அத்தியாயம் – 21
ஞாயிறு மாலை  ராகு காலம் முடிந்த சில நிமிடங்களில் வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டார்.
வாசலுக்கே வந்து வரவேற்றனர் பாண்டியனும் அவரது தமையன் சங்கரும்.   சக்ரவர்த்தி தன்னோடு வந்திருந்த கோகிலாவின் தம்பி குடும்பத்தையும், தன் ஒன்று விட்ட அண்ணன் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்த, பாண்டியனும் தன் தமையன், வனரோஜாவின் அக்காள் முல்லை குடும்பத்தினரயும் அறிமுகப்படுத்தி, பொது விசாரிப்பு, உபசரிப்புகளோடு வரவேற்பறையில் அமர்ந்தார்கள்.
நவீன் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மும்பையில் விமானம் தாமதமாகக் கிளம்ப, அப்போதுதான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.
போன் பேசிய சக்ரவர்த்தி, “லாண்ட் ஆகிட்டான். இன்னிக்கு பெரிசா ட்ராஃபிக் இருக்காது. ஒரு அரை மணியில வந்துடுவான்.”, என்று பொதுவாக அறிவித்தார்.
ஆண்கள் அவர்களது வேலை, அவரை தெரியுமா, இவரைத் தெரியுமா என்று பேசிக்கொண்டிருக்க, ரோஜாவும், முல்லையும் அனைவருக்கும் சிற்றுண்டியை கொடுத்தார்.
ரோஜாவின் ஓரகத்தி சாரதா, கோகிலாவோடு பேசிக் கொண்டிருந்தார். அதாவது கோகிலா பேசிக்கொண்டிருந்தார், சாரதா கேட்டுக்கொண்டிருந்தார்.  சாப்பாட்டு மேசையருகில் இவர்கள் அமர்ந்திருக்க, பேச்சு ரோஜாவிற்கும் முல்லைக்கு கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் நவீன் புராணம்தான். கோகிலாவின் தம்பி மனைவி சாந்திக்கு கேட்டு சலித்த கதை என்பதால் வீட்டை பார்வையால் அளந்துகொண்டிருந்தார்.
“என்னடி.. மூச்சு விடாம பிள்ளையை பத்தி இப்படி பேசுது இந்தம்மா?”, முல்லை ரோஜாவைக் கேட்டார், காபிக்கு பாலைக் காய்ச்சியபடி.
“ம்ம்.. ஒத்த பிள்ளைன்னாலும் முத்து பிள்ளையில்ல, அதான். “, என்றார் ரோஜா புன்சிரிப்புடன்.
“ஹான்… அப்ப நம்ம பிள்ளை எல்லாம் என்ன பித்தளையா?”, முல்லை நொடித்தார்.
“ஷ்… இரு பேசட்டும்… நமக்கும் ஒரு சான்ஸ் வரும், பேசுவோம் பேசுவோம்.”, ரோஜாவின் நமுட்டு சிரிப்பு பார்த்து, முல்லை,
“ ஏய், நாளைக்கு உன் பொண்ணு அந்தம்மாகிட்டதான் குப்பை கொட்டணும். பார்த்து செய்.”, தங்கையை அறிந்தவராக எச்சரித்தார்.
“அதெல்லாம் பதமா பண்ணுவோம்க்கா… எங்க போகப் போறாங்க”, விரிந்த சிரிப்புடன் பாலில் காபி டிகாக்ஷனை ஊற்றி, கலந்தார் ரோஜா.
“நீ போ, நான் எடுத்துட்டு வரேன்.”, என்று ரோஜாவை முல்லை அனுப்பி வைக்க, அவரும் வந்து பெண்கள் ஜோதியில் கலந்தார்.
ரோஜாவைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவராக, “ பொண்ணை அழைச்சிட்டு வரலாமே. நவீன்தான் பார்த்துட்டானே. நாங்கதான் பார்க்கணும்.”, என்று கேட்டார் கோகிலா.
“ஓஹ்… அதுக்கென்ன. தாராளா. அவளுமே போரடிச்சிட்டுதான் உட்கார்ந்திருப்பா.”, என்று கைபேசியில் ஸ்ரீயைக் கூப்பிட்டார்.
