Advertisement

பால் வீதி – 10

ஆறு மணி நேரங்கள் மிக நெடிய ஆறு யுகங்களாய் கடந்திருந்தது. பிருந்தாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர  சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தாள். மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லிய பிறகே மற்றவர்களால் இயல்பாக மூச்சு விட முடிந்தது.

வெண்ணிலா, தன் மகள் கழுத்தில் கார்த்திக் கட்டிய தாலிதான் அவள் உயிரை காத்தது என்ற முடிவிற்கே வந்திருந்தார். மருத்துவர் பிருந்தாவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லியதும், சாஸ்டாங்கமாய் பால்கியின் கால்களில் விழுந்திருந்தார்.

திருப்பதிக்கு கூட மனம் சற்றே சமன்பட்டிருந்தது. அவளை அறுவை அரங்கிற்கு அழைத்து செல்லும் போது, செவிலியர் தாலியை கழற்ற வேண்டும் என்று சொல்லிய போது கூட, “இல்ல அது மட்டும் கழட்ட வேண்டாம். இருக்கட்டும்.’’ என்று உறுதியாய் மறுத்திருந்தார்.

அவரின் பிடிவாதம் கண்ட மருத்துவர்கள், “ஏப்ரான் மேல பின்செஞ்சி கவர் பண்ணிடுங்க. நெக் ரீஜன் எதுவும் இஞ்சுரி இல்ல. குவிக்.’’ என்றபடி அவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து இருந்தனர்.

அதுவரை அத்தனை பேரையும் அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம் சற்றே விடைபெற்று இருக்க, அமர்ந்திருந்த இருக்கைகளில் அப்படியே லேசாக கண் மூடி உறங்க தொடங்கினர். பால்கிக்கு இரவு திரு  பேசிய வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திருவின் குரலில் அப்படி ஒரு ரௌத்திரத்தை பால்கி இதற்கு முன் கேட்டதில்லை. சுடு பாறையின் மீது கொட்டப்பட்ட கொதி நீராக வந்து விழுந்தது ஒவ்வொரு வார்த்தையும்.  “நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் எதிர் பார்க்கவே இல்ல. இந்த கல்யாண விஷயம் ஹாஸ்பிடலை தாண்டி வெளிய போக கூடாது மாமா. பிருந்தாவுகே இந்த விஷயம் தெரியாம இருக்குறது ரொம்ப நல்லது. நான் அங்க கிளம்பி வர வரைக்கும் யாரும் என் தங்கச்சி பக்கத்துல போக வேண்டாம். முக்கியமா உங்க பையன்.’’ என்றவன் அதோடு இணைப்பை துண்டித்திருந்தான்.

எப்போதும் ‘பால்கிப்பா’ என்றே அழைப்பவன் முதன் முறையாக, ‘மாமா’ என்று அழைத்ததில் மனதிற்குள் மறுகிப் போனார் பால்கி. அவர் நினைத்து செய்தது ஒன்று. ஆனால் நடந்தது மற்றொன்று. இனி எப்படி மதுராவையும், பிரகாஷினியையும் எதிர் கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியே அவரை மருட்டிக் கொண்டிருந்தது.

இதற்கு மத்தியில் திருவின் கோபம், தான் செய்த செயல் சரிதானா என்ற சந்தேகத்தையே அவருக்குள் தோற்றுவித்தது. ஆயினும் முகத்தில் தெளிச்சியோடு, அமர்ந்திருக்கும் தங்கையை காண்கையில், ‘சரி வருவதை பார்த்துக் கொள்வோம்’ என திடமாக மனதிற்குள் முடிவெடுத்தவர் அதன் பிறகே லேசாக கண்களை மூடினார்.

கவிழ்ந்த இரவில் வைகறை சுண்ணாம்பு நீர் தெளிக்கும் அதிகாலை நேரம். முதலில் விழிக்கும் புள்ளினங்கள் பூபாளம் இசைத்து புவியின் துயில் கலைத்து கொண்டிருந்தன. கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவின் வாயிலில் இருந்த முதல் இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் தன்னை யாரோ தொட்டு தூக்குவதை போல உணர்ந்தவன், விழி திறக்கும் முன்பே சுளீர் என்று இடது கன்னத்தை தாக்கிய வலியில் முற்றிலும் உறக்கம் கலைய பட்டென விழிகளை திறந்தான்.

