“நீ போனது தப்பில்லைடா… எதுக்கு பந்தை எடுத்து வீசின ? அதுதான் எனக்கு புரியலை. போலீஸ்தான் சுத்தி வளைச்சிருந்தாங்களே. அந்த பையனைப் போல நீயும் வேடிக்கைதானே பார்த்திருக்கணும் ?”, சக்கரவர்த்தி நேராக பாயிண்ட்டை பிடித்தார்.
இந்தக் கேள்விக்கு விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை யோசித்துப் பார்த்துவிட்டான். ஒரு சரியான பதில் அவனுக்கு சிக்கவில்லை. ஸ்ரீயை அப்படி துப்பாக்கி முனையில் பார்த்ததும் ஒரு ஆவேசம். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாதே.
“தெரியலைப்பா…. அவன் மும்பை போறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க, அங்க போய்தான் பொண்ணை ரிலீஸ் பண்ணுவேன்னு பேசிகிட்டு இருந்தான். மணிக் கணக்கா இழுக்கும் போல தெரிஞ்சிது. சட்டுனு முடிக்க ஒரு ஐடியா தோணவும், செஞ்சிட்டேன். அந்த உருப்படாத யூட்டுபர் வராம இருந்திருந்தா, இன்னேரம் ஒரு பிரச்சனையும் இல்லை.”, என்று சலிப்பது போல பாவனை செய்தான்.
“டேய் நீ அடிச்ச வேகத்துல அந்த ஆள் செத்து போயிருந்தா? அந்த பாவம் எதுக்குடா நீ சுமக்கணும். இப்பவும் அவன் பொழைக்கணுமேன்னு பயமா இருக்கு. அதே நேரம் அவன் பொழைச்சு வந்து, உன்னை எதுவும் பழி வாங்கிடுவானோன்னும் பயமா இருக்கு.”, கோகிலா கண்ணில் கண்ணீர் தளும்பியது.
“மா… எதுக்கு மா தேவையில்லாம கற்பனை பண்ணி பயப்படுறீங்க? அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை. அவ்வளவுதான். அவனுக்கு பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை. மண்டை ஓடு கிராக் விட்டது கூடணும், தலையில இருக்க வீக்கம் குறையணும். அதுக்காக மயக்கத்துல வெச்சிருக்காங்க.”, அம்மாவின் கைபிடித்து தைரியம் கூறினான் நவீன்.
“செஞ்ச தப்புக்கு தண்டனைன்னு அவன் உணர்ந்தா பிரச்சனை இல்லை நவீன். அப்படி இல்லாம, உன்னாலதான் நான் போலீஸ்கிட்ட மாட்டினேன்னு கரம் வெச்சி திரும்ப வரதுக்கும் வாய்ப்பு இருக்கு.”, சக்கரவர்த்தி பாதகங்களை எடுத்துச் சொன்னார்.
“அப்பா… அப்படி ஆகலாம், இப்படி ஆகலாம்னு நான் அந்த நிமிஷம் யோசிக்கலை. இப்ப ஒன்னும் பண்ண முடியாது. இனி நானும் சரி… ஸ்ரீயும் சரி, ஜாக்கிரதையா இருக்கணும்.”, என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“இப்ப டீம் செலக்ஷன் நேரத்துல இது தேவையில்லாத பப்ளிசிட்டிடா. “, என்று தன் அடுத்த கவலையை சொன்னார் சக்ரவர்த்தி.
“ஹ்ம்ம்ம்….” பெருமூச்சு விட்ட நவீன், “ஆனா இதுவரைக்கும் அது பத்தி பாசிடிவ்வாதான் பா எல்லாரும் பேசறாங்க. நான் வேதா சர் கிட்ட பேசினேன். அவர் கூட இது இன்னும் நல்ல அபிராயத்தைதான் கொடுக்கும். நீ பாட்டு உன் முயற்சியை செய்ன்னு சொன்னார். அவன் நலம் விரும்பும் ஒரு கோச், டீம் செலக்ஷனில் அவனை இழுத்துக் கொள்வார்கள் என்று உறுதி அளித்திருந்தார்.
