Advertisement

பார்வையில் மதுச்சாரல் -6(2)

அத்தியாயம் -6(2)

“என்னடா நடக்குது உங்களுக்குள்ள?” என்ற அஷ்வினின் கேள்வியில் அதிர்ந்து திரும்பிய கர்ணா, “நீ எப்போ வந்த?” எனக் கேட்டான்.

“வந்தது இப்போதான், ஆனா தூரமா இருந்தப்பவே உங்களை பார்த்திட்டுதான் இருந்தேன்” என சொல்லிக் கொண்டே கர்ணாவின் சட்டைப் பையை பற்ற, அஷ்வினை ஒரு கையால் தள்ளி மற்றொரு கையால் தன் சட்டைப் பையை பிடித்துக்கொண்டு பின்னால் நகர்ந்தான் கர்ணா.

அஷ்வின் கோவமாக கர்ணாவை நெருங்க, “வேணாம் அச்சு, போ இங்கேர்ந்து” என மிரட்டினான் கர்ணா.

சட்டென தாவி கர்ணாவின் சட்டையை பிடித்துக்கொண்ட அஷ்வின் கைக்குட்டைகளை வெளியே எடுத்து விட, “என்னோட பெர்சனல் அச்சு, என்கிட்ட கொடு” என கர்ணா சொன்ன கடினமான தோரணையில் திகைத்தான் அஷ்வின்.

சிவந்து விட்ட விழிகளோடு கர்ணா கையை நீட்ட, “என்னடா, சண்டை போட்டுக்குறீங்களா ரெண்டு பேரும்?” என வந்து நின்றான் அரவிந்த்.

அஷ்வின் கையிலிருந்த கைக்குட்டைகளை பிடுங்கிக் கொண்ட கர்ணா, “அதெல்லாம் இல்லை அந்துபி, நான் கார்ல இருக்கேன், வாங்க” என சொல்லி மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

“என்னடா?” என தம்பியிடம் கேட்டான் அரவிந்த்.

“எனக்கே ஒண்ணும் சரியா தெரியல” என்றான் அஷ்வின்.

“அப்போ உனக்கு தெரிஞ்ச அரைகுறை விஷயத்தை சொல்லு” என்றான் அரவிந்த்.

“கர்ணா லவ் பன்றான்னு நினைக்கிறேன்” என்றான் அஷ்வின்.

“ஹான்! நீயா நினைக்குறியா இல்ல…” என யோசித்த அரவிந்த், “என்ன நடந்துச்சு, ஏன் இப்படி சொல்ற? தெளிவா சொல்லு” என்றான்.

“அண்ணியோட தங்கச்சிய கர்ணா பார்க்கிறான்”

“அதை நீ கேட்டுத்தான் கோவமா போறானா அவன்? இருக்காது அஷ்வின்?”

“நான் அப்படியெல்லாம் ஓபனா கேட்கல, ஆனா எனக்கு நல்லா தெரியுது அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் நடுவுல சம்திங் ஓடிட்டு இருக்கு”

“கற்பனையா பேசாத அஷ்வின்”

“ம்ஹூம்” மறுப்பாக தலையசைத்த அஷ்வின் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தான்.

“டேய் நான் பேசிட்டிருக்கும் போது நீ எந்த இல்லாத ஊருல குதிரை சவாரி பண்ணிட்டிருக்க?” கிண்டலாக கேட்டான் அரவிந்த்.

“இன்னும் முழுசா எனக்கு தெரியலை அரவிந்த், ஆனா கர்ணா இப்போ திடீர்னு பார்த்து அந்த பொண்ணு பின்னாடி போகல, ரொம்ப முன்னாடியே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அண்ணிய பார்க்க போன அன்னைக்கே இவன் ஆள் சரியில்லை, நல்லா யோசிச்சு பார்த்தா அந்த பொண்ணு கூட அந்த சமயம் ஏதோ டிஸ்டர்ப்டா இருந்த மாதிரி நினைவு வருது” என்றான்.

