அத்தியாயம் – 5

ஸ்ரீயின் சித்தப்பா ராஜனிற்கு தலை கால் புரியாத சந்தோஷம். பின்னே, ஐ.பி.ல் வீரர் நவீன் சந்திரசேகர் அவர் வீட்டில், அவருடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதானே.

சராசரி இந்தியக் குடிமகனாக ராஜனும் ஐ.பி.ல் கிரிக்கெட் ஆர்வமாகப் பார்ப்பவர்தான்.நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது என்றாலும் மாட்ச் பார்க்கப் பிடிக்கும் என்னும் ரகம்.

ஸ்ரீ போன் செய்து அவள் மல்லி சித்தியிடம் நவீனை வீட்டுக்கு இரவு சாப்பாட்டிற்கு அழைத்து வரலாமா என்று கேட்க, ஸ்ரீயின் நண்பன் யாரோ என்று நினைத்து, ‘அதுக்கென்னடி கூட்டிட்டு வா. கூட ராகுலையும் வர சொல்லு.’, என்று சொல்லியிருந்தார்.

பின் மதியம் போல ஸ்ரீ வீடு வந்து சேர்ந்தபின் அவள் சித்தாப்பாவிடம் சொல்லியதுதான் தாமதம், வீட்டையே ரணகளமாக்கியிருந்தார். மெனு போட்டு, மீன், சிக்கன் என்று வாங்கிவந்து மல்லிகாவை ஒரு வழியாக்கியிருந்தார்.

இதோ, இப்போது விருந்தோம்பலில் நவீனை திணறடித்துக்கொண்டிருந்தார்கள் மல்லிகாவும், ராஜனும்.

“இல்லை… நிஜமா போறும் ஆன்ட்டி. ரொம்ப நல்லா இருக்கு, ஆனாலும் இதுக்கு மேல முடியாது. ப்ளீஸ்.’, என்று நவீன் கெஞ்சும் வரையில் விடவில்லை.

“ஸ்ரீ அம்மாவும் இப்படித்தான் பண்ணாங்க, அவங்க தங்கைன்னு நீங்களும் ப்ரூவ் பண்றீங்க. “, என்று நவீன் சொல்லவும்,

“ஆமாம். அக்கா தங்கைங்க எல்லாரும் கொஞ்சம் அப்படித்தான். யாராவது சிக்கினா அவங்களுக்கு அன்னாபிஷேகம் பண்ணாம விடமாட்டாங்க.”, என்று அவள் சித்தியை ஓட்டினாள் ஸ்ரீ.

வெற்றி பெற்றதனால் இரவு ஹோட்டலில் பார்ட்டி நடந்துகொண்டிருந்தது. ஆரம்பித்து, கேக் கட் செய்து, மானேஜர்களிடமிருந்து பாராட்டும், ஊக்கமும் நிறைந்த பேச்செல்லாம் முடிந்ததும், சற்று நேரம் கழித்து கம்பி நீட்டியிருந்தான். தீர்த்தவாரியும், தாராள மங்கைகளும் களை கட்டும் நேரம், அஷ்வின் நழுவும் போதே கூடவே நவீனும் கிளம்பியிருந்தான்.

இது போன்ற பார்ட்டிகள்தான் பல நல்ல ஆட்டக்காரர்களை வீழ்த்தியிருக்கிறது. இந்த சபல வலையில் விழாமல், கிரிக்கெட் மட்டுமே என் இலக்கு என்று இருப்பவர்களை, ‘சரியான போர்’, என்று பின்னால் கேலி செய்தாலும், அப்படி இருந்தவர்கள்தான் சாதனைகளை படைத்துள்ளார்கள். அந்தப் பட்டியலில் சேருவதையே தன் இலக்காகக் கொண்டிருந்த நவீன், பட்டும் படாமல் இருந்து கொண்டான், இப்படிப்பட்ட பார்ட்டிகளில் அஷ்வினை தன் வழிகாட்டியாகக் கொண்டிருந்தான்.

