“போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “,  என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

 ஆட்டம் களை கட்டத் தொடங்க, ராகுல் அதில் மொத்தமாக மூழ்கியிருந்தான். சற்று  நேரம் ஆர்.சி.பியின் ஆடாத சில வீரர்கள் வந்திருக்க, அவர்களைப் பார்த்து பேச, செல்ஃபி எடுக்க என்று நேரம் ஓடியது.

பவர் ப்ளே கடைசீ ஓவரில் நடந்தது அது. வேகப் பந்து வீச்சாளர் போல்ட் பந்தில் ஓடுவதா , வேண்டாமா என்ற குழப்பத்தில், இரு பேட்ஸ்மேனும் ஒரே பக்கத்தில் இருக்க,  மிக எளிதாக அவுட் ஆக வேண்டிய நிலையில், ராஜஸ்தான் சொதப்பியது. தேவதத் படிக்கல் வீசிய பந்து அநியாயத்திற்கும்  அகலமாக செல்ல, இவர்கள் ஒருவழியாக பந்தை எடுத்து திரும்ப வீசுவதற்குள், ரன் அவுட் சான்ஸ் காலாவதியாகிவிட்டிருந்தது.

காலரியிலும், இங்கே வி.ஐ.பி பாக்ஸ்சிலும் படிக்கல்லை பல மொழிகளில் கழுவி ஊற்றினார்கள். அங்கிருந்த பெரிய திரையில் இவர்களின் சொதப்பல் ஸ்லோ மோஷன் ரீப்ளேவில் ஓடிக் கொண்டிருந்தது.  ராகுலும் படிக்கலைத் திட்ட, டீ.வியைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீ, “டேய்… ரொம்ப திட்டாதே. அவன்தான் இன்னிக்கு மேன் ஆஃப் த மேட்ச்.”, என்றாள்.

சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தவன், “ நிஜமாவா சொல்ற ஜக்கி?”

“ம்ம்… நிஜமா..”, என்றாள் அவனைப் பார்த்து. அந்த பார்வையே சொன்னது, அவள் விஷ்ன் பார்த்து சொல்கிறாள் என்று.

“ஐயோ…ஐயோ… ஜக்கி இப்படி ஓவர் டைம் பார்க்குது. எப்படி பெட் வெக்கறதுன்னு தெரிஞ்சா, படிக்கல் மேல பெட் கட்டி கொஞ்சம் காசாவது பார்க்கலாம்… சே..”, என்றான் ராகுல் வருத்தமாக.

இவர்களது பேச்சைக் தமிழ் என்பதால் அரை குறையாகல் கேட்டுக் கொண்டிருந்த சித்தார்த் சட்டென்று ஆர்வமானான். தான் கேட்டதை எப்படி உறுதி செய்வது என்று யோசித்தவன், அவர்கள் தமிழ் பேசியதைக் காரணமாக வைத்து,

“ஹாய் கைஸ். நான் சித்தார்த். நீங்க இரண்டு பேரும் தமிழா? “, என்று ஆரம்பித்தான்.

தங்கள் பின்புறம் அமர்ந்திருந்தவரை இப்போதுதான் பார்த்தார்கள் ஸ்ரீயும், ராகுலும். முப்பதுகளின் மத்தியில் இருக்க வேண்டும். பணக்கார நாகரீகமானத் தோற்றம் , ரிம்லெஸ் கண்ணாடி, டீ-ஷர்ட், கார்கோ பேண்ட் என்றாலும், அர்மானி டீ.ஷர்ட் என்ற அந்த சின்ன லோகோ சொல்லியது அதன் விலைக்கு ஒரு பட்டுப் புடவையே எடுக்கலாம்.

ராகுல் முகமன் கூறி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆமாம் என்று சொல்ல, “ நீங்க எந்த ஸ்பான்ஸர்ஸ்க்கு வேண்டியங்க? இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையே, அதான் கேட்கறேன். “, என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.

“அஷ்வின் சர் பாஸ் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார். அதான் வந்திருக்கோம்.”, என்றான் ராகுல். ஸ்ரீ அதற்குள் கவனம் கலைந்து புதிதாக ஒரு வீரர் வர அங்கே பார்த்திருந்தாள்.

“ஓ… ரவிச்சந்திரன் அஷ்வினா? உங்களுக்கு வேண்டியவரா?”, இப்போது இன்னும் கொஞ்சம் ஆர்வம் வந்தது சித்தார்த்திடம்.

என்னடா… இந்த மனுஷன் கேள்வி மேல கேள்வி கேட்கறான் என்று யோசித்தவள், “அதல்லாம் இல்லை சர். “, என்று மொட்டையாக முடித்தாள் ஸ்ரீ.

அவள் பேசவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த், “ ஓ… சென்னைல ராக்ஸ் க்ரூப் ஆஃப் கம்பனிஸ் கேள்வி பட்டிருக்கீங்களா? அது எங்களோடதுதான்.  நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸா ?”, என்று சற்று தன்னைப் பற்றிக் கூறி, அவர்களைப் பற்றிக் கேட்டான்.

