“ஒரு நாலஞ்சு கேள்வில ஓரளவுக்கு தெரிஞ்சிரும் சர். உழைக்கறவங்களா? ஓபி அடிக்கறவங்களா? இருப்பாங்களா இல்லை கொஞ்சம் வேலை கத்துகிட்டதும் ஓடிருவாங்களா? கண்டுபிடிக்கலாம் சர்.”,என்றும் ஸ்ரீ சொல்ல,

அப்போதும் அவர் நம்பிக்கையில்லாமல் பார்க்க, ஸ்ரீ கொஞ்சம் விலாவாரியாக உதாரணங்களோடு  அவருக்கு விளக்கினாள்.

“இந்த பேச்சு பேசறியே, என்னை மீறி நீ முதலாளிகிட்ட இது பத்தி பேசினது தப்புனு தெரியலையாம்மா உனக்கு ? இல்லை பேசிட்டு வந்தியே, அப்பறமாச்சம் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கணுமா வேணாமா ? உன் இஷ்டத்துக்கு செய்வியா? ”, என்று விட்ட இடத்திற்கு வந்தார்.

‘அட ராமா… ஆக உனக்கு உன் ஈகோ தான் முக்கியமா போச்சா… இதுக்கா மூச்சை பிடிச்சிகிட்டு  நான் பேசினேன்?’, என்று நொந்து போனவள்,

“உங்ககிட்ட சொல்லி ஐடியா கேட்கப் போறேன்னு பாஸ்கிட்ட சொன்னேன் சர், ஆனா நீங்க நேத்து மூட் அவுட்ல இருந்தீங்க, கணேஷ் சாரை சத்தம் போட்டுட்டு போனீங்களா. அதான் என்னையும் திட்டப் போறீங்களோன்னு இன்னிக்கு சொல்லலாம்னு இருந்தேன் சர். ஆனா பாருங்க அதுக்குள்ள சர்குலர் வந்துட்டு, என் பேரை டாமேஜ் செஞ்சிருச்சு. “, என்று மழுப்பி, அவர் மேல் தனக்கு பயமும் மரியாதையும் இருப்பதாக ஒரு படம் ஓட்டினாள்.

அதிலே மனிதர் கொஞ்சம் குளிர்ந்து, “ம்ம்… மேலதிகாரின்னு ஒரு பயம் இருக்கணும். இருந்தாலும், இனிமே இந்த மாதிரி முந்திரிகொட்டை வேலை எல்லாம் பார்க்காதே. எங்கிட்ட சொல்லி அது நான் வேணான்னு சொன்ன அப்பறமும் நீ முதலாளிகிட்ட பேசியிருக்க. சின்ன பொண்ணுன்னு முதல் வாட்டி மன்னிச்சு விடறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கறேன். போ.” என்று ஒரு முறைப்புடன் அனுப்பிவிட்டார்.

கண்கள் விரித்து, பயந்தவளாக மண்டையை உருட்டி ஒரு சீன் போட்டு விட்டு வெளியே வந்தவளுக்கு, மனிதர் மேல் சரியான காண்டு. ‘ கம்பனி கம்பனின்னு வாய் கிழிய பேச வேண்டியது. கடைசில இவர் ஈகோதான் முக்கியம். ச்சே.. நல்லதுக்கே காலமில்லை.’, மனதுக்குள் பொறுமியபடியே இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

அடுத்த ஒரு வாரமும் ஸ்ரீ வேலை பழகுவதில் சென்றது. இராமலிங்கத்திடம் மாட்டாமல் தப்பிக்கப் பார்த்தாலும் , இடையிடையே மாட்டித்தான் ஆக வேண்டியிருந்தது. நேர்காணலுக்கான உளவியல் தேர்வுக்கான அவளது கேள்விகள் அவருக்குப் புரியவுமில்லை பிடிக்கவுமில்லை. சித்தார்த் பார்க்கக் கேட்டதாக சொன்னதும் தன் அதிகாரத்தில் மூக்கை நுழைப்பதாக ஸ்ரீயைக் காய்ந்தார். ஆனாலும் சித்தார்த் ஸ்ரீயின் கேள்விகளை அனுமதிக்க, மறைமுகப் பொருமலுடன் நிறுத்திக் கொண்டார்.

