Advertisement

“அம்மா நம்ம பிரச்சனையை வீட்ல போய் பேசிக்கலாம். மாமா நீங்க இதுல எதுவும் பேச வேண்டாம். ஆன்ட்டி உங்களுக்கு நல்லா தெரியும். நான் பிரகாவை பிரபோஸ் செய்யலை. அவ என்னை பிடிச்சி இருக்குன்னு சொன்னப்ப அப்பாவோட பிரண்ட் டாட்டர் சின்ன வயசுல இருந்து பார்த்து விளையாடின சைல்ட் வுட் பிரண்ட் லைப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு தான் நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். மத்தபடி நீ இல்லைனா நான் இல்லைங்கிற மாதிரி லவ் இல்லை. இட்ஸ் பியூர்லி அரேஞ்சுடு மேரேஜ் எங்க ரெண்டு பேருக்குமே.’’ என்றவன் நிறுத்த, திவ்யாவின் இரண்டாவது அண்ணன் சுரேந்தர், “லவ்வோ லவ் இல்லையோ நிச்சயம் முடிஞ்சது தானே.’’ என்று இடையில் எகிறிக் கொண்டு வந்தார்.

“சார். நீங்க பேச வேண்டாம். உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்க பிரச்சனை செய்ற மாதிரி இருந்தா நேரா என் வீட்டுக்கு போய் வெயிட் பண்ணுங்க. நான் அங்க வந்து பேசுறேன்.” என்றவன் மீண்டும் திவ்யாவிடம் திரும்பினான்.

 “அங்கிள் தான் பிரகா மனசுல அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்து இருக்கார் ஆன்ட்டி. அவளுமே என்னை மாதிரி தான். சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்த பையன் லைப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும் அப்படிங்கிற பீல்ல தான் என்னை பிரபோஸ் செஞ்சது. இதே ஆக்சிடன்ட் எனக்கு நடந்து நான் அப்பா ஆகுற தகுதியை இழந்து இருந்தா அப்பவும் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சி கொடுத்து இருப்பீங்களா..? ஆனா எங்க அப்பா சொன்னா அப்பவும் பிருந்தா என்னை கல்யாணம் செஞ்சிப்பா. ஏன்னா அது பேமிலி பாண்டிங். உங்களுக்கு புரியாது. நடந்தது எல்லாமே எங்களை மீறி நடந்த விஷயம். இனி எதையும் எங்களால மாத்த முடியாது. உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினதுக்கு ரொம்ப சாரி ஆன்ட்டி. நான் பிரகாகிட்ட பேசுறேன். அவ கண்டிப்பா புரிஞ்சுகுவா. ப்ளீஸ் நமக்குள்ள பேசி தீர்க்க வேண்டிய விசயத்துல தயவு செஞ்சி நீங்க மூணாவது மனுசங்களை இன்வால்வ் செய்யாதீங்க.’’ என்றவன் கையெடுத்து வணங்கி கேட்க, திவ்யாவிற்கே மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியவில்லை.

“யாரு மூணாவது மனுசங்க. என்ன பேசுறீங்க.’’ என மற்ற மூவரும் சண்டைக்கு வர, திவ்யா தன் அண்ணன்களை தடுத்தி நிறுத்தி, “நாம போலாம் அண்ணா. உங்க பொண்ணு மேல எனக்கு லவ் இல்லைன்னு சொல்றவர் கூட என் மக வாழ வேண்டாம். பிரதாப் சொன்னது சரி. இனி இவங்களா தேடி வந்தாலும் இவங்க நமக்கு வேண்டாம். ரெண்டு நாள்ல நிச்சயதார்த்த செலவை அனுப்பி வைக்கிறோம் மிஸ்டர் கார்த்திக். பே செய்ய ரெடியா இருங்க.’’ என்றவர் தன் அண்ணன்களோடு அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்து சக்திவேலை பார்த்தவன், “உங்க தங்கச்சியை கொண்டு போய் எங்க வீட்ல ட்ராப் செஞ்சிட்டு போங்க. நான் எங்க அப்பா கூட வீட்டுக்கு வறேன். அப்புறம் மாமா அம்மா இல்லாமா ஒரு பையன் கல்யாணம் நடக்கலாம். ஆனா அப்பா இல்லாமா ஒரு பையன் வளர தான் கூடாது. புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். கிளம்புங்க.’’ என்றவன் “வாங்கப்பா போலாம்.’’ என பால்கியின் கரம் பற்றி தங்கள் வாகனத்தை நிறுத்தி இருந்த இடம் நோக்கி நகர்ந்தான்.

