Advertisement

பால்கி, “டேய்..’’ என கார்த்திக்கை தடுக்க வரும் போதே,  “நீங்க அமைதியா இருங்கப்பா’’ என்றான்.  திருவின் முகம் மேலும் கோபத்தில் இறுக, “அதையெல்லாம் வட்டியோட திருப்பி கொடுத்திடுறேன்.’’ என்றான்.

“அது சரி… நீ பொறந்ததுல இருந்து எங்க அம்மா அப்பா உங்களுக்கு செஞ்சதை கணக்கு போடவே எனக்கு மாசக் கணக்குல டைம் எடுக்கும். அதுவும் நீ சிவில் எக்ஸாம் ப்ரிலிம்ஸ் பாஸ் செஞ்சதுக்கு எங்க அம்மா உனக்கு டேவிட்சன் பைக் வாங்கி கொடுத்தாங்க இல்ல. அதோட ரேட் என்ன தெரியுமா உனக்கு…? அப்போ எங்க அம்மா அப்பா செஞ்சது எல்லாம் உங்க நல்லதுக்குன்னு பல்லை இளிச்சுட்டு வாங்கிக்க தெரிஞ்சது இல்ல. இப்போ ஏன் சுடுதண்ணியில விழுந்த தவளை மாதிரி துள்ளிட்டு வர. உனக்கு உன் தங்கச்சி எப்படியோ அப்படி தான் அவருக்கு அவர் தங்கச்சி.’’ என்றவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

திருவின் முகத்தை ஆழப் பார்த்தவன், “அவங்க மன நிம்மதிக்காக தான் இந்த கல்யாணம். மத்தபடி உன் தங்கச்சி சீதையை தூக்கிட்டு போய் வனவாசம் வைக்குற இராவணன் எல்லாம் நான் இல்ல. எங்க அப்பாவுக்கு பையன் நான். அவர் சொன்ன வார்த்தையை காப்பாத்த வேண்டியது என்னோட கடமை. அதை தான் செஞ்சேன். இப்போ பிரச்சனை கல்யாணம் இல்ல. உன் தங்கச்சி ஹெல்த். முதல்ல அதை பாரு. அவளை கட்டாப்படுத்தி எல்லாம் அவ கூட வாழ மாட்டேன். புரிஞ்சதா. இன்னும் கூட நான் அதிகம் பேசுவேன். இங்க நிக்கிற பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறேன்.’’ என்றவன் “வாங்கப்பா…’’ என பால்கியின் கை பிடித்து அருகிருந்த இருக்கைக்கு அழைத்து சென்றவன் அவரை அமர்த்தி அவர் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

‘எனக்கு இந்த அவமானம் எல்லாம் உங்களால் தான்…’ என பெற்றவர்களை முறைத்தவன், சோர்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர, இனியன் அவனுக்கு அருகில் வந்து நின்று கொண்டான்.

திருவை நிதானம் இழக்க செய்யும் வல்லமை கொண்டது அவன் தங்கை மீது கொண்ட நேசம். அவர்கள் அண்ணன், தங்கை என்பதை விட நெருங்கிய நண்பர்கள் என சொல்வது சாலப் பொருத்தமாய் இருக்கும்.

தான் சிறுவயதில் சந்திக்க நேர்ந்த அவமானம் எதையும், தன் தங்கையை அணுக விடாது பார்த்துக் கொண்டவன் திரு. உண்மையில் இத்தனை வீரியமாய் இந்த திருமணத்தை அவன் எதிர்க்க காரணமே, தன் தங்கை யார் முன்னிலையிலும் அவர்களை விட தான் கீழ் என்று உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக மட்டுமே.

இந்த திருமணம் மேலும் என்ன என்ன சிக்கல்களை கொண்டு வரும் என்பதை உணர்ந்தவன், அதை தவிர்க்க வேண்டிய சிந்தனையில் ஆழ்ந்தான். பிருந்தா அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவிற்குள் யாரையும் அனுமதிக்க மறுக்க, கண்ணாடி தடுப்பின் வழியே தங்கையின் முகத்தை கண்டவனின் நெஞ்செல்லாம் வலித்தது.

