Advertisement

பால் வீதிப் புன்னகை.

பால் வீதி – 1

மேகங்கள் தரை இறங்கியதை போன்று அந்த இடம் முழுவதும் பனி சூழ்ந்திருந்தது.  மரங்கள் மழையில் குளித்ததை போல இலைகள் எல்லாம் சொட்ட சொட்ட நனைந்திருந்ததன. அதி குளிரில் மனிதன் கம்பளிக்குள் சுருண்டு கொள்வதை போல, அந்த இடமே ஏகாந்த அமைதியில் சுருண்டிருந்தது.

“டேய்… கிருஷ்ணா. எழுந்திரிடா. சாயங்காலம் மணி ஏழாகப் போகுது. இப்போ கேம்ப் பயர் அரேஞ்மென்ட்ஸ் ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்.’’ என்று உறங்கிக் கொண்டிருந்த தன் நண்பனை எழுப்பிக் கொண்டிருந்தான் பிரதாப்.

அப்போது பக்கத்து அறையில் இருந்து எழுந்து வெளிய வந்தான் பால்கி என அழைக்கப்படும் பால குமரன். “டேய் மதியம் பிரியாணி வேணாம் ஏதாச்சும் லைட்டா சாப்பிடலாம்னு படிச்சி படிச்சி சொன்னேன். இப்போ பாரு. ஒவ்வொருத்தனும் மலை மாடு மாதிரி தூங்கிட்டு இருக்கானுங்க. ஒருத்தனையும் அசைக்க முடிய.’’ என தன் பங்கிற்கு தானும் புலம்பிவிட்டு அருகிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

உறங்கும் நண்பர்களை ஓர விழியில் பார்த்தபடி, “மச்சி…! வா நீயும் நானும் போய் கேம்ப் பயர் அரேஞ்மென்ட்ஸ் பாப்போம். போன தடவை வெனிஸ் போயிட்டு வந்தப்ப வாங்கிட்டு வந்த ஸ்பெஷல் ஒயின்ல நம்ம பேர் மட்டும் தான் எழுதி இருக்கு போல இருக்கு. லேட்டா எழுந்து வரவனுங்களுக்கு எல்லாம் லோக்கல் சரக்கே அதிகம்.’’ என்றுவிட்டு அங்கிருந்து வெளியே நடக்க, பால்கி தோள்களை குலுக்கிவிட்டு அவனை பின் தொடர்ந்தான்.

“என்னது வெனிஸ் ஒயினா…’’ என்றபடி கண்களை கசக்கி கொண்டே கிருஷ்ணன் எழுந்து கொள்ள, அவன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இருவரும், மின்சாரம் தாக்கியவர்கள் போல விருட்டென எழுந்து அமர்ந்தனர்.

அவர்களின் அதிரடியை கண்ட கிருஷ்ணன், “டேய்…! என்னடா  ஹார்ட் பேசன்ட்க்கு ஷாக் கொடுத்த மாதிரி எழுந்து உக்காருறீங்க.’’ என்றான் அதிர்ந்து போய்.

“யப்பா டேய்…! நீ பெரிய கார்டியாலஜிஸ்ட் தான். அதுக்குன்னு போற இடம் எல்லாம் அதே நினைப்போடவே சுத்தாத. ஐயோ… உச்சா வேற அர்ஜன்ட்டா வருதே. இவனுங்க போற வேகத்துக்கு சரக்கை காலி செஞ்சிராம இருக்கணும் முருகா.’’ என்றபடி படுக்கையை விட்டு குதித்து எழுந்த சந்திரசேகர் கழிவறையை நோக்கி ஓடினான்.

“நான் பக்கத்து ரூமுக்கு போய் ப்ரஷப் ஆயிட்டு வறேன். சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுடா. லேட்டா வந்தா லோக்கல் சரக்கை கூட அப்புறம் கண்ல பாக்க முடியாது.’’ என்ற பாண்டி பக்கத்து அறை நோக்கி விரைந்தான்.