நண்பன் ராக்கு அவனது ப்ராஜெக்ட்டின் இறுதிக்கட்ட வேலையில் மூழ்கியிருக்க, அவனிடம் பேச முடியாது, இரவு நவீனிடம் புலம்புவாள். கிரிக்கெட், பயிற்சி, அடுத்த போட்டி என்றே சிந்தனையில் இருப்பவனுக்கு இந்தக் கதைகளே பொழுது போக்காக மாறியது. அவ்வப்போது ஆறுதல் கூறுவான். ப்ளே ஆஃப் வரக்கூடிய நான்கு அணிகளில் இரண்டு உறுதியாகிவிட, மிச்சமிருக்கும் இடங்களுக்கு போட்டி பலமாக இருக்கவும், அணியிலும் சற்று இறுக்கம் இருந்தது.  ஸ்ரீ இராமலிங்கத்தை விதவிதமாகப் பழிப்பதைக் கேட்டு சிரிப்பான்.  அதுவே இரவில் நல்ல மன நிலையில் நவீனை உறங்கச் செல்ல வைத்தது.

சித்தார்த் இடையிடையில் போட்டிகளில் பெட் கட்ட கேட்ட பொழுதும் ஒன்றும் தோன்றவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.  அலுவலகத்தில் வேறு வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றவர்களுடன் பரிச்சயம் வர வைக்க சில போட்டிகள் வைக்கலாம் என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாள் ஸ்ரீ. இந்த முறை உஷாராக, சித்தார்த் கேட்டதாகவும், அவனிடம் கொண்டு செல்வதற்கு முன் உங்களிடம் ஐடியா கேட்கிறேன் என்று இராமலிங்கத்தின் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்தாள்.

“என்னமா… வேலைக்கு வரவங்க வேலையை பார்க்காம இதென்ன சின்ன புள்ளத்தனமா கேம் ஆடிகிட்டு ? இதெல்லாம் ஐ.டி. கம்பனிக்கு வேணா ஒத்து வரும்.  நேரம்தான் வேஸ்ட்.”, என்றார் வழக்கம் போல.

“சர்… எப்படியும் பன்னிரண்டுலர்ந்து இரண்டு மணி வரை பெரிசா யாரும் வேலை பார்க்கறதில்லை. நான் பன்னிரண்டுலர்ந்து ஒரு மணி வரைதான் சர் இந்த கேம் வைக்கறேன். ஆஃபீஸ்ல கொஞ்சம் ஜாலியா இருந்தா தப்பில்லை சர். கொஞ்சம் உற்சாகமா வேலை பார்ப்பாங்க.”, ஸ்ரீ சொல்லவும்,

“ம்க்கும்…. ஏற்கனவே எல்லாம் ஜாலியாத்தான் இருக்காங்க. இதுல நீ வேற … என்னவோ போ… இத்தனை வருஷமா இதெல்லாம் இல்லாமலயே வேலையைதான் பார்க்கறோம். எதையோ புஸ்தகத்துல படிச்சிட்டு வந்து நீ சொல்ற, அதையும் முதலாளி கேட்டுக்கறார். என்னவோ. அவர் காசு… அவர் பாடு. போ. கொண்டுபோய் காட்டு.”, என்று ஒரு வழியாக தண்ணீர் தெளித்துவிட்டார்.

சித்தார்த்திடம் அன்று மதியம் அவள் திட்டத்தை காண்பிக்கச் சென்றாள். அவன் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.

“எதுவும் விஷன் வந்துச்சா ஸ்ரீ ? ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சு நீ எதுவும் சொல்லி.”, என்ற கேள்வியுடந்தான் அவளை வரவேற்றான்.

“சர்…. வந்தா சொல்லப் போறேன். வராததுக்கு நான் என்ன சர் பண்ணுவேன். சோஷியல் இவென்ட்க்கு ஒரு ப்ரபோசல் எடுத்துகிட்டு வந்திருக்கேன். அது பாருங்க சர்.”, என்றாள் பொறுமையை இழுத்து வைத்து.

“சரி… சொல்லு.”, என்றாலும் சற்று ஆர்வம் குறைந்திருந்தது அவனிடத்தில்.