“எல்லாம் சரிடா… அது என்ன அந்த பொண்ணை தூக்கிட்டு போகும்போது அப்படி தூக்கிட்டு போன ?”, என்று கேட்டார் சக்ரவர்த்தி.
“எப்படி தூக்கிட்டு போனேன் ?”, நெற்றி சுருக்கி அவரையே மீண்டும் கேட்டான். வேகமாக ஸ்ரீயை அப்புறப் படுத்தியது மட்டும்தான் நினைவில் இருந்தது.
“ம்ம்… அவ இடுப்புல கைபோட்டு அப்படியே உன் சைட்ல அணைச்சாப்புல தூக்கிட்டு போன, இடையில அவ தலை மேல முத்தம் வேற வெச்ச மாதிரி இருந்துச்சு ?”, சக்கரவர்த்தி விவரிக்க கோகிலா கண்கள் தெறிக்க இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
“இது எப்ப? நான் பார்க்கலையே?”, என்றார் அதிர்ச்சியாக.
“ப்பா… விளையாடாதீங்க? மாடியிலர்ந்து குதிச்சதுல அவ கால் அடிபட்டிருக்கப்போகுதுன்னு ஆளா ஒரு பக்கம் பிடிச்சிருந்தோம். வேற ஒன்னும் இல்லை.”, என்றான் நவீன்.
“ம்ம்… எத்தனை வாட்டி முழுசா பார்த்த அந்த வீடியோவை?”
“ப்பா… முதல் வாட்டி பார்த்ததோட சரி… இதை எவன் திரும்ப திரும்ப பாக்கறது? அதான் டீ.வி ல நான் பந்தை எறியறதை லூப்ல போடாத குறையா ஓட்டினாங்களே ?”, என்ன யோசித்தும் ஒன்றும் ஞாபகம் வரவில்லை நவீனுக்கு.
தன் மொபைலில் அந்த வீடியோவை ஓடவிட்டு, டீ.வியில் வரும்படி மிரர் செய்தார் சக்கரவர்த்தி. அவர் தேடிய அந்த இடத்தில் நிறுத்தி ப்ளே செய்தார்.
முக்கால் வாசி திரை கைலாஷ் மற்ற போலீசுடன் வீட்டினுள் நுழைவதை நிறைத்திருக்க, ஒரு மூலையில் நவீன் ஸ்ரீயை தன்னோடு அணைத்தபடி தூக்கிப் பிடித்திருந்தான். ராகுல் வெறுமனே அவள் புஜத்தை பற்றியபடி மறுபுறம் வந்தான். திரையில் மறையும் ஒரு நொடி முன்னர் நவீனின் தலை ஸ்ரீயின் பக்கவாட்டு தலையில் முத்தம் கொடுப்பது போன்று தாழ்ந்து இருந்தது, பின் அவர்கள் மூவருமே திரையில் இருந்து மறைந்தனர்.
சக்கரவர்த்தி நிறுத்தி, மீண்டும் அதையே ஓடவிட, கோகிலா வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் திரையைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான் நவீன்.
டீ.வியை அணைத்த சக்கரவர்த்தி, “நானும் இதை பார்க்கலை. கோடி வீட்டு தாமு கேட்டான். அப்பறம்தான் நானுமே பார்த்தேன். “, என்றார் அமைதியாக.
“அப்பா… காமிரா ஆங்கிள்ல அப்படி தெரியுதுபா… நான் அப்படியெல்லாம் பண்ண மாதிரி ஞாபகமே இல்லை. பயப்படாதே… நீ சேஃப்னு சொல்ல குனிஞ்சிருப்பேனாயிருக்கும். “, வாய் சொல்லிக்கொண்டிருந்தாலும், ஸ்ரீயின் முடிக்கற்றையில் தன் உதடுகள் உரசினது போல நிழலாய் ஒரு ஞாபகம். உணர்ச்சிப் பெருக்கில் கொடுத்தாலும் கொடுத்திருப்பான். சொல்வதற்கில்லை.
