திராமல் வெளியேறி இருந்தான். 

மதுரா முகத்தில் குழப்பத்தோடு நிற்க, “எனக்கு தோசையை போடும்மா. நேத்து நைட்ல இருந்து பேசி பேசியே பேய் பசி எடுத்துருச்சு.’’ என்றவன் ஆவலாய் தோசையை வாங்கி உண்டான். பழ சாற்றை கலக்கி முடித்து வெளியே வந்த பால்கி, “அவனுங்க எங்க…?’’ என மதுராவிடம் கேட்க, அவரோ என்ன பதில் சொல்வது என தயங்கி நிற்க,“நீங்க முதல்ல சாப்பிட்டு சுகர் மாத்திரையை போடுங்க. உங்க தத்து பசங்க வருவாங்க.’’ என்ற கார்த்திக் உணவில் கவனத்தை செலுத்தினான். 

நடந்த நிகழ்வு மதுராவையும் உலுக்கி இருக்க, யாரையும் தற்சமயம் எந்த விசயத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தவர், தானும் அமைதியாக உண்டு முடித்தார். மூவரும் உண்டதும், “மது தோசை ஊத்தி ஹாட் பாக்ஸ்ல வை. இவனுங்க கோபத்துல எங்கயாச்சும் பக்கத்துல போய் இருப்பாங்க. நான் போனை போடுறேன்.’’ என்றவர் அலைபேசியை எடுக்க, “போன்லாம் வேண்டாம். கொஞ்சம் சத்தமா பேர் சொல்லி கூப்பிடுங்க. வந்துடுவாங்க.’’ என்ற கார்த்திக் வசதியாக சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். 

“என்னடா சொல்ற. அவங்களை வீட்ல வச்சிகிட்டேவா நாம மட்டும் சாப்பிட்டோம்.’’ என பால்கி மகனை முறைக்க, அதே நேரம் திருவும், இனியனும் உள்ளே நுழைந்தனர். திருவின் கோபம் வடிந்து அவனின் நிதானம் சற்றே மீண்டிருந்தது. 

“பரவாயில்ல மாமா. எங்களுக்கு பசிக்கல.” தன் கையில் இருந்த கனத்த பையை தூக்கி அருகிருந்த டீப்பாவின் மீது வைத்தவன், “அம்மா அடிக்கடி சொல்லுவாங்க சின்ன வயசுல இருந்தே அவங்க அழுதா உங்களால தாங்க முடியாதுன்னு. கூடப் பிறந்தவங்க கஷ்டப்படக் கூடாது. உங்க வருமானத்துல அவங்களுக்கு கடைசி வர கொடுத்து உதவணும்னு தான் மது அத்தையை கூட கல்யாணம் செஞ்சிகிட்டீங்கன்னு பாட்டி சொல்லுவாங்க. நாம பட்ட கஷ்டத்தை, அவமானத்தை நம்ம கூட பிறந்தவங்க அனுபவிக்க கூடாது அப்படின்னு நினைக்கிற உங்க மனசு எனக்கு புரியுது. இப்போ எனக்கும் அதே மனசு தான் இருக்குங்கிறதை நீங்க புரிஞ்சிக்கணும்.’’ என்றவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். 

“நேத்து ஹாஸ்பிடல்ல நடந்ததை இனியன் சொன்னான். முதல்ல என்னால ஏத்துக்கவே முடியல. ரொம்ப கோபம் வந்துச்சு. ஆனா பொறுமையா யோசிக்கும் போது தான் புரிஞ்சது. நீங்க மறுபடி உங்க அண்ணன் பாசத்தை காட்டி இருக்கீங்கன்னு. உங்க கூட பிறந்தவங்க படிக்காதவங்க. சரியான வேலை வாய்ப்பும் அவங்களுக்கு அமையல. நீங்க அவங்களை பாத்துக்கணும்னு நினைக்கிறது சரிதான். ஆனா அவங்க பெத்த பிள்ளைங்க இப்போ வளர்ந்துட்டோம் மாமா. இனி நாங்க எங்க அப்பா, அம்மாவோட எங்க குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கிறோம்.” என்றான்.