“ஸ்பாகெட்டி சாலஞ்ச் பேர் இதுக்கு. ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்லர்ந்து நாலு பேர் கொண்ட டீம் வர வைப்போம். போட்டி பேர் என்ன, விதிமுறை என்னன்னு அன்னிக்குத்தான் சொல்வோம். ஆனா இது இன்டெர்னெட்ல ஃபேமஸ் சர்.ஒரு வாரம் முன்னாடிலர்ந்து ஒரு பில்ட்-அப் குடுத்துகிட்டே வருவேன். “, என்று அவள் ஐடியாவை ஆர்வமாக விளக்கி, அது போன்ற ஒரு போட்டியினை யூட்யூபில் காட்டினாள்.

“பெருசா நாம் ஒன்னும் ப்ரிப்பேர் பண்ண வேண்டாம் சர். ஆனா ஜெயிக்கற டீம்க்கு நீங்க ப்ரைஸ் தரணும். பட்ஜட் சொன்னா அதுக்கேத்த மாதிரி ஃபிட்னஸ் சம்பந்தமா எதாவது பொருளோ, கூப்பனோ வாங்கலாம்.”

“நல்லாருக்கு ஸ்ரீ.  செய்.”, என்று அதற்கான பட்ஜெட்டை ஒதுக்குவதாகவும், இராமலிங்கத்திடம் சொல்வதாகவும் ஒத்துக்கொண்டான். அவனது பாராட்டும் ஒப்புதலும் ஸ்ரீக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வேலையில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டாள்.

போட்டியை என்று, எங்கே வைப்பது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், பக்கவாட்டில் சி.என்.பி.சி சானல் டீவியில் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதை எதேர்சையாகப் பார்த்தவள், ஒரு நிமிடம் உறைந்தாள். தலையை உலுக்கியவள்

“என்ன ஷேர் மார்க்கெட்டோ. இன்னிக்கு எல்லாம் நல்லா போகுதுன்னு சொல்றாங்க. அடுத்து வழிச்சு வாரிகிட்டு போகப்போது. அப்ப என்ன கதை சொல்லுவாங்க ?”, என்றாள் தன்போக்கில்.

“என்ன ஸ்ரீ ?”, என்று சித்தார்த் கேட்க,

“டீ.வில பார்த்த போது, அடுத்து எதோ ப்ளாக் மண்டேன்னு எல்லா ஷேரும் சிகப்பு காட்டிகிட்டு இருந்துச்சு சர். அதை சொன்னேன்.”, என்றாள் விட்டேத்தியாக.

“காட்டிகிட்டு இருந்துச்சுன்னா? உன் விஷன் பார்த்தியா இப்ப?”, சற்று ஆர்வமானான்.

“ம்ம்… ஒரு ப்ளாஷ் மாதிரி தெரிஞ்சுது. அது உங்களுக்கு என்ன யூஸ் சர்?”

“என்ன பார்த்தன்னு தெளிவா சொல்லு.”, சற்று கூர்மை கூடியது குரலில்.

அதில் முழித்தவள், “ ம்ம்.. ப்ளாக் மண்டே… இரண்டாயிரம் பாயிண்ட்டுகள்கிட்ட மார்கெட் விழுந்துச்சுன்னு பார்த்தேன் சர்.”, என்றாள்.

“எப்ப… எப்ப நடக்கும்னு பார்த்தியா ?”, பரபரப்பாகக் கேட்கவும், ஒரு வேளை அவனிடம் ஷேர் எதுவும் இருக்குமோ, அதை விற்கப் பார்க்கிறான் போல, என்று நினைத்தவள், கண்மூடி யோசிக்க,

“தெரியலையே சர். “, என்றாள் பாவமாக.

“ம்ப்ச்… நல்லா யோசி… நீ என்ன என்ன பார்த்தன்னு எல்லாத்தையும் சொல்லு.”, விடாமல் கேட்டான் சித்தார்த்.

இதென்னடா வம்பா போச்சு என்று நினைத்தவள், தான் பார்த்ததை மனதில் மீண்டும் ஞாபகப் படுத்தினாள்.