புதிய வீரர்களுக்கு இதுபோல வழிகாட்டிகள் மிக அவசியம். கிரிக்கெட் உலகில் முன்னேறத் துடிக்கும் சாதாரண ஆட்டக்காரனாக இருக்கும் வரையில் இருந்த உலகம் வேறு. பெரும் பணம் , பருவ மங்கை, பவர் பாலிடிக்ஸ் என்று ஐ.பி.ல் வேறு ஒரு உலகம். அதில் அதிகாரம் படைத்தவர்களின் ஈகோ காயப் படாமல் இருக்கவும், இந்த உலகில் ஒரு இடத்தை தக்க வைக்கவும் , புது ஆட்டக்காரர்கள் சில வேளை வளைந்து பணிந்து செல்ல வேண்டியிருக்கும்.

அஷ்வின் போன்ற மூத்த வீரரின் கவனம் இருப்பதால் நவீன் அதிகம் சீண்டப்படவில்லை. இல்லையென்றால் அவ்வளவு எளிதாக அவனை விட்டிருக்க மாட்டார்கள். அதை அறிந்தே அஷ்வினும் அவனுடனே பார்ட்டியைவிட்டு அழைத்து வந்திருந்தான்.

அஷ்வினிடம் ஸ்ரீ அடித்துவிட்ட கதையால், அஷ்வின் நவீனிடம், “ நீ போயிட்டு வா. நான் கோச் கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கித் தரேன். ஹோட்டல் கார்லயே போயிட்டு வந்துடு. என்னால உங்க வீட்ல ப்ராப்ளம் வேண்டாம்,”, என்று சொல்லவும் நவீனால் மறுக்க முடியவில்லை. அஷ்வின் பாராத போது ஸ்ரீயை முறைக்கத்தான் முடிந்தது.

அஷ்வினிடம் வேறு சிலர் வந்து பேசவும், ஸ்ரீ, “வீட்டு சாப்பாடு, எங்கம்மாவை விட சித்தி சூப்பரா சமைப்பாங்க. வாங்க நவீன். சித்தி, சித்தப்பா ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப். சந்தோஷப்படுவாங்க..“, என்றும் அழைக்க, தட்ட முடியாமல் வருவதாக ஒப்புக்கொண்டான். பார்டியிலிருந்து தப்பிக்கலாம் என்பதும் சேர்ந்து கொண்டது. ஹோட்டலில் இருந்தே ஒரு கார் ஏற்பாடு செய்து வந்திருந்ததால், போன முறைபோல் எங்கேனும் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இல்லாது பேசிக்கொண்டிருந்தான்.

“ நாளைக்கு காலையில பத்து மணி போலதான் கிளம்பறோம் அங்கிள். அடுத்த மாட்ச் டெல்லில டி.சி கூட.”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ அவ்வப்போது நவீனை வஞ்சனையில்லாமல் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு வசதியாக அவன் எதிரே உட்கார்ந்திருந்தாள். ராகுலுக்கு சிரிப்பாக இருந்தது. நிஜமாக நவீனுக்கு இவள் சைட் அடிப்பது தெரியவில்லையா, இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறானா என்று தெரியவில்லை.

“சித்தி சாப்பிடற வரைக்கும் கூட இருந்து கம்பனி குடுங்க சித்தப்பா. நாங்க கொஞ்ச  நேரம் ஹாலில் பேசிகிட்டு இருக்கோம்.”, என்று ஸ்ரீ சொல்லவும், இளையவர்கள் நகர்ந்தார்கள்.

ஹாலுக்கு வரவும், “ ஸ்ரீ… உங்க சித்தி சித்தப்பா முன்னாடி இப்படியா பார்த்து வைப்ப… விளையாட்டுக்கு அளவில்லையா?”, என்று நவீன் கடிந்தான்.

அவனைப் பார்த்து கண்களை படபடவென அடித்தவள், “ கண்ணுக்கு லட்சணமா ஒரு பிள்ளை இருந்தா… பாக்கறது ஒரு குத்தமா? “, என்று மோவாயில் கைவைத்து செயற்கையாக ஆச்சரியப் படவும்,

“என்ன இவ இந்த அநியாயம் பண்றா ராகுல்?”, என்று அவள் நண்பனிடம் முறையிட்டான்.