நண்பர்கள் ஐந்து பேரும், மூட்டப்பட்டிருந்த தீயின் முன் சொகுசாய் குளிர்காய்ந்தபடி அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு சற்று தள்ளி அமைக்கப்பட்டிருந்த மேஜையில் வித விதமான, மதுபானங்களுக்கும், அவற்றோடு கொறிப்பதற்கு உண்டான தொடுகறிகளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.

“போன சீனனை விட இந்த சீசன் குளிர் அதிகம் இல்ல பிரதாப்.’’ என்று தீயின் முன் கரங்களை காட்டி கதகதப்பேற்றிபடி கேட்டான் மூர்த்தி.

“எல்லாம் சீசனும் வழக்கத்தை விட லென்தாவும், ஹெவியாவும் தான் மாறிட்டு இருக்கு.’’ என்றபடி ஆழ்ந்த ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டான் பால்கி.

“அச்சோடா…! பயாலாஜி ப்ரோபோசர் இனி குளோபல் வார்மிங் பத்தி கிளாஸ் எடுக்க போறார்டா..’’ என்று கிருஷ்ணன் கலாய்க்க, “எப்பவுமே நெஞ்சில ஸ்டெதாஸ்கோப்போட ஐ.சி.யூ வாசல்ல நின்னுகிட்டு இருக்குற மாதிரி பேசுற நீ அதை சொல்லக் கூடாது.’’ என சந்திரன் கிருஷ்ணனின் காலை வாற, பால்கியும், கிருஷ்ணனும் ‘ஹைபை’ கொடுத்துக் கொண்டனர்.

இவர்களை பார்த்து கொண்டே தன் கையில் இருந்த மதுக் கிண்ணத்தில் இருந்த தங்க நிற திரவத்தை மிடறு மிடறாய் விழுங்கியபடி நண்பர்களின் வேடிக்கைப் பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்தான் பிரதாப்.

எந்த ஒரு உறவுமே வெற்றிகரமாக பனிரெண்டு ஆண்டுகளை கடந்து விட்டால் அது வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும் என்பார்கள். ஆனால் இவர்களின் நட்பு பொன் விழா ஆண்டையும் கடந்து வந்துவிட்டது.

ஆம் அவர்கள் ஐந்து பேரும் ஐம்பத்து ஐந்து வயதை தாண்டிய மறவோன்கள். திருச்சியில் புள்ளம்பாடி என்ற சிற்றூரில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் பயின்றவர்கள். பள்ளிப்படிப்பிற்கு பின் காலம் அவர்களை வேறு வேறு திசையில் வீசி எறிந்த பிறகும் ஆண்டிற்கு ஒருமுறை சந்திப்பது என்ற கொள்கையயை இன்றளவும் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.

அவர்கள் கையில் காசில்லாத கல்லூரி காலத்தில் பொதுவாய் இது போன்ற சந்திப்பு, திருச்சியின் பூங்காக்களிலோ, திரையரங்குகளிலோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர்களின் வசதி மாற, மாற சந்திக்கும் இடமும், வசதியும் வேறுபட்டு போனது. ஆனால் அவர்களுக்குள் வேர்விட்டிருந்த நட்பு மட்டும் அப்படியே தான் இருந்தது.

பிரதாப் தற்சயம் திருச்சியின் காவல் ஆணையாளராக பணியில் இருக்கிறான். அதே ஊரில் கிருஷ்ணன் பெயர் பெற்ற இதய சிகிச்சை நிபுணன். பால்கி சேலத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளனாக இருக்கிறான்.

