மாலை மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஸ்ரீயும் ராகுலும். மதியம் நடந்தவற்றை கேட்டு பொறாமையில் வெந்துகொண்டிருந்தான் ராகுல்.

“அடிப் பாவி…. வீடு வரதுக்கு முன்னாடி மெசேஜ் போட்டிருந்தா கூட நான் ஓடி வந்திருப்பேன்.  இப்படி கண்லயே காட்டாம அனுப்பிட்டயேடி…. “, என்று மூன்றாவது முறையாக புலம்பினான்.

“டேய்… இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…. நீ என்ன புலம்பற? போற போக்கை பார்த்தா நிஜமாவே நான் பார்த்த விஷன் உண்மையாகிடும் போலடா… ஆனா அம்மா என்னவோ பவானி பாட்டிக்கு தன்னைப் பத்தின விஷன் வந்ததில்லைங்கறாங்க. நான் ரொம்ப கேட்டா உஷாராகிருவாங்க. நீ கொஞ்சம் பாட்டியோட ஃப்ளாஷ் பேக் கேளேன்….”, அவள் தவிப்பை ஸ்ரீ கூறவும்,

“ம்ம்… நீ சொல்றதும் கரெக்ட்தான்.  நான் கூட நினைச்சேன், அந்த கூட்டத்துல அவர் எப்படி உன்னை தேடி வரப்போகிறார்னு… பார்த்தா வீடு வரைக்கும் வந்துட்டு போயிருக்கார். மே பி உன் ஜக்கி இந்த வாட்டியும் கரெக்டாதான் சொல்லுச்சு போல….”, மோவாயைத் தடவியவன்,

“திரும்ப எப்ப மீட்டுனு எதுவும் சொன்னாரா?”, என்று வினவினான்.

“ம்ம்…போன் நம்பர் வாங்கிட்டு போயிருக்கார். நாளைக்கு ப்ராக்டீஸ் செஷன் பார்க்க பாஸ் அரேஞ்ச் பண்ணிட்டு மெசேஜ் பண்றேன்னு…ஆனா ஒன்னும் இதுவரை காணோம்.”, மீண்டும் தன் கைபேசியை ஆராய்ந்தபடியே சொல்ல,

“அடிப்பாவி… இதை ஏன் இதுவரைக்கும் சொல்லலை… நீ மட்டும் போப்போறியா? உனக்கு எந்த ப்ளேயரையும் தெரியாதே….”, நிஜமாகவே காதில் புகை வராத குறையாக கதறினான் ராகுல்.

“லூசாடா நீ? இரண்டு பாஸ் அரேஞ்ச் பண்றேன்னு  சொன்னார்.  நீயும்தான் வர.”, என்னவோ ஏற்கனவே பேசியிருந்ததுபோல ஸ்ரீ கூறவும்…

“ஜக்கி…. நண்பிடி…”, என்று அவள் கைப்பிடித்து ஒரு சுற்று குதிக்க…. “ டேய்… இரு இன்னும் மெசேஜ் வரலை… “, என்றாள் ஸ்ரீ சிரித்தபடி.

“வரும் வரும்… பிசியா இருப்பாராக்கும்…. சே… என்ன உங்கூட சேர்ந்து நானும் மரியாதையா கூப்பிடறேன்? நீதான் வாக்கப்படப்போற… எனக்கென்ன ?”, என்று தலையில் தட்டிக்கொண்டவனை மண்டையில் கொட்டினாள்.

“அம்மா எதிர்க்க உளறி வைக்காதே….அண்ட் நீயும் மரியாதையா அவருக்கு மரியாதை குடு.”, கண்களை உருட்டினாள்.

“ஓ… அப்படியா?”, என்று அவளை கிண்டலாக பார்க்க, “ச்சு… சும்மாயிருடா….”, என்றாள் லேசாக வெட்கப்பட்டு…

“அய்யோ…. வெக்கமா மணிமேகலை ?”, என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டவன் அடக்க மாட்டாமல் சிரிக்க, அவனை மொத்தினாள் ஸ்ரீ.

