வேகமாக இவர் தெரு முனையை திரும்ப, வேனையும் காணவில்லை, ஸ்கூட்டியையும் காணவில்லை. மிதமான வாகன போக்குவரத்து எப்போதும் போல இருந்தது.

தான் பார்த்தது நிஜமா என்றே சந்தேகம் வந்துவிட்டது. லேசாக வியர்க்க, அவசரமாக அடுத்து வந்த ஒரு சந்தில் திரும்பி, ஐந்து நிமிடத்தில் மீண்டும் அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்தார்.

செக்யூரிட்டியிடம், “டேய்… சார் கிளம்பிட்டாரா ?”, என்றார் காரில் இருந்தபடியே.

“இன்னும் இல்லை சார். இப்பதான் அவர் ட்ரைவர் காரை ரெடியா வெக்க சொன்னார்னு போனான்.”, என்றபடி செக்யூரிட்டி சுப்பு வந்தான்.

“நான் அவரை முக்கியமா பார்க்கணும். மேல போறேன். அதுக்குள்ள அவர் கிளம்பி வந்துட்டா, இங்கயே நிறுத்திட்டு எனக்கு போன் போடு. ரொம்ப அவசரம்.”, உத்தரவைப் போட்டு விட்டு, காரை பார்க்கிங்கில் விடாமல் அப்படியே ஓரம்கட்டி விட்டு இறங்கினார்.

“சார், கார் வழியை மறிக்குது…” , சுப்பு ஓடி வர,

“சாவி கார்லதான் இருக்குடா….  நீ பார்த்துக்க.”, என்று விட்டு மூச்சிரைக்க லிஃப்ட்டை நோக்கி ஓடினார்.

 அப்போதுதான் ஒரு போன் காலை முடித்துவிட்டு சித்தார்த் கிளம்ப எத்தனிக்க, கதவை தட்டிய கையோடு “சார்…சார்…. “, என்று இராமலிங்கம் புயலாக உள்ளே நுழைந்தார்.

“என்ன ? என்னாச்சு இராமலிங்கம் சர் ?”, சித்தார்த் இப்படி நுழைபவரைப் பார்த்து திகைத்துக் கேட்டான்.

மூச்சு வாங்க, “சார்… ஸ்ரீ …ஸ்ரீநிதி பொண்ணு ஸ்கூட்டியில என் முன்னாடி போய்கிட்டு இருந்தா… சார்… “, அவரது வியர்வையைப் பார்த்து, பயந்த சித்தார்த்,

“உக்காருங்க சர். முதல்ல தண்ணி குடிங்க. அப்பறம் ஸ்ரீக்கு என்னன்னு சொல்லுங்க.”, அவர் கையில் தண்ணீர் டம்ளரை திணித்து குடிக்க வைத்தான்.

ஒரு வாய் நீரை பருகியபடியே, நாற்காலியில் பொத்தென்று விழுந்தவர், “இல்ல…அவசரம்.. சர்…ஸ்ரீயை ஒரு வேன்ல கடத்திட்டாங்கன்னு நினைக்கறேன் சர்…. “, என்றார் நடுங்கும் குரலில்.

“ஹ… என்ன சொல்றீங்க ? கடத்திட்டாங்களா ? என்ன பார்த்தீங்க?”, சித்தார்த் அதிர்ச்சியாகக் கேட்டான்.

முதலில் அவர் சொன்னதை வைத்து, அவளுக்கு எதுவும் விபத்து என்று நினைத்திருந்தான். இப்படி ஒன்றை எதிர்பார்க்கவேயில்லை. அவர் ஏதோ தப்பாக புரிந்து கொண்டிருக்கிரார் என்பது போல தோன்றியது.

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தவர், சற்று நிதானத்துடன் தான் பார்த்ததை கொஞ்சம் விட்டு விட்டுக் கூறினாலும், சற்று கோர்வையாகக் கூறினார்.

சித்தார்த் கை அனிச்சையாக செக்யூரிட்டியை அழைத்தது. “சுப்பு, செக்யூரிட்டி ரூம்ல யார் இருக்கா ?”

“…”

“மாதவனை லேப்டாப் எடுத்துட்டு என் ரூமுக்கு உடனே வர சொல்லுங்க,  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரெக்கார்ட் ஆனதைப் பார்க்கணும். “, என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு வைத்தான்.