சந்திர சேகர், சென்னையில் பெரிய பெரிய புள்ளிகளின் கணக்கு வழக்கை பார்த்து கொள்ளும் ஆடிட்டர். பாண்டி மதுரையில் வெங்காய கமிசன் மண்டி வைத்து நடத்திக் கொண்டிருந்தான். இந்த வருடம் அனைவரும் சேலத்தில் உள்ள ஏற்காட்டில் சந்திப்பது என்று ஏற்பாடு ஆகி இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே தங்களுக்கு என சொகுசு பங்களாவை முன் பதிவு செய்து கொண்டவர்கள், சமையலுக்கு தற்காலிகமாக இரண்டு நபரையும் நியமித்து விட்டு, இதோ இரண்டு நாட்களாக மலை மகளின் மடியில் உல்லாச பயணத்தில் திளைத்திருந்தனர்.

இரண்டு நாட்களாக மலையேற்றம், அருவிக் குளியல், வேடிக்கை விளையாட்டு என உற்சாகமாக கழித்தவர்கள், நாளை காலை அவரவர் இருப்பிடத்திற்கு திரும்ப வேண்டும் என்பதில், மதுவோடு தங்கள் கொண்டாட்டத்தை திட்டமிட்டு இருந்தனர்.

நண்பர்கள் மாறி மாறி கதை பேசிக் கொண்டிருக்க, நெடுநேரம் பிரதாப் அமைதியில் கழிப்பதை கண்ட பால்கி, “டேய் மச்சி…! என்னடா உறைஞ்சி போன சிலை மாதிரி இருக்க. ஏதாச்சும் பேசு.’’ என்றான்.

அதற்கு பதிலாக மெதுவாக சிரித்தவன், “நீங்க எல்லாம் பேசுறதை கேட்டுட்டு இருக்கேன்டா.’’ என்றான். உடனே பாண்டி “இவனுக்கு எப்ப பேச்சு வந்து இருக்கு. வாய திறந்தா  பாட்டு தானே வரும்.’’ என்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவன், திரும்பி வரும் போது கையில் கிட்டாருடன் திரும்பி வந்தான்.

அதை கண்டதும், மற்ற நண்பர்கள் ‘ஹே…’ என உற்சாக குரல் எழுப்ப, “டேய்…! நேத்துல இருந்து உங்ககிட்ட எல்லாம் கத்தி கத்தி என் குரலே கழுதை மாதிரி தான் இருக்கு. ப்ளீஸ்…! என்னை விட்டுடுங்க…’’ என்று தலைக்கு மேல் கைகளை தூக்கி கும்பிட்டான்.

“அதெல்லாம் முடியாது. நீ பாடித்னான் ஆகணும். பால்கி அவன் பையனோட கிட்டாரை மறக்காமா எடுத்துட்டு வந்து இருக்கான். ப்ளீஸ் பாடு.’’ என்றான் பாண்டி.

“உன் இசை என்ற இன்பக் கடலில் மூழ்க வந்திருக்கும் எங்களை ஏமாற்றி விடாதே பிராதாப்… பாடு…’’ என்று கிருஷ்ணன் நாடக பாணியில் நீட்டி முழக்க, “டேய்… ஸ்டுபிட்… இந்த டோன்ல தயவு செஞ்சி உன் பேசன்ட்ஸ் கிட்ட பேசிடாதே ப்ளீஸ்…! நீ ஆஞ்சியோ செஞ்சி கஷ்டப்பட்டு காப்பாத்தினவன் எல்லாம் உன் கட்டை குரலால போய் சேர்ந்துடுவாங்க.’’ என்றான்.

அதற்கு மற்றவர்கள் வெடித்து சிரிக்க, “ஐயோடா…! பெரிய ஜோக்கு…! தனியா போய் சிரிச்சிட்டு வரட்டா…’’ என்று முகத்தை சுருக்கினான் கிருஷ்ணன். இவர்களின் மத்தியில், பால்கி, “பாடு பிரதாப்… மலை, குளிர், மது, உன் மதுரக் குரல் காம்போ சூப்பரா இருக்கும்.’’ என்றான்.

