தனது சிக்கன், மஞ்சள் பூசணி சாஸ் போட்ட பாஸ்தாவை அவள் புறம் நீட்டினான். சுவாதீனமாக தன் ஸ்பூனால் எடுத்து தட்டில் போட்டவள், சுவைத்து உண்டாள்.

“வாசனை இழுத்துகிட்டே இருந்துச்சு. எப்படி கேட்கறதுன்னு நினைச்சேன். நீங்களே குடுத்துட்டீங்க.”, ஸ்ரீ சொல்லவும்,

“ஸ்ரீ… உங்க அம்மா உன் நாக்கை எவ்வளவு வளர்த்துவிட்டிருக்காங்கன்னு தெரியும். கூச்சப்படாம கேளு. நான் தப்பா நினைக்க மாட்டேன்.”, என்று அவளை கிண்டலடித்தான்.

உதட்டை பிதுக்கி அவனைப் பார்த்து முகத்தை சுருக்கியவள், “ அம்மாக்கு இதெல்லாம்  செய்ய வராது. அதுக்கெல்லாம் முல்லை பெரியம்மாதான் பெஸ்ட்.”, என்று விளக்கிவிட்டு, மீண்டும் அவன் தட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் பாஸ்தாவை எடுத்துக் கொண்டாள்.

பதிலுக்கு நவீன் அவளிடமிருந்து உணவை எடுத்த போதும் தடுக்கவில்லை, விருப்பமாகவே தந்தாள்.

“ஏன் ஸ்ரீ… உன்னைவிட நான் நாலஞ்சு வருஷம் பெரியவன். அதனாலத்தான் என்னை எப்பவும் மரியாதையா கூப்பிடறயா? எப்பவும் நீங்க, வாங்கன்னுதான் சொல்ற ?”,  அவனை குடைந்து கொண்டிருந்த இன்னொரு சந்தேகத்தைக் கேட்டான்.

சம்மந்தமேயில்லாமல் திடீரென்று கேள்வி வரவும், “அது… அது…”, என்றவள்,  “நீங்க ஒன்னும் சொல்லலை, அதனால அப்படியே கூப்பிடறேன்.”, என்றாள்.

“ஓஹ்… சரி… அப்ப இந்த நீங்க வாங்கன்றதை விட்டுடு. ஒரு வேளை நான் உன் ஃப்ரெண்டு சர்க்கிள்ல வரலை போல, அதான் தள்ளியே வெச்சிருக்கியோன்னு நினைச்சிட்டேன்.”,  நவீன் அவள் முகம் பார்க்க,

“சே..சே… அப்படியெல்லாம் இல்லை நவீன். நிஜமா நீங்க ஃப்ரெண்டுதான். ஆனா என்னவோ அப்படி மரியாதை இல்லாம கூப்பிட வரலை. “, மழுப்பினாள். பின்னே உன்னை கணவனாக மணமேடையில் கண்டேன் என்றா கூற முடியும் ? ‘ ஏன் புருஷன்னா மரியாதையாதான் கூப்பிடணுமா? யார் கூப்பிடறா இந்த காலத்துல?”, என்று கேட்ட மனதிற்கு அவளிடம் பதிலில்லை.

அவளது பதிலில் உதட்டைக் கடித்தவன், “ என்னை தள்ளி நிறுத்தி செலிப்ரட்டியா பார்க்காத ஸ்ரீ. நானும் சாதாரண ஆள்தான். உன் அளவு வேற யார் கூடவும் நான் கம்ஃபர்டபிளா இருந்ததில்லை.”, பிரமாதமாக அடுத்து பழைய பாடல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்கள், அதனால் மேசை அருகில் வந்து கிசுகிசுப்பாய்ப் பேசினார்கள்.

நவீன் அப்படி மீண்டும் அவளைப் பிரதானப்படுத்தி பேசவும், ஸ்ரீ நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. ‘அப்போ என் மேல இஷ்டம்ங்கறாரா? இதுக்கு என்ன பதில் நான் சொல்றது?’ என்று யோசிக்க, பழைய ஸ்ரீ மற்றவருக்கு சொல்வதானால் ‘பட்டுனு ஒரு ஐ லவ் யூ வை சொல்லுவியா…’ என்று ஐடியா கொடுத்திருப்பாள்.

இங்கே அந்தச் சூழலில் அவளே இருக்கவும், அப்படியெல்லாம் சட்டென்று சொல்லிவிட முடியாது என்று புரிந்தது.