அவனுக்கு எதிரே ஒற்றை கரத்தால் கார்த்திக்கின் பனியனை இறுகப்பற்றி தூக்கி, அனல் கக்கும் விழிகளோடு முறைத்தபடி நின்று கொண்டிருந்தான் திரு. கொஞ்சம் நஞ்ச தூக்க கலக்கமும் முற்றிலும் தெளிய, திருவின் கைகளில் சிக்கி இருந்த தன் உடையை விடுவித்துக் கொண்ட கார்த்திக், திருவின் வயிற்றில் ஓங்கி ஓர் குத்துவிட்டான்.

அடிப்பது ஒரு விளையாட்டு வீரன் என்பதை அந்த அடி உரக்க சொல்லியது. சற்றே பின்னால் நகர்ந்து வலியின் வேதனையை உள்வாங்கிய திரு, மீண்டும் முன்னிலும் வேகமாய் கார்த்தியின் உடைபற்றி இழுத்து அவன் முகத்தில் குத்த வந்தான்.

ஆனால் இம்முறை தாக்குதலுக்கு தயாராக இருந்த கார்த்திக், அதை சுலபமாக சமாளித்து, திருவின் கையை முறுக்கி, அவன் முதுகில் உதைவிட்டான். இவர்களின் அடி தடி சத்தத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களின் உறக்கம் கலைய விழித்து பார்த்தவர்கள் கண்டது, கட்டி உருண்ட கார்த்திக்கையும், திருவையும் தான்.

“டேய்…! என்னடா செய்றீங்க..?’’ என்றபடி பால்கி அவர்களை பிரிக்க முயல, மறுபக்கம், வெண்ணிலாவும், திருப்பதியும், “மாப்பிள்ளையை விடுடா…’’ என திருவை இழுத்துப் பிடிக்க முயன்றனர்.

அங்கிருந்த காவலாளியும் வந்து விட, பல நிமிட கடுமையான போராட்டத்திற்கு பிறகு இருவரையும், ஒருவரில் இருந்து ஒருவரை பிரித்து நிற்க வைத்தனர். பால்கி கார்த்திக்கை பிடித்திருக்க, வெண்ணிலாவும் திருப்பதியும், திருவை பிடித்து நிறுத்தியிருந்தனர்.

உதட்டோரம் வழியும் குருதியோடு கார்த்திக்கை முறைத்து பார்த்த திரு, “மயக்கத்துல இருக்க பொண்ணு கழுத்துல அவ சம்மதமே இல்லாம தாலி கட்டி இருக்கியே. நீயெல்லாம் மனுசனாடா.. தூ…’’ என்றான்.

அதற்கு கார்த்திக் மறுவினை ஆற்றும் முன்னே, அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்ட வெண்ணிலா, “அவரு உன் தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம். அந்த சாமிய பார்த்து தப்பா பேசுற நீ. மெத்த படிச்சிட்டா பெரிய இவனாடா நீ…? இன்னைக்கு உன் தங்கச்சி உயிரோட இருக்க என் அண்ணன் குடும்பம் தான் காரணம். அந்த நன்றி உணர்ச்சி கூட வேண்டாம். உனக்கு ஏன்டா அவங்க மேல இத்தனை கோபம்.’’ என்று அவனை வார்த்தைகளால் வாட்டி எடுத்தார்.

“அம்மா… உனக்கு நான் என்ன பேசினாலும் புரியாது . கொஞ்ச நேரம் அமைதியா இரு. இது என் தங்கச்சி வாழ்க்கை. அப்படியெல்லாம் யார் கையிலயும் என்னால தூக்கி கொடுக்க முடியாது. நீங்க யாரும் இல்லைனா கூட என்னால அவளை பார்த்துக்க முடியும்.’’ என்றான் திடமாய்.

அத்தனை நேரம் நாம் ஒருத்தியின் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாது இருந்த கார்த்தியின் மனதில் திரு பேச பேச, நடந்தது தன் திருமணம் என்பது அழுத்தமாய் பதிய தொடங்கியது.

