“ராஜா…. என்னப்பா… ? எதுவும் பிரச்சனையா ?”, சக்கரவர்த்தி கேட்டபடி உள்ளே வர, நிமிர்ந்து அமர்ந்தான் நவீன்.
“இல்லை… ஒன்னும் இல்லை பா.”
“அந்த பொண்ணு ஸ்ரீக்கு பேசினியாடா? எப்படி இருக்காங்க?”, தந்தை கேட்கவும், அவள் நிலையை ராகுலிடமும் அவளிடமும் கேட்டதை மறைக்காமல் சொல்லிவிட்டான்.
அவனையே உற்றிப் பார்த்தவர், அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, “ அதனால இப்ப நீ கில்டியா ஃபீல் பண்றியா நவீன்? “, என்று கேட்டார்.
“ம்ப்ச்… நீங்களும்தானப்பா சொன்னீங்க, நான் அந்த பந்தை வீசாம இருந்திருக்கணும்னு.”, தலையை மீணடும் கைகளுக்குக் இடையில் கொடுத்தான்.
“வைரல் ஆகியிருக்காதுன்றதுக்காக சொன்னேன். அவளை இன்னும் சில மணி நேர கஷ்டத்துலர்ந்து காப்பாத்தின… என்ன அந்த யூடூபர் வராம இருந்திருக்கலாம். மூணாம் பேருக்குத் தெரியாம முடிஞ்சிருக்கும். போகுது, நடக்கணும்னு இருக்கு நடந்துச்சு. விடு சரியாகிரும். வேற எதுவும் உன்னை குடையுதாடா?”, மகனை அறிந்தவராக மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் சக்கரவர்த்தி.
“அப்பா… அது… ஸ்ரீ… ஸ்ரீ வீட்ல… அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க.”, தந்தையின் உதவியின்றி எதுவும் நடக்காது என்று புரிந்தவன், அவரிடம் சொல்லத் துணிந்தான்.
“ம்ம்.. இப்படி ஒரு சிக்கல்னா அதுவும் ஒரு ஆப்ஷன் தான். அதுக்கு என்ன?”, மகன் வாயிலிருந்து வரட்டும் என்று மீண்டும் கேட்டார்.
மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தவன், “ எனக்கு…. எனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு.”, என்றான் மிடறு விழுங்கியபடியே.
காதலிக்கறோம் என்று சொல்வான் என்று நினைத்தவருக்கு இந்த பதில் சற்று குழப்பமாக இருந்தது. “உனக்கு பிடிச்சிருக்குன்னா? அப்ப ஸ்ரீக்கு ?”, என்றார் புருவம் சுருக்கி.
“அது… அப்படித்தான் நினைக்கறேன். ராகுலும் அப்படித்தான்னு சொல்றான். ஆனா இன்னும் நான் நேரடியா கேட்கலை. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. இனி நான் கேட்டாலும், அவங்க அப்பா அம்மா ஏற்கனவே அவ மேல வருத்தமா இருக்காங்க. அவ சரின்னு சொல்லுவாளோன்னே டவுட்டா இருக்கு.”
“இதுல அவ மேல என்னடா வருத்தம்? அவளா வேணும்னு மாட்டினா? அவனுங்க யாராவது ஸ்டாஃபை தூக்கணும்னு முடிவு பண்ணதுல இவ ஈசி டார்கெட்னு தூக்கிட்டாங்க. அதுக்கு அவ என்ன செய்வா?”, உண்மைக் கதை தெரியாத சக்கரவர்த்தி மற்றவர்களுக்கு சொன்னதுதான் நிஜம் என்று நினைத்து கேட்டார்.
“அது… அவங்க வேலைக்கு போக வேணாம்னு சொல்லியிருக்காங்க. ஆனா அதை மீறித்தான் ஸ்ரீ வேலைக்கு போனா. அதனால…..”, ஸ்ரீயைப் பற்றிய உண்மையை தந்தையிடம் கூட பகிர விரும்பவில்லை நவீன். தந்தை அவளை வினோதமாக நினைக்க மாட்டார், ஆனால் கோகிலாவைப் பற்றி சொல்ல முடியாது. அதனால் யாருக்குமே தெரிய வேண்டாம் என்று மறைத்துவிட்டான்.