பாட்டை வாசித்து முடிக்க, மக்களின் பாராட்டை பெற்ற இரு கலைஞர்களும் நன்றி சொல்லி விடை பெற, அந்த அமைதியில்,

“எனக்குமே நவீன். ராக்கிக்கு அப்பறம் உங்ககிட்ட… ஐ மீன் உங்கிட்டதான் நிறைய பேசறேன். இவ்ளோ ஷார்ட் டைம்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். ஏதோ ஒரு வேவ்லெங்த் கரெக்டா செட் ஆகுது போல நமக்கு.”, என்று ஸ்ரீ சொல்ல, அவள் உங்க என்று ஆரம்பித்து ஒருமைக்கு சென்றது , அவள் கூறிய அலைவரிசை எல்லாமாகச் சேர்ந்து நவீன் முகத்தில் ஒரு பிரகாசத்தைக் கொடுத்தது.

பணியாள் தட்டுகளை எடுத்து செல்ல வர, பேச்சு டெசர்ட் பக்கம் வந்தது.

“அஷ்வின் அண்ணா இங்க லாவா கேக் ரொம்ப நல்லாயிருக்கும். மிஸ் பண்ணாதன்னு சொன்னார். இல்லை உனக்கு வேற எதுவும் சொல்றதுனாலும் சொல்லு ஸ்ரீ.”

“அதுவே ஆர்டர் பண்ணலாம். ஆனால் ஷேர் பண்ணிக்கலாம் நவீன்.  தனியா சாப்பிட முடியாது.”, என்று சொல்லவும் ஆர்டரை கொடுத்தான்.

பேச்சு அதன் பின் அவன் தங்கியிருக்கும் அவனது பெரியப்பா மகனின் அப்பார்ட்மென்ட், அடுத்து அவன் மும்பை செல்லயிருப்பது என்று சாதாரணமாகச் சென்றது. ‘அவளுக்கும் பிடிச்சிருக்கோ? ராக்கிக்கு அப்பறம் நாந்தானாமே? அதென்ன ராக்கிக்கு அப்பறம் ? நான் இரண்டாவதா?’, நேர்மறையாக சென்ற யோசனை சற்று இடறி நின்றது. ‘டேய் சின்ன வயசிலர்ந்து வர நட்புடா…’, என்ற அறிவை, ‘ அது தெரியுது, ஆனா நானும் ஃப்ரெண்ட் ஜோனா? ஃப்ரெண்டைத் தாண்டி இல்லையா?’, என்று சுணங்கியது மனது.

நவீனின் போராட்டம் அறியாதவளோ, “என்ன நவீன்… ஒரு மாதிரி சைலன்ட் ஆகிட்டீங்க? என்ன யோசனை?”, என்றாள்.

“ஹ்ம்ம்…. ஒன்னும்மில்லை…ராகுல்க்கு அப்பறம் நாந்தான் க்ளோஸ்ன்னு சொன்ன, ஆனா திரும்ப ங்க போடற? “, கேட்கும் போதே அப்பத்தமாகப் பட்டது நவீனுக்கு.

அவனைப் புரியாமல் ஒரு பார்வை பார்த்தவள், “ நவீன்? கொஞ்சம் டைம் எடுக்கும். இத்தனை நாள் வாங்க போங்கன்னு சொன்னது சட்டுன்னு விட்டுடாது. ஏன் திடீர்னு அவ்வளவு பர்ட்டிகுலரா இருக்கீங்க இது பத்தி ?”

உள்ளுக்குள் முகத்தைப் பொத்திக் கொண்டாலும், ஸ்ரீயிடம், “சாரி… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரீ.  முன்னாடியே கேட்கணும்னு தோணியிருக்கு. நீயா மாத்திப்பன்னு பார்த்தேன்… இட்ஸ் ஃபைன். நீ உனக்கு தோணுற படி கூப்பிடு.”

நவீன் கேட்க நினைத்ததே வேறு. அதைக் கேட்க முடியாமல் இப்படி சொதப்பி, ‘வாயே திறக்காதே’, என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவனின் முகத்தைப் பார்த்தவள், நவீன் எதுவோ திணறுவது புரிந்து, அவனை இலகுவாக்கும் பொருட்டு வேறு விஷயம் பேச நினைக்க, அப்போது சரியாக லாவா கேக் வந்தது.

சாக்லேட் ப்வுடர் தூவப்பட்ட ஒரு சிறு மலை, அதைச் சுற்றிலும் ஒரு சாக்லேட் சிரப் வட்டம்.  அதைத் தாண்டி ஒரு ஓரம் மேகங்கள் போல வென்னிலா க்ரீம். அதில் ஒரு ஸ்ட்ராபெரி சூரியன்.

“வாவ்…பார்க்கவே இவ்வளவு அழகு.”, இருங்க ஒரு போட்டோ எடுக்கலாம் நவீன். அவள் உற்சாகம் பார்த்து சந்தோஷமடைந்தவன், கேக்கை தனியாகவும் , அவளோடு சேர்த்தும் படம் பிடித்தான்.