கார்த்தியின் முக மாற்றத்தை கண்ட பால்கி, “இவன் பேசாம இருந்தாலே நல்லா இருக்கும்.’’ என்று மனதிற்குள் பதற ஆரம்பித்தார்.

“பேசுடா… பேசு. நீ பேசுறதை எல்லாம் கேக்க தான நாங்க இங்க நிக்கிறோம். நாங்க இல்லாம உனக்கு தங்கச்சி வானத்துல இருந்து குதிச்சி வந்தாளா…? உன் பேச்சை கேட்டு அவளை வெளி ஊருக்கு படிக்க அனுப்பினேன் பாரு அது மொதோ தப்பு. எங்க அக்கா பொண்ணு கேட்டு வந்தப்ப உன் பேச்சை கேட்டு இப்போ கல்யாணம் செய்ய முடியாதுன்னு அவங்களை திருப்பி அனுப்பினேன் பாரு அது ரெண்டாவது தப்பு. நீ ஊருக்கு தாண்டா பெரிய கலக்டர். நம்ம வீட்டுக்கு இல்ல. அவ என் மச்சான் மருமக. தேவையில்லாம எதையாச்சும் பேசி பிரச்சனை செஞ்சிட்டு இருந்த பெத்த பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன் பாத்துக்க.’’ இம்முறை மாரி எகிறிக் கொண்டு அவனிடம் சண்டைக்கு நின்றார்.

திரு தந்தையின் பேச்சிற்கும் அடங்குபவனாக இல்லை. “என்ன பெருசா பெத்துட்டேன்… பெத்துட்டேன்னு பேசுற. நாய் கூட தான் ஆறு மாசத்துக்கு ஒரு முறை நாலு குட்டி போடுது. பெத்தா வளர்க்கணும். அந்த பிள்ளைக்கு ஒரு பென்சில் வாங்கி கொடுத்து இருப்பியா நீ. சம்பாதிச்சா மொத்த பணத்தையும் சாராய கடையில இறக்கின ஆளு தான நீ… நீ எப்ப எங்களை பெத்த பிள்ளைன்னு பார்த்து இருக்க… இனி பாக்குறதுக்கு. தேவையில்லாம எதையாச்சும் பேசிட்டு இருந்தா பெத்த அப்பானு நான் பார்க்க மாட்டேன்.’’ என்றான்.

திரு இப்படி பேசி யாரும் கேட்டதே இல்லை. பெற்றவர்களை யார் முன்னும் விட்டுக் கொடுக்காதவன். பேச்சு வாக்கில் யாராவது மாரியை குடிகாரன் என்று சொன்னாலே, “அந்த மனுஷன் உழச்சி அவர் குடிக்கிறாரு. உங்க கைல இருந்து காசு எடுத்து குடுத்த மாதிரி நீங்க ஏன் பேசுறீங்க…?’’ என சண்டைக்கு நிற்பான்.

வெண்ணிலாவும், மாரியும் வாய் பேச முடியாது திகைத்து நிற்க, திருப்பதி திருவின் இந்த பரிணாமத்தை கண்டு அயர்ந்து நின்றார். பால்கி, அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற திகைப்பில் நிற்க கார்த்திக் திருவின் முன் வந்து நின்றான்.

“உன் பேரன்ட்ஸ் பேச கூடாது ரைட். ஏன்னா அவங்க உங்களுக்கு ஒண்ணும் பெருசா செய்யலை. ஆனா நீங்க ஸ்கூல் போனதுல  இருந்து நீ சொன்ன பென்சில் பேனா தொடங்கி, உங்க டியூசன் பீஸ், புக்ஸ், ட்ரஸ் இப்படி எல்லாத்துக்கும் பே செஞ்ச எங்க அப்பா பேசலாம் இல்லையா. ஒரு ஐஞ்சு வருஷம் முன்னாடி உங்க அப்பா ஹார்ட் சர்ஜரிக்கு கூட நாங்க பே செஞ்சதா எனக்கு நியாபகம். அதோட விவசாய கடன்ல இருந்த உங்க நிலம் ஏலத்துக்கு வரும் போது அதை மீட்டு கொடுத்தது கூட என் டாட் தான் சரியா…?’’ என்றான் நக்கலாய்.

Advertisement