பால்கி ஏதோ பேச வர, கார்த்திக் அவரின் கரம் பற்றி எதுவும் பேச வேண்டாம் என தடுத்தான். கார்த்திக்கின் செய்கையை கவனித்த திரு தொடர்ந்து, “நாங்க படிச்சி இன்னைக்கு நல்ல நிலையில இருக்க நீங்க ஒரு முக்கியமான காரணம். அதை எங்களால மறுக்க முடியாது. ஆனா நீங்க கொடுத்து உதவி செய்றீங்கன்னு காலத்துக்கும் உங்ககிட்ட நாங்க கையேந்தி நிக்க முடியாது. இன்னைக்கு காலைல உங்க பையன் கேட்ட கேள்வியை, நாளைக்கு மது அத்தை கேக்கலாம். இல்ல உங்க பொண்ணு கேக்கலாம். எங்க அம்மா வாங்கி கொடுத்த பைக்கோட விலை தெரியுமான்னு உங்க பையன் கேட்டப்ப தான் அது ரொம்ப விலை அதிகம் போலன்னு நான் பீல் செஞ்சேன். ஐஞ்சி வருசத்துக்கு முன்னாடி எனக்கு அது என்னோட மதும்மாவோட அன்பா தான் தெரிஞ்சது.”  என்றவனின் குரல் கமறியது. 

உடனே மதுரா, “திரு இப்போ எதுக்கு இதெல்லாம்…’’ என்று குறுக்கிட, “நான் பேசி முடிச்சிடுறேன் அத்தை. என் தங்கச்சிக்கு யாரும் வாழ்க்கை எல்லாம் கொடுக்க வேண்டாம். தானமா கிடச்ச எதையும் ஏத்துகிற பழக்கம் அவளுக்கு இல்ல. நாங்க எல்லாரும் நடந்த முள் பாதையோட தடம் கூட தெரியாம தான் அவளை வளர்த்து இருக்கோம். அவ ரொம்ப ஸ்ட்ராங் பர்சனாலிட்டி. இந்த மாதிரி சின்ன விசயம் எல்லாம் அவளை உடச்சிடாது. காலைல நான் இதே விசயத்தை கொஞ்சம் ஹார்ஷா  சொல்லும் போது உங்க பையன் நீங்க கொடுத்த காசு கணக்கை என் முன்னாடி நீட்டிட்டார். நான் வெண்ணிலா, மாரி பையனா அந்த அவாமனத்தை சந்திச்சி இருந்தா துடைச்சிட்டு போயிருப்பேன். ஆனா பிருந்தாவோட அண்ணனா என்னால அதை கடந்து போக முடியாது.’’ என்றதும் இப்போது என்ன வரப்  போகிறதோ என பால்கி அவனை பார்த்திருந்தார். 

“சின்ன வயசுல இருந்து நீங்க எங்களுக்கு செஞ்ச செலவு, அப்பா ஆப்ரேசனுக்கு கொடுத்த பணம், நிலத்தை மீட்க கொடுத்த பணம், பைக் வாங்கி கொடுத்த பணம், சீர் செஞ்ச பணம் ஏன் இங்க சாப்பிட சாப்பாடுக்கு கூட   கணக்கு போட்டு காசு எடுத்துட்டு வந்து இருக்கேன். மொத்தம் இதுல இருபது இலட்ச ரூபாய் இருக்கு. அதோட நீங்க வாங்கி கொடுத்த பைக்கை இங்கேயே விட்டுட்டு போறேன். இனி அதை ஓட்ட முடியும்னு தோணல.’’ என்றவன் தான் கொண்டு வந்து வைத்த பையின் மேலேயே வண்டியின் சாவியையும் வைத்தான். 

பால்கி அதிர்ந்து போய், “டேய் கண்ணா…’’ என அழைக்கும் போதே, “நாளைக்கு பிருந்தா கழுத்துல இருக்க தாலியை கொடுத்துவிடுறேன் மாமா. நீங்க இனி சிரமப்பட வேண்டாம். எல்லாத்தையும் நானே பார்த்துகிறேன். பிரதாப் அங்கிள் வீட்ல வந்து பேசணும்னாலும் சொல்லுங்க. நடந்தது ஜஸ்ட் ஒரு சாங்கிய கல்யாணம்னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்திடலாம்.’’ என்றவன் அங்கிருந்து வெளியேற தொடங்க, அவனை இனியன் பின் தொடர்ந்தான். 

“ஒரு நிமிஷம் கலெக்டர் சார்.’’ என்ற கார்த்தியின் குரலில் திரு நிற்க, “இப்படி வந்து உக்காருங்க. நிக்கிற உங்களை நிமிர்ந்து பார்த்து பேசினா எனக்கு கழுத்து வலிக்கும்.’’ என்றதும், “நீங்க வேணா நின்னு பேசுங்க மிஸ்டர் கார்த்திக்.’’ என்றான் திரு. 

‘அது சரி…! ஹாஸ்பிட்டல்ல ரொம்ப நேரம் நின்னது ரொம்ப கால் வலிக்குது. சொன்னா உங்களுக்கு எங்க புரிய போகுது.’’ என்று நக்கல் குரலில் மொழிந்தவன், எழுந்து நின்று திருவின் விழிகளை நேரடியாக சந்தித்தான். 