“ம்ப்ச்… நடக்கறது எங்கன்னாலும் நடக்கும். சரி… நீ என்ன பண்ணப் போற ?”, விஷயத்திற்கு வந்தார்.
“தெரியலைப்பா… அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம். ஆனா அம்மாகிட்ட எப்படி சொல்றது ? ஒன்னும் புரியலை.”, பாவமாக பார்க்கும் மகனைப் பார்த்து சக்கரவர்த்திக்கு சிரிப்பு வந்தது.
“என்னடா பிள்ளை நீ…. லவ் பண்றதை அந்த பொண்ணுகிட்டயும் சொல்ல பயம், அம்மாகிட்டயும் சொல்ல பயம். இதுல கல்யாணம் முடிச்ச அப்பறம் எப்படி சமாளிப்ப? “, என்று கலாய்த்தார்.
“அப்ப்பா….”, பல்லைக் கடித்தான் மகன்.
“இங்க பாருடா… உங்க அம்மாவைப் பத்தி நல்லா தெரியும். நீ போய் லவ்வுன்னு சொன்னா… அந்த பொண்ணு யாரா இருந்தாலும் அவதான் உங்க அம்மாக்கு ஜென்ம எதிரி. அதனால சொல்லிடாத.”, எச்சரித்தார்.
“தெரியும்ப்பா…. வேற என்னதான் நான் பண்றது? எனக்கு இப்பவே கல்யாணம் வேணாம்… இன்னும் ஒரு இரண்டு வருஷம் ஃபோகஸ் கிரிக்கெட்ல இருக்கணும்னு நினைக்கறேன்… ஆனா அதுக்கு ஸ்ரீ வீட்ல ஒத்துக்குவாங்களான்னு தெரியலை. அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னும் தெரியலை.”, அவன் கவலைகளை முழுதுமாகக் கொட்டினான்.
“பரவாயில்லை… கிரிக்கெட் பத்தியும் இடையில யோசிச்சியே.”, என்றார் சக்கரவர்த்தி இடக்காக.
“ப்பா….”, என்றான் நவீன்.
தன் கண்ணாடியை ஏற்றிவிட்ட சக்கரவர்த்தி, முடியில்லாத தலையை கோதி, தாடையை தடவி என்று தீவிரமாக சில நிமிடங்களை செலவிட்டு பின், “டேய்…. உங்கம்மாவை சமாளிக்க ஒரு வழிதான் இருக்கு. இப்ப இந்த விஷயத்தை யூஸ் பண்ணி… உன்னாலதான் அவ வாழ்க்கையே போச்சுங்கற மாதிரி நீ ஃபீல் பண்ணு. நானும் உன்னாலதான்னு சொல்றேன். நீயே அவளை கல்யாணம் பண்றதுதான் தீர்வுன்னு என் ஐடியா மாதிரி இதை சொல்றேன். “, மகனைப் பார்த்தவர்,
“என்னடா முழிக்கற? “, என்று கேட்டார்.
“சரி… அப்படி சொன்னா? அம்மா ஓக்கே சொல்லிருவாங்களா?”
