“ம்க்கும்… அப்படின்னா  கூட தேவலாம். ஆனா இங்க படுத்தறதே என் புருஷன்தான்.  அம்மா, பொண்டாட்டின்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இரண்டு பேர்ல யார் மாட்டினாலும் திட்டி தீர்த்துடுவார். அவர்கிட்டருந்து தப்பிக்க அப்பப்ப மாமியாரோடதான் கூட்டு சேரணும்.”, என்றாள் மைதிலி.

“இதென்னக்கா புதுசா இருக்கு. அவ்வளவு டெரா உங்க ஹஸ்பண்ட்?  எதுக்கு திட்டுவார் ?”

“எதுக்கு வேணாலும் திட்டுவார். இன்னிக்கு கூட காலையில் பாட்டு வாங்கினேன். அல்ப விஷயம்.காலையில் பல்லு விளக்கும்போது பேஸ்ட் தெரியாத்தனமா நடுவுலர்ந்து அமிக்கிட்டேனாம். ஒரு ஒழுங்கு வேணாமா ? அடியிலர்ந்து நீட்டா அமிக்கிட்டு வந்தா என்னன்னு ஆரம்பிச்சு…ஷப்பா அரை மணி நேரம் லெக்ச்சர். இந்த மனுஷன் எதுக்கு திட்டுவார், எப்ப திட்டுவார்னு யோசிச்சே எனக்கு பி.பி வந்துடும் போல.”, பெரு மூச்சுடன் சொல்லி முடித்தவள், கடைசி கவளம் தயிர் சாதத்தையும் உணடு முடித்தாள்.

“ஓஹ்… அப்ப அவருக்கு எல்லாம் ஒழுங்கா, அவர் எதிர்பார்க்கற மாதிரி இருக்கணும். ரூல் தெரிஞ்சிகிட்டா ஃபாலோ பண்ணிக்க வேண்டியதுதானேக்கா. “

“ம்ம்… நீ ஈசியா சொல்லிடுவ. அப்படி வாழ்ந்துபார்த்தாதான் தெரியும் அந்த கஷ்டம். தோ இன்னிக்கு தயிர் சாதம். இது கூட ரூல்தான். வாரத்துல இன்ன வேளை இதுதான் சாப்பாடுன்னு முடிவு பண்ணிடுவார். அதுதான் எல்லாருக்கும்.”

“ஓஹ்… ஏன் எல்லாம் அவருக்கு புடிச்ச டிஷ்தான் சாப்பிடணுமா?”

“அப்பிடின்னாகூட பரவாயில்லை ஸ்ரீ. இது அவருக்கும் பிடிக்காதுதான். ஆனாலும் வாரத்துல ஒரு நாள் சாப்பிடணும். அப்பறம் எதுக்குன்னு கேட்டா, ரூல்னா ரூல்தான். பிடிச்சது, பிடிக்கததுன்னு எல்லாம் கிடையாதுங்கறார். இந்தக் கொடுமையெல்லாம் சொல்லி மாளாது.”, வருத்தமாக சொன்னாள் மைதிலி.

இந்த வினோத குணத்தை சற்று யோசித்தவள், “அக்கா, இன்னிக்கு ஒரு புது பேஸ்ட் வாங்கிட்டு போங்க. அவர்கிட்ட காட்டி, ‘இது என்னோட பேஸ்ட். இதை நான் நடுவுலர்ந்து எடுப்பேன், தூக்கி போட்டு மிதிப்பேன், இல்ல சுத்தி வந்து கும்மி அடிப்பேன். என் இஷ்டம். உங்க பேஸ்ட் உங்க இஷ்டம்’,னு சொல்லி தனியா வைங்க. என்ன செய்யறார்னு பார்க்கலாம்.”, என்றாள்.

ஸ்ரீயை ஆச்சரியமாக பார்த்த மைதிலி,”ம்ம்…  நல்லாத்தான் இருக்கு ஐடியா. ஆனா எதுக்கு இரண்டு வாங்கி காசு வேஸ்ட்னு கேட்டா ?”