ஏனோ மதுரா என்ற பெயரே, அவனை கிட்டாரை தூக்க வைத்தது. அனைவரை நோக்கியும் மிதமாக புன்னகைத்தவன், கிட்டாரை மென்மையாக இசைத்தபடியே, “என் இனிய பொன் நிலாவே … பொன் நிலவில் என் கனாவே..’’ என்று இசை கூட்டிப் பாட, நண்பர்கள்  அந்த இசை வெள்ளத்தில் மௌனமாய் மூழ்கினர்.

பாடல் முடிந்த பின்பும் கைதட்டும் ஓசை அடங்க சில பல நிமிடங்களானது. அடுத்து கூட்டம் பால்கியை நோக்கி திரும்பியது.

உடனே அவன், “டேய் அவன் அளவுக்கு எல்லாம் என்னால ஸ்ருதி சுத்தமா பாட முடியாது. அதோட எனக்கு கிட்டாரும் வாசிக்க தெரியாது.’’ என்றான்.

“டேய்… உன் அளவுக்கு இளையராஜா வெறியன் நம்ம செட்ல யாரு இருக்கா சொல்லு. எங்களுக்கு நீ ஒரு இளையராஜா பாட்டு பாடுற. அதுல ஸ்ருதி சேர்ந்தாலும் சரி, இல்ல அவங்க அப்பா கமல் சேர்ந்தாலும் சரி..’’ என்றான் பாண்டி.

“நக்கலு… இருடி அடுத்து நீதான்.’’ என்று பால்கி அவனை முறைக்க, “நாம தானே இருக்கோம் பால்கி. சும்மா பாடு.’’ என்றான் பிரதாப்.

“சரி…! காம்பவுண்ட் கேட் பூட்டி இருக்கான்னு எதுக்கும் பார்த்துக் கோங்க. நான் பாடுற பாட்டுல நம்ம ஆளு தான் கூப்பிடுதுன்னு எந்த கழுதையும் உள்ள வராம இருந்தா சரி.” என்று பால்கி சொல்லவும், “என்ன செல்ப் கலாய் கொடுத்து எஸ் ஆக ஐடியாவா…! அதெல்லாம் காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சி காண்டா மிருகமே வந்தாலும் சரி… நீ பாடித்தான் ஆகணும்.’’ என்றான் சந்திரன்.

சில நிமிடங்கள் என்ன பாடலாம் என்று கண்களை மூடி யோசித்த பால்கி, கண்களை திறந்து எரிகின்ற தீயின் சுடரை பார்த்துக் கொண்டே, “இது ஒரு பொன் மாலைப் பொழுது… வான மகள் நாணுகிறாள்… வேறு உடை பூணுகிறாள்… இது ஒரு பொன் மாலைப் பொழுது…”

பிரதாப் குரலின் இனிமை பால்கியின் குரலில் வழியாவிட்டாலும், பாடலை இரசித்து உள்வாங்கி, நுணுக்கமாய் லயித்து அவன் பாடிய விதம் அங்கிருந்தவர்களை கவரவே செய்தது. பாடல் முடிந்ததும் மீண்டும் ஒரு கரகோசம் அங்கு எழ பிரதாப் நண்பனை ரசித்திருந்தான்.

நாளை காலை கிளம்ப வேண்டும், அதோடு இனி அடுத்த வருடம் தான் சந்திக்க முடியும் என்ற நினைவு எழுந்ததும் நண்பர்கள் அனைவரும் நேரம் காலம் கடந்து கல கலத்து கொண்டிருந்தனர்.  பேச்சு வார்த்தையோடு, தாக சாந்தி முடித்து அவர்கள் உறங்க செல்லும் போது, நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.

அடுத்த நாள் காலை, முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டி அவர்களுக்காய் காத்திருந்தது. அனைவரின் பயணமும் சேலம் வரை ஒன்றாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரவர் வசதிக்கு ஏற்ப, ரயில் மற்றும் சொகுசு பேருந்துகளை முன் பதிவு செய்து வைத்திருந்தனர்.

