அத்தியாயம் – 4

மறுநாள்  காலை பத்து மணி போல போனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நவீனிடமிருந்து போன். வருமோ என்ற சந்தேகத்தில் இருந்தவள் ஒரு பெரிய புன்னகையோடு எடுத்தாள்.

“ஹலோ…”, என்றதும் மறுபுறம்

“ஹே…. இரு அஷ்வின் அண்ணா பேசணும்ங்கறார்.”, என்று நவீன் போனை தந்துவிட,

“ஹலோ.. ஸ்ரீ?”, என்றார் அஷ்வின்.

“அண்ணா… கங்க்ராட்ஸ் ! நேத்து மாட்ச் கலக்கிட்டீங்க.”, உற்சாகமாக வாழ்த்தினாள்.

“ஹா ஹா…. தாங்க்ஸ் மா… அஞ்சாவது விக்கெட் எடுக்கும்போது உன் ஞாபகம்தான் வந்துச்சு. “

“போங்கண்ணா…. நான் சொல்லியெல்லாம் ஒன்னும் இல்லை. இதுக்கு முன்னாடியும் எத்தனை வாட்டி எடுத்திருக்கீங்க ? எதோ நான் சொன்னதாலதான்னு கிடையாது.”, ஸ்ரீ எப்பவும் இது போன்ற விஷயங்களில் சமாளிப்பது போல இப்போதும் சமாளித்தாள்.

அதைக் கேட்டு சிரித்த அஷ்வின், “ இருந்தாலும் உனக்கு ஒரு சின்ன தாங்க்ஸ். இன்னும் அஞ்சு நாள் கழிச்சு பெங்களூருல மாட்ச். நீயும் உன் ஃப்ரெண்டும் வரதா இருந்தா, வி.ஐ.பி, ஸ்பான்சர்ஸ் காலரில உங்களுக்கு இரண்டு பாஸ் அரேஞ்ச் பண்றேன். சென்னை இனி நாங்க ப்ளே ஆஃப் செலக்ட் ஆனாத்தான் வருவோம். அதான் பெங்களூரு பெட்டர்னு கேட்டேன்.  நீ வீட்ல கேட்டுட்டு நவீன் கிட்ட சொல்லுமா.”, என்றார்.

“ஓஹ்… ரொம்ப தாங்க்ஸ்ணா… ராகுல் கண்டிப்பா மிஸ் பண்ண விடமாட்டான். நான் அம்மா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு சாயந்திரம் சொல்றேன்ணா. “, ‘எப்படியாவது அம்மாவை சமாளித்து நவீனைப் பார்க்க ஒரு சான்ஸ். ‘, என்று எண்ணம் ஓட, ‘என்னது?’, என்ற மனசாட்சியை… ‘இல்ல  நமக்கு செட் ஆகுமான்னு பார்க்கணும்ல… அதுக்கு ஒரு சான்ஸ் அவ்ளதான்…அவ்வளவேதான்.’ என்று சமாதானப் படுத்தினாள்.

போன் நவீன் கைக்கு வரவும், “ ஹே… ஓக்கேவா….வரதுக்கு ?”, என்றான்.

“ம்ம்.. ராகுல் வெச்சே அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிடலாம். என் சித்தி அங்கதான் இருக்காங்க.  நீங்க எங்க இருக்கீங்க ? பின்னாடி ஒரே சத்தமா இருக்கு ?”

“ஏர்போர்ட். அடுத்த மாட்ச்  கொல்கத்தால. இன்னும் கொஞ்ச நேரத்துல போர்ட் பண்ணணும். நேத்தே உங்கிட்ட பேசணும்னு சொன்னார், ரொம்ப லேட் ஆகவும், இன்னிக்கு பேசினேன்.“,  நவீன் சொல்ல,

“ஓஹ்.. சரி பத்திரம். சேஃப் ஃப்ளைட். அடுத்த மாட்ச்க்கு ஆல் த பெஸ்ட்.”, என்றாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“தாங்க்ஸ். எனக்கு எதுவும் அஷ்வின் அண்ணாக்கு சொன்ன மாதிரி சொல்ல மாட்டியா?”, நவீன் கேட்க,

“ஹலோ… எதோ  நான் எதேச்சையா சொல்ல, அதுவும் நடந்துச்சு. அவர் எடுக்கணும்னு இருந்தா நான் சொல்லலைன்னாலும் எடுத்திருப்பார். உங்க மேல, உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க. கண்டிப்பா நல்லா ஆடுவீங்க.”, என்று சமாளித்து ஊக்கமளித்தாள் ஸ்ரீ.

