“எப்படி… எப்படி இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சாங்க போலீஸ்? ஏய் பொண்ணு… உண்மையை சொல்லு ? உங்க அப்பா பெரிய ஆளா? எப்படி நேரா க்ரைம் ப்ராஞ்ச் ஆஃபீசர் உன்னை தேடி வரான்?”, ஸ்ரீயின் தோளைப் பிடித்து உலுக்கிய வேகத்தில் அவள் கழுத்து ஆடியது.
“தெரியாது… சத்தியமா எங்க அப்பாக்கு போலீஸ்ல யாரும் தெரியாது.”, என்றாள் அவசரமாக.
அவளை தள்ளி விட்டவன், “ லோக்கல் போலீஸ்ல உன்னைக் காணோம்னு கம்ப்ளைண்ட் எடுக்கவே மணிக் கணக்காகும். நியாயமா நாளைக்குத்தான் உன்னை தேடவே ஆரம்பிக்கணும். அதுவும் சாதா போலீஸ். எப்படி க்ரைம் ப்ரான்ச்? எப்படி இந்த இடம்னு கண்டுபிடிச்சாங்க ? வெய்ட் பண்ணி ஜீத்தை மடக்கி பிடிச்சிருக்காங்க… டாமிட்… “, தன் போக்கில் பேசியபடியே சுற்றி வந்ததவன்,
“எப்படிடா வீட்டை கண்டுபிடிச்சாங்க ?”, என்று சன்னியைக் கேட்டான்.
‘தான் மனைவிக்கு போன் செய்து குழந்தையின் நலம் விசாரித்ததால் தெரிந்திருக்கலாம் என்று சன்னி சந்தேகப்பட்டாலும் வாயை திறக்கவே இல்லை. இந்த நிலையில் கரண் அவனை போட்டு தள்ளக் கூடும் என்று தெரிந்து அவன் ஏன் சொல்லப் போகிறான்.
“பின்னாடி இரண்டு போலீஸ் தலை தெரியுது ஜி…இன்னும் எத்தனை பேர் ஓளிஞ்சிகிட்டு இருக்காங்கன்னு தெரியலை. விடிஞ்சிருச்சுன்னா தெரிஞ்சிக்கலாம்.”, சன்னி பவ்யமாகக் கூறினான்.
“ஹ்ம்ம்ம்… “, தப்பிக்கும் வழியை தீவிரமாக யோசித்தான் கரண்.
கைலாஷ் கேட்டதில் எட்டு பேர் வந்தனர். ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அங்கிகளுடனும். இதுவே அவன் எதிர்பார்த்ததைவிட அதிகம். அனைவரையும் அழைத்து சுற்றி வளைக்க அவனது திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தான். வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டை சுற்றி வளைத்தார்கள். கைலாஷ் கரணை கைபேசியில் அழைத்தான்.
“கரண்… வீட்டை சுத்தி வளைச்சிருக்கோம். தேவை இல்லாம இங்க ஒரு ஷூட் அவுட் வேணாம்னு பார்க்கறேன். நீயே சரண்டர் ஆகிரு. வீணா காம்பிளிகேட் பண்ண வேணாம். உனக்கில்லாத லாயரா? வெளிய வந்துக்கலாம். ”, கைலாஷ் அவன் நலன் பார்ப்பது போல இணக்கமாக பேசினான்.
“நோ… போலீஸ் நாயெல்லாம் நம்ப முடியாது. நான் மும்பை போகணும். அங்க போறதுக்கு ஏற்பாடு பண்ணு. அங்க வெச்சு நீ என்னை பிடிக்க ட்ரை பண்ணிக்க…. உனக்கில்லாத பவரா?”, நக்கல் அடித்தான் கரண்.
பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிய கைலாஷ்… “ அப்ப ஸ்ரீ நல்லபடியா இருக்கான்னு எங்களுக்கு காட்டு. அதுக்கப்பறம் நான் மேலிடத்துல பேசி பார்க்கறேன்.”, என்றான் அதே நட்பு தொனியில்.
இதை கேட்டுக்கொண்டிருந்த நவீனுக்குத்தான் பி.பி எகிறியது. “சர்… என்ன சர்? அவங்கிட்ட போய் பம்மறீங்க? “, என்றான் ஆற்றாமை தாளாமல்.