அன்றைய தினத்தை அரவிந்தும் நினைவு கூற அவனுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வரவில்லை.

“நீ ரொம்ப யோசிக்காத, அந்த நாள்ல நீ அண்ணிய தவிர வேற யாரையும் கவனிச்சிருந்தாதான் அதிசயம்” என அஷ்வின் கிண்டல் செய்ய அரவிந்த் முறைத்து வைத்தான்.

“ஏன் உன் ஹேப்பி மூட் கெடுத்துக்குற? கர்ணா மேட்டரை நான் பார்த்துக்கிறேன். எதுக்கும் உன் மாமனாரை நீ நல்லா தாஜா பண்ணி வச்சுக்கோ, கர்ணா சம்பந்தமா நீ பேசும் போது உன் பேச்சு எடுபடனும் பாரு” என சிரிப்போடு சொன்னான் அஷ்வின்.

“அடப்பாவிங்களா! இன்னும் எனக்கே கல்யாணம் ஆகலைடா, அதுக்குள்ள ஏதாவது வம்பு பண்ணி வச்சிடாதீங்கடா”

“ட்ரை பண்றோம்டா அரவிந்தா” என அஷ்வின் சொல்லி செல்ல கொஞ்சமாக பயந்துதான் போனான் அரவிந்த்.

பத்மினி பாட்டியை வீட்டில் இறக்கி விட்டு வேணு வீடு வரை வந்த கர்ணா அங்கு உதவிகள் செய்து விட்டு தன் வீடு செல்ல நடக்க அஷ்வின் அவனோடு இணைந்து கொண்டான்.

“டேய் இங்க இருக்க வீடு, நானென்ன வயசுப் பொண்ணா? போடா” என்றான் கர்ணா.

கர்ணாவின் தோளில் கை போடுவது போல போட்ட அஷ்வின் அப்படியே அவன் கழுத்தை வளைத்து நெறுக்க, “அச்சு ப்ளீஸ்” என்றான் கர்ணா.

கர்ணாவின் கழுத்தை விட்டு மீண்டும் தோளில் கை போட்டவன், “சொல்லுடா பரதேசி, உன் லவ் எப்படி ஃபெயில் ஆச்சு? நீ என்ன பண்ணி தொலைச்ச?” எனக் கேட்டான்.

கர்ணா எதுவும் சொல்லாமல் நடக்க அவனை அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க விடாமல் பிடித்து நிறுத்திய அஷ்வின் இழுத்துக் கொண்டு போய் அங்கிருந்த வீட்டின் வெளியிலிருந்த கல் பெஞ்சில் அமர வைத்தான்.

நேரம் நள்ளிரவை தொட்டிருந்தாலும் தெரு விளக்குகளின் உபயத்தால் வெளிச்சம் இருந்தது.

கர்ணா எதுவும் சொல்லப் போவதில்லை எனும் பாவனையில் தலை குனிந்து தரையைப் பார்த்திருக்க, “எனக்கு கெஸ் இருக்கு கர்ணா, முன்னாடி நீ பிடிச்சிருக்குன்னு சொன்ன பொண்ணு அண்ணியோட சிஸ்டர்தானே?” எனக் கேட்டான் அஷ்வின்.

அஷ்வினை பார்க்காமலே, “உன் கெஸ் கரெக்ட்தான்” என்றான் கர்ணா.

“இது இல்லடா என்னோட கெஸ்” என அஷ்வின் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தான் கர்ணா.

“சொல்லு என்னை மனசுல வச்சு தாமினிய அவாய்ட் பண்ணிட்டியா?”

கர்ணா பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொள்ள, “அப்போ அதான், முட்டாள்!” கோவமாக சொன்னான் அஷ்வின்.

“என்னடா நான் முட்டாள்? இப்போ நாலு வருஷம் ஆகிடுச்சு, அப்போ அந்த நிலைல நான் என்ன முடிவெடுத்திருக்கணும்னு நினைக்கிற நீ?”

“அப்ப அந்த முடிவுலேயே இருக்க வேண்டியதுதானேடா?”