“நீங்க பேசினது, காசு கொடுத்தது, எல்லாமே ஓகே. வெல் அண்ட் குட். ஆனா அது என்ன கடைசில போகும் போது, தாலியை கழட்டி அனுப்புறேன்னு ஒரு மச்சான் மாப்பிள்ளையை பார்த்து பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டு போறீங்க.’’ என்றதும் திருவின் முகத்தில் அதுவரை குடியிருந்த நிதானம் மெல்ல மறைய தொடங்கியது. 

“பெத்தவங்க முன்னாடி இந்து மத சட்டப்படி தாலி கட்டி நடந்த கல்யாணம். ஒரே வீக் பாயின்ட் கல்யாணம் நடக்கும் போது உங்க தங்கச்சிக்கு கான்சியஸ்னஸ் இல்ல. அவ்ளோ தான். இந்த கல்யாணம் வேண்டான்னு சொல்ற உரிமை ரெண்டு பேருக்கு தான். ஒன்னு எனக்கு. நான் இனி அதை சொல்ல மாட்டேன். இன்னொன்னு உங்க தங்கச்சிக்கு. அவ கண்ணு முழிச்சி என்னை வேண்டாம்னு சொல்லி அவ கையால தாலியை கழட்டி தரட்டும். நான் சந்தோசமா வாங்கிட்டு ஒதுங்கிக்கிறேன். ஆனா அதுக்கு அப்புறம் கூட என் வாழ்க்கைக்காக பிரதாப் அங்கிள் வீட்டுக்கு போய் சாட்சி சொல்ற வேண்டாத வேலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். ஸ்டில் ஐயம் எலிஜிபில் பேச்சிலர். அதோட நான் டூகே கிட். திரிசா இல்லனா நயன்தாரான்னு போயிட்டே இருப்பேன். சோ… நீங்க உங்க கலெக்டர் வேலையை மட்டும் செஞ்சா போதும்.’’ என்றான் நக்கலாய். 

கார்த்திக்கின் முகத்தில் இருந்த நக்கல் தொனியை கவனித்த திரு, அவனை இளக்காரமாய் பார்த்து சிரித்துவிட்டு, “டேய்…! உனக்கு என்ன தெரியும் என் தங்கச்சியை பத்தி. நீ ஒரு கிரிக்கெட் ஸ்டார்ன்னு பந்தா செஞ்சிட்டு அவ முன்னாடி போய் நின்னா மத்த பொண்ணுங்க மாதிரி ஈசியா உன்னை அக்சப்ட் செஞ்சுடுவான்னு நினைக்கிறியா…? என் தங்கச்சிக்கு கான்சியஸ் வந்ததும் சொல்லி அனுப்புறேன். நீயே வந்து நீ போட்டு விட்ட தாலியை வாங்கிட்டு போ.’’ என்றவன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேற, “அதுவரை நீ என்னை பத்தி உன் தங்கச்சிகிட்ட தப்பா எதுவும் போட்டுக் கொடுத்துடாம இரு மச்சான்.’’ என்றான் கார்த்திக். 

‘போடா டேய்…’ என்பதை போல அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரு வெளியேற, ‘இவன மாதிரியே இவன் தங்கச்சியும் சரியான அடாவடியா இருப்பாளோ…? இல்லையே சின்ன வயசுல பார்க்கும் போது அமைதியான பொண்ணா தானே இருந்தா.’ என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டே திரும்பியவன் கண்டது கலங்கி நின்ற தாய் தந்தையை தான். 

கார்த்திகை கோபமாய் பார்த்து முறைத்த மதுரா, “சாப்பிட்ட சாப்பாடுக்கு கூட காசு கணக்கு செஞ்சி கொடுத்துட்டு போற அளவுக்கு என்னடா பேசிட்டு வந்த நீ…? அவன் எவ்ளோ சுய கவுரவம் பாக்குறவன் தெரியுமா…? சின்ன வயசுல இருந்து அவனுக்கு எதாச்சும் கிப்ட் கொடுக்கணும்னா எவ்ளோ கஷ்டப்படுவோம் தெரியுமா..? அவனுக்குன்னு வாங்கின நிறைய திங்க்ஸ் அவனுக்கு கொடுக்க முடியாம நம்ம வீட்ல இருக்கு. அவனை பத்தி என்ன தெரியும் உனக்கு? எதுக்குடா தேவையில்லாத வேலை செஞ்சி எல்லார் நிம்மதியும் கெடுத்துட்டு இருக்க நீ…?’’ என்றார். 

Advertisement