“ஒரு நிமிஷம். எனக்கு உங்க கூட பேசணும்.’’ என்று பால்கியின் குறுக்கே வந்து நின்றான் திரு. அவனை நிமிர்ந்து பார்த்த கார்த்திக், “எது பேசணும்னாலும் எங்க வீட்டுக்கு வாங்க. இனி இங்க எதுவும் பேச முடியாது.’’ என்றவன் வண்டியை நோக்கி நடந்து விட, திரு ஆத்திரமாய் தன் கால்களை பூமியில் உதைத்தான்.

இனியன், “மச்சான்…’’ என திருவின் தோளை தொட, “வண்டியை எடுடா. அங்கேயும் போய் தொலைப்போம்.’’ என்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் பால்கியின் வீட்டின் முன் நின்றனர். “அப்பா குளிச்சிட்டு வாங்க. மா… நானும் ரெப்ரெஷ் ஆயிட்டு வந்துடுறேன். சூடா எதாச்சும் செஞ்சி வையுங்க. சாப்பிட்டு பேசுவோம்.’’ என்றவன் தன் அறை நோக்கி நடந்திருந்தான்.

மதுரா இருந்த கவலையில் திருவை கவனிக்கவே இல்லை. நேராக இருக்கையில் சென்று அமர்ந்தவர் நிறுத்தியிருந்த தன் அழுகையை தொடர, பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்த கார்த்திக் கண்டது, அழுது கொண்டிருந்த தாயையும் வீட்டில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த இனியனையும், திருவையும் தான்.

“ஹெலோ கலெக்டர் சார். ஏன் துவார பாலகர்கள் மாதிரி வாசல்ல நிக்குறீங்க. உள்ள வந்து உக்காருங்க.’’ என்றவன் “மா நான் தோசை ஊத்த போறேன். உங்களுக்கு வேணுமா…?’’ என்றபடி சமையலறை நோக்கி நடந்தான்.

அழுது கொண்டே எழுந்தவர், அவன் நெஞ்சில் வேகமாக அடித்தபடி, “எப்படிடா ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்க. உனக்கு அம்மா வேண்டாமா…? அப்பா போதுமா. உன் கல்யாணத்தை பத்தி எனக்கு எவ்ளோ கனவு இருந்து இருக்கும். ஒரு நிமிசத்துல எல்லாத்தையும் உடைச்சிட்ட இல்ல நீ…? எனக்கு நீ வேணாம் போ…’’ என குழந்தை போல தேம்பி தேம்பி அழுதார்.

அப்படியே அவரை அணைத்து பிடித்துக் கொண்டவன், அவர் உச்சியில் தன் முகத்தை வைத்து, “மம்மி… மம்மி… உன் பையன் கல்யாணத்தை நேர்ல பார்க்க முடியலைன்னு நீ இவ்ளோ பீல் செய்றியே… இனி தன் பொண்ணை உயிரோடவே பார்க்க முடியாதேன்னு பீல் செஞ்ச இன்னொரு அம்மாவோட பீலிங்க்ஸ் உங்களுக்கு புரியாதா…? நீங்களும் அப்பாவும் லவ் மேரேஜ் ரைட். அவரை இன் அண்ட் அவுட் உங்களுக்கு தெரிஞ்சும் ஹாஸ்பிடல்ல எல்லார் முன்னாடியும் வச்சி நீங்க அப்படி ஒரு கேள்வி அவரை கேட்கலாமா..? அது அவரை எவ்ளோ ஹர்ட் செய்யும்னு உங்களுக்கு தெரியாதா…?’’ என்றான்.

கண்களில் நீர் வழிய அவரை நிமிர்ந்து பார்த்தவர், “அப்பாவும் பையனும் சேர்ந்து என்னை ஹர்ட் செஞ்சி இருக்கீங்களே. அது மட்டும் நியாயமா…? எனக்கு ஒரு போன் செஞ்சி பர்மிசன் கேக்கணும்னு கூட தோணலை இல்ல உங்களுக்கு. எனக்கான மரியாதை அவ்ளோ தானே’’ என்றவர்  மீண்டும் அழ தொடங்கினார்.