“ராகுல் ஒல்லியா இருக்கான், அதான் நான் தூக்கியிருப்பேன். அந்த இடத்தை காலி பண்றதுதான் முக்கியமா இருந்துச்சு. யார் எப்படி தூக்கறதுன்னு யாருப்பா யோசிப்பாங்க?”, நவீன் சொல்வதும் சக்ரவர்த்திக்கு நியாயமாகப் பட்டது.
“அந்த தாமு கடங்காரனுக்கு எதுக்கு இந்த வேலை ?”, என்று பொறுமினார் கோகிலா.
“உங்கம்மாக்கு உன்னை பத்தி ரொம்ப பெருமை. எங்க நவீன் இப்படி, அப்படின்னு எப்பவும் தம்பட்டம் அடிப்பா. எப்படா ஒரு வாய்ப்பு கிடைக்கும், மட்டம் தட்டன்னு ஒரு கூட்டமே காத்துகிட்டு இருக்கு. இப்ப இது அவங்க எல்லார் வாய்க்கும் அவலா போச்சு.”, கொஞ்சம் வருத்தமாக பேசியவர்,
“நவீன், நீ சொன்னது எல்லாம் நியாயமாவே இருந்தாலும், ஒவ்வொருத்தர் கிட்டயும் நாம போய் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நம்மளை இந்த குடை குடையறவங்க, அந்த பொண்ணையும் அவங்க அப்பா அம்மாவையும் என்ன பேச்சு பேசுவாங்க ? எல்லாம் நீ வீசின பந்தால வந்தது. அவளை தூக்கிட்டு போனதுல வந்தது.”
“ஏனுங்க அவனை சொல்றீங்க ? படம் புடிச்ச அந்த கெரகம் புடிச்சவனை சொல்லுங்க, கடத்திகிட்டு போன கம்மனாட்டியை சொல்லுங்க.”, மகனுக்குப் பரிந்துகொண்டு வந்தார் கோகிலா.
ஆனால் நவீனின் கவனம் முழுக்க பெண் வீட்டை என்ன பேசுவார்களோ என்று அவன் தந்தை சொன்னதிலேயே நின்றது. நேற்று இரவு கோவை விமானம் இறங்கியதும் ஒரு மெசேஜ் போட்டிருந்தான். அதன் பின் ஸ்ரீயை தொடர்பு கொள்ளவில்லை.
“நான் ஸ்ரீகிட்டயோ ராகுல் கிட்டயோ இன்னும் பேசலைப்பா. அங்க என்ன நடக்குதுன்னு தெரியலை. “, என்றான் நவீன்.
சக்கரவர்த்தி யோசித்ததைப் போலத்தான் ஸ்ரீ வீட்டினருக்கும் நெருக்கடி ஆரம்பித்திருந்தது. இரவு முழுதும் கடத்தப்பட்டிருந்தாளா? எதுவும் அவளை செய்யவில்லைதானே? என்பது போல ஆரம்பித்து, அப்படியே எதுன்னாலும் எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டு இருக்காதே என்று அறிவுரையாக அவர்களே இட்டு கட்டி சொல்லிவிட்டு போனார்கள்.
விகித்துப் போயிருந்தாள் ஸ்ரீ. பெற்றொரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. எல்லாம் தன்னால், தன் முட்டாள்தனத்தால் என்பது உரைக்க குற்ற உணர்ச்சியில் மூழ்கியிருந்தாள்.
கல்யாணத்தை சீக்கிரம் முடி என்று சிலரும், கொஞ்சம் ஆறப்போடு மறந்து போகும் என்று சிலரும் இலவச ஆலோசனை வழங்கியிருந்தனர். இன்னும் ஒரு படி மேலே போய் நவீனுக்கே கட்டி வெச்சிருங்களேன் என்றும் யோசனை சொன்னார்கள்.