ஆளை அடையாளம் காண முடியாத அளவிற்கு ஒரே நாளில் உருக்குலைந்திருந்தாள் பிருந்தா. சற்று நேரம் தங்கையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் மனதிற்குள் சில கணக்குகளை போட்டு பார்த்துவிட்டு இனியனை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

கலங்கி அமர்ந்திருந்த தங்கையை, “அவன் கோபத்துல பேசிட்டு போறான். நீ மனசுல எதையும் ஏத்திக்காத.’’ என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார் திருப்பதி. தந்தையின் மடியில் தலை சாய்த்திருந்த கார்த்திக் சில வினாடிகளில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவி இருந்தான்.

‘இவனை மகனாக பெற என்ன தவம் செய்தேன்.’ என தன் மடியில் உறங்கும் மகனை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் பால்கி. பெற்ற மகனாய் இருந்திருந்தால் கூட தன் ஒற்றை சொல்லுக்கு வாழ்கையை தூக்கி கொடுத்திருப்பானா என்பது கேள்விக் குறி தான் என்று எண்ணியவரின் நெஞ்சம் பெருமிதத்தில் நிறைந்து போனது.

சூரியன் தன் பொன் கதிர்களால் பூமியை ஆரத் தழுவியதில் பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. வீட்டிற்கு போய் மதுராவிடம் நடந்த நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியவர், மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை மெதுவாக தட்டி எழுப்பினார்.

அவன் உறக்கம் கலையாத விழிகளை தேய்த்து கொண்டே எழுந்து அமர, “நிலா நாங்க வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறோம். கிருஷ்ணா காலைல வந்து பிருந்தாவை பார்த்துட்டு அவ ஹெல்த் ஸ்டேடஸ் சொல்லுவான். கேஸ் சமந்தப்பட்ட விஷயம் எல்லாம் பிரதாப் பார்த்து சொல்றேன்னு சொல்லி இருக்கான். நீ தைரியமா இரு. நாங்க போனதும் வந்துடுறோம்.’’ என்று அவர் வெளியே கிளம்பும் போதே, வரிசையாக நான்கைந்து வெண்ணிற டாடா சுமோக்கள் புழுதியை கிளப்பிக் கொண்டு அங்கு வந்து நின்றது.

அனைவரும் வாகனம் நின்ற திசையை நோக்கி திரும்பிய போது, முதல் வாகனத்தில் இருந்து மதுராவும், அவரோடு அவரின் ஒன்றுவிட்ட அண்ணன் சக்தி வேலும் இறங்கினர். அடுத்த வாகனத்தில் இருந்து திவ்யா, அவரோடு அவரின் இரு அண்ணன்களும் இறங்க, பால்கி மனதிற்குள், ‘போச்சு… அடுத்த பஞ்சாயத்தா?’ என்று மலைத்து போனார்.

மதுராவின் விழிகள் அழுததில் நன்றாக சிவந்திருந்தது. வரும் வழியெல்லாம் அழுதிருப்பார் போல. பால்கி மனைவியை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் நடந்து கணவரின் அருகில் வந்தவர், “ஏன் பால்கி இப்படி செஞ்சீங்க…? நீங்க எனக்கு தந்த வாழ்கையை என் பையனை வச்சி உங்க குடும்பத்துக்கு ஈடு செஞ்சீட்டீங்களா…?’’ என்றார்.

ஒரே ஒரு வார்த்தை தான். ஆனால் பால்கியை உடைக்க அது போதுமானதாய் இருந்தது. அவர் கலங்கி நிற்கும் போதே, சக்தி பேச ஆரம்பித்து இருந்தார். “என் தங்கச்சி ஆசைப்பட்டான்னு தான் உங்க கல்யாணத்துக்கே நாங்க ஒத்துகிட்டது. அது எப்படிங்க என் தங்கச்சி பையன் கல்யாணத்தை என் தங்கச்சிக்கே தெரியாம நீங்க நடத்தி வைக்கலாம். உங்க தங்கச்சி பொண்ணுக்கு பிரச்சனைனா உங்ககிட்ட இருக்க காசு பணத்தை அள்ளி கொடுங்க. எங்க வீட்டு பையனை தூக்கி கொடுக்க நீங்க யாருங்க…?’’ என கண்டபடி கத்த தொடங்கி இருந்தார்.