அவனது சிந்தனை தறிகெட்டு ஓடினாலும், இழுத்துப் பிடித்தான். என்ன நடந்தது என்று தெரியும் வரையில் எதுவும் யோசிக்க வேண்டாம் என்ற உறுதியில் இருந்தான்.

“சர்…. சின்ன பொண்ணு சர். கல்யாண வயசு. இப்படி சாய்ந்திர நேரம்னு கூட பார்க்காம தைரியமா இழுத்து வண்டியில போட்டுட்டு போறாங்களே…. என்ன பண்ணுவாங்களோ… இன்னிக்கு சாயங்காலம்தான் எல்லாருக்கும் சிரிச்ச முகமா கேக் குடுத்துச்சு சார். பெர்மனன்ட் ஆனதுக்கு. போலீசுக்கு போலாம் சார். நேரம் போக போக கஷ்டமாயிரும் சார்.”, இராமலிங்கத்தின் பதைபதைப்பு கூடியது.

“இருங்க இராமலிங்கம். நம்ம வாசல் காமெரால ரெக்கார்ட் ஆகியிருக்கான்னு பார்க்கணும். கண்டிப்பா இது கடத்தல்னா போலீசை கூப்பிடலாம். முதல்ல ஸ்ரீ மொபைல் நம்பர் எடுங்க. கூப்பிட்டு பார்க்கலாம்.”

சித்தார்த் கூறவும், தட்ட முடியாது, “எங்கிட்டயே இருக்கு சார். “, என்று தன் கைபேசியில் இருந்து ஸ்ரீக்கு அழைத்தார்.

“நம்பர் ஸ்விட்ச் ஆஃப்னு வருது சார்.”

அதற்குள் கதவை தட்டி, உள்ளே நுழைந்தார் மாதவன். செக்யூரிட்டி ஹெட். சுருக்கமாக நடந்ததை சொல்லி,

“மாதவன், அந்த பக்கம் இருக்க காமெரா ரிகார்டிங்க எடுக்க. பார்க்கலாம்.”, என்ற உத்தரவில், மாதவன் அமர்ந்து லேட்டாப்பில் செட் செய்ய, சித்தார்த், பெரிய திரையில் தெரியும்படியான கேபிளை அவனிடம் கொடுத்தான்.

கனெக்ஷனை கொடுத்து, இராமலிங்கம் கடத்தப்பட்டதாக சொன்ன நேரத்திற்கு அருகே கொண்டு வர, ஸ்ரீ வாயிலைக் கடப்பது தெரிந்தது. பின்னால் இராமலிங்கத்தின் கார் வருவதும் பதிவாகியிருந்தது.

அடுத்த காமெராவில், அவள் வாயிலைக் கடந்து சற்று தொலைவு வரை பதிவாக, காமெராவின் தொலைவு முடியும் தருவாயில் வேன் ஒன்று பாய்ந்து வந்து ஓரம் கட்டுவதும், சட்டென்று வேகமெடுத்துப் போக, ஸ்கூட்டியை ஒருவர் ஓட்டிச் செல்வதும் புள்ளியாக தெரிந்தது.

சற்று ஜூம் செய்தாலும், காட்சி மங்கலாகியது. “ சர்… இது காமெரா டிஸ்டென்ஸ் தெரிஞ்சு அங்க வெச்சு லாக் பண்ணிருக்காங்க மாதிரி இருக்கு சர். பெட்டர் போலீசை கூப்பிடலாம். ரொமப துல்லியமா நடத்தியிருக்காங்க சர்.”, மாதவனுக்கும் பதற்றம் தொற்ற, சித்தார்த்தின் அடி வயறு சில்லிட்டது.

போனை எடுத்தவன் யாருக்கோ அழைத்தான்.

“ப்ரிட்டோ அங்கிள்… நான் சித்தார்த்.”