கம்பனியின் பேரைக் கேட்டதும், “ஓஹ்… தெரியும் சர். நானும் அங்க அப்ளை பண்ணிருந்தேன். ஆனா இன்டெர்வ்யூக்கு கூப்பிடலை.”, ஸ்ரீ சொல்லவும்,

“ஓஹ்… என்ன போஸ்ட்? என்ன டிபார்ட்மென்ட் மா? நிறைய இன்டர்ன்ஸ் எடுக்கறோமே…”, என்றான் சித்தார்த்.

“ம்ம்.. நான் சைக்காலஜி படிச்சிருக்கேன். உங்க ஹெச். ஆர்ல அப்ளை பண்ணிருந்தேன். க்ராஜுவேட் ட்ரெய்னீ.”, இவள் பேசிக் கொண்டிருக்க ராகுல் மேட்ச் பார்ப்பதில் கவனமாகிவிட்டான்.

மெல்ல ஸ்ரீயைப் பற்றி விசாரித்தான் சித்தார்த். இப்போது சற்று தயக்கமில்லாமல் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். ‘எதுக்குடா இவகிட்ட பேசிகிட்டு இருக்க? சும்மா வெட்டியா பேசிக்கிட்டு இருந்தாங்க, தேவையில்லாம நீயா இம்ப்பார்டன்ஸ் குடுக்கறியா?’, என்று சித்தார்த்திற்கு யோசனை ஓடிய நிலையில்,

“ஓஹ்… நவீன் வந்துட்டார். அப்பறம் பேசலாம் சர்.”, என்று ஸ்ரீ கண்ணாடி அருகில் ஓடிவிட்டாள்.

ராகுலிடம், “ஸ்ரீநிதிக்கு ரொம்ப பிடிக்குமோ ?”, என்று சித்தார்த் புன்னகையோடு விசாரிக்க, “அவளுக்கு ஃப்ரெண்டு சர். “, என்றான் ஆட்டத்தில் கவனம் வைத்தபடி.

‘அட என்னடா… டீம்ல இரண்டு பேரை தெரிஞ்சு வெச்சிருக்காங்க. எதாவது யூஸ் இருக்குமோ?’, என்று எண்ணம் ஓட, சரி கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான். கூடவே, ‘ இவர்கள் பேசிக் கொண்டதைப் போல படிக்கலின் மேல் பந்தயம் கட்டலாமா?’, என்றும் ஒரு சபலம்.

கட்டித்தான் பார்க்கலாம் என்று எழுந்து வெளியில் சென்றவன், அவன் பந்தயம் கட்டும் ஏஜென்டை அழைத்து , இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெறப் போவது தேவதத் படிக்கல் என்று குறைந்த பட்ச பந்தயத் தொகையான ஒரு லட்சம் பந்தயம் கட்டினான், அவர்களது சங்கேத பாஷையில்.

ஓய்வறைக்கு சென்று பொறுமையாக திரும்பி வரவும், அவனுடன் வந்த இரு நண்பர்களுடன் அமர்ந்தான்.

 “என்னடா, அந்த பொடிப் பசங்களோட பேசிகிட்டு இருந்த ?”, கவுதம் கேட்க, பொதுவான ஒரு பதிலை சொல்லிக்கொண்டிருந்தான்.

ஆர்.சி.பியின் இருபது ஓவர்கள் முடிய அடுத்த கால் மணி நேரத்தில் ராஜஸ்தான் களம் இறங்கியது. ஜோஸ் பட்லருடன் இந்த முறை தேவதத் படிக்கல்தான் ஓபனிங் பேட்ஸ்மென்களாக இறங்கினார்கள்.இரண்டாவது ஓவரிலேயே படிக்கல் சிக்ஸ் அடித்து கணக்கை தொடங்க, ஒரு மணி நேரம் முன்பு பழித்துப் பேசியவர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.

படிக்கலின் அதிரடி விளையாட்டில் அரங்கமே அதிர்ந்தது. ஒரு அதிர்வோடு பார்த்திருந்தான் சித்தார்த். விளையாட்டாகத்தான் கட்டினான். நூற்றித் அறுபதிற்கு மேல் ஆர்.சி.பி அடித்திருக்க, போட்டி எப்படி வேண்டுமானாலும் முடியலாம் என்று இருந்தது.

பத்து ஓவர்களில் படிக்கல் சென்ச்சுரி அடிக்க எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிந்தது.  இல்லையென்றாலும் அணி வெற்றி பெற்றாலே, எடுத்திருக்கும் ரன்களுக்கு படிக்கல் ஆட்ட நாயகனாக தேர்வாவதற்கு சாத்தியக் கூறுகள் பிரகாசமாகத் தெரிந்தது. கட்டிய ஒரு லட்சம் முதல் முறையாக நான்கு மடங்காக திரும்பப்போகிறது. குதூகலமாக உணர்ந்தான் சித்தார்த்.