“அச்சு…” பாவமாக அழைத்தான் கர்ணா.

“சொல்லுடா கர்ண மஹராஜா”

“என்னால… ப்ச் போடா…” எழ முயன்ற கர்ணாவை இழுத்து பிடித்துக்கொண்டான் அஷ்வின்.

“மறக்க முடியலையா?”

“மறக்கணும்னு நினைக்க கூட முடியலை அச்சு”

“ஹ்ம்ம்… அவ்ளோ லவ்வா?” புன்னகை முகமாக கேட்டான் அஷ்வின்.

“எனக்கு அளவெல்லாம் தெரியாது, அவதான் வேணும்னு இருக்கு”

“ம்ம்… பிரச்சனை எங்க ஆரம்பிச்சு இப்போ எப்படி போகுதுன்னு எல்லாம் சொல்லு” என்றான் அஷ்வின்.

தாமினியை கோயிலில் பார்த்ததில் ஆரம்பித்து எல்லாம் சொன்னவன், “என்னை ரொம்ப தேடியிருக்கா, ஆறு மாசம் கழிச்சு என்னை பார்த்ததும் அவளால அவளை கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியலை. வண்டியை கீழ போட்டுட்டு ஒரே அழுகை, எனக்காக அழுதா அச்சு. அவ எதுவும் சொல்லாமலே நானும் அவ மனசுல இருக்கேன்னு தெரிஞ்சும் சந்தோஷ பட முடியலை என்னால” என அன்றைய தின நினைவுகளை அசை போட்டுக் கொண்டே சொன்னான் கர்ணா.

“நீ செஞ்சது தப்பில்லையாடா கர்ணா?”

“தாமினிக்கு நான் செஞ்சது தப்புதான் அச்சு, அவ மனசை உடைக்கிறேன்னு தெரிஞ்சேதான் செஞ்சேன், என் மனசும் உடைஞ்சுதான் போச்சு. அந்த நேரம் நீ மட்டும்தான் எனக்கு தெரிஞ்ச” என்றான் கர்ணா.

“எனக்கு என்ன சொல்லனு தெரியலை, ஏன் நான் உன்னை கோச்சுப்பேன்னு நினைச்சியா?”

“டேய்! நான் ஆசைப் படுறேன்னு சொன்னா நீ என்ன சொல்லப் போற? ஆனா கல்யாணி குடும்பம் நம்ம வாழ்க்கையில எங்கேயும் எப்படியும் வர வேணாம்னு நினைச்சேன். எல்லாம் அப்போதானே ஸ்டார்ட் ஆச்சு, கொஞ்ச நாள்ல சரியா போயிடும்னு… அவ என்னை மறந்திடுவான்னு நினைச்சேன், ஆனா, என்னை போலவே அவளும் இன்னும் நினைச்சிட்டு இருக்கா” என்றான்.

“அப்புறம் என்னடா?”

“ரொம்ப கோவமா இருக்கா அச்சு? பேசிப் பார்க்கலாம்னா நெருங்கவே விட மாட்டேங்குறா” சோகமாக சொன்ன கர்ணா கவனமாக கல்யாணியை அஷ்வினிடம் பேச வை என தாமினி கேட்டதை சொல்லாமல் மறைத்து விட்டான்.

“இதுல தாமினி மேல மிஸ்டேக் ஜீரோ பெர்சென்ட்டேஜ். எல்லாம் உன் தப்புதானே, அவ கோவம் ரொம்ப சரியானது. உடனே எப்படி சமாதானம் ஆவா?”

“தெரியுதுடா, நானும் உடனே சமாதானம் ஆகணும்னு பேராசை எல்லாம் படல” என்றான் கர்ணா.

“அதுசரி இப்போவும் தாமினி உன்னைத்தான்…” சந்தேகமாக கேட்டான் அஷ்வின்.

“ஹேய் நிச்சயமா தெரியும்டா, என்னால ஃபீல் பண்ண முடியும் அவ பார்வையை, நான்தான் அவ மனசுல இருக்கேன். அதுல சந்தேகமே இல்லை” என்றான்.