“எதோ ஃபெட் (FED) சேர்மன் நேத்து நல்ல  ந்யூஸ் கொடுத்தும்…. இங்க FM (நிர்மலா சீதாராமன்) பேசினதுக்கு மார்க்கெட் ரியாக்ஷன். FII (அன்னிய முதலீடு ) எல்லாம் இங்கிருந்து வெளிய எடுக்கறாங்க…”, விட்டு விட்டு சொன்னவள், “அது ஒரு சின்ன ப்ளாஷ் மாதிரிதான் சார் தெரியும். சில நேரம் டீ.வி. காட்சி மாதிரி தெரியும்… ஒரு சில நேரம் போட்டோ மாதிரி தெரியும்.”

அவள் சொன்னதைக் கேட்டவன், யாருக்கோ அழைத்து, “ஸ்ரீதர், அடுத்து ஃபெட் ரிப்போர்ட் எப்ப ?”, என்றவன் எதிர்புறம் இருந்த நாட்காட்டியையும் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையுடன், “ம்ம்… கொஞ்சம் ஆப்ஷன்ஸ் வாங்கலாம்னு இருக்கேன். டிசைட் பண்ணிட்டு சொல்றேன்.”, என்று அழைப்பைத் துண்டித்தான்.

“அப்ப நான் கிளம்பறேன் சர். லேட்டான இராமலிங்கம் சர் திட்டுவார்.”, என்று எழுந்து கொண்டாள் ஸ்ரீ.

“இரு ஸ்ரீ. எனக்கு இன்னும் கொஞ்சம் விவரம் வேணும். எந்த ஷேர் எல்லாம் விழுந்துச்சு… எதாவது ஸ்டாக் கோட் தெரிஞ்சுதா ?”, சித்தார்த் துருவிக் கேட்கவும் கண்ணைக் கட்டியது ஸ்ரீக்கு.

“இல்லை சர்… அதெல்லாம் தெரியலை… இல்ல நான் பார்க்கலை. அக்ராஸ் த போர்ட் வைப் ஔட்ன்னு பார்த்தேன்.”

“யெஸ்…அதுதான் கேட்கறேன். அப்படின்னா எல்லா பங்கும் விலை இறங்கியிருக்குன்னு அர்த்தம். குட். எந்த செக்டர் அடி வாங்குச்சுன்ற மாதிரி எதுவும்…. ?”, ஆர்வமாய் அவளைக் கேட்டான் சித்தார்த். முகமே பிரகாசமாக இருந்தது.

“நீங்க எதாவது ஷேர் வெச்சிருக்கீங்களா சர். அதை விக்கறதுக்காக கேட்கறீங்களா?”, ஸ்ரீ கேட்கவும் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,

“இல்லை ஸ்ரீ. வாங்கப் போறேன். இது ஆப்ஷன்ஸ். பங்கு விலை குறையும்னு சொல்லி புட் ஆப்ஷன் வாங்கப் போறேன். அடுத்த வெள்ளிக்கிழமை ஃபெட் ரிப்போர்ட் வருதாம். அப்ப நீ சொன்ன ப்ளாக் மண்டே, திங்கள்கிழமை. நீ சொன்ன மாதிரி இரண்டாயிரம் பாய்ண்ட் இறங்குச்சுன்னா, செம்மையா பணம் பண்ணலாம். குட். வெரி குட் ஸ்ரீ. ஐபில் விட இது இன்னும் வெயிட்டு விஷன். “, சித்தார்த்தின் மகிழ்ச்சி புரிந்தாலும், அவன் எப்படி பணம் பண்ணுவான் என்று புரியவில்லை.

“சரி சர். நான் கிளம்பறேன்.”, என்று விடை பெற்று படியிறங்கி வந்தவள் மனதில் ஒரு சோர்வு. ஜக்கி சொல்றதுக்குத்தான் எப்பவ்ய்மே என்னை வேலையில வெச்சிருப்பாரா ? வேலையில என் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதா? என்னை வெச்சு பணம் பண்றதுதான் குறிக்கோள்னா அப்ப பவானி பாட்டி மாதிரிதான் நானுமா? மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஒரு வேளை இதுல நல்லா பணம் பார்த்துட்டா என்னை விட மாட்டாரா? ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனா?

விதவிதமாக எண்ணம் தோன்றி ஸ்ரீயை அலைகழித்தது.