சென்னையின் பாரம்பரியமிக்க் பெரிய நகைக் கடை. கல்யாணத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்க ஆடி மாதம் முடிந்து தாலி எடுக்க மீண்டும் இரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்திருந்தது.
புடவை எடுப்பதில் ஏற்கனவே பட்டிருந்ததால், இந்த முறை சிப்ஸ், பிஸ்கெட் என்று நொறுக்குத் தீனியுடன், பொழுது போக நண்பன் ராக்கியையும் இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஸ்ரீ.
சிறப்பாக விளையாடி ஒரு ஆட்ட நாயகன் விருதும் வாங்கிய களிப்பில் நவீனும் வந்திருந்தான் மனையாளுக்கான மாங்கல்யம் எடுக்க. சென்னையில் இருக்கும் சொந்தங்களை அழைக்கவும் சேர்த்து நவீன் குடும்பம் சென்னைக்கு விஜயமாகியிருந்தது.
மாங்கல்யம் எடுத்து, அதன் உருப்படிகள் என்று கோகிலா ஒரு பத்து வகையை எடுத்து வைக்க, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“என்னடி… உன் மாமியார் இத்தனையும் உன் தாலியில கோர்த்தாங்கன்னா போட்டுக்குவியா?”, ரோஜா சந்தேகமாகப் பார்க்க,
“ஹான்…. எல்லாத்தையும் போடணுமா… என்ன விளையாடறியா ? தாலி, இந்த பக்கம் ஒன்னு, அந்த பக்கம் ஒன்னு… அவ்ளதான். இது சும்மா கல்யாணத்தன்னிக்கு மட்டும்னு நினைச்சேன்.”, என்றாள் ஸ்ரீ சற்று திகைத்து.
“மகளே… உன் சாமர்த்தியம்…”, என்று கொளுத்திப்போட்டு விட்டு திரும்பி சென்று ஒரு பக்கம் அமர்ந்துவிட்டார்.
ராக்கியுடன் நவீன் பேசிக் கொண்டு இருக்க, அவர்களிடம் சென்றாள் ஸ்ரீ. “நவீன், தாலி பக்கத்துல கோர்கறத்துக்குன்னு ஒரு பத்து ஐட்டம் எடுத்து வெச்சிருக்காங்க அத்தை. நான் சாம்பிளுக்கு இரண்டு போட்டுக்கறேன். மிச்சம் நீ செயின்ல மாட்டிக்கோ என்ன? கல்யாணத்துக்கு அப்பறம் நீ வேற நான் வேறயா என்ன?” , இழுத்து வைத்து ஒரு செயற்கை சிரிப்பினை சிந்தியவள், ராக்கியின் முதுகில் இருந்த பையை திருப்பி ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்தாள்.
கல்யாணம் என்று ஆரம்பித்த நாளாக ராக்கிதான் அவள் கடுப்புகள் அனைத்திற்கும் வடிகாலாக இருக்கிறான்.
மாட்ச் ஆடிக்கொண்டிருப்பவன் மன நிலை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முடிந்த வரை அவளும் சரி சக்கரவர்த்தியும் சரி எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. நேற்று தொடர் முடிந்த கையோடு சென்னை வந்திருக்க, நகை எடுக்கும் விழா அவன் நொங்கை எடுக்காமல் இருந்தால் போதும் என்றாகியது.
விஷயம் இதுதான். தன் பகுமானத்தைக் காட்ட பதினைந்து சவரனில் தாலிக் கொடி எடுக்க வேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்தார் கோகிலா.
“என் பெரியம்மா பேத்திக்கு மாப்பிள்ளை வீட்ல பதினோரு பவுன்ல தாலி எடுத்தாங்க. நான் அதைவிட செய்ய வேணாமா?”, என்று வியாக்கியானம் பேசினார்.
“திருப்பதி லட்டு கான்ட்ராக்ட் எடுத்தவரு உச்சியிலர்ந்து உள்ளங்கால் வரைக்கும் கிலோ கணக்குல தங்கம் போட்டாரு. அதுக்கெல்லாம் நாம போட்டி போட முடியுமா அண்ணி? இப்ப என்ன, இரண்டு நகையா போடுங்க உங்க மருமகளுக்கு.”, ரோஜா சொல்ல கோகிலாவிற்கு முகம் சுருங்கியது.
“தாலிதான முக்கியமா கேட்பாங்க. வேற நகை எல்லாம் கணக்குல வராது அண்ணி.”, என்றார் கோகிலா. கூடவே, “நான் நவீன் கிட்டயே கேட்கறேன்.”, என்று எழுந்து போனார்.
ஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தவனிடம், “என்ன ராசா… அங்க அம்மா தனியா இருக்கேன். நீ இங்க பேசிகிட்டு இருக்க? ஸ்ரீக்கு தாலி செயின் ஒரு பதினைஞ்சு பவுன்ல பார்கலாம்னா அவங்க அம்மா வேணாங்கறாங்க.”, என்று புகார் வாசித்தார்.