நேற்றைக்கெல்லாம் போட்ட ஆட்டத்தோடு, வயதின் மூப்பும் வேலையை காட்ட, இருக்கையில் சொகுசாய் சாய்ந்து அமர்ந்தவர்கள், உறங்க தொடங்கினர்.

அருகருகே அமர்ந்திருந்த பிரதாப்பும், பால்கியும் தாழ்ந்த குரலில் தங்களின் வீட்டு நடப்பை பேசிக் கொண்டு வந்தனர்.  அவர்கள் பிரிய வேண்டிய அடிவாரம் ஒரு மணி நேரத்தில் வந்துவிட, பால்கி மற்ற நண்பர்களை எழுப்பினான்.

“என்னடா வருங்கால சம்மந்திகள் விடிய விடிய பேசியும் பேச்சு தீரலையா…? கார்ல வரும் போது கூட எங்களை நிம்மதியா தூங்க விடாம சும்மா நொய் நொய்னு கடலை வறுத்துட்டு வறீங்க.” என்றான் கிருஷ்ணன்.

“டேய்…! துரு பிடிச்ச மோட்டரை ஆன் செஞ்ச மாதிரி குறட்டை விட்டுட்டு வந்துட்டு நீ தூங்கலைன்னு சீன் போடுறியா…? ஓவரா பேசினா.. உன் குறட்டை சவுன்ட் ரெகார்ட் செஞ்சது இருக்கு. இன்ஸ்டால உன்னை டேக் செஞ்சி போட்டு விட்ருவேன்.’’ என்றான் பால்கி.

“நீ செஞ்சாலும் செய்வடா எம காதகா…’’ என்று கிருஷ்ணன் பால்கியின் முதுகில் மொத்திக் கொண்டு இருக்கும் போதே, தன் கருப்பு நிற நிஞ்சா பைக்கில் அங்கு வந்து இறங்கினான் கார்த்திக்.

“ஹாய் அங்கிள்ஸ்…! எல்லாரும் எப்படி இருக்கீங்க…?’’ என்றபடி அவன் தான் அணிந்திருந்த தலைக் கவசத்தை கழற்ற, “எங்களுக்கு யங் மேன்…. ஹாய் க்ரிக்கட்டர்…’’  என்ற கலவைக் குரல்கள் அந்த வாகனம் முழுக்க எதிரொலித்தது.

“தகப்பா போலாமா…?’’ என்று அவன் பால்கியை பார்த்து புன்னகைக்க, “எஸ்… மகனே… வந்துட்டேன்.’’ என்றவன் தன் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான்.

மற்றவர்களும் பால்கியோடு கீழே இறங்கினர். “என்ன க்ரிக்கட்டர். சேலத்துல இருந்து மொதோ ஆளா இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகி இருக்க. நம்ம தமிழ்நாட்டு பேரை காப்பாத்தணும். இந்த டீ – ட்வண்டி எல்லாம் பத்தாது. பர்மனென்ட்டா டீம்ல உனக்கு ஒரு இடத்தை சீக்கிரம் உருவாக்கிடு’’ சொன்னதையே மற்றவர்கள் வேறு வேறு விதத்தில் விளிம்ப கார்த்திக் சங்கடமாய் நெளிந்தபடி அவர்களின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

“டேய் போதும் விடுங்கடா…! எவ்ளோ நேரம் உங்க மொக்கையை அவன் கேப்பான். நீ கிளம்புப்பா..’’ என்று பிரதாப் உதவிக்கு வர, “டேய் வருங்கால மாப்பிள்ளைக்கு சப்போர்ட்டா.’’ என்று மற்றவர்கள் அதையும் கிண்டலடிக்க, “போயிட்டு வறோம்.’’ என்றுவிட்டு பால்கி, கார்த்தியின் பின்பக்கம் ஏறி அமர்ந்தார்.