“வீட்டுக்குள்ளயே போன்லதான் பேசிக்குவீங்களா?”, கோகிலா கேட்கவும்,
“படி ஏறி இறங்கி முட்டி வலி வந்துடுது. இப்ப எல்லாரும் இருக்கவும் இங்கிருந்து குரல் குடுக்க முடியாதுங்களே, அதான்.”, இடக்கான பதில் சொல்ல மனது விழைந்தாலும், சம்மந்தி என்ற காரணத்தால் பொறுமையாக பதில் கொடுத்தார் ரோஜா.
பட்டுப்புடவை கட்ட வேண்டும், அட்டிகை, காசுமாலை, நெத்திச்சுட்டி என்று அடம்பிடித்த ரோஜவையும், லெஹெங்காதான் போடுவேன், மாட்சிங் செயற்கை நகை செட் தான் என்ற ஸ்ரீயிடமும் மாறி மாறி மல்லுக்கட்டி ஒரு வழியாக ஒரு இலைப்பச்சை வண்ண மைசூர் சில்க் புடவையும் அதன் மஜந்தா வண்ண பார்டர்க்கு ஏற்ற ப்ளவுஸ், கழுத்தை ஒட்டிய ஒரு நெக்லஸ், குடை ஜிமிக்கி , நாலு வளையல்கள் என்று சமரசம் செய்து களைத்திருந்த முல்லை, அவர் சொன்னதை ஏற்று அழகான ஓவியமாய் இறங்கி வரும் தங்கை மகளைப் பார்த்து பூரித்திருந்தார்.
அனைவர் பார்வையும் அவள் மீதிருக்க, யார் பார்வையும் சந்திக்காமல் அமைதியாக வந்து  கடைசி  படியருகே நின்றிருந்த முல்லையின் வலது புறம் நின்றாள். கைகள் கூப்பி, மாப்பிளை வீட்டினரரை ஒரு பார்வை பார்த்து “வணக்கம்” என்றாள். இது பாண்டியனுக்காக. அவரின் கோரிக்கையில் பேரில் செய்தாள்.
கடந்த இரண்டு நாட்களாகவே, இப்படி  நடந்து வரணும், அப்படி நிக்கணும் என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ரோஜா. இவள் கடுப்பைக் காட்ட ராக்கியும் இல்லை. அவன் தாய் மாமாவிற்கு தீடீரென்று மாரடைப்பு ஏற்பட, அவன் அன்னையை அழைத்துக்கொண்டு திருச்சி சென்றுவிட்டான். அதுவே பாண்டியன் சொல்லித்தான் தெரியும்.
ரோஷம் கொண்டு இவள் போனை ரோஜாவிடம் மறுபடியும் கேட்கவே இல்லை. பாண்டியன் மறு நாள் மாலை எடுத்துக்கொள்ள சொன்ன போதும், “வேண்டாம். நான் எதுவும் சொல்லிடப் போறேன். உங்ககிட்டயே இருக்கட்டும்.”, என்று விட்டாள்.
இந்திய டீமில் சேர்ந்ததிற்கு பாண்டியன் நவீனுக்கு அழைத்து வாழ்த்து சொன்ன போது, அவர்களோடு சேர்ந்து, அப்போதே அவள் வாழ்த்தையும் சொல்லிவிட்டாள்.
அவனுக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை போலும். ஒரு சிறிய இடைவெளியி விட்டு,  “ஸ்ரீ, இன்னிக்கு நைட் கூப்பிடறேன்.”, என்றான் அவளிடம்.
“ஓஹ். அது போன் ரிப்பேர். அப்பாகிட்ட குடுத்திருக்கேங்க.”, எனவும் என்ன சொல்லுவான்? இது வரை அவளை ஃபேஸ் புக்கில் சேர்க்கவில்லை. அவனே அதிகம் ஃபேஸ்புக் பக்கம் போகமாட்டான். தினமும் போனில் பேசிக் கொள்ளவும் தேவையும் படவில்லை.
அதற்குள் போனை பாண்டியனிடம் கொடுத்திருந்தாள். ஞாயிறு மாலை சந்திப்பதாக அவரோடு பேசிவிட்டு வைத்தான்.
“ஏண்டி சட்டுனு பேசிட்டு குடுத்துட்ட ? போன் ரிப்பேர்னு பொய் சொன்ன?”, என்ற ரோஜாவிடம்,
“எதுக்கு ? அப்பறம் நான் அதை ஏன் பேசினேன், இதை ஏன் பேசினன்னு உங்கிட்ட அடி வாங்கவா?  எதுன்னாலும் அவன் உங்ககிட்டயே பேசிகட்டும்.”, உதடு சுழித்தவள் அறைக்கு திரும்பிவிட்டாள்.