அவள் கை பிடித்து நிறுத்தியவன், “ஸ்ரீ…  நீ பாட்டு எந்த கற்பனையும் வளர்த்துக்காதடா….  என்னதான் இதுவரைக்கும் உன் விஷன் பொய் சொன்னதில்லைன்னாலும்…. இது கொஞ்சம் ஓவரா இருக்கு… அதனால….”, ராகுல் இழுக்கவும்,

நண்பனின் அக்கறையில்  நெகிழ்ந்தவள், “ நானும் அதேதான் யோசிச்சிட்டு இருக்கேண்டா…. அவருக்கும் எனக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது…. ஹைட்ல மட்டுமில்லை… உன் எய்ம் என்ன ? சைக்காலஜி படிக்கணும்னு பாஷனான்னு நம்ம அகராதில இல்லாததெல்லாம் கேட்கறார்…. இன்னும் அம்மா அடிப்பாங்க… அம்மா விடமாட்டாங்கன்னு ஸ்கூல் பிள்ள கணக்கா பேசறார்…. எனக்கு பிடிக்கறது இருக்கட்டும்… அவருக்கு என்ன பிடிக்குமா? ஐ.பி.ல்ல வேற ஆடறார், இன்னும் இன்னும் பொண்ணுங்க மொய்ப்பாங்க…. டவுட்டாத்தான் இருக்கு….”, எப்போதும் போல், ராகுலிடம் தன் கவலைகளைக் கொட்டினாள்.

ஸ்ரீயின் கன்னம் பிடித்து தன் கண்களைப் பார்க்க வைத்தவன், “ ஜக்கியை விடு… நீ ஃப்ரீயா இரு…வாழ்க்கை அதும் போக்குல போகும். நீ எனக்கு சொல்றதுதான் இப்ப நான் உனக்கு சொல்றேன்… எதுவும் மைன்ட்ல ஏத்திக்காத… நடக்கும் நடக்காதுன்னெல்லாம் யோசிக்காம நீ பாட்டு எப்பவும் போல இரு. புரியுதா?”, ராகுல் கேட்கவும்…. புன்னகைத்தவள்,

“ம்ம்…  சோடா புட்டி கண்ணாடியில மெகா சைஸ் கண்ண முழிச்சு இப்படி சொன்னா… புரியாம இருக்குமாடா ராக்கி ? ஆனாலும் வா கொஞ்சம் ரோசா வாயைக் கிளறலாம்.”, என்று சிரிக்கவும், இருவரும் வாயடித்துக்கொண்டே இறங்கி ஹாலுக்கு வந்தனர்.

அடுக்களையில் பக்கோடா போட்டுக்கொண்டிருந்த வனரோஜா, “என்னடா… மொட்ட மாடி மீட்டிங் முடிஞ்சுதா ?”, என்றார்.

“ம்ம்ம் …. பாவம் ராக்கு ஆளு இன்னிக்கு  தரிசனம் குடுக்கலைம்மா.. அந்த சோகத்தை உன் பக்கோடா சாப்பிட்டு ஆத்திக்கலாம்னு வந்திருக்கான்.”, என்று அளந்துவிட்டாள் ஸ்ரீ.

“டேய்…. என்ன இது புது கதை ? நீ அப்படியெல்லாம் பார்க்கற புள்ளை கிடையாதே….”, என்று ரோஜா மகளை சந்தேகமாகப் பார்க்க,

“அப்படி சொல்லுங்க ஆன்ட்டி… இவளா கதை கட்டி விடறா….”, ரோஜாவின் ஆதரவில் ஸ்ரீயை பழிப்பு காட்டினான்.

“டேய்… ராகுல்… இவதான் ஏமாத்திட்டா… நீயாவது நல்லா படிச்சு… காம்பஸ் இன்டெர்வியூல பெரிய கம்பனிக்கு செலக்ட் ஆகி… என் கனவை நிறைவேத்துடா ராசா…”, அவன் கன்னம் பற்றி கொஞ்சியவர், பக்கோடா போட்டு வைத்திருந்த கூடையை எடுக்க முற்பட்ட ஸ்ரீ யின் கையில் ஒரு தட்டு தட்டி, பிடுங்கி ராகுல் கையில் கொடுத்தார்.

“மா… வர வர ராகுல்தான் உனக்கு பிள்ளையான்னு டவுட் வருது. “, என்று கத்தினாள்.

“ நான் சொல்றதை நீ கேட்கறதைவிட அவந்தாண்டி கேட்கறான். அந்த பாசம்.”, என்று விளக்க மளித்துக்கொண்டே அடுத்த ஈடு பக்கோடாவை போட்டார்.

சமத்துப் பிள்ளையாக ஸ்ரீக்கும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து, அவனும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு பாத்திரத்தை ரோஜாவிடம் தந்தான் ராகுல்.