“அட எப்படிக்கா வேஸ்ட் ஆகும் ? நீங்க எடுக்கப் போற பேஸ்ட் அளவு அதேதான ? முன்னாடி ஒரு பேஸ்ட் உங்க இரண்டு பேருக்கும் மாசம் முழுக்க வரும்னா இப்ப இரண்டு பேஸ்ட் இரண்டு மாசத்துக்கு வரும். அதே செலவுதான ஆகும்?”, ஸ்ரீயின் கேள்வியை உள்வாங்கியவள்,

“எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு சொல்ல முடியலை. அவரு சரியான ரூல்ஸ் சிகாமணிங்கறது ஒன்னுதான் பிரச்சனை. சரி ட்ரை பண்ணுவோம். மிஞ்சிப் போனா இன்னொரு அரை மணி நேரம் லெக்சர் அடிப்பார். அதென்ன புதுசா? “, மைதிலி சிரிக்க, இருவருமாக அவர்கள் இருக்கைக்குக் கிளம்பினார்கள்.

மாலை ஏழரை மணிக்கு தந்தையுடன் கிரிக்கெட் பார்க்க ஆஜராகிவிட்டாள் ஸ்ரீ. அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை பெற்றோரிடம் அசை போட்டுக் கொண்டே ஹேமங் பதானி அணிகளின் பலம் பலவீனம் என்று அலசுவதை அரைகுறையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

போட்டியில் டாசை தோற்று ஆர்.ஆர் முதலில் ஆடி முடித்தார்கள். நூற்றி  நாற்பது ரன்களுக்குள் சுருண்டிருக்க, ஜெயிப்பது கடினம் என்று தெரிந்தது.  நவீன் இந்த முறை முப்பது ரன்கள் எடுத்திருந்தான். அணியிலேயே இரண்டாவது பெரிய ஸ்கோர்.  பவர் ப்ளே முடிந்து ஸ்பின்னர்கள் கையில் பந்து வந்தது.  இப்போது கவனமானாள் ஸ்ரீ.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய டேவிட் வார்னர் ஒரு புறம் திறமையாக இருக்க, மறுபுறம் அவருக்கு துணையாக வருபவர்களை மட்டும் தூக்கியிருந்தார்கள் இதுவரை.  நவீன் கையில் பந்து வர முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன் கொடுத்தான். அடுத்த பந்து வார்னருக்கு. லெ.பி.டபிள்யு என்று கோரினான் நவீன். அம்பையர்  இல்லை என, முடிவு ரிவ்யூவிற்கு சென்றது. கோரிக்கை ஏற்கப்பட்டு வார்னர் வெளியேறினார்.

குழு முழுதும் நவீனை சுற்றிக் கொண்டு கொண்டாடினார்கள். ஒரு சிறு நம்பிக்கை வந்தது. அடுத்த பந்து காப்டன் ரிஷப் பண்ட்டிற்கு வந்தது. நவீன் போட்ட பந்தின் வேகத்தைக் கணிக்கத் தவறிய பண்டின் ஸ்டம்ப்கள் எகிற அடுத்தடுத்த பந்தில் இரண்டு விக்கெட்டுகள். அதுவும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி மாட்ச்சை திசை மாற்றியிருந்தான் நவீன்.

ஸ்ரீயின் கவனம் நவீனை பாராட்டு மழையில் நினைக்கும் வர்ணணையாளர்களின் பேச்சிலும், கண்கள் நவீனின் மகிழ்ச்சியான முகத்திலும் நிலைத்திருந்தது.

‘ஹோ… இப்பவே ஹாட் ரிக் அடிக்கப் போறாரா.’, என்று மனம் துள்ளியது. அப்படி அடித்தால், கண்டிப்பாக நாளை தன்னிடம் பேசுவான் என்று வேகமாகக் கணக்குப் போட்டது.

“அடுத்த விக்கெட்டும் எடுத்தா, மாட்ச் சூடு பிடிக்கும்.”, ஸ்ரீயின் தந்தை கொட்டாவி விட்டபடியே சொல்லிக்கொண்டிருந்தார். ரோஜா எப்போதோ சீரியல் பார்க்க படுக்கை அறையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு மாறியிருந்தார்.

ஓவரின் கடைசி பந்து, ஸ்ரீக்குத்தான் இதயம் படபடத்தது. நவீன் போட்ட ஃபுல் டாஸ், சர்ஃபராஸ் கான் தூக்கி அடிக்க, யாருமில்லாத வெற்றிடத்தில் வீழ்ந்த பந்து ஓடிப் போய் எல்லைக் கோட்டை தொட்டு நான்கு ரன்களை ஈட்டியது.

முகத்தை கைகளால் மூடிய படி சில நொடிகள் குனிந்தவன், பின் ஏமாற்றத்தை மறைத்தபடி விலகி நடந்தான்.