“ம்ம் … சைக்காலஜி பேசுதா மேடம் ? “, என்று கிண்டல் செய்தவன், “ ஆனாலும் நீ சொன்னது ரொம்ப கரெக்ட். தாங்க்ஸ் ஸ்ரீ. சாயந்திரம் மெசேஜ் போடு, பெங்களூர்ல பார்க்கலாம்.”, என்று விடை பெற்றான்.

 அடுத்த ஒரு மணி நேரத்தில், காலேஜை அம்போவென்று விட்டுவிட்டு, ராகுல் ரோஜாவிடம் மன்றாடிக்கொண்டிருந்தான்.

“ஆன்ட்டி… இதெல்லாம் கோல்டன் சான்ஸ். அப்படி வி.ஐ.பி காலரில, மத்த ப்ளேயர்ஸ் பக்கத்துல உட்கார்ந்து மாட்ச் பார்க்கறதும், அவங்க கிட்ட பேசறதும் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? ஓகே சொல்லுங்க ஆன்ட்டி.”

“டேய்… அந்த அருமையெல்லாம் உனக்குத்தான் தெரியும். இவளுக்கு அதெல்லாம் வேஸ்ட்டுடா.”, என்று ரோஜா கூற,

“மா…எனக்கு பதிலா அப்பா போக முடியாது. எனக்கும், ராகுலுக்கும்ன்னுதான் அஷ்வின் சொன்னார். இன்னொரு பாஸ் வேணும்னு என்னாலெல்லாம் கேட்க முடியாது. உனக்கென்ன, நான் சித்தி வீட்ல இருக்கப் போறேன். ராக்கு அவன் ஃப்ரெண்டு வீட்ல தங்கறான். என்னை வந்து கூட்டிட்டு போவான், இல்லை சித்தப்பாவை ஸ்டேடியம் கூட்டிட்டு போய் ராக்குகிட்ட விட சொல்லு. சனிக்கிழமைதான ? வரும்போது பத்திரமா வீட்டுக்கு வந்து ராக்கு விடுவான். காலையில ட்ரெயின் பிடிச்சு வந்துடப் போறோம். என்ன இதுல உனக்கு பிரச்சனை ?”, அவள் போட்டு வைத்த திட்டத்தை மீண்டும் விளக்க,

“ம்ம்… இத்தனை நாளா சித்தி வீட்டுக்கு போன்னதுக்கு,’ முடியாது, உன் தங்கச்சி உனக்கு மேல படுத்தும்’,னு கதை சொல்லிகிட்டு இருந்த. இப்ப உனக்கு ஒரு காரியம் ஆகணும்னா, சித்தி, சித்தப்பான்னு ஞாபகம் வருது. அதுதான் என் பிரச்சனை.”, முறைத்தார் மகளை.

தாயை ஒரு பார்வை பார்த்தவள், நேராக மல்லி சித்திக்கு போன் அடித்தாள். அவர் எடுத்ததும்,

“அடுக்கு மல்லி… நான் பெங்களூர் வரதுக்கு ஒத்த ரோசா பெர்மிஷன் குடுக்க மாட்டேங்குது. கேட்டா உங்க வீட்ல தங்கக் கூடாதாம். என்ன …ஹோட்டல்ல தங்கவா? உங்களுக்கு ஓக்கேவா ? “, என்று கேட்கவும்… “அடியே…”, என்று பல்லைக் கடித்தார் ரோஜா.

“ஏன்… என்னவாம் உங்க அம்மாக்கு. அதெப்படி இங்க வராம நீ வெளிய தங்கிடுவியா? விட்டுருவேனா ?”, ஸ்ரீயின் விஷமம் புரியாமல் மல்லிகா குதிக்க,

“அதேதான் … உங்க அக்கா கிட்ட என்ன சித்தி உரண்டை இழுத்தீங்க ?  உங்க மேல இம்புட்டு கோவம் ? ஆனா காலையில் முல்லை பெரியம்மாகிட்ட ஒரே வழிசல்.”, சகோதரிகளுக்குள் எப்போது இருக்கும் லேசான புகைச்சலை ஊதி விட்டாள்.