“…”

“அங்கிள் ஒரு சின்ன பிரச்சனை. என் ஸ்டாஃப் ஒரு பொண்ணு ஸ்ரீ நிதின்னு பேரு. கம்பனி வாசல்ல வெச்சு ஒரு இருவது நிமிஷம் முன்னாடி கிட்னாப் பண்ண மாதிரி இருக்கு. இன்னொரு ஸ்டாஃப், அவ மானேஜர் பார்த்திருக்கார். அவர் வந்து சொன்னதும் சி.சி.டிவி காமேரா ஃபுட்டேஜ் பார்த்தா, தெளிவா இல்லை ஆனாலும் அவர் சொன்ன மாதிரிதான் தெரியுது. ஸ்ரீக்கு போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது. “

“…”

“ஒரு இருவத்தி இரண்டு, இல்ல மூணு இருக்கும். வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசம் கூட இருக்காது. “

“…”

“அங்கிள், முதல்ல கொஞ்சம் அன்-அஃபிஷியலா பார்க்கலாமா? இன்னும் யாருக்கும் சொல்லலை. சின்ன பொண்ணு, அதான் உங்களை நேர கூப்பிட்டேன். “, சித்தார்த் சற்று தயங்கி கேட்கவும், மறுமுனையில்,

“ம்ம்… சரி இரு. எனக்கு தெரிஞ்ச க்ரைம் ப்ரான்ச் ஆபீசர் அனுப்பறேன். அவர் விசாரிச்சிட்டு, இதை அஃபிஷியலாக்கணும்னா அப்ப பார்க்கலாம். அவர் பேர் கைலாஷ். நீ கம்பனியிலேயே இரு. நான் உன் நம்பர் அனுப்பிட்டு அவரை வர சொல்றேன். பார்த்த ஐ விட்னஸ், காமெரா ஃபுட்டேஜ் எல்லாம் ரெடி பண்ணு. அந்த பொண்ணோட அப்பா அம்மாக்கு சொல்லிட்டியா?”

“இல்லை. சொல்லலை.”

“ம்ம்… சரி, அந்த புட்டேஜ் எனக்கு வாட்சப் பண்ணு. அவனுக்கும் அனுப்பறேன். அடுத்து என்ன செய்யன்னு அவன் பார்த்துட்டு சொல்லுவான்.”

“அங்கிள்… நீங்களே பார்க்கமுடியாதா?”, சித்தார்த் கேட்க,

“டேய்… நான் வந்தா நோட் பண்ணுவாங்கடா. எனக்கு ரொம்ப தெரிஞ்சவன், ப்ளஸ் திறமையானவன். இப்பதான் திருப்பூர்லர்ந்து ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருக்கான். நீ கவலைப்படாதே. “, என்று சொல்லி வைத்துவிட்டார்.

பேசியதை சுருக்கமாக சொல்லி, மாதவனை காமெரா பதிவை ரெடி செய்து அனுப்பச் சொன்னான.

“இராமலிங்கம் சர். நீங்க வீட்டுக்கு போன் பண்ணி லேட்டாகும்னு சொல்லுங்க. ஸ்ரீ ஃபைல் ப்ரின்ட் எடுத்துட்டு வாங்க. அவ பேரண்ட்ஸ் போன் நம்பர், அட்ரஸ் அதுல இருக்கும். போலீஸ் ஆஃபிசர் சொன்னதும் அவங்களை கான்டாக்ட் பண்ணலாம்.”

இருவரிடமும் வேலையை கொடுத்தவன், இப்போது என்ன செய்வது, தன் சந்தேகத்தை சொல்வதா? சொன்னால் எதிர் விளைவுகள் வருமா? என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்குள் சித்தார்த்திற்கு போன் வந்தது. “ ஹலோ, மிஸ்டர் சித்தார்த் ? நான் ஆஃபிசர் கைலாஷ். நீங்க அனுப்பின வீடியோ பார்த்தேன். கிட்னாப் மாதிரிதான் தெரியுது. நான் அங்கே வந்துகிட்டு இருக்கேன். அந்த பொண்ணோட பாரெண்ட்ஸ் ஆஃபீசுக்கு வரவழைக்க முடியுமா? வேற ரீசன் சொல்லுங்க. வந்த அப்பறம் சொல்லிக்கலாம். “

ஆளுமையான அந்தக் குரலே ஒரு மரியாதையை வரவழைக்க, “யா… ஓகே.  ஓகே சர்.”, என்று சொல்லி வைத்தான் சித்தார்த்.

இராமலிங்கம் ஃபைலைக் கொண்டு வந்ததும், சித்தார்த் பாண்டியனை அழைத்து, ஸ்ரீயின் அம்மாவோடு அலுவலகம் வரச் சொன்னான். ஒரு சிறிய பிரச்சனை, வந்தது பேசிக்கொள்ளலாம் என்பதோடு வைத்துவிட்டான்.