“நீ கட் பண்ணுங்க நவீன். நான் வீடியோ எடுக்கறேன்.”, என்று ஆர்வத்தில் ஒருமையும் பன்மையும் கலந்து கட்டி பேச, மீண்டும் தன் புன்னகையை மீட்டவனாக,

காமெராவைப் பார்த்து சிரித்து, மெல்ல அந்த சாக்லேட் தூவிய மலையை வெட்ட, உள்ளிருந்து உருக்கிய சாக்லேட் எரிமலையின் குழம்பு போலே வெளியே ஓடியது. சாக்லேட்டின் மணம் நாசியை நிரப்புயது.

“ஊ… ப்யூட்டிஃபுல்….”,  க்ளோசப்பில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஸ்ரீயும் சாக்லேட்டோடு சேர்ந்து உருகினாள்.

முள்கரண்டியில் ஒரு விள்ளல் சாக்லேட் கேக் எடுத்து, லாவாவில் பிரட்டி, துளி க்ரீமையும் எடுத்து ஸ்ரீயிடம் நீட்ட, யோசிக்கவே இல்லை ஸ்ரீ. வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

கண் மூடி, முகம் முழுதும் சாக்லேட்டின் சுவையை ரசித்து உண்ணும் மகிழ்ச்சி பிரதிபலிக்க அமர்ந்திருந்தவளைப் பார்க்க நவீனுக்கு ஒரு நொடி சுற்றம் மறந்தது. அவனை முழுதும் ஸ்ரீ வியாபித்திருந்தாள்.

கேக்கை உண்டு முடித்தவள், கண்ணை திறக்க, கண் கொட்டாது அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் நவீன் தெரிந்தான்.

“நவீன்…”, என்று ஸ்ரீ அழைக்க, அதில் கலைந்தவன், மீண்டும் கேக்கை எடுக்க,

“இல்ல.. நீங்க சாப்பிடுங்க. நான் எடுத்துக்கறேன். எக்ஸ்குசிட். இந்த மாதிரி ஒரு லாவா கேக் சாப்பிட்டதே இல்லை.”, மற்றொரு முள் கரண்டியில் ஸ்ரீ தனக்கு எடுத்துக் கொள்ள, அவளுக்கென்று எடுத்ததை தான் உண்டான்.

கண்டிப்பாக இப்படி ஒரு லாவா கேக் சாப்பிட்டதில்லை. அவளுக்கு ஊட்டி, அதே கரண்டியில் தானும் உண்டு…. ‘ ரெஸ்டரான்ட் மத்தியில என்னடா பண்ணிகிட்டு இருக்க?’, அறிவு இடிக்க, 

‘வாழ்க்கையில முதல் முறை அனுபவிக்கறேன். விடேன்.’, மனது வாதிட்டது.

ஸ்ரீயின் கவனம் லாவா கேக்கில் லயத்திருந்தது. அவள் அதை அனுபவித்து உண்பதையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் நவீன். பாதிக்கும் மேல் உண்டபிந்தான் அவன் சாப்பிடாததை கவனித்தாள் ஸ்ரீ.

“நீங்க எடுத்துக்கலையா நவீன் ?”, என்ற ஸ்ரீயின் கேள்விக்கு, புருவம் உயர்த்தியவன்,

“கொஞ்சம் தட்டை பாருங்க மேடம். மொத்தமா உங்ககிட்ட இழுத்து வெச்சிகிட்டு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தீங்க. நான் எங்க எடுக்க?”, என்றால் ஒரு கேலிப் புன்னகையோடு.

“சாரி..”,என்று சற்று அசடு வழிந்தவள், கேக்கை அவன் புறம் நகர்த்தி, “ எனக்கு போறும், நீங்க சாப்பிடுங்க. ஆனா கொஞ்சம் தான் இருக்கு. வேற புதுசா சொல்றீங்களா ?”, என்றாள்.

‘சரியான பக்கின்னு நினைச்சிருப்பாங்க. இப்படியா ஸ்ரீ பண்ணுவ? ‘, என்று உள்ளுக்குள் திட்டிக்கொண்டாள்.

“உனக்கு இன்னும் வேணுமா? அப்படின்னா சொல்றேன்.”, என்று நவீன் சொல்லவும்,

“இல்லை…. எனக்கு போறும். உனக்கு பத்தலையோன்னு சொன்னேன் நவீன்.”, அவசரமாக மறுத்தாள்.

அவள் தடுமாற்றத்தைக் கண்டு புன்னகைத்தபடியே, மிச்சமிருந்ததை லாவகமாக நவீன் உண்டு முடித்து, உதட்டை  நுனி நாவால் துடைக்க,   பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீக்குத்தான் வயிற்றில் எதோ பறந்தது.