“ராகுல், பேசாம இவளை உங்க வீட்டுக்கு அனுப்பிட்டு, நீ இங்க வந்துருடா. உங்கம்மா ட்ரெய்னிங் குடுத்தாலாவது, இந்த பழக்கமெல்லாம் இவளுக்கு வருதான்னு பார்க்கலாம். இவகிட்ட குடுத்தா, அப்படியே கூடையிலர்ந்து உனக்கு இரண்டு கையில் குடுத்துட்டு இவளே மொக்கியிருப்பா…”, என்று ஸ்ரீயை உறுத்துப் பார்த்தார் ரோஜா… அதை சட்டை செய்யாமல் பக்கோடாவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள் அவர் மகள்.

வனரோஜா பக்கோடாவை எடுப்பதில் முனைப்பாக இருக்கும் சமயம் ஸ்ரீ ராகுலிடம் கண்ணைக்காட்டவும், தலையாட்டியவன்,

“ஏன் ஆன்ட்டி…. உங்க பவானி பாட்டி கல்யாணம் முடிஞ்சு ஹாப்பியா இல்லையா ? அந்த கதை நீங்க சொன்னதே இல்லை…”, என்று ஆரம்பித்தான்.

“உங்களுக்குத்தான் பாட்டி… எனக்கு அத்தை…  போன மகராசி போயிட்டா, போனதோட, இவளுக்கு அந்த வரத்தை குடுத்தடுட்டாளேனு நானே கவலையில இருக்கேன்… என்னடா திடீர்னு ? எதையாவது பார்த்து வெச்சியாடி ?”, என்று மகளை அறிந்தவராக அவளைப் பார்த்தார்.

“அய்ய… இல்லம்மா… அன்னிக்கு நீ சொல்லிகிட்டு இருந்தியே… பவானி பாட்டிக்கு அவங்களைப் பத்தி எதுவும் விஷன் வந்திருந்தா அந்த இடத்துல கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்கன்னு… அதை சொல்லிகிட்டு இருந்தேன்…அதனால கதை கேட்கறான் ராக்கி….”, விளக்கமளித்துவிட்டு, அவர் திரும்பியதும், ‘ சொத்தபறியேடா’, என்ற பாவனையில் ராகுலை முறைத்து வைத்தாள்.

“அதுவா… ஆமாடா…  அவங்க கல்யாணமெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. அப்பறம் எங்கம்மா சொன்ன கதையெல்லாம்தான் தெரியும்.  பதினேழு வயசிலேயே கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க. அதுவரைக்கும் எப்பவாவது அவங்க வாக்கு சொன்னா, ஊர்ல கேட்டுக்குவாங்க. அதுக்குன்னு எதுவும் வித்யாசமால்லாம் நடத்த மாட்டாங்க. “, என்று கதை பேசிக்கொண்டே கடைசி ஈடு பக்கோடாவை முடித்து வழித்து எடுத்து கூடையில் போட்டு அடுப்பை அணைத்தார்.

சூடாக கொஞ்சம் கணவருக்கு எடுத்து வைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் ஸ்ரீக்கும் ராகுலுக்கும் போட்டவர், தனக்கும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, பின்னாடியே இருவரும் வந்தார்கள்.

“அப்பறம் என்னாச்சு ஆன்ட்டி ?”

“ம்ம்… பவானி அத்தையோட மாமியாருக்கு விஷயத்தை யாரோ சொல்லியிருப்பாங்க போல.  ஒரு வாரம் விருந்து மறுவீடுன்னு எல்லாம் முடிச்சு அவங்க வீட்டுக்குப் போனதுக்கு அப்பறம் அத்தையை விசாரிச்சிருப்பாங்க போல. பவானி அத்தையும் உணமையை சொல்லியிருக்காங்க. அங்கதான் வினையே ஆரம்பிச்சுது.”, என்று நிறுத்தினார்.

“ ஏன் மா….”