“அப்புறம் என்னடா, விடாமல் ட்ரை பண்ணு, சும்மா அப்செட் ஆகாத”

“இல்ல இன்னிக்கு அந்த கல்யாணி பார்த்ததுல கொஞ்சம்…”

“கர்ணா ப்ளீஸ் நீயே புரிஞ்சுப்ப நினைச்சேன். அவ பேரை எடுத்து பேசாத. முடிஞ்சதை அப்படியே விட்டுத் தொலையேன்டா” எரிச்சலாக சொன்னான் அஷ்வின்.

“சாரி அச்சு” மெல்லிய குரலில் சொன்னான் கர்ணா.

தன் கைபேசியை கையில் எடுத்துக் கொண்ட அஷ்வின், “தாமினி நம்பர் அனுப்புறேன் உனக்கு” என சொல்லி உடனே அனுப்பவும் செய்தான்.

“உனக்கெப்படி கிடைச்சது?”

“அண்ணி ஃபேமிலில எல்லார் நம்பர்ஸும் அரவிந்த் போன்ல இருக்கு, சுட்டுட்டேன்” என்றான் அஷ்வின்.

“அந்துபிக்கு எதுக்குடா என் ஆளு நம்பர்?”

“ம்ம்… அண்ணி கூட ஏதாவது சண்டை வந்தா சமாதானம் செய்ய தேவைப்படும்னு வாங்கியிருப்பான். மெசேஜ் எல்லாம் பண்ணிக்கிறாங்கடா ரெண்டு பேரும், மாமா மாமான்னுதான் உன் ஆளு உன் அந்துபிய கூப்பிடுறா”

“அவன் சாட் எல்லாம் பார்த்தியா நீ?”

“அண்ணி கூட சாட் பண்றது பார்த்தாதான் தப்பு, இது நம்பர் எடுக்கும் போது காஷுவலா கண்ல பட்டுச்சு. எனக்கு என் லிமிட்ஸ் தெரியும்டா மடையா”

தன் கைபேசிக்கு வந்திருந்த தாமினியின் எண்ணை மினி என சேமித்துக் கொண்ட கர்ணா உடனே வாட்ஸ்ஆப் சென்று ஆராய்ந்து பார்த்தான்.

அரவிந்த் தீபிகா இருவரது நிச்சய படம் இருக்க, “டிபி ல அவ ஃபோட்டோ இல்லடா அச்சு” என்றான் கர்ணா.

“ரொம்ப கவலை படாத, சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி உள்ள போட்டோவே டிபி ல இருக்கும்” என்றான் அஷ்வின்.

“நடக்கும்ன்ற?”

“கஷ்டம்தான், நீ பார்த்து வச்ச வேலைக்கு கஷ்டப்பட்டுத்தான் ஆகணும், ஆனா கண்டிப்பா நடக்கும்டா, இப்போ நீ கிளம்பு” என எழுந்து கொண்டான் அஷ்வின்.

“வா வீடு வரைக்கும் துணைக்கு வா” கர்ணாவும் எழுந்து நின்று அஷ்வின் கையை பிடித்திழுத்தான்.

“ஆமாம் இவரு வயசுப் பொண்ணு பாரு… ஓடிப் போடா” என்றான் அஷ்வின்.

“டேய் நானும் வயசுப் பையன்தான்டா” என்றான் கர்ணா.

“அப்போ வயசுப் பையன் மாதிரி நடந்துக்கடா” கண்கள் சிமிட்டி சொன்ன அஷ்வின் அவன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அஷ்வினோடு பேசியதில் மனதுக்கு தெம்பாக உணர்ந்த கர்ணா, விரைவிலேயே தன் வாழ்வில் மினி வந்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு நிறைவான புன்னகை சுமந்து கொண்டு இரவின் அழகை ரசித்துக் கொண்டே நிதானமாக நடை போட்டான்.

Advertisement