அவள் கையிலிருந்த போனை பிடுங்கிய ரோஜா…” அடி மல்லி … நாந்தான்டி …அவ வேணும்னு கொளுத்திப் போடறா, நீயும் நம்பறியே? இந்த சைத்தான சைக்காலஜி படிக்க வெச்சது தப்பா போச்சு. வேலையை தேடிக்க துப்பில்லை ஆனா நம்மகிட்ட கேம் ஆடுது.”, என்று சொல்ல, அந்தப் பக்கம் என்ன பதில் வந்ததோ…

“சரி சரி… ஒன்னும் திட்டலை அவளை….”

“…”

“சரி.. சரி… நீ ஆரம்பிக்காத… முல்லைகிட்ட சாதாரணமாத்தான் பேசினேன். அடுத்து உன்னை கூப்பிட நினைச்சேன், அதுக்குள்ள இவ வந்து மல்லுக்கு நின்னா. “, மகளை முறைத்தார் வனரோஜா.

“…”

“சரி சரி… இந்த ஐ.பி.ல் கண்றாவிக்கு எதோ பாஸ் இருக்காம். அவ ஃப்ரெண்டு ராகுலோட வரா. அவன் வேற இடத்துல தங்குவான். இவ உன் கூட இருக்கட்டும். டிக்கெட் போட்டுட்டு சொல்லுவா. நீயாச்சு… அவளாச்சு.”, என்று தங்கையை சரிகட்டி போனை வைத்தார்.

“ஹ்ம்ம்… தாத்தா பெரிய தப்பு பண்ணிட்டார். மனுஷன் இப்ப இருந்திருந்தா நாக்கை புடுங்கறா மாதிரி கேட்டிருப்பேன்.”, என்றாள் ஸ்ரீ.

“என்னடி… என்ன பண்ணிட்டார் எங்க அப்பா ?”

“ம்ம்… பெரியம்மாக்கும் சித்திக்கு சாஃப்ட் பூ பேரா மல்லி, முல்லைன்னு வெச்சிட்டு, உனக்கு மட்டும் முள்ளுச் செடி ரோஜா… அதுவும் சாதா ரோஜா இல்லை… வன ரோஜான்னு வெச்சாரே… அதுதான் மடத்தனம். எல்லாரையும் முள்ளா குத்தற, அதுவும் என்னையும் அப்பாவையும் குதறித் தள்ளுற… உங்கிட்ட வாக்கப்பட்ட குத்தத்துக்கு, ரத்தம் சொட்ட சொட்ட நிக்கறோம்.”, வராத கண்ணீரை சுண்டியபடி ஏற்ற இறக்கமாகப் பேச, ராகுலுக்கும் ரோஜாவிற்கும் தானே சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“எங்கப்பா நல்லாத்தான் பேரு வெச்சார். எனக்குத்தான் வந்ததும் சரியில்லை வாச்சதும் சரியில்லை. என் வாசனையை பார்க்காம, முள்ளைத்தான் பெரிசா பேசுதுங்க.”, என்று அவர் பங்குக்கு அவரும் கண்ணீரை சுண்டிவிட்டு ஸ்ரீக்கு தாய் என்று நிரூபித்தார்.

“ஆன்ட்டி… சான்சே இல்லை… இவ வாயை அடக்க உங்களால மட்டும்தான் முடியும்.”, என்றுரோஜாவின் கைபிடித்து ராகுல் பாராட்ட, அவன் முதுகில் ஒன்று வைத்து தன் எதிர்ப்பை தெரிவித்தாள் ஸ்ரீ.

சனிக்கிழமை காலை பெங்களூரு சின்னசுவாமி கிரிக்கெட் மைதானம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ராகுல் அலுவலக அறைக்கு சென்று சம்பிரதாயங்களை முடித்து வி.ஐ.பி பாஸ்களை பெற்று ஸ்ரீயை அழைத்துக்கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தான். குளிரூட்டப்பட்ட இடம், கண்ணாடி வழியாக  மாட்ச்சை பார்க்க சிறப்பான இடம் என்றால் இதுதான்.  காலை சிற்றுண்டி பஃபே ஒரு ஓரமாக இருந்தது. குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் என்று அது ஒரு புறம். சிலர் அவர்களுக்குள் அமர்ந்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவர்களைப் பார்த்து ஒரு அன்னியப் புன்னகை சிந்திவிட்டு தொடர, ஸ்ரீ நேராக தனக்கு ஒரு தட்டை எடுத்து, அங்கிருந்த மெது வடை, சிறு ஊத்தப்பம் , பூரி  என்று அடுக்கினாள்.