“இப்படி வந்து எங்கூட உட்காரும்மா.”, என்ற கோகிலாவின் அழைப்பு அவள் கவனத்தை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
அவர் அருகில் போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கோகிலாவிற்கு வீடியோவில் சரியாக முகம் தெரியவில்லை. இப்போது ஸ்ரீயைப் பார்க்கவும் அவர் முகத்தில் ஒரு திருப்தி.
“பரவாயில்லை. அழகாத்தான் இருக்கே ஸ்ரீ.”, என்றார் அவள் கைபிடித்து.
அந்த ‘பரவாயில்லை’ வார்த்தையை அவர் மனதுக்குள் தான் பார்த்திருந்த வீடியோவைக் கொண்டு சொல்லியிருக்க, அதை அறியாத ஸ்ரீயின் கோபத் திரி லேசாக பற்றியது.
“உங்க மகன் அளவுக்கெல்லாம் இல்லைங்க.”, என்றாள் ஒரு லேசான புன்னகையுடன்.
மகனை உயர்வாய் சொன்னவளை உடனே பிடித்தது கோகிலாவிற்கு. “ஆமாமாம். சின்ன குழந்தையா இருக்கும்போதே அவனை எல்லாரும் அழகுன்னு கொண்டாடுவாங்க. நல்ல கலரா இருப்பான். இப்பதான் வெய்யில்ல விளையாடி விளையாடியே கலர் கம்மியா போயிட்டான். “
அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் பார்த்திருந்தாள் ஸ்ரீ. கோகிலாவே தொடர்ந்து, “ நல்லா சமைப்பியா ஸ்ரீ? சமையல் தெரியுமா?”, என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
‘இல்லைன்னா வேணாம்னு எந்திரிச்சி போயிடுவியா?’, என்ற கேள்வியை தலையில் தட்டி உள்ளே அனுப்பியவள், “ உங்க அளவுக்கெல்லாம் இல்லை ஆன்ட்டி.”, என்றாள் அதே அரைப் புன்னகையுடன்.
சக்கரவர்த்தி அவள் பதில்களில் சுவாரசியமாக அவளையே பார்த்திருந்தார். என்னவோ அவள் மனதில் ஓடுகிறது என்பது வரை புரிந்தது. ஆனால் முகத்தில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது தன்னை புகழும் இந்தப் பெண்ணை இன்னும் பிடித்துப் போனது கோகிலாவிற்கு. “ஹா ஹா… “,சிரித்து கணவனை சற்று பெருமையாகப் பார்த்தவர், “நவீன் சொல்லியிருக்கானா ? அவனுக்கு என் சமையல்னா ரொம்ப இஷ்டம். யாராலும் அடிச்சிக்க முடியாதுமான்னு சொல்லுவான். “, என்று பெருமை பேச,
“ம்க்கும்.. அந்த பிள்ளை என் மீன் குழம்பை சப்பு கொட்டி சாப்பிட்டுச்சுடி. என்னவோ பீத்திகிது இந்தம்மா.”, ரோஜா முல்லையின் காதை கடித்தார்.
“இவ ஏன் எல்லாத்துக்கும் தன்னை மட்டம் தட்டி பேசறா?”, முல்லை கேட்க,  “என்னை பழிவங்கறாளாம்.  திமிரா பேசாதேன்னு சொல்லிகிட்டு இருந்தேனே அதுக்கு இந்த ஆக்ட் குடுத்துட்டு இருக்கா.”, ரோஜா முணுமுணுத்தார்.
“எதும்மா நல்லா சமைப்ப ?”, கோகிலா மேதாவியாய் கேட்க,
“ம்ம்… பாஸ்தா… லாசான்யா அப்பறம் கீச்.”, என்று அப்பாவி முகத்தோடு அடுக்க கோகிலாவின் முகம்தான் கலவரமானது.
“நம்ம ஊரு சாப்பாடு சமைக்க தெரியாதாம்மா ?”, என்றார் சற்று கவலையாக.
“நீங்க எது நல்லா சமைக்க வரும்னு கேட்டீங்க ஆன்ட்டி. இத்தாலியன், சைனீஸ் நல்லா வரும். “, என்றாள் அதே புன்னகையோடு.
சக்கரவர்த்திக்கு கண்டிப்பாக மருமகள் தன் மனைவியை ஓட்டுகிறாள் என்று புரிந்துவிட்டது. ‘மகனே… சிக்கினடா, மாமியாரையே சபை நடுவுல வெச்சு செய்யறா. உன்னை என்ன செய்ய காத்திருக்காளோ.’, என்று நினைக்கயிலேயே முகம் புன்னகை பூத்தது.