“உடனே சொல்ல மாட்டா…. ஆனா அதை நான் பார்த்துக்கறேன். இப்படி நீ இதையே யோசிச்சா உன் கவனம் சிதறும்னு சொல்றேன். எப்படியும் அதுவும் உண்மைதான ? கூடவே பெண் பாவம்… சீக்கிரமே கல்யாணம் பண்ணலைன்னா, இந்தியா டீம்ல போனதுக்கு அப்பறம் நீ வடக்கத்திக்காரி, சினிமாக்காரின்னு எவளையாவது மத்த ப்ளேயர்ஸ் மாதிரி கூடிட்டு வந்து நின்னா அவ்வளவுதான். அதுக்கு ஸ்ரீயே பரவாயில்லைன்னு வேற வேற விதமா பயமுறுத்தணும். ஆனா கல்யாணம் உடனே நடக்கும். நீ எதிர்பார்க்கற மாதிரி இரண்டு வருஷமெல்லாம் டைம் கிடைக்காது. அதுக்கு நீ மென்டலா ரெடி ஆயிரு.”, மனைவியை முழுதும் அறிந்தவர் தன் திட்டத்தை கூற,
“எப்படிப்பா .. “, என்று வியக்கத்தான் முடிந்தது நவீனால். ஸ்ரீயுடனான கல்யாணம் உடனே என்பது சற்று பயமாக இருந்தாலும், நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகத் தெரிய, மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“இருவத்தியேழு வருஷமா உங்க அம்மா கூட குப்பை கொட்டியிருக்கேனே. இது கூட தெரியாதா. சரி… நாளைக்கு உன் ப்ளான் என்ன?”
“மத்தியானம் மும்பை போகணும்ப்பா. ரஞ்சித் சர் நேர்ல பார்த்து ஒருவாட்டி வீடியோ பத்தி பேசிடுன்னு கோச் சொன்னார். அதான் அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருக்கேன்.”. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சேர்மன் ரஞ்சித் பர்தாக்குர்.
“ம்ம்.. சரி. நீ நாளைக்கு காலைலயே முகத்தை தொங்கப் போட்டு சுத்திகிட்டு இரு… இன்னிக்கு நைட் மாதிரியே சரியா சாப்பிடாதே…. அப்படியே மெட்ன்டெய்ன் பண்ணு… நீ போயிட்டு வரதுக்குள்ள நான் உங்க அம்மாவை ஒரு வழியாக்கறேன். டீம் செலக்ஷன் ரிசல்ட் என்னிக்குத் தெரியும் ?”
“சரி… படு… பார்த்துக்கலாம்.”, தோளைத் தட்டி விட்டு சென்றார்.
“அப்பா… ஸ்ரீ பத்தி நீங்க எதுவும் சொல்லலையே ? உங்களுக்கு ஓகேவாப்பா ?”, கதவருகில் சென்றவரைக் கேட்டான் நவீன்.
“ஓ… நான் என்ன சொல்லுவேன்னு கூட யோசிக்கறியா? பரவாயில்லையே… “, என்றார் நக்கலாக.
“அப்பா…. என்னப்பா….”, நவீன் சங்கடமாக எழுந்து நிற்க,
“டேய்… சும்மாடா… ரிலாக்ஸ். அத்தனை களேபரத்திலையும் ராகுல்கிட்ட நீ சாப்பிட்டியான்னு கேட்டாளே… ரொம்ப பிடிச்சுதுடா. உன்னை கூட்டிட்டு போய் அவங்க வீட்ல சாப்பாடு போட்டான்னு சொன்னியே, அது இன்னும் பிடிச்சுது. திடீர்னு ஒரு பையனை வீட்டுக்கு லன்சுக்கு கூட்டிட்டு போறான்னா எவ்வளவு நம்பிக்கை இருக்கணும் அவ அப்பா அம்மாக்கு அவ பேர்ல ? நல்லா வளர்த்திருக்காங்கன்னு அதுலையே தெரியுதேடா. என்ன உன் ஹைட்டுக்கு, குள்ளமா இருக்கா, விடு அமிதாபச்சன் ஜெயபாதுரி மாதிரி இன்னொரு ஜோடி.”, தன் சம்மதத்தை சொன்னவர் புன்னகையோடு வெளியேறினார்.
நவீன் மனது சற்று ஆசுவாசப்பட்டது. அப்பாவின் யோசனை தெம்பை அளித்தது. மறு நாள் அவர்கள் திட்டப்படியே காலையில் எப்போதும் போகும் மெல்லோட்டம் போகவில்லை. மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய்… என்ன ராசா… மழைன்னு கூட பார்க்காம ஓடுவ, இன்னிக்கு இப்படி உட்கார்ந்திருக்க ?”, என்று கையோடு அவனுக்கு எடுத்து அந்த சத்துமாவு கஞ்சியை கொடுத்தார் கோகிலா.