பாண்டியன் நேராக அழைத்தது ராகுலை. “டேய்… கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு போய் ஆன்ட்டியை ஸ்ரீயோட ஆஃபீசுக்கு கூட்டிட்டு வா. நான் இங்கருந்து இப்படியே கிளம்பறேன். எனக்கு பக்கம். அவ பாஸ் சித்தார்த் போன் பண்ணி சின்ன பிரச்சனை உடனே வாங்கன்னு சொல்றான். அவ போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. “

கேட்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “இப்ப ஒரு அரை மணி முன்னாடி ஸ்ரீ கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அங்க்கிள். அப்பதான் வீட்டுக்கு கிளம்பறேன்னு சொன்னா. அதுக்குள்ள என்ன?”

“தெரியலைடா…. நீ சீக்கிரம் வா. எதாவது சண்டை இழுத்து வெச்சிருக்காளான்னு தெரியலை.”, பாண்டியன் போனை வைத்துவிட்டார்.

இது கல்லூரி இல்லை. பிரச்சனை என்றால் அப்பா அம்மாவை வரவழைக்க. ஏதோ பெரிதாக இருக்குமோ என்று பதட்டம் வந்தது. தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டு அவர் காரை எடுத்தார்.

அதற்குள், கைலாஷ் சித்தார்த்தின் அலுவலகத்தில் இருந்தான். வரும் வழியிலேயே கடத்தல் நடந்த இடத்தையும் அருகே வேறு காமெராக்கள் இருக்கின்றனவா என்றும் பார்த்துவிட்டுத்தான் வந்தான்.

ஸ்ரீயின் ஃபைலைப் பார்த்து அவளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டு, அடுத்து இராமலிங்கத்திடம், அவர் பார்த்தவற்றை விசாரிக்க ஆரம்பித்தான்.

செக்யூரிட்டியின் ஒரிஜனல் விடியோவை ஓடவிட்டு லைசன்ஸ் எதுவும் தெரிகிறதா என்று பார்த்தான். தெரியவில்லை. வண்டி நிற்பதும், பின்புறக் கதவு திறந்து பைஜாமா அணிந்த சர்தார் போன்ற ஒருவன் வெளியேறுவதும், வண்டி கிளம்பவும், விழுந்த ஸ்கூட்டியை நிமிர்த்தி சாவகசமாக அவன் ஓட்டிச் செல்வதும் தெரிந்தது.

கார் ஓரத்தில் இருக்கவும்,  ஸ்ரீ காருக்குள் இழுக்கப்படுவது ஒரு அனுமானமாகத் தெரிந்ததே ஒழிய தெளிவாக இல்லை. மிக நேர்த்தியாக கடத்தப்பட்டிருப்பது மட்டும் புரிந்தது. காமெரா கண்காணிப்பு இல்லாத இடம் என்று பார்த்து தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஒரே நல்ல விஷயம், இராமலிங்கம் காரை முந்த, வண்டியின் கலர், மற்றும் மேக் காமெராவில் பதிவாகியிருந்தது. வண்டி பக்கத்து பிரதான சாலையில் உள்ள காமெராக்களில் பதிந்திருக்கிறதா என்று பார்க்க, அதை தனியே எடுத்து ட்ராஃபிக் டிப்பார்ட்மென்ட்டுக்கு அவசரமாக அனுப்பி வைத்தான் கைலாஷ்.

“மாதவன், அங்க மெயின் ரோட்ல இருக்க கடைங்கள்ல போய் பாருங்க, எந்த காமெராவாச்சம் லைசன்ஸ் நம்பரை எடுக்கற மாதிரி வாட்டமான ஆங்கிள்ல இருக்கான்னு பாருங்க. இருந்தா சொல்லுங்க, நான் வந்து அவங்ககிட்ட கேட்கறேன்.”, கைலாஷ், செக்யூரிட்டி அதிகாரியிடம் சொல்லவும், பாண்டியனை வாசலில் இருந்த செக்யூரிட்டி சுப்பு லிஃப்டில் அனுப்பிவிட்டு, போன் செய்யவும் சரியாக இருந்தது.

இராமலிங்கம் பாண்டியனை அழைத்து வர ஓடினார்.