தந்தையும் மகனும், பேர்லண்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டை நோக்கிய பயணத்தை தொடங்கினர். “தகப்பா…! இந்த வாட்டியும் சரக்கு கொஞ்சம் ஓவர் போல.’’ என்றான் கார்த்தி தன் பக்க கண்ணாடியை சரி செய்தபடி.

“அது எப்படிடா மகனே நேர்ல பாத்த மாதிரே சொல்ற…?’’ என்று பால்கி வினவ, “ஆமா… இதை பாக்க நேர்ல வேற வரணுமா…? நைட் முழுக்க குடிச்சி கூத்தடிச்சிட்டு விடிஞ்சதும் பல்லு கூட தேய்க்கமா தேமேன்னு வண்டி ஏறி வந்தா… சரக்கு வாடை எட்டு கிலோ மீட்டர் தாண்டி ட்ராவல் பண்ணுது தகப்பா. அதுவும் உன் பிரண்டுங்க… பாசத்தை பொழியுறேன்னு பக்கத்துல வந்து பேசும் போது வாய் வரைக்கும் உமட்டல் வந்துடுச்சு. அதை அடக்க நான் பட்ட பாடு. சை… காலங் காத்தால ஒரு மனுசன்னுக்கு எவ்வளவு சோதனை. நல்லவேளை பிரதாப் அங்கிள் காப்பாத்தி விட்டார்.’’ என்று கார்த்தி அங்கலாய்த்து கொண்டான்.

“அப்போ… அவங்க பேசின விசயத்துனால நீ அன் கம்பர்டபிளா பீல் பண்ணலையா. பேசினா வாய்களால தான் பீல் செஞ்சியா. ஐயோ போனதும் உங்க ஆத்தா வேற ஹை கோர்ட் வக்கீல் மாதிரி குறுக்கு விசாரணை செய்வாளே. மை சன் எதுக்கும் போர் ரோட்ஸ்ல ஒரு ஓட்டல்ல ரூம் போட்டு குளிச்சி ப்ரஷப் ஆயிட்டு வந்துடவா…?’’ என்று பால்கி மகனை அப்பாவியாய் வினவினார்.

“அந்த அறிவெல்லாம் ஏற்காட்டுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி இருந்து இருக்கனும். இப்போ நாம ரெண்டு பேருமே மம்மியோட புல் சர்வலைன்ஸ்க்குள்ள வந்துட்டோம். இனி தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசத்துக்கும் நாம அவங்களுக்கு பதில் சொல்லணும். ஏதோ என்னால முடிஞ்சது. ஒரு பாஸ் பாஸ் பாக்கு வாங்கி வச்சி இருக்கேன். அதை நல்லா கடிச்சி மென்னு துப்பிட்டு கொஞ்சம் வாயை கொப்பிளிச்சிடுங்க. பெருசா ஸ்மெல் வராது.’’ என்றவன் தன் பக்கவாட்டு சட்டை பாக்கெட்டில் இருந்து அந்த  பாக்கை எடுத்து கொடுத்தான்.

“இதுக்கு தான் மகன் வேணுங்கிறது. ஐயம் ப்ரவுட் ஆப் மை சன்.’’ என்றபடி பால்கி பாக்கை வாயிற்குள் அதக்க, “அதெல்லாம் இருக்கட்டும். சொன்னதை ஒழுங்கா செய்யுங்க. மம்மி கண்டு பிடிச்சா உங்களோட சேர்த்து எனக்கும் உதை விழும்.’’ என்றவன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

மகன், தந்தை இருவருமே உற்சாக மனநிலையில் பயணித்து கொண்டிருக்க, இங்கு மற்றொருவனோ தனிமையில் தொலைத்த தன் இனிமை நினைவுகளை தேடிக் கொண்டிருந்தான்.

பால்வீதி வளரும்.

Advertisement