“இதுவும் செய்வா… இதுக்கு மேலையும் செய்வா ப்ரோ… டிசைன் டிசைனா என்னை மாட்டிவிடுவா.  போன ஜென்மத்துப் பாவமெல்லாம் சேர்த்து வெச்சு இவ ரூபத்துல பழிவாங்குது.”, என்று ராகுல் சோக கீதம் வாசிக்க, ஸ்ரீ முகத்தில் வெற்றிச் சிரிப்பு.

“ப்ளீஸ் ஸ்ரீ. ஏற்கனவே அங்க அஷ்வின் என்னை ஓட்டிகிட்டு இருக்கார். நீ இப்படியெல்லாம் பண்ணா, இன்னும் சேர்த்து வெச்சு கலாய்ப்பாங்க. “, அவளிடமே முறையிட்டான் நவீன்.

ஒரு கை தூக்கி அபயம் அளித்து, “என்ன? அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. அதான உங்க பயம்? உங்களை ஒன்னும் செஞ்சிட மாட்டேன். பயப்படாதீங்க.”, என்று கிண்டலடித்தாள்.

“ஹே… என்ன என்னை ஸ்கூல் பிள்ளை ரேஞ்சுக்கு சொல்ற? அதெல்லாம் இல்லை. உன் பேர் அநாவசியமா காசிப்ல மாட்டக்கூடாதேன்னுதான் சொல்றேன்.”, என்று அக்கறையாக நவீன் சொல்லவும், ‘ அச்சோ… புள்ள சோ ஸ்வீட்.’, என்று நினைத்துக்கொண்டாள்.

அதன் பின் பொதுவான பேச்சுகள், ஸ்ரீ செய்த கலாட்டாக்கள் என்று ஓட, ஓரு மணி நேரம் கலகலப்பாக ஓடியது பொழுது. நேரம் பத்து மணியை நெருங்கவும்,

“நான் கிளம்பறேன் அங்கிள். ரொம்ப ரொம்ப ஜாலியா போச்சு பொழுது. தாங்க் யூ. ஆன்ட்டி, அட்டகாசமான சமையல். நிஜமா நீங்க பெஸ்ட்டா, ரோஜா ஆன்ட்டி பெஸ்ட்டான்னு சொல்லவே முடியலை.”, என்று விடை பெற்றான்.

வாசலருகே அனைவரும் வந்து விடை கொடுக்க, கேட் வரை வந்தாள் ஸ்ரீ. காருக்கு செல்வதற்கு முன் அவளை திரும்பிப் பார்த்த நவீன், “என்ன ஸ்ரீ? அமைதியாகிட்ட?”, என்று கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்து எப்போது பார்ப்போம் என்று தெரியாததால் ஒரு சிறு கலக்கம்.

“ஸ்ரீ?”, தெரு விளக்கின் ஒளியில், நவீன் அவளைப் பார்க்க, அவன் கண்ணைப் பார்த்தவள், சில வினாடிகள் உறைய,  புருவம் சுருக்கிய நவீன்,

“ஸ்ரீ?”, என்று அவள் தோள் தொட்டு அசைக்க, “ம்ம்…”, என்று லேசாய் தலையை உதறியவள்,

“ஹ… ஒன்னுமில்லை நவீன்.  அடுத்த மாட்ச்சுக்கு ஆல் த பெஸ்ட்.”, என்றாள்.

“ஓஹ்… தாங்க்ஸ்.”, என்றவனும் எதோ குறைவது போல உணர அவளையே பார்த்து நின்றான்.

“அடுத்து ப்ளே ஆஃப் வந்தாதான் சென்னை ஸ்ரீ. இல்லைன்னா …”, தோள் குலுக்கினான்.

“இந்த ஐ.பி.ல் ல நீங்க ஹாட்ரிக் அடிக்கறீங்க ( மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் எடுப்பது) நவீன். அப்படி அடிச்சா, உங்க டீம் ப்ளே ஆஃப் வந்தாலும் வராட்டாலும், சென்னை வந்து என்னை டின்னர் கூட்டிட்டு போகணும். ”, என்றாள் விரிந்த புன்னகையுடன்.