“வீட்ல சாப்பிட்டுதானடி வந்த?”, ராகுல் அவள் காதைக் கடிக்க,

“போடா… மெட்ரோ பிடிச்சு, கப்பன் பார்க் ஸ்டேஷன்லர்ந்து நடந்து வந்து, பாஸ் வாங்க அரை மணி  நேரம் நின்னுனு, வீட்ல சாப்பிட்ட இட்லி செரிச்சு போச்சு. இப்ப என்ன, எல்லாம் ஃப்ரீதான… நீயும் சாப்பிடு.”, என்று வாய் பேசினாலும், கை காரியமாக தொட்டுக் கொள்ள நாலு வகை சட்னி, சாம்பார், உருளை மசாலா என்று அடுக்கியது.

“இங்க வந்துட்டோம்னு சொல்லிட்டியா நவீன்கிட்ட ?”, ராகுலும் மெதுவடை பார்த்து மயங்கி கூச்சம் விட்டு தட்டில் இரண்டு போட்டுக் கொண்டான்.

“அச்சோ…. மறந்துட்டேன். இரு .”, தட்டை வைத்தவள், போனை எடுக்க, அதே நேரம் நவீன் அழைத்தான்.

“ஹலோ நவீன்… உங்களுக்கு மெசேஜ் போடத்தான் எடுத்தேன், நீங்க கூப்பிட்டீங்க.”, என்றாள் உற்சாகமாக.

“உள்ள வந்துட்டீங்களா? ஒன்னும் பிராப்ளம் இல்லைதான ?”

“ஹான்… வந்துட்டோம். ஒன்னும் பிரச்சனையில்லை.  நீங்க எங்க இருக்கீங்க?”

“வந்துட்டு இருக்கோம். இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டேடியம் வந்துடுவோம். உடனே வர முடியாது. அப்பறமா வரேன்.”, என்றான் நவீன்.

“ஹேய்… யாரு… அத்தை மகளா?”, என்ற குரல் கேட்டது பின்னால்.

“யாரு? அஷ்வின் அண்ணாவா?”, ஸ்ரீ கேட்க,

“ஆமாம்மா… நல்லா இருக்கியா?”, என்று அஷ்வின் குரல் கேட்டது.

“ஓ சூப்பரா இருக்கேன் அண்ணா. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ், இந்த பாஸ் அரேஞ்ச் பண்ணதுக்கு. “, ஸ்ரீ நன்றி சொல்ல, அந்தப் புறம் வந்த பதில் கேட்டு,

:சரிண்ணா. நீங்க பாருங்க.  நான் வைக்கறேன். ஆல் த பெஸ்ட்.”, என்று வைத்துவிட்டாள்.

“யாரு ஸ்ரீ ? அஷ்வின்கிட்டயா பேசின?”

“ம்ம்… நவீன் அப்பறமா இங்க நம்மளைப் பார்க்க வரேன்னு சொன்னார். “, என்றவள் சாப்பிடத் தொடங்கினாள். மெல்ல அந்த வி.ஐ.பி பாக்ஸில் மக்கள் வரத் தொடங்கினர்.  பார்த்தாலே தெரிந்தது பணக்கார வர்க்கம் என்று. ஸ்ரீயையும் ராகுலையும் பார்த்தவர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டியவள், அந்த அறையை, அருகில் இருந்த வற்றை ஆராய்ந்து முடித்து, ராகுலை தம்கட்டி இழுத்துக்கொண்டு, அருகிலிருந்த மத்த ஸ்டான்ட்களையும் நோட்டம் விட்டு முடித்திருந்தாள்.

ஒரு வழியாக ஆரவாரச் சத்தம் காதை கிழிக்க, ஆர்.சி.பியின் விராட் கோலியும், ஆர்.ஆர் சஞ்சு சாம்சனும் டாஸ் போட வந்தார்கள். சஞ்சு ஜெயிக்கவும் பெங்களூரு அணியை ஆடசொல்லி, ராஜஸ்தான் பந்தைக் கையில் எடுத்தது.