அவன் ட்ராப் ஆகியிருக்கான். அந்த கோவத்துல ஸ்ரீயை எதுவும் செய்யாம இருக்கணும். ப்ளீஸ் நவீன், உங்க பயம் புரியுது, ஆனா என்னை என் வேலையை செய்ய விடுங்க. ஓரமா நின்னு நடக்கறதை பாருங்க.”, என்று சொல்லிவிட்டு வேறு போலீசிடம் பேசச் சென்றான்.
“என்ன நவீன்… வேடிக்கை பார்க்க சொல்றாரு… விட்டா பாப்கார்ன் வாங்கி தருவார் போல ?”, என்றான் ராகுல் கடுப்பாக.
“என்னடா செய்யறது? நாம என்ன சினிமா ஹீரோவா ? வீட்டுக்குள்ள பூந்து பொண்ணை தூக்க ? “, நவீன் தன் இயலாமையை நொந்து கொண்டான்.
கைலாஷ் பரபரப்பாக கிட்டே வர சொல்லி கை ஆட்டவும், ஓடினார்கள். “இப்ப போன் பண்ணான். ஸ்ரீயை இரண்டு நிமிஷம் வெளிய கூட்டிட்டு வருவானாம். நீங்க அவ பார்வையில் படற மாதிரி நில்லுங்க. அவளுக்கு தைரியம் வரும். அவ நல்லா இருக்காளான்னு பார்த்து சொல்லுங்க. “, என்று சொல்லி வீட்டின் கேட் திறந்து உள்ளே சென்றான் கைலாஷ்.
வாசல் கதவை திறப்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ். ஆனால் கரண் மேல் மாடியின் பக்க வாட்டில் இருந்த பால்கனிக்கு வந்தான்…
“ஹே கைலாஷ்… எங்க இருக்க? பார்த்துக்கோ … அவ சேஃப்தான்.”, என்று இந்தியில் கத்தினான். கரணின் வலது கை துப்பாக்கியை ஸ்ரீயின் நெற்றிப் பொட்டின் அருகே பிடித்திருக்க, இடது கையால் அவளை தன்னுடன் அணைத்தாற் போல கூட்டி வந்திருந்தான்.
ராக்கியிடம் குனிந்து ஏதோ சொன்னான் நவீன்.
“எல்லாரும் துப்பாக்கியை கீழ இறக்குங்க. தேவை இல்லாம என்னை டென்ஷன் பண்ணி சுட வைக்காதீங்க.”, கரண் கத்த, கைலாஷ் அவன் பார்வையில் படும் படி வந்து நின்றவன், மற்ற போலீசிடம் துப்பாக்கியை இறக்குமாறு சைகை செய்தான்.
தப தப வென்று ராகுல் பக்கவாட்டு பால்கனி பக்கம் வந்தவன், “ஜக்கி… ஜக்கி நல்லாருக்கியா ?”, என்று கத்தினான்.
“டேய் .. யாரு … யாரு நீ?”, என்று கரண் கத்த, , ஸ்ரீ…. “ஃப்ரெண்டு… ஃப்ரெண்டு.”, என்றாள் கரணிடம் அவசரமாக. “ராக்கி..”, என்றாள் அழுகை தோய்ந்த குரலில். என்னவோ அவனைக் கண்டதும் அப்படி ஒரு நிம்மதி.
கைலாஷ்,”கரண் ரிலாக்ஸ்.. ஸ்ரீயை நல்லா தெரிஞ்சவந்தான் எங்களுக்கு அது ஸ்ரீதான்னு கன்ஃபர்ம் பண்ண முடியும். “, என்று அமைதியான குரலில் சொல்ல, ராகுலின் வெடவெட ஒல்லித் தோற்றமும் சேர, சற்று சகஜமானான் கரண்.
“ஜக்கி…. சாப்பிட எதாச்சம் குடுத்தாங்களா டீ ?”, என்று ராக்கி கத்த, ஜக்கியும் ‘ டாலும் ரோட்டியும் சாப்பிட்டேண்டா…. நீ ?”, என்றாள்.
‘என்னடா குசலம் விசாரிக்கறாங்க?’, என்று ஒரு நிமிடம் கைலாஷ் மட்டுமில்லை , புரிந்து கொள்ளும் அளவு தமிழ் தெரிந்த கரண் கூட ‘ லூசா இவ?” என்று ஒரு நொடி பார்க்க, கன் இருந்த கையை ராகுலை நோக்கி ஆட்டி… “நல்லா இருக்கா… பார்த்தாச்சில்ல ? போ!”, என்று ஆங்கிலத்தில் சொல்லும்போதே, பக்கவாட்டில் எதோ தோன்ற தலையை திருப்பினான்.