“ஃபுல் டாசையா போடுவான்.”, என்று கடிந்த படி, “சரி… நான் படுக்க போறேன்மா.”, என்று உள்ளே சென்றுவிட்டார் பாண்டியன்.

அவனின் அந்த நொடி  நேர ஏமாற்றம் ஸ்ரீக்கும் வலித்தது. ‘இப்படியா ஆசை காட்டி மோசம் பண்ணுவ ஜக்கி… சே’, என்று நினைக்கும் போதே ராகுல் அவளை அழைத்திருந்தான்.

‘ என்ன ஸ்ரீ? ஜக்கி குல்லுவிட்டுருச்சா… கண்டிப்பா மூணாவது விக்கெட் வரும்னு நினைச்சேனே.”, என்றான் எடுத்ததுமே.

“ம்ப்ச்… ஆமாம்டா… நானும் நினைச்சேன். ஆனா முடியறதுக்குள்ள நிச்சயம் எடுப்பார். எனக்கு தெளிவா தெரிஞ்சுது, டீ.வில அவர் மட்டுமே இந்த முறை எடுத்தார்னு ப்ரைஸ் குடுக்கற மாதிரி காட்சி. “, தான் கண்டதை விவரித்தாள் ஸ்ரீ.

“பாவம் … நவீனுக்கு முகமே விழுந்து போச்சு.”, ராகுலும் சொல்ல, ஸ்ரீக்கு ஏனோ கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

“ஆனாலும் ஸ்போர்ட்ஸ்ல இதெல்லாம் சகஜம். சரியாகிடுவார்.”, என்று அவனே சொல்ல, ம் கொட்டி கேட்டுக் கொண்டாள் ஸ்ரீ.

அடுத்த கால் மணி நேரத்தில் இலக்கை அடைந்து டி.சி. வெற்றி பெற்றது. சோகமாக படுக்கச் சென்றாள் ஸ்ரீ. எதாவது மெசேஜ் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் அழைப்பே வந்தது.

“ஆன்லைன்ல பார்க்கவும் கூப்பிட்டேன் ஸ்ரீ. தயவு செஞ்சு இனி எனக்கு இது நடக்கும்னு வாக்கு சொல்லாதே. என்னோட யோசனையையே சிதறடிக்குது. என்னவோ ஒரு குருட்டு தைரியம் வந்துச்சு, அப்படியே நீ சொன்னது அஷ்வின் அண்ணாக்கு நடந்த மாதிரி எனக்கும் பலிக்கப் போகுதுன்னு. “, பட பட வென்று நவீன் பொரியவும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்ரீ முழித்தாள்.

ஸ்ரீநிதிக்கு தன் வாக்கு பலிக்கும் என்று சொல்வதா, ஆறுதல் சொல்வதா எப்படி கையாள்வது இந்த நவீனை என்று தெரியவில்லை .

“நவீன், நீங்க உங்க பெஸ்ட் குடுத்தீங்க.”, என்று ஸ்ரீ ஆரம்பிக்கவும்,

“அதுதான் இல்லை ஸ்ரீ. கொஞ்சமாவது நான் யோசிச்சிருந்தா, ஸ்பீட், இல்ல லெங்க்த் மாத்தியிருப்பேன். இப்படி லட்டு மாதிரி தூக்கி குடுத்திருக்க மாட்டேன். ஏண்டா ஃபுல் டாஸ் போட்டன்னு கேட்டவங்களுக்கு என்னால காரணம் கூட சொல்ல முடியலை. போடறதுக்கு முன்னாடியே மூணாவதும் கிடைச்சிட்ட மாதிரி ஒரு தெனாவட்டு. அதுதான் என் கோவம். நீ எதுவும் சொல்லாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது. சோ ப்ளீஸ் … இனி எதுவும் சொல்லாதே.”, பொரிந்துவிட்டு வைத்துவிட்டான்.

 ‘இதென்ன என்னை பழி சொல்கிறான். நான் சொன்னா, இவனை யார் நம்பச் சொன்னது?’, என்று புசு புசுவென்று கோவம் வந்தது ஸ்ரீக்கு.

அப்போதே போன் செய்வது உசிதமில்லை என்று கட்டுப் படுத்திக் கொண்டு படுக்கச் சென்றாள். ‘நாளைக்கு வெச்சிக்கறேன் கச்சேரியை’,  என்று நவீனை அர்ச்சித்துக் கொண்டே புரண்டு கொண்டிருந்தவள், ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.