அவனை கைபிடித்து இழுத்துக் கொண்டு வந்து தான் பார்த்து வைத்த தாலிக் கொடியைக் காட்ட, “ மா… என்னம்மா… இப்படி கைக்கிள் செயின் மாதிரி… போட்டா நல்லாவே இருக்காது. உங்களது மாதிரி மெல்லிசா எடுங்க.”, என்றான் முகம் சுளித்து.
மீண்டும் பெரியம்மா கதை ஓடியது. நவீனுக்கு ஸ்ரீயின் புறம் திரும்பவே பயமாக இருந்தது. ஏற்கனவே ஒரு முறை சமாளித்தாகிவிட்டது. இங்கே அவன் அம்மாவோ வேண்டாம் என்று சொன்ன ஏமாற்றத்தில் அழ ரெடியாக இருந்தார். அடுத்து பத்து நிமிடம் வேறு நகை வாங்கலாம், வைர நகை வாங்கலாம் என்ற பேசெல்லாம் செல்லுபடியாகவில்லை.
ஏற்கனவே இத்தனை நாள் அனுபவித்திருந்ததில் சக்கரவர்த்தியும், ஸ்ரீயும் கிட்டேயே செல்லவில்லை. அம்மாவாச்சு பிள்ளையாச்சு என்றிருந்தனர்.
சுற்றி சுற்றி பார்த்தான் நவீன். உதவிக்கு யாரும் வருவது போலவே தெரியவில்லை.
“சரி போ… நான் நிம்மதியா கிரிக்கெட் விளையாடணும்னு உனக்கு எண்ணமில்லை… அந்த வெத்து வேட்டு சுசீலா அத்தைகிட்ட உனக்கு பெருமை பேசணும். அதுதான் முக்கியம். போ… போய் அதையே எடு.”, என்றான் கடுப்பாக.
“ஏன் ராசா அப்படி சொல்ற? இதுக்கும் நீ கிரிக்கெட் விளையாடறதுக்கும் என்னப்பா ?”, என்றார் கோகிலா.
“இப்படி ஒரு தாலியை கழுத்துல மாட்டிகிட்டு ஸ்ரீ வெளிய இருந்தா எவன் வந்து அறுப்பானோன்னு பயந்துகிட்டே இருக்கணும். அட மெல்லிசா இருந்தா அறுத்துட்டு போனாலும் ஒன்னும் ஆகாது. இது, செயினை அறுக்க அவ கழுத்தை வெட்டுவானோ, குத்துவானோன்னு தினம் தினம் நான் பயப்படணும். “, நவீன் பேச்சை கேட்டு,
“சே… அப்படியெல்லாம் சொல்லாதேடா… அபசகுனமா… “, என்று அவனை திட்டினார்.
“ஆமாமாம் …நான் சொல்றது தப்புதான். ஆனா நீ எங்க எனக்கு கல்யாணம் பண்றதைப் பத்தி நினைக்கற ? யாருகிட்ட எதை பத்தி பெருமை பேசலாம்னுதான யோசிக்கற? “, நவீனும் பதிலுக்கு கடியவும்,
“டேய்… நீ எனக்கு ஒரு பிள்ளைடா… உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பண்ணனும்னு நான் கனவு கண்டுகிட்டு இருக்கேன்.”, என்று முதலிலிருந்து ஆரம்பித்தார் கோகிலா.
எழுந்து வந்த ஸ்ரீ, “ அத்தைக்கும் இதே மாதிரி பதினைஞ்சு சவரன்ல தாலி கொடி, அவங்க எடுத்து வெச்சிருக்க மாதிரியே பத்து உருப்படி எல்லாம் வாங்கிருங்க. அப்பறம் ஊர்ல எல்லாரும், உங்க பொண்டாட்டிக்கு மட்டும் கழுத்து நிறைக்க வாங்கி குடுத்திருக்கீங்க, அம்மா பாவம் மெல்லிசா ஒரு கொடி போட்டிருக்காங்கன்னு உங்களை தப்பா சொல்லுவாங்க. சுசீலா, வசந்தா, கருமாரின்னு யாரும் ஒரு பேச்சு உங்களைப் பேசக் கூடாது சொல்லிட்டேன். “, என்று நவீனிடம் சுட்டு விரலைக் காட்டி மிரட்டியவள்,
“என்ன அத்தை… இப்படித்தான பேசுவாங்க நீங்க மட்டும் மெல்லிசா போட்டிருந்தா?”, என்று கோகிலாவை குழப்பிவிட்டாள்.
ரோஜாவிற்கு சிரிப்பு தாளவில்லை. “பொண்ணு பொழைச்சிக்குவா.”, என்று பாண்டியனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
“அஹா… ஃபார்முக்கு வந்துட்டாடா… மாட்டினாங்க நவீன் அம்மா.”, என்று நினைத்த ராகுல், தனக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைப் பிரித்துக் கொண்டு வந்து ரோஜாவுடன் அமர்ந்தான்.