நவீன் வீசியிருந்த கிரிக்கெட் பந்து அதிவேகத்தில் அவன் மண்டையை பதம் பார்க்க, அடுத்த நொடி…. வினோத ஒரு ஒலி எழுப்பி பொதென்று விழுந்தான். அதில் தடுமாறினாலும் ஸ்ரீ எகிறி தள்ளி வந்தாள். அவள் கால்மாட்டில் விழுந்த துப்பாக்கியை அனிச்சையாய் குனிந்து எடுத்தவள், அது என்ன என்று புரிந்து பால்கனி வெளியே எறிந்தாள்.
பால்கனியின் மதில் மறைத்ததில் கரணுக்கு என்ன ஆகியது என்று கீழே இருந்தவர்களுக்கு தெரியவில்லை.
கைலாஷ் நொடியில் சுதாரித்து, “ஸ்ரீ… குதி…” என்றான். ஸ்ரீ யோசிக்கவேயில்லை. கீழே ரத்தம் வழியக் கிடந்த கரணைப் பார்த்தவள், அடுத்த நொடி பால்கனியில் மதில் மேல் உட்கார்ந்து வெளிப்புறம் திரும்பி.. “பிடிச்சிக்கோங்க…”, என்றி சொல்லி குதித்து விட்டாள்.
தரையிலிருந்து பால்கனி பதினைந்து அடி உயரம். அவள் செங்குத்தாய் குதிக்க, ஆறடி உயர கைலாஷ், லாவகமாக அவள் விழும் வேகத்தை தடுக்க, சிரமமின்றி கைகளை ஊன்றி தரையில் பதித்தவள், அப்படியே அமர்ந்தாள்.
ராகுலும், நவீனும் அவளை சூழ்ந்துகொள்ள, “வண்டிக்கு கூட்டிட்டு போங்க.”, என்று உத்தரவிட்டு, கை சைகையால் மற்றவர்களை வீட்டினுள் புக சொல்லியபடியே முன்னே துப்பாக்கியை வீட்டின் கதவின் தாளை உடைக்க சுட்டான்.
அவளை இருபுறமும் கைபிடித்து தூக்கியவர்கள், போலீஸ் வண்டிக்கு தூக்காத குறையாக கூட்டிச் சென்றார்கள்.
“நீ ஓக்கே தானே ஸ்ரீ? குதிச்சதுல அடி ஒன்னும் படலையே?”, நவீன் அவள் கணுக்கால்களை அழுத்திப் பார்க்க, “இல்லை… ஒன்னும் இல்லை நவீன். எப்படி… எப்படி கண்டு பிடிச்சீங்க் ? அந்த போலீஸ் எதோ க்ரைம் ப்ரான்சாம் ? கரண் கத்திக்கிட்டு இருந்தான்… “
“ம்ம்… கைலாஷ்… உன் பாஸ் சித்தார்த்தான் ஏற்பாடு பண்ணான்.”, நவீன் சொல்லவும்,
“கடங்காரன்… எல்லாம் அவனாலதான் வந்துச்சு….என்னைப் பத்தி அவந்தான் எல்லாம் சொல்லியிருக்கான். “, என்று திட்டியவள், “டேய் ராக்கி…. அம்மா அப்பாக்கு தெரியுமாடா ? எங்க இருக்காங்க…. பயந்துட்டாங்களாடா ?”, என்று கேட்கும் வேளை, ராகுல் ரோஜாவை அழைத்திருந்தான்.
மீண்டும் பரஸ்பர நல விசாரிப்புகள், கண்ணீர், அழுகை என்று ஓட, “தெரியலை மா…”, என்று சொல்லி… “அம்மா எங்க வரணும் என்னைப் பார்க்கன்னு கேட்கறாங்க. இது என்ன இடம்?”, ,என்று கேட்டாள்.
அவளிடமிருந்து போனை வாங்கிய நவீன்…. “ஆன்ட்டி… நான் நவீன் பேசறேன். போலீஸ் அந்த வீட்டுக்குள்ள போயிருக்காங்க. அனேகமா இங்கிருந்து க்ரைம் ப்ரான்ச் போயிட்டு, அப்பறம்தான் வீட்டுக்குப் போக விடுவாங்கன்னு நினைக்கறேன். நாங்க கிளம்பும்போது சொல்றோம் ஆன்ட்டி.”, என்றவன், ஸ்ரீயின் நலன் பற்றிய ரோஜாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வைத்தான்.