‘என்னக்கா.. என்னமோ அடிச்சி விடறா… கத்துகுடுத்திருக்கியா?”, ரோஜா முல்லையிடம் கேட்க, “ கூட மாட ஹெல்ப் பண்ணுவாடி. தேத்திக்கலாம் விடு.”, என்றார் முல்லை.
“என் பிள்ளை சிக்கன் சிந்தாமணி விரும்பி சாப்பிடுவான்.”, கோகிலா மீண்டும் முயற்சிக்க,  “எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. கோயம்புதூர் ஆளுங்க செய்யற கைபக்குவம் வேற யாருக்கும் வராது.”, என்று ஸ்ரீ பெரிய புன்னகையோடு சொல்ல,
வந்த சிரிப்பை இருமலாக மாற்றிய சக்கரவர்த்தி, “கோகிலா, என்ன இன்டெர்வூவா நடத்துற ? பிள்ளையை கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்க ?”, என்று அடக்கினார். ‘உன் மருமகளுக்கும் சேர்த்து நீ தான் சிந்தாமணி சிக்கன் செய்யப் போறன்னு அவ சொல்றது கூட புரியாத தத்தியா இருக்கியேடி கோகி…’, என்று மனதுக்குள் மனைவியை பாராட்டினார்.
கோகிலா ‘பரவாயில்லை அழகாத்தான் இருக்க’, என்று கேட்டதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று நினைத்துகொண்டார்.
அதற்குள் நவீனும், அவன் பெரியம்மா மகனும் வரவும், அடுத்த சில நிமிடங்கள் வரவேற்பிலும் உபசரிப்பிலும் சென்றது. நவீனின் கண்கள் ஆர்வமாய் ஸ்ரீயை பார்க்க, அவள் பார்வையோ வேறு திசையில் இருந்தது.
அழகாக இருந்தாள் சேலையில். முதல் முறையாக சேலை கட்டி பார்க்கிறான். முல்லை அவர்களுக்கான சிற்றுண்டியை ட்ரேவில் வைத்து ஸ்ரீயை அழைக்க, அவரிடம் சென்றவள் ரகசியமாக முறைத்தாள்.
“இதெல்லாம் நான் கொண்டு போய் குடுக்கமாட்டேன்னு சொன்னேன் இல்ல பெரியம்மா?”, என்று பல்லைக் கடித்தாள்.
“மாப்பிள்ளைக்காவது குடுக்கணும்டி. ப்ளீஸ் கண்ணு. கல்யாணத்துக்கு அப்பறம் இதுக்கெல்லாம் சேர்த்து அவரை பழி தீர்த்துக்கோ. இப்ப செஞ்சுடுறி செல்லம் ?”, முல்லையின் தாஜாவில் சிரித்தவள், உதட்டை சுழித்து, “ஹ்ம்ப்… சரி குடுங்க.”, என்று வாங்கிக்கொண்டு சென்றாள்.
மகளை அறிந்தவராக ரோஜா உஷாராக இதில் குறுக்கிடவே இல்லை.
நவீன் பயணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருக்க, ஸ்ரீ வரவும், அவளைப் பார்த்தான். ட்ரே அவன் புறம் நீண்டிருக்க, அவள் கண்கள் தன்னைக் காண வேண்டி ஒரு நொடி எடுக்காமல் இருக்க, ‘எனக்கென்ன வந்தது என்று அவன் பார்வையை மறுத்து ஸ்ரீயின் கண்கள் ட்ரேவில் இருந்த பாதாம் அல்வா, சமோசா, அரிசிக் கொழுக்கட்டை என்று வலம் வந்தது.
“எடுத்துக்க ராசா…”, கோகிலா உள்ளே புக, வேறு வழியின்றி தட்டை கையில் எடுத்தான் நவீன். அப்போதும் அவன் பார்வையை சந்திக்கவில்லை ஸ்ரீ.  ‘ரொம்ப கோவமா இருப்பா போலருக்கே ? நான் போன் பேசலாம்னா இவதான போன் ரிப்பேர்னு சொன்னா ? ராகுல் பயலும் ஊர்ல இல்லைன்னுட்டான். எதுக்கு கோவம் ? அம்மா எதுவும் சொன்னாங்களா?’, எண்ணம் பலவாறாக ஓடியது நவீனுக்கு.