எதிர்பாரா  இந்த பதிலில் அதிர்ந்து சிரித்தவன், “ஹாட்ரிக் அடிச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா நான் அதை பண்றதைவிட நாங்க ப்ளே ஆஃப் போகத்தான் சான்ஸ் அதிகம். இதுல எது நடந்தாலும், உனக்கு ட்ரீட் நான் தரேன்.”, என்று வாக்களித்தான்.

அடுத்த சந்திப்பை உறுதி செய்ததில் இருவருள்ளுமே ஒரு சந்தோஷம்.சொல்லி வைத்தாற் போல, உணர்ந்ததை இருவருமே காட்டிக்கொள்ளவில்லை.

“பை ஸ்ரீ… நாளைக்கு மெசேஜ் பண்றேன்.”, என்று  சொல்லி கிளம்பிவிட்டான்.

 நவீன் கிளம்பவும், ராகுலும் ஸ்ரீயின் சித்தி சித்தாப்பாவிடம் விடை பெற்றவன், நண்பனின் பைக்கை எடுத்து வாசலருகே வந்தான்.

“என்ன ஸ்ரீ.. என்னாச்சு?”

“ம்ம்… அது… அடுத்து எப்ப மீட் பண்ணுவோம்னு தெரியாம நின்னேனா… அப்ப சட்டுனு ஃப்ளாஷ் ஆச்சுடா. நவீன் இந்த ஐ.பி.ல் ல ஹாட்ரிக் விக்கெட் அடிக்கறார். அதை சொல்லி எனக்கு ட்ரீட் தரணும்னு சொன்னேன். “

“ஸ்ரீ? நான் சொல்றேன்னு தப்பா எடுக்காதே. நவீன் நல்ல மனுஷன். இல்லைன்னா, ஒன்னு நீ ரொம்ப ஈசின்னு அட்வான்டேஜ் எடுக்கலாம், இல்லை நீ வெளிப்படையா அவரை சைட் அடிக்கறதை வெச்சு உன்னை அசிங்கப் படுத்தலாம். அதெல்லாம் இல்லாம நீ அவரை அப்பட்டமா சைட் அடிச்சாலும், உனக்காக பார்க்கறார். நீ பாட்டு உன் ஆர்வக் கோளாறுனால அவரை சங்கடத்துல மாட்டிவிடக்கூடாது.”

நண்பனின் நாசூக்கான நிந்தனை ஸ்ரீயை வருத்தப் படுத்த, “என்னடா ராக்கி, என்னை தெரியாதா உனக்கு? இதுவரைக்கும் நான் அப்படியெல்லாம் யார்கிட்டயும் பண்ணதில்லை. அது நவீன்….”

“தெரியும்டி… அதனாலத்தான் சொல்றேன். ஜக்கி சொல்லிடுச்சுன்னு நீ கண்ண மூடிட்டு லவ்வுன்னாதே.கொஞ்சம் உன் மூளையையும் யூஸ் பண்ணு. அவரையும் ஃப்ரீயா விடு. நாளைக்கு எதாவது கோவத்துல, ஒரு சொல் உன்னை பத்தி தப்பா வரக்கூடாது. அவருக்கு உன் மேல இஷ்டம் தானா வரணும். நீ துரத்துனதாலன்னு இருக்கக் கூடாது. புரியுதா? “, ராக்கி கண்ணாடியை ஏற்றிவிட்டு தீவிரமாக சொல்ல, அவன் கூற்றில் இருந்த நியாயம் புரிந்து,

“சரிடா… நானா ஒன்னும் செய்ய மாட்டேன். அவர்தான் நாளைக்கு மெசேஜ் போடறதா சொன்னார். “, என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“சரி… ஃப்ரீயா விடு. இதையே யோசிக்காதே. போய் படு. நாளைக்கு காலையில ட்ரெய்ன். ஸ்டேஷன்ல மீட் பண்ணலாம். பை.”, என்று ஆறுதல் சொல்லிச் சென்றான்.