இருவரும் இருபுறமும் அணைவாக அமர்ந்திருக்க, தான் தப்பித்து விட்டோம் என்று மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. ராகுலுக்கும் நவீனுக்குமே அவள் பத்திரமாக அருகே இருக்கிறாள் என்ற உணர்வே நிம்மதியாக இருந்தது.
அடுத்த பத்தே நிமிடங்களில் உள்ளே சென்றவர்கள் சன்னியை கைது செய்து கூட்டி வந்தார்கள். கரணுக்கு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது.
கைலாஷ் வண்டிக்கு வந்தவன், “நவீன்… என்ன தைரியத்துல இப்படி பண்ணீங்க…. மிஸ் ஆகியிருந்தா….?”, என்று கடிந்தான்.
“ராகுலை பேச்சு குடுத்து டைவர்ட் பண்ண சொன்னேன் சர். ஓரு சான்ஸ் கிடைச்சா யூஸ் பண்ணிக்கலாம்னு கையில் பந்தை வெச்சிகிட்டு இருந்தேன். அவன் கன் இருந்த கையை நகர்த்தவும், வீசிட்டேன். கார்க் பால். எப்படியும் ஒரு எண்பது மைல் ஸ்பீட்ல அவன் நெத்தியில பட்டிருக்கும். மிஸ் ஆகாது. ஆனாலும், ஸ்ரீ குள்ளமாத்தான் இருக்கா, அவ மேல படாதுன்னு ஒரு தைரியம்.”, நவீன் விவரிக்க…
“போல்ட் மூவ். எனிவே…விஷயத்தை டக்குனு முடிச்சிட்டோம். ஆஃபீஸ் போயிருவோம். கொஞ்சம் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டா, நீங்க போகலாம். கரண் நிலைமை பார்த்துட்டு அடுத்து ப்ரோசீட் பண்ணலாம்.” என்றவன், ஸ்ரீயிடம் திரும்பி, “அப்பா அம்மாகிட்ட பேசிட்டியாமா?” ஆஃபீஸ் வர சொல்லு. இப்ப போயிடுவோம்.”, என்றான்.
“பேசிட்டேன் சர். ரொம்ப தாங்க்ஸ் சர். “, என்றாள் கை கூப்பி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கைலாஷின் ஆஃபீசில் ஸ்ரீயிடம் அங்கே நடந்ததைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் கைலாஷ். அறையில் நவீன், ராகுலுடன் அவள் பெற்றோர் இருந்தனர்.
“எல்லாருக்கும் தெரியும். நீ சொல்லு.”, என்றார் ரோஜா. குரலில் சற்று காரம் தெரிந்ததோ?
சன்னி மீண்டும் வந்து அவளை விஷன் பற்றி விசாரித்தாலும் ஒன்றும் புண்ணியமில்லை என்று ஸ்ரீ சொல்ல, “ இல்லை.. நீ பணணதுதான் எங்களுக்கு முதல் ப்ரேக் கிடைக்க காரணம். சன்னி அவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணான். அவன் பேசிய செல்போன் டவர், அவன் போனிலிருந்த ஜி.பி.ஸ் சிக்னல் எல்லாம்தான் வீட்டை அடையாளம் காட்டுச்சு.”, கைலாஷ் சொல்லவும் ஸ்ரீக்கு ஆச்சரியம்.
திடீரென்று அவள் இருந்த ரூமிற்குள் கரண் வந்து போட்டோ எடுத்தது. அடுத்து கத்தியது என்று சொல்லவும், ஜீத்தை பிடித்த கதையை அவளுக்குச் சொன்னான் கைலாஷ்.
கைலாஷ் தன் மேல் அதிகாரியிடம் பேசி, வேறு கேஸ் போட்டு கரண் கும்பலை புக் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, ஸ்ரீ வீட்டிற்கு போகலாம் என்று அனுமதி அளித்தான்.
அனைவரும் ஸ்ரீயின் வீடு வந்து சேர்ந்தனர். அவளையும் நவீன் ராகுலையும் முகம் கழுவிவிட்டு வரச் சொன்னவர், அவர்களுக்கு காப்பியை போட்டு வந்தார்.