“ம்ப்ச்.. மூட் இல்லைமா…”, என்று விட்டேத்தியாக சொன்னவன் கஞ்சியையும் வாங்கி பக்கத்தில் வைத்தான்.
“அதையும் இதையும் நினைச்சு மனசை போட்டு உழப்பிக்காதடா. “, என்று ஆரம்பித்தவரை, “ எனக்கு ஒன்னுமில்லை. நீ போம்மா.”, என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டான்.
வருத்தமாக கோகிலா சென்றதும், நவீனுக்கு கஷ்டமாகிப் போனது. வேற வழியில்லை என்று அவனையே தேற்றிக் கொண்டு கொஞ்சம் புஷ்-அப்ஸ் எடுத்தான்.
அதே சோக முகத்தோடு மகன் மும்பை கிளம்புவதாக சொல்லவும் இன்னும் சற்று கலங்கிப் போனார் கோகிலா.
இதில் சக்கரவர்த்தி வேறு, “ யோசிக்காம செஞ்சிட்டு, இப்ப அந்த பொண்ணை பத்தி கண்டதும் பேசறாங்கன்னு வருத்தப்பட்டா ஆச்சா? நம்ம கோடி வீட்டு தாமு மாதிரி அவங்களுக்கும் இருப்பாங்க, பொண்ணுன்ற பட்சத்துல இன்னுமே பேசத்தான் செய்வாங்க. நீ வாய் வார்த்தையா சாரி கேட்டு என்ன சரியாகப் போகுது ? நீ பண்ணதுல உனக்குத்தான் சாதாகமா போச்சு. அந்த ஆதாயத்தை நீ வேணான்னு சொன்னா மட்டும் அவளுக்கு நடந்தது இல்லைன்னு ஆகிடுமா?”, என்று நினைத்து நினைத்து நவீனை திட்டிக்கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.
“என்ன ஆதாயங்க ? என்ன வேணாங்கறான்?”, எதிர்பார்த்தபடியே வலையில் விழுந்தார் கோகிலா.
“ம்ம்… அனேகமா இந்த வெஸ்ட் இண்டீஸ் சீரீஸ்க்கு இந்தியா அளவுல T20 க்கு நவீனை கூப்பிடுவாங்கன்னு அடிச்சு சொல்றார் வேதா சார். இவன், வேணாம், இது ஸ்ரீ காப்பாத்தினதுல எல்லாரும் சொல்லி வந்த பாப்புலாரிட்டிக்கு எடுக்கறாங்கன்னா வேணாம்னு சொல்றேன்னு …”, சக்கரவர்த்தி சொல்லி முடிக்கக்கூட இல்லை…. கோகிலா பதறிவிட்டார்.
“டேய்…. கண்ணா.. ராசா….இந்தியாக்கு விளையாடணும்னுதானேடா கனவு கண்ட ? இப்ப அது கை மேல வரும்போது, இப்படி யாராவது யோசிப்பாங்களா? வேணாம்னு சொல்லி எந்த கிறுக்குத்தனமும் பண்ணிடாதடா…. நானும் அப்பாவும் சேர்ந்து அந்த பொண்ணுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கறோம்டா…. நீ அதெல்லாம் குழப்பிக்காதே. உன்னை செலக்ட் பண்ணா, ஒத்துகிட்டு கையெழுத்து போட்டுக் குடு கண்ணா. சரியா?”, மகனை தாஜா செய்ய ஆரம்பித்தார் கோகிலா.
அம்மாவைப் பார்க்க ஒரு புறம் சிரிப்பாக இருந்தது மறுபுறம் பாவமாக இருந்தது. தந்தையை நிமிர்ந்தே பார்க்கவில்லை நவீன். சிரித்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கையாக தலையை தொங்கப்போட்டது போட்ட படியே இருந்தான். ஒரு வழியாக கோகிலா தன் பேச்சில் சற்று இடைவெளி விட்டதும், “சரிம்மா. நீங்களா பார்த்து என்ன செய்யலாம்னு சொல்லுங்க. நான் கிளம்பறேன். டைமாச்சு.”, என்று சொல்லி தப்பி ஓடினான்.
மறு நாள் அவன் ரஞ்சித் சாரைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருக்கையில் போன் அழைத்தது. அவன் அன்னைதான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா..… ரஞ்சித் சாரைப் பார்க்க கிளம்பிகிட்டு இருக்கேன். நீங்க எதுக்குமா கூப்பிட்டீங்க ?”, என்று கேட்டான் அசிரத்தையாக.
“வந்து… அப்பாவோட பேசினேன் ராசா…. அவர் இன்னும் என் வயத்துல புளியை கரைக்கறார்டா… அந்த பொண்ணுக்கு சரியா வாழ்க்கை அமையலைன்னா அந்த பாவம் நமக்குத்தான் வந்து விடியும்னு அடிச்சு சொல்றார். இன்னும் என்னல்லாமோ சொல்றார். பேசாம அந்த ஸ்ரீ பொண்ணையே உனக்கு கட்டி வைக்கலாம்ங்கறார். உனக்கு என்னடா தோணுது ?”, கோகிலா கேட்கவும், ‘அப்பா… என்னா ஸ்பீடுப்பா…. ‘, என்று தந்தையின் வேகத்தைக் கண்டு அதிசயித்தான்.
“என் பிள்ளை நான் சொல்ற பொண்ணுக்குத்தான் சரின்னுவான்னு சொன்னேன். உங்க அப்பாதான் நம்பலை. நீ எவளாச்சம் இந்திகாரிய கூட்டிட்டு அந்து நிப்பங்கறார். சரிப்பா. உனக்கு சரின்னா, நாங்க போய் பேசறோம். ஒரே பொண்ணாமே. வசதியான குடும்பமா நவீன் ? என்ன பண்றார் அவங்க அப்பா?”, இறுதியாக கோகிலா விசாரிக்க,
“மா… நான் ஏற்கனவே சொன்னதுதான். வர பொண்ணுகிட்ட என்னை சீதனத்துக்காக வித்துட்டீங்கன்னா, அவ என்ன சொன்னாலும், செய்தாலும் நாம பொறுத்துத்தான் போகணும். நான் எதுவும் உங்க பக்கம் பேச முடியாம போயிரும். அப்பறம் உங்க இஷ்டம்.”, எப்போதும் போல நவீன் மிரட்டினான்.
“இல்லை ராசா… நாமளா எதுவும் கேட்க வேணாம். நான் சும்மாதான் தெரிஞ்சிக்க கேட்டேன்.”, உடனே பம்மினார் கோகிலா.
நவீனும் சற்று இறங்கி வந்து, அவள் தந்தை, தாய் பற்றி அவனுக்கு தெரிந்தது, ஸ்ரீயின் படிப்பு என்று சில விஷயங்களை கூறவும், கோகிலாவிற்கு சற்று திருப்தி.
அடுத்து சக்கரவர்த்தி லைனில் வந்தவர், “ ஸ்ரீயோட அப்பா அம்மா நம்பர் அனுப்பு நவீன். உங்க அம்மா இன்னிக்கே நல்ல நாள். பேசிடுவோம். அப்பறம் அஷ்டமி, நவமி கழிச்சு வளர் பிறையிலேயே நேர போகலாம்னு சொல்றா. அதுக்குள்ள நீயும் சென்னை வந்துடலாம். “
இங்கே ஒரு பக்கம் மளமளவென்று ஏற்பாடுகள் பற்றி பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. இந்த விஷயம் கேள்விப் பட்டதும் ஸ்ரீ முடியவே முடியாது என்று மறுத்து மீண்டும் ரோஜாவிடம் அறை வாங்கப் போகிறாள் என்று தெரிந்தால் ஒரு வேளை நவீன் பெண் கேட்கும் படலத்தை தள்ளிப் போட்டிருப்பானோ என்னவோ? விதி வலியது.