“என்னடா… ஸ்ரீ நிதி ஷோ பார்க்க பிஸ்கெட்டோட ரெடியா?”, என்றார் ரோஜா தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு.
“ம்ம்… இது பதினைஞ்சு, தாலி மத்த அயிட்டம் எல்லாம் ஒரு அஞ்சு பவுன் வருமா… இரண்டால பெருக்கினா நாப்பது பவுன், அதுக்கு செய்கூலி சேதாரம்…. என்ன ஒரு பதினாறு லட்சம் பக்கம் வரும்.”, என்றாள் மொபைலில் கணக்கு போட்டு.
“என்னது… அவ்வளவா?”, கோகிலா சற்று கலவரமானார்.
“என்னங்க, நாங்க இரண்டு பேர் மட்டும் இவ்ளோ பெருசா செயின் போட்டுட்டு நீங்க மட்டும் வெறும் கழுத்தா இருந்தா நல்லாவா இருக்கும்? ஒரு பதினைஞ்சு பவுன்ல நீங்களும் ஒரு செயின் போடுங்க. அம்மா எனக்கு காசு மாலை பண்றதா இருந்தாங்க, அதுக்கு பதிலா ஒரு சைக்கிள் செயின் மாடல்ல பண்ணிட சொல்றேன். அம்மாக்கும் என் கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு பதினைஞ்சு பவுன்ல செயின் போட்டோம்னு சொல்ல பெருமையா இருக்கும். என்ன அத்தை ? அப்பறம் பாவம் மாமா மட்டும் என்ன குறைச்சலா, அவருக்கும் ஒரு பதினைஞ்சு பவுன்ல சங்கிலி வாங்கிருங்க. இல்லைன்னா அப்பறம் அம்மாக்கு மட்டும் செய்யறான் பிள்ளை, பாவம் அவங்க அப்பாக்கு ஒரு குந்து மணி தங்கம் வாங்கலையான்னு சொல்லுவாங்க அந்த கருமாரி, சுகுமாரியெல்லாம்.”, நவீனிடமும் கோகிலாவிடமும் மாறி மாறி பேச, அதை நிஜம் என்றே நம்பிவிட்டார் கோகிலா.
“என்ன நவீன். அப்படியா பேசுவாங்க? இப்ப என்ன செய்யறதுடா?”, என்று கோகிலா கேட்க, நவீனிற்கு தலை விண் விண்ணென்று தெரித்தது.
“தண்ணி குடிச்சிட்டு வரேன். நீ யோசிங்க.”, என்று கிளம்ப, இவள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த விற்பனைப் பெண்ணிற்கு , ‘எங்கருந்துடா வந்தாங்க? ‘ என்று தலை சுத்தியது.
நவீன் தலையை பிடித்துக்கொண்டு நிற்பது பார்த்து மனமிரங்கி அருகில் வந்தார் சக்கரவர்த்தி. ஸ்ரீ சொன்னதை கோகிலா அவரிடம் ஒப்பிக்க, மருமகள் செய்திருக்கும் அட்டகாசம் அவருக்கு சிரிப்பை வரவழைத்தது. அதை மறைத்து,
“பாரு கோகி… இதெல்லாம் நீ பதினைஞ்சு பவுன் தாலி கொடி எடுக்கறதுலர்ந்து ஆரம்பிச்சது. உன்னுது மாதிரியே வாங்கினா, அப்ப இத்தனை செலவு இருக்காது. இந்த காலத்து பொண்ணு, தாலி போட்டுகறதே பெரிய விஷயம், இதுல நீ இந்த மாதிரி எடுத்தா கழட்டி லாக்கர்லதான் வைக்கும். எவளோ இரண்டு பேர் சொன்னா அதுக்குன்னு ஆடுவியா?”, என்று மனைவியை கடிந்தார்.
மேலும் யோசிக்க விடாமல், “நீ எங்கூட வந்து உட்கார். போட்டுக்கப் போறது அவ, வாங்கிக் குடுக்கப் போறது நவீன். அவங்க பார்த்து எடுக்கட்டும். என் மருமக இஷ்டத்துக்கு விட்டுட்டேன்னு பெருமையா சொல்லு. உன்னைப் பார்த்து நாலு பேரு திருந்துவாங்க.”, என்று ஓதிக்கொண்டே சென்றார்.
இப்படி அலப்பறையாக கல்யாண நாளும் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. மூன்று நாட்கள் முன்னர்தான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தான் நவீன். அங்கிருந்த சீரீசிலும் இவன் பவுலிங்குடன், பாட்டிங்கும் சிறப்பாக இருக்க, கண்டிப்பாக அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இருப்பது உறுதி என்று கூடுதல் உற்சாகம்.