‘ஸ்டெடி ஸ்ரீ…’, என்று படபடத்த நெஞ்சை ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டு சரி செய்து கவனத்தை வேறு புறம் திருப்பினாள்.

அவள் கிளம்பும் போது, ட்ரீட்டுக்கு நன்றி சொல்ல, அவள் கைப்பிடித்த நவீன், “ நான் தான் நன்றி சொல்லணும் ஸ்ரீ. இட் வாஸ் அ மெமரபிள் (மறக்க முடியாத) டின்னர்.”, என்று அவள் கண் பார்த்து கூற, ஸ்ரீக்கு மீண்டும்  வயற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. அவன் பார்வையில் கட்டுண்டு நன்றவளை,

“பத்திரம் ஸ்ரீ. போயிட்டு மெசேஜ் பண்ணு.”, என்று விடை கொடுத்தான் நவீன்.

எப்படி வீட்டிற்கு வந்தாள் என்று கேட்டால் தெரியாது என்பாள் ஸ்ரீ. அவள் வீட்டு வாசலுக்கு வந்து, தனிச்சையாக கை ஹார்ன் அடிக்கவும்தான் நினைவுலகிற்கு வந்தாள்.

ரோஜா வந்து கதவை திறக்க, வண்டியை உள்ளே விட்டவள், “ஒத்த ரோசா… செம்ம டின்னர். வா வா … கதை சொல்றேன்.”, என்று கூட்டிச் சென்றாள்.

பாண்டியனும் சோஃபாவில் அமர்ந்திருக்க, “ப்பா…. கண்டிப்பா நாம் இந்த ரெஸ்டரான்ட் போறோம். அவனோட அந்த லாவா கேக் சாப்பிடறோம். அட்டகாசம் பா.”, என்று அவள் எடுத்த போட்டோ, வீடியோ என்று காட்டி, நவீனுடன் எடுத்த போட்டோ, தான் கேட்ட லைவ் ம்யூசிக் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டுவிட்டு,

“நான் போய் ராக்கிகிட்ட சொல்லி வெறுப்பேத்தறேன். அடுத்த மாசம் சம்பளம் முழுசா காலி ஆனாலும் சரி, நாம நாலு பேரும் போறோம், சாப்பிடறோம்.”, என்று என் கட்டளையே சாசனம் என்பது போல சொல்லிவிட்டுச் சென்றாள்.

மகள் சென்ற பின், “ பார்த்தியா… எப்பவும் போல போயிட்டு வந்து எல்லாத்தை சொல்லிட்டு போறா. நீதான் ரோஜா அவளை பத்தி தேவையில்லாம குழப்பிக்கற.”, என்றார் பாண்டியன். மகள் சென்சார் செய்து சொல்லியது என்று தெரியவில்லை அவருக்கு!

ரோஜாவிற்கு ஏனோ மகளுக்கு நவீன் மேல் ஒரு விருப்பம் இருக்குமோ என்று சிறு சந்தேகம். இன்ன காரணம் என்று சொல்லத் தெரியவில்லை.  அவள் முதலில் சொன்னபோது ராக்கி இருக்கப் போகிறான் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சரியாக இன்று பார்த்து ராக்கி உடம்பு முடியவில்லை என்று சொல்வது, மகள் போயே தீருவேன் என்று அடம் பிடித்து சென்றது என்று எல்லாமாக சேர்ந்து, ஒரு வேளை இரண்டு கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து நடத்திய நாடகமோ என்று தோன்றியது.  அப்படி தனியாக செல்லும் அளவு நவீனை பிடித்திருக்கிறதா என்ற கேள்வியும் வந்தது. அதுதான் கவலைகளை எப்போதும் போல் பாண்டியனிடம் கொட்டிவிட்டார்.

“ஹ்ம்ம்… என்னவோங்க… இவ கல்யாண வயசு நெருங்க நெருங்க, பயமா இருக்கு. இவ விஷன் பத்தி சொல்லி கல்யாணம் பேசறதா, இல்லை எல்லாம் பேசிட்டு அப்பறம் சொல்றதா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இதை சரியா எடுத்துப்பாங்களா? விஷயம் வெளிய பரவுமா ? இல்லை பவானி அத்தை புகுந்த வீடு மாதிரி ஆதாயம் பார்ப்பாங்களா ?”, மனசு நெருடலாவே இருக்கு.

கவலைப் படும் மனைவியை தோளோடு அணைத்தவர், “நமக்கு நல்லா தெரிஞ்சவங்களா பார்க்கலாம். அவசரப்படாம விசாரிக்கலாம். நல்லபடியா எடுத்துக்குவாங்கன்னு தெரிஞ்ச அப்பறம் சொல்லிக்கலாம். பயப்படாதே வனா… நல்லதே நடக்கும்.”, என்று தைரியம் கூறினார் பாண்டியன்.