“ம்ம்.. அந்தம்மா என் மருமக குறி சொல்லுவாங்கற மாதிரி பரப்பி விட்டிடுச்சு. அதுக்கேத்த மாதிரி வீட்டுக்கு வந்த யார்கிட்டயோ அத்தை சொன்னது பலிக்கவும், ஊர்காரங்க வர ஆரம்பிச்சிட்டாங்க. மாமியார்காரி… இது கல்லா கட்ட நல்லாயிருக்கேன்னு, பவானி அத்தையை பாதி சாமியாராக்கி, விரதம்னு தனி ரூம்ல இருக்க வெச்சி, செவ்வாய் வெள்ளி, ஞாயிறுன்னு குறி சொல்ல வெச்சுடுச்சு. அப்படியெல்லாம் சொல்ல வராதுன்னா … எதையாவது சொல்லுனு அடிதான். புருஷங்கிட்ட பேசவே விடலை. மிச்ச  நாள்ல கூட சாமி விரதம்னு  படுத்தியெடுத்துச்சு.”, என்று விவரிக்க விவரிக்க கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

“ச்சேய்… உங்க வீட்லர்ந்து யாரும் போய் பார்க்கலையாம்மா… கல்யாணம் பண்ணி குடுத்தா அப்படியே விட்டுடுவாங்களா?”, ஸ்ரீ கோபப்பட்டாள்.

“ம்ம்.. விஷயம் தெரிஞ்சு போய் கேட்டபோது… வாழா வெட்டியா அனுப்பிடுவேன். என் புள்ளைக்கு வேற பொண்ணை கட்டி வைப்பேன்னு மிரட்டியிருக்கு. அந்த காலத்துல பொண்ணு இப்படி வந்து நின்னா ஊர் பேசும்னு பயந்து, கொஞ்ச நாள் போனா சரியாகிடும்னு பேசிட்டு வந்துட்டாங்க…. எங்க சரியாச்சு ? இன்னும் மோசமாத்தான் ஆச்சு.”, என்று பெருமூச்சு விட்டார் ரோஜா.

“என்ன ஆச்சு ஆன்ட்டி ?”

“புருஷன் வேற ஒருத்திய செட்டப் பண்ணிகிட்டான்னு தெரிஞ்சு ரொம்ப ஒடிஞ்சு போயிட்டாங்க பவானி அத்தை. கேட்டா… நீதான் சாமியாராகிட்டன்னாங்க அம்மா. நானும் அப்படியாகறதுக்கு எனக்கென்ன தலையெழுத்தா ? ன்னு அவனும் பேசியிருக்கான்.  சின்ன பொண்ணுதான… எந்த பக்கமும் ஆதரவில்லைன்னு நினைச்சு, அரளி விதையை அரைச்சு குடிச்சிட்டு போயிட்டா. கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் முடியலை… அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு.”, வருத்தத்தில் உச்சு கொட்டினார் ரோஜா.

“என்ன ஒரு அராஜகம் ? அவங்களை சும்மாவா விட்டாரு தாத்தா ? “, என்று ரோஜாவின் அப்பாவைக் கேட்டாள் ஸ்ரீ,

“ஹ்ம்ம்… என்ன செய்ய ? எதுவும் பேசினா அந்த பொண்ணைத்தான் பழிப்பா மாமியார்காரி. இப்ப மாதிரி சட்டமெல்லாம் அப்ப இல்லையே… சபிச்சிட்டு வந்துட்டாங்க. இவங்க சாபமோ… இல்லை போன புண்ணியவதி சாபமோ ? அவங்க வம்சமே தழைக்கலையாம். அவங்க வீட்ல குழந்தையே பொறக்கலை, அவனுக்கும் சரி, அவன் இரண்டு தங்கச்சிக்கும் சரி.”

“ரொம்ப பாவம் பவானி பாட்டி… மத்தவங்களுக்காக தெரிஞ்ச விஷன், ஒரு நிமிஷம் இவங்க வாழ்க்கையை காமிச்சிருக்கலாம்.”, ராகுல் சொல்லவும்,

“ம்ம்.. எங்கம்மாவும் அதைத்தான் சொல்லுவாங்க… இந்த சக்தி இல்லாம இருந்திருந்தாகூட அந்த பொண்ணு நல்லா வாழ்ந்திருக்குமோ என்னவோ… அது இருந்தும் அவளுக்கு புண்ணியமில்லைன்னு. இப்ப என் பொண்ணுக்கும் அதுவே வந்திருக்கறது எனக்குத்தான் அடி வயத்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்கற மாதிரி இருக்கு.”

“ம்ம்… நீ ஏம்மா டென்ஷனாகிற ? அப்படியெல்லாம் எந்த மாமியாரும் என்னை குறி சொல்ல வெச்சிட முடியாது… மொத்தமா  அவங்களையே மாட்டி குடுத்துடுவேன். டோன்ட் வொர்ரி ரோசா.”, என்று அம்மாவிற்கு தைரியமூட்டியவளுக்குத் தெரியவில்லை, அவளும் அப்படி குறி சொல்ல வைக்கப் படப் போகிறாள் என்று.