திவ்யாவின் மூத்த அண்ணன் சாரங்கன், “எங்க பொண்ணு உங்க வீட்டு பையனை நாலு வருசமா லவ் பண்ணி இருக்கா. ரெண்டு வீட்டு பக்கமும் அது தெரியும். இப்ப தான் இலட்ச கணக்குல செலவு செஞ்சி நிச்சயம் வேற செஞ்சோம். கல்யாண ஆசையோட காத்து இருக்க எங்க வீட்டு பொண்ணுக்கு நாங்க என்ன பதிலுங்க சொல்றது. நேத்து நைட்டு எங்க மச்சான்… மனசு நொந்து போய் என் தங்கச்சிகிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்லி இருக்குறாரு. இப்போ நாங்க கூப்பிட்டப்போ கூட நியாயம் கேக்க எங்க கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்த மாதிரி நல்ல மனுசனுக்கு நீங்க செஞ்ச விஷயம் சரியாங்க? எங்க பொண்ணுக்கு என்னங்க பதில் இப்ப?’’ என்று கேட்க, பால்கி யாருக்கு பதில் சொல்வது என புரியாமல் கலங்கி நிற்கும் போதே திரு உள்ளே வந்திருந்தான்.

அவனை யாருக்கும் அடையாளம் தெரியாததில் தொடர்ந்து சக்திவேல் பேச தொடங்கினார். “நடந்த கல்யாணம் வெளிய தெரிய கூடாது. என் தங்கச்சி மகன் கல்யாணம் நிச்சயம் செஞ்சபடி பிரதாப் பொண்ணு கூட தான் நடக்கணும். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது. கார்த்திக் கட்டின தாலி அந்த பொண்ணு கழுத்துல இருக்க கூடாது. காசு பணம் எதுவும் பத்தலைனா சொல்லுங்க. நான் கூட கணக்கை தீர்த்து விடுறேன்…’’ அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, ‘படீர்’ என்ற கண்ணாடி உடையும் சத்தத்தில் அனைவரும் திகைத்து நிற்க, மருத்துவமனை ஊழியர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அருகில் இருந்த கண்ணாடிக் கதவை திரு தன் கைகளால் உடைத்திருந்தான். “சார்…! இது ஹாஸ்பிடல்… கொஞ்சம் அமைதியா இருங்க. பெரிய இடம்னு நாங்க எவ்ளோ தான் பொறுத்து போறது.’’ என்று ஒரு செவிலியர் அலற மருத்துவமனை வாயில் காப்பாளர்கள் வந்து அங்கிருந்தவர்களை வெளியேற்ற முனைந்தனர்.

“ஒரு நிமிஷம் நாங்களே போறோம்.” என்று அவர்களை தடுத்த கார்த்திக்,   புடவை முந்தானையால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்த வெண்ணிலாவை நெருங்கி, “உங்க பொண்ணு வேண்டாம்னு சொல்ற வரை நான் அவளோட புருஷன் தான் அத்தை. அதை யாராலையும் மாத்த முடியாது. நீங்க பிருந்தாவை பார்த்துக்கோங்க. நிச்சயம் வரை போய் கல்யாணம் நின்னா எதிர் பக்கத்து ரியாக்சன் இப்படி தான் இருக்கும். தப்பு நம்ம பக்கம். கொஞ்சம் பொறுத்து போவோம். நீங்க டென்சன் ஆகாதீங்க.’’ என்றவன் திருப்பதியை நோக்கி கண்களை காட்டிவிட்டு, “வெளிய போய் நம்ம பிரச்சனையை பேசுவோம்.’’ என்றவந முதல் ஆளாக வெளியே நடந்தான்.

மருத்துவமனையை சுற்றிலும், சிறு சிறு குடில்கள் அமைத்திருந்தனர். நோயாளிகளின் உறவினர்கள் இளைப்பாற. அதில் காலியாக இருந்த ஒன்றில் கார்த்திக் நுழைய அவனை பின்பற்றி மற்றவர்கள் வந்தனர்.

Advertisement