“மாம்…! ப்ளீஸ்…! அழறதை நிறுத்துங்க. நான் இதை சொல்ல வேண்டாம்னு தான் நினச்சேன். ஆனா இதை சொல்லாம நீங்க சாமாதானம் ஆக போறதில்லை. அதனால சொல்றேன். அப்பா இனியனை தான் பிருந்தா கழுத்துல தாலி கட்ட சொன்னார். ஆனா தாலியை கையில வச்சிக்கிட்டு என் பையனுக்கு உன் பொண்ணை கட்டிக் கொடுக்க சம்மதமான்னு கேட்டுட்டார். அவர் என் அண்ணன் பையனுக்கு பொண்ணு தர சம்மதமான்னு கேட்டு இருந்தா இந்நேரம் நீங்க அழற அவசியம் வந்து இருக்காது.” என்றவன் அவர் விழிகளை துடைத்துவிட்டு மேலே தொடர்ந்தான்.

“உங்களுக்கு தான் தெரியுமே. அவனுங்க மூணு பேருமே அவரை அப்பான்னு தானே கூப்பிடுவாங்க. ஆனா அவர் என்னோட அப்பாமா. அவரை யாருக்காகவும் எதுக்காகவும் எங்கயும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. சின்ன வயசுல நான் அவங்க கூட விளையாட போகும் போதெல்லாம் உங்க அப்பா சாமிகிட்ட போயிட்டார். இவர் எங்களோட பால்கி அப்பான்னு சொல்லி என்னை அழ வைப்பாங்க. ஆனா இவர் என் அப்பா இல்லைன்னு நான் ஒருநாளும் பீல் செஞ்சதே இல்ல. பீல் செய்ய அவர் விட்டதில்லை. என் சைல்ட்வுட் மெமரி புல்லா இவர் மட்டும் தான்மா இருக்கார். ஒரு பிரண்டா. கைடா. காட் பாதரா.’’ என்றவன் லேசாக கரகரக்க தொடங்கிய தன் குரலை செருமி சரி செய்து கொண்டு தொடர்ந்தான்.

“நல்லதோ கெட்டதோ அவரோட எல்லா நேரத்துலயும் அவர் மகனா அவர் பக்கத்துல நிக்க வேண்டியது என்னோட கடமை. அந்த தாலியை இனியனை வாங்க விட்டு இருந்தா அவரோட மகனா நான் தோத்து போய் இருந்திருப்பேன் மாம். உங்க பையன் டி- ட்வண்டி கப் ஜெயிச்சி கைல வாங்கினப்ப எவ்ளோ சந்தோசப்பட்டீங்க. டே நைட் பார்க்கமா டாட் என் பின்னாடி ஓடி வந்த உழைப்பு அந்த கப்ல இருக்கு. அவர் மகன்னு சொன்னா அது நான் மட்டும் தான். புகழுக்கும், இனியனுக்கும் அவர் சித்தப்பா. திருவுக்கு மாமா. அதை மறுபடி அவர் மனசுல அழுத்தமா பதிய வைக்க தான் பிருந்தா கழுத்துல தாலியை கட்டிட்டு வந்து இருக்கேன்.’’ என்றவன் தன் தோள் மீது ஒரு கரம் படிய அது தந்தையின் கரம் என்பதை உணர்ந்து அதில் தன் முகத்தை புதைத்து கொண்டான்.

பால்கி “கார்த்திக்..’’ என மகனை அணைத்து கொள்ள, அவனோ கலங்கிய குரலில், “மா…! தயவு செஞ்சி நீங்களும் அவர்கிட்ட என் பையன் விசயத்துல நீ எப்படி முடிவு எடுக்கலாம்னு கேட்டுடாதீங்க மா. அவரை விட நான் உடைஞ்சு போயிடுவேன் மா. அவரு என்னோட அப்பா மா…’’ என்றவன் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த இறுக்கத்தையும் அழுகையாய் வெளிபடுத்த, பால்கி, “நான் உனக்கு மட்டும் தாண்டா அப்பா. டேய் உன்னோட அப்பா நான் மட்டும் தான்.’’ என்றவர் மனைவியோடு மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

“சாரி… சாரி கார்த்திக்.’’ என்றவர் ஆதுரமாய் கணவரின் கைகளையும் பற்றிக் கொள்ள, இவர்களின் பாசப் பிணைப்பை கண்ட திருவும், இனியனும், ‘இப்போது எப்படி பேச்சை தொடங்குவது’ என தயங்கி  நிற்க, இத்தனை பிரச்சனைக்கும் ஆதி வேரான புகழ் பெங்களூரில் இருந்து புயல் போல கிளம்பியிருந்தான் ஒரு முனை தாக்குதலை மும்முனை தாக்குதலாக்க.

பால் வீதி வளரும்.

Advertisement