திரும்பி ஸ்ரீநிதியைப் பார்க்க அவள் வீரர்கள் இருக்கும் டக் அவுட் ஏரியாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகுல் மட்டுமே ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். தான் சொன்னது நடக்கவுள்ளதைப் பற்றி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருந்தாள். ‘அப்போ இது போல சொல்வதும் அது பலிப்பதும் இந்தப் பெண்ணிற்கு வாடிக்கையோ?  இல்லையென்றால், தான் சொன்னது நடப்பது கண்டு ஒரு மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்குமே.’, என்று எண்ணம் ஓடியது சித்தார்த்திற்கு.

படிக்கல்  நூறு ரன்களை ஃபோர் அடித்துக் கடக்கவும், எழுந்த ஆரவாரத்தில் கவனம் கலைந்து நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்தான். மெதுவே தான் படிக்கலின் மேல் கட்டிய பந்தயத்தை நண்பர்களிடம் பகிர சித்தார்த்தை மொய்த்துவிட்டார்கள்.

ஆட்டம் படிக்கல் அடித்த நூற்றி முப்பது ரன்னில் முற்றிலுமாக எளிதாக ராஜஸ்த்தான்புறம் வந்தது. படிக்கல் சித்தார்த்திற்கு நான்கு லட்சம் வாங்கிக் கொடுத்துவிட்டான். ‘சே… இரண்டு லட்சமாவே கட்டியிருக்கலாம். போன காசெல்லாம் மீட்டிருக்கலாம்.’, என்று எண்ணம் ஓடியது. மனித மனம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு அதற்கு மேலும் கிடைக்கவில்லையே என்று துக்கப்படும். சித்தார்த்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

போட்டி முடிந்து, அடுத்தது ஆரம்பிக்க அவகாசம் இருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் அஷ்வின் மற்றும் நவீன் வி.ஐ.பி பாக்ஸ்க்கு வந்தார்கள், அவர்களை சூழ்ந்து வாழ்த்து சொன்னார்கள். போட்டோக்களுக்கு சற்று நேரம் நின்றுவிட்டு,  அவர்களைத் தாண்டி ஸ்ரீ, ராகுலிடம் வந்தார்கள்.

“என்னமா அத்தை பெண்ணே… உன் மாமா இரண்டு விக்கெட் எடுத்திருக்கான். ப்ரைஸ் எதுவும் கிடையாதா?”, என்று அஷ்வின் வந்ததும் கலாய்க்க,

“அண்ணா… “, நவீன் அஷ்வினிடம் முறையிட்டான்.

அசராமல் சென்று இரு கிண்ணிகளில் குலாப் ஜாமூனை எடுத்து வந்து, “இரண்டு பேருமே சூப்பராத்தான் ஆடினீங்க. வாழ்த்துக்கள்.”, என்று அவர்களிடம் நீட்டினாள் ஸ்ரீ.

“ஹா ஹா… நோகாம இருக்கற ஸ்வீட்டை எடுத்து குடுக்கற?”, என்றாலும் அவள் சமயோசிதத்தை மெச்சிய அஷ்வின், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை ராகுலிடம் தர, நவீன் ஒன்றை சாப்பிட்டு, மிச்சத்தை ஸ்ரீயிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

அடுத்து இரு வீரர்கள் வந்திருந்தனர் என்பதால் அங்கிருந்தவர்கள் இவர்களைப் பெரிதாக கவனிக்கவில்லை, சித்தார்த்தைத் தவிர.

ஸ்ரீ அவள் சித்தி வீட்டில் தங்குவது தெரிந்து, “என்னடா … அந்த அத்தை வீட்டுக்குப் போன, இப்ப சின்னத்தை வீட்டுக்கு போகலியா? கோச்சிக்க மாட்டாங்களா?”, என்று கேட்க, நவீன் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி முழித்தான்.

“அது, எனக்கு மட்டும் பாஸ் அரேஞ்ச் பண்ணிட்டு, இங்கயே இருக்க அவங்களைக் கண்டுக்கலைன்னு என் சித்தப்பாக்கு நவீன் மேல வருத்தம். அதான்…., என்று ஸ்ரீ சமாளித்தாள்.

‘அடிப்பாவி…என்னமா அடிச்சுவிடறா என்று நவீன் திகைப்பதை ராகுல் மட்டுமே பார்த்தான். அஷ்வின், தன்னால் உறவுகளிடம் குழப்பமோ என்ற எண்ணத்தில், ‘அட… நீ சொன்ன அஞ்சு விக்கெட் வாக்கு பலிச்சதுனால நான் குடுத்த பாஸ்னு சொல்ல வேண்டியதுதானே மா.” என்பது சித்தார்த்துக்கு தெளிவாக கேட்டது.

‘ஆஹா… அப்போ போன மாட்ச் அஷ்வின் எடுத்த அஞ்சு விக்கெட் அவர்கிட்டயே முன்னாடியே சொல்லியிருக்காளா ? இந்த பொண்ணுக்கு நிஜமாவே எதோ சக்தி இருக்கும் போலயே…. எப்படி கண்டுபிடிக்கறது?’, என்ற எண்ணம் ஓட, ஸ்ரீயின் பதிலோ, அதற்கு மேல் அவர்களது உரையாடலோ சித்தார்த்தின் கவனத்தில் பதியவில்லை.