எதற்குமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ரோஜாவும் பாண்டியனும். தலையை ஆட்டி கேட்டுக் கொண்டனர். முல்லை பெரியம்மா மட்டும்தான் ஆறுதல். அவர்தான் வந்தவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.
“இங்க பாருங்க… என்ன ஆச்சுன்னு இப்படி உட்கார்ந்திருக்கீங்க? இப்படி இருக்க இருக்கத்தான் என்னவோ ஏதோன்னு எல்லாரும் சந்தேகப்படறாங்க. நல்ல வேளையா சீக்கிரமே தப்பிச்சிட்டா, நல்ல வேளை கடத்தினவனுக்கு அவ முதலாளிகிட்ட பணம் கறக்கணும்னு இருக்கவே இவளை நல்ல சாப்பாடு குடுத்து ஏசி ரூம்ல வெச்சிருந்தாங்கன்னு நீங்களே இது ஒரு பெரிய விஷயமில்லைங்கற மாதிரி பேசினா இதெல்லாம் அடங்கிடும்.”, பட படவென்று பொரிந்தார்.
“மாமா, நீங்க நாளைக்கு ஆஃபீஸ் போங்க. சந்தோஷமா காமிச்சிக்கோங்க. ஸ்ரீ… நீயும் நாளைக்கு ஆஃபீஸ் போ.”, என்றார் முல்லை.
“ஸ்ரீ எங்கேயும் போக வேண்டாம். போன் பண்ணி வேலையை ரிசைன் பண்ணு.”, என்றார் பாண்டியன் ஒரு முடிவான குரலில்.
“அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கவன் எழுந்து வந்து என்ன செய்வானோ, இல்லை அவனுக்கு வேண்டியவன் என்ன செய்வானோன்னு நானே பயந்து கிடக்கறேன்மா. இதுல அவளை தனியா அனுப்பறதெல்லாம் ரிஸ்க். இன்னொரு முறை இப்படியெல்லாம் ஆனா நான் தாங்க மாட்டேன்.”, பாண்டியன் தன் பயத்தை பகிர, பெண்கள் மூவருமே அமைதி காத்தனர்.
இராமலிங்கத்திற்கு போன் செய்து தான் ராஜினாமா செய்வதாகச் சொன்னாள் ஸ்ரீ. அவர் ஒரு வாரம் லீவ் எடுத்துக்கொண்டு அப்பறம் யோசி என்று சொன்னதைக் கூட காதில் வாங்கவில்லை ஸ்ரீ.
“இல்லை சர். திரும்ப அவங்களால எதாவது பிரச்சனை வருமோன்னு அப்பா அம்மா ரொம்ப பயப்படறாங்க. நான் ஈமெயில் பண்றேன் சர், என் ரெசிக்னேஷனை.”,என்றதும், அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லை.
“சரிம்மா… நீ அனுப்பு. சித்தார்த் சார்க்கு சிசி போடு. நானும் சொல்றேன். உடம்பை பார்த்துக்கோ. தைரியமா இரு.”, என்று சொல்லி வைத்துவிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்ரீக்கு போன் வந்தது சித்தார்த்திடமிருந்து.
“ஸ்ரீ… ரிசைன் பண்றதா மெயில் பார்த்தேன். இராமலிங்கம் சாரும் சொல்லிட்டு போனார். இன்னும் அரை மணி நேரத்துல உங்க வீட்ல இருப்பேன். உங்க அப்பா, அம்மா இருப்பாங்களா?”, என்று கேட்டான்.
அவன் குரலில் இருந்து ஒன்றும் அனுமானிக்க முடியவில்லை. “இருப்பாங்க சர்.”, என்றாள் ஸ்ரீ.
“குட்.”, என்று வைத்துவிட்டான். பெற்றோரிடம் சென்று அவன் வரவை சொல்ல எதற்கு வருகிறான் என்று பல்வேறு யோசனைகள் முட்